அ.மார்க்ஸ் -> அ.காந்தி

‘தீராநதி’ ஜீன்-2007 இதழில், ‘பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்’ எனும் தொடரில், பேராசிரியர் அ.மார்க்ஸ் பகத்சிங் குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மிகத் தாமதமாகவே அதனை படிக்க நேர்ந்தது. அ.மார்க்ஸின் பின்நவீனத்துவக் கருத்துக்கள் குறித்து எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது. அதே வேளை, இந்துத்துவம் குறித்து அவர் எழுதிய சில நூல்களையும், கட்டுரைகளையும் நான் வாசித்திருக்கிறேன். இந்துத்துவ எதிர்ப்பில் சித்தாந்தத் தளத்தில் அவர் எழுதியுள்ள நூல்கள், அவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஆனால், அவரது இக்கட்டுரை, பகத்சிங்கை குறித்த அவரது பார்வை, மிகவும் வருத்தம் தருவதாக இருந்தது. நான் அறிந்த வரலாற்றுத் தகவல்களுக்கு முற்றிலும் மாறுபட்ட, சில தவறான தகவல்களை அவர் எழுதியுள்ளார். எனவே, கீழ்க்காணும் எனது எதிர்வினையை ‘தீராநதி’ இதழுக்கு அனுப்பியுள்ளேன். அதே வேளையில், பகத்சிங்கின் நூற்றாண்டில், பகத்சிங்கை குறித்து இருட்டடிப்பு செய்யப்படுவதற்கும், திரிக்கப்படுவதற்கும், பூசைப் படமாக, அரசியலற்ற வீரனாக வெற்றுச் சின்னமாக்கப்படுவதற்கும் இடையில், இப்படியேனும் ஒரு கட்டுரை வந்ததே என எனக்கு மகிழ்ச்சியே.

அ.மார்க்சின் கட்டுரையை வாசிக்க :
http://www.kumudam.com/magazine/Theranadi/2007-06-01/pg4.php
எனது எதிர்வினை:
—————————-

பேசாப் பொருளை பேசத் துணிந்தேன் :
ஆனால், நிதானத்தோடும், நேர்மையோடும் பேசுங்கள் !

தீராநதி ஜீன்-2007 இதழில், ‘பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்’ எனும் தொடரில், பேராசிரியர் அ.மார்க்ஸ் பகத்சிங் குறித்து எழுதியுள்ள கட்டுரைக்கு எதிர்வினையாக சில கருத்துக்களை முன்வைப்பது அவசியமெனக் கருதுகிறேன்.

பகத்சிங்கின் ‘பிராண்ட்’ தேசபக்தி என ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் அ.மார்க்ஸ். அதனை புரிந்து கொள்ள, பகத்சிங்கின் நேதாஜி, நேரு மதிப்பீடு கட்டுரையின் அம்சங்களை சுட்டுகிறார். ஆனால், அவர் சுட்டுகிற கட்டுரையில், ‘பிராண்ட்’ தேசபக்தி எப்படி வெளிப்படுகிறது என அ.மார்க்ஸ் தான் விளக்க வேண்டும். முற்போக்கான கருத்துக்களை ஆதரிக்க முற்படுவது ‘பிராண்ட்’ தேசபக்தியோ?

சாண்டர்ஸ் கொலையில் அறவியல் கேள்விகளை எழுப்பியும், இதே பொருளைப் பேசத் துணிந்த காந்தியவாதிகளான பட்டாபி சீத்தாராமையா, டி.பி. தாஸ் கூட ‘துணியாத’ அளவிற்கு வக்காலத்து வாங்கியும் நகர்கிறது கட்டுரை.

முதலாவது, அ.மார்க்ஸ் எழுப்பும் அறவியல் கேள்விகள் குறித்தது. பகத்சிங்கின் மேற்கோளை சுட்டிக் காட்டி, அறங்களில் ‘அற்பமானது’, ‘உன்னதமானது’ என வேறுபாடு உண்டா எனக் கேட்கிறார். மேலும், தனது அறக் கருத்தாக “வன்முறையும், தனிநபர் கொலையும் மனிதரின் அடிப்படையான அற உந்துதலுக்கு(moral impulse) எதிரானவை ” என்கிறார். அதனடிப்படையில், சுரண்டல் சமுதாயம் உருவாக்கும் ‘பேரறத்தை’க்| காட்டிலும், மனிதர்களுக்கிடையில் நிலவும் ‘சிற்றறம்’ முக்கியமானதில்லையா என வினவுகிறார்.

மனிதன், மனிதர்கள், அடிப்படை அறம், சிற்றறம், பேரறம்… வர்க்க சமூகம் நிலவுகிற வரை வர்க்கச் சார்பற்ற அறம் என ஒன்று உண்டா? அதனால் தான், பகத்சிங் ஆளும் வர்க்கம் போதிக்க விரும்பும் அறங்களை அற்பமானதென்றும், அர்த்தமற்றதென்றும் ஒதுக்கித் தள்ளுகிறார். ஜெனரல் டயர், கோபால கிருஷ்ண நாயுடு முதல் நரேந்திர மோடி, கேர்லாஞ்சி மிருகங்கள் வரையிலான ‘மனிதர்கள்’ மனிதர்களுக்கிடையிலான ‘சிற்றற’த்தை மதிக்காத பொழுது, ஒடுக்கப்படும் ‘மனிதர்கள்’ அறபோதனைகள் பற்றி கட்டுரை வரைந்து கொண்டிருக்க வேண்டுமா? இந்த ஆளும் வர்க்க சேவை அறபோதனை, காந்தியத்தின் நகல் பிரதிதான். இப்படிப்பட்ட கருத்தை மொழிவதற்கு மார்க்ஸ் பெயரை ஏன் பின்னே சேர்த்துக் கொள்ள வேண்டும்? அ.காந்தி என மாற்றிக் கொள்ளலாம்.

இரண்டாவதாக, சாண்டர்ஸ் கொலையில் யாரைக் கொல்ல தீர்மானித்தார்கள் என்பதில் முரண்பட்ட கருத்துக்கள் எழும்ப முக்கிய காரணம், அக் கொலை குறித்து தீர்மானிக்கப்பட்ட கூட்டத்தில் இரகசியம் கருதி, கூட்டக் குறிப்புகள் எடுக்கப்படாதது தான். யஷ்பாலின் நூலைத் தாண்டி, பதுக் நாத் மற்றும் சோகன் சிங் ஜோஷ் ஆகியோர் சொல்வதன் அடிப்படையில், பகத்சிங் நேரடியாக சோகன் சிங் ஜோஷிடம் சம்பவம் நடந்த அன்று இரவு சொன்னதைப் போல, ‘அவர்கள் வேறொரு சாத்தானைத் தேடிச் சென்றார்கள், ஆனால் மற்றொரு சாத்தான் வெளிப்பட்டது’ (பகத்சிங்கும், இதர முந்தைய புரட்சியாளர்களும், சோகன் சிங் ஜோஷ்)

சில பத்திகள் கழித்து, சாண்டர்ஸ் போன்ற அப்பாவிகள் கொல்லப்படுவது குறித்து ஒரு திறந்த வாதத்தை தவிர்க்கக் கூடாது என அ.மார்க்ஸ் அறிவுறுத்துகிறார். ‘அப்பாவி’ என்ற சொல்லே தெளிவற்றது. ‘பயங்கரவாதி’ , ‘தீவிரவாதி’ , சிபிஎம் நந்திகிராமில் பயன்படுத்திய ‘வெளியாள்’ போன்ற சொற்களைப் போல வரையற்று பயன்படுத்தப்படும் சொல்லாகி விட்டது. புஷ்ஷும், பிளேரும் கூட இதே சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்கள். எனவே, அதனை மேற்கூறிய அ.காந்தியின் அற போதனையின் அடிப்படையில் பரிசீலிக்க முடியாது. லாலாஜி மீது ஸ்காட்டின் ஆணையின்படி, சாண்டர்ஸ் தடியடிப் பிரயோகம் நிகழ்த்தினான் என்பதுதான் இதுவரை வரலாற்றாசிரியர்கள் சொல்லியிருக்கும் செய்தி. அப்படியில்லை, அவன் பயிற்சியாளன்தான் என்றால், முற்றிலும் முரண்பட்ட இத்தகவலுக்கு அ.மார்க்ஸ் ஆதாரம் வழங்க வேண்டும்.

அப்படியே சாண்டர்ஸிற்கும், லாலாஜியின் மீதான தடியடிப் பிரயோகத்திற்கும் எவ்விதத் தொடர்புமேயில்லையென நீங்கள் ஆதாரமே வழங்கினாலும், அங்கே இன்னொரு கேள்வி முளைக்கிறது. ஒரு நாட்டை ஆக்கிரமிக்கும் அன்னியப் படையின் கைக் கூலி போலிசுக்காரன், அல்லது போலிசுப் பயிற்சியாளன், ஒரு சம்பவத்தோடு தொடர்பில்லை என்பதானாலேயே எப்படி அப்பாவியாவான்? ஒரு வேளை ஆயிரக்கணக்கான அப்பாவிகள்தான் இன்று இராக்கிலும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்களோ? அபு கிரைபிற்காக அதிலே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மட்டும் லிஸ்ட் எடுத்துத் தான், இராக் மக்கள் தாக்க வேண்டுமோ? இல்லையென்றால் அது அற மீறலோ?

மேலும், பகத்சிங்கை விடுதலை செய்யும் விசயத்தில், காந்தி நடந்து கொண்டதை பட்டியலிடும் அ.மார்க்ஸ், தாமே காந்தியின் கூற்றுக்கு ஆதரவாக மார்ச் 23 கடிதத்தை மட்டுமே குறிப்பிட முடியும் எனக் கூறுகிறார். (இதற்கும் அ. மார்க்ஸ் ஆதாரம் வழங்க வேண்டும்). பிறகு அவரே அது தும்பை விட்டு வாலை பிடிப்பது என்கிறார். இது காந்தியின் உண்மை, அகிம்சை நிலைபாடுகளின்படியிலான மனப் போராட்டத்தைக் காட்டுகிறதாம். ஏனென்றால், காந்திக்கு ‘அகிம்சை’ ஒரு மதமாக, ஒருங்கே அதன் சரியான, மோசமான அம்சங்களோடு ஒருந்ததாம்.

சரி, ஒரு வாதத்திற்காக அப்படியே வைத்துக் கொள்வோம். இதே காந்தி-இர்வின் உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளின் பொழுதுதான், எல்லைப்புற மாகாணத்தில், சில கார்வாலி படை வீரர்கள் நிராயுதபாணியான மக்கள் மீது சட மறுத்தார்கள் என்பதற்காக, இராணுவக் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு கடுங் காவல் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். பேச்சுவார்த்தையில், சத்தியாக்கிரகத்தை(கவனிக்க, அவர்கள் சுட மட்டுமே மறுத்தார்கள், கலகத்தில் ஈடுபடவில்லை.) கடைபிடித்த இவ்வீரர்களை விடுதலை செய்ய காந்தி கோர வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்ததை, பட்டாபி சீத்தாரமையா, தனது இந்திய தேசிய காங்கிரசின் சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார் (ஆதாரம்: பகத்சிங்கும், அவரது காலங்களும், மன்மத் நாத் குப்தா).

வன்முறையை பிரயோகித்த, தனக்கு சமதையாக வளர்ந்த பகத்சிங்கின் மீதான காழ்ப்புணர்ச்சி கூட ‘மகாத்மா’ காந்திக்கு மனப்போராட்டத்தின் காரணமாக இருந்து விட்டுப் போகட்டும். (மேலும், காந்தி காப்பாற்றுவாரென்று எதிர்பார்த்து பகத்சிங் குண்டு வீச முடிவெடுக்கவில்லை) ஆனால், சத்தியாக்கிரகத்தை பிரயோகித்த கார்வாலி வீரர்களைக் கூட காந்தி காப்பாற்றாமல் போனதற்கு, அவரது ‘மதத்தின்’ எந்தக் கோட்பாடு காரணமாக இருந்திருக்க வேண்டும், “வாடிக்கையாளரே நமது எசமானர் “ என்ற உயர்ந்த கோட்பாட்டைத் தவிர? இல்லையென்றால், காந்தி-இர்வின் உடன்படிக்கையின் முக்கிய ஷரத்தாக, கீழ்ப்படிய மறுத்த போலிசு, இராணுவ வீரர்கள் ஆகியோர், அரசியல் கைதிகள் விடுதலைக்கான ஒப்பந்த வரம்புகளுக்குள் வர மாட்டார்கள் என ஏன் எழுதப்பட வேண்டும்? என்ன செய்ய, காந்தியை என்னதான் காப்பாற்ற முயன்றாலும், அவர் ஆளும் வர்க்கத்தின் ஆன்மாவாக (அந்தராத்மா) செயல்பட்ட வரலாறு சந்தி சிரிக்கிறதே.

இறுதியாக, சிறையில் பாய் ரன்பீர் சிங்கின் முயற்சியால், பகத்சிங் மீண்டும் சீக்கிய அடையாளங்களுக்கு திரும்பியதாகவும், அவற்றை நீக்கிக் கொண்டதற்காக ‘வெட்கப்பட்டதாகவும்’, ‘அறிந்ததாக’ குறிப்பிடுகிறார் அ.மார்க்ஸ். அவர் எப்படி, எங்கிருந்து அவ்வாறு ‘அறிந்து’ கொண்டார் என அறிந்து கொள்ள ஆர்வப்படுகிறோம். ஏனென்றால் இந்த ரன்பீர் சிங் யாரென்று தெரியவில்லை. ஆனால், சிறையில் பாய் ரந்தீர் சிங் என்பவர் பகத்சிங்கின் நாத்திகக் கொள்கைகளால் ஆத்திரமுற்று, பகத்சிங்கை கர்வம் பிடித்தவன் எனச் சொல்ல, அதற்கு எதிர்வினையாக பகத்சிங் தனது இறுதி நாட்களில் எழுதிய கட்டுரைகளில் ஒன்று தான், புகழ்பெற்ற ‘நான் நாத்திகன் – ஏன்?’. எனவே இத்தகவலை, ஆதாரம் வழங்கப்படாத வரை, எதிரிகள் கூட செய்யத் துணியாத அவதூறு என்று மட்டுமே சொல்ல முடியும். தயவு செய்து காலிஸ்தானி குண்டர்களின் ஆதாரங்கள் வேண்டாம், ஆனந்த் பட்வர்தன் அவற்றை ஏற்கெனவே அம்பலப்படுத்தியிருக்கிறார்.

இவற்றையெல்லாம் தாண்டி, ஆற்றொழுக்கான நடையில், பகத்சிங்கின் எழுத்துக்கள் குறித்து கட்டுரையின் முன்பகுதியில் சிலாகித்து எழுதியிருப்பதற்கும், பகத்சிங் குறித்து படிக்க வேண்டுகோள் விடுத்தற்காகவும், அ.மார்க்சுக்கு எனது உள்ளார்ந்த பாராட்டுக்களும், நன்றிகளும். ஆம், பகத்சிங்கின் ஒவ்வொரு கட்டுரையையும் நாம் அவசியம் படிக்க வேண்டும். ஏனெனில் அவரை திருஉருவாக மட்டுமே நிறுத்தி, சவமாக்க முயலும் போலி கம்யூனிஸ்டுகளின் முகத்திரையை கிழிக்க அது மட்டுமே உதவும்.

மேலும் படிக்க:

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s