அசுர யுத்தம்!

அரும றையனை
ஆணொடு
பெண்ணனைக் கண்குளிரக் கண்டு
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
உள்ளம் உள்கி உகந்து சிவனென்று
மெள்ள வுள்ள,
அகவை எண்பதாகிய
வாழும் நந்தனொருவன்,
தேவாரப் பண்ணிசைக்கத்
தேடிச் சென்றனன்.

இது காறும்
கல்லாய்ச் சிலையாய்
பரமன் பார்த்திருக்க
குடியும் கூத்துமாய்
கூடிக் களித்து
வயிறு வளர்த்து
மதனெனும் பாறையில்
புரண்டிருந்த
குடுமிக் கொழுந்துகள்
நந்தன்
குலையறுக்கப் பாய்ந்த போதும்,
அரங்கநாதனைத் துயிலெழுப்பிய
நரகாசுர வாரிசுகள்
அரணாய் நிற்க,
யுகங்கள் கடந்து
கூத்தன்
குழைக் காதுடையான்
செவி குளிர
முழங்கிற்று தமிழ்.
மறிந்து வீழ்ந்திற்று
புரிவெண்ணூல்.

ஆரவாரம் அடங்கி
நலந்தீங்கிலும் உன்னை
மறந்தறியவொண்ணாது
நித்தலும் கைதொழுவேனென
திரும்பி வருகையில்.
வேதியன் மிடறினில் அடக்கிய
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சு
கைத்தடிகளில் இறங்கியதோ,
வீதிகளில் பெருகிற்று
ஆக்கை இரத்தம்.

முற்றும் உணர்ந்த முதல்வன்
நெற்றிக் கண் திறக்கவில்லை.
கடலிற் போட்டாலும்
கட்டுமரமாகும் கவிதை பேசவில்லை.
தமிழுக்கே சோறு போடும்
ஆன்றோரும், சான்றோரும்
செஞ்சோற்று கடன் தீர்க்க வந்தாரில்லை.
வெண்தாடிக் கிழவனின் வாரிசுகள்
மீளாத் துயிலிலிருந்து மீளவில்லை.
அன்னிய மிலேச்சர்கள்
புண்ணிய உறையுளை
ஆக்கிரமித்ததாய்
செங்கல் சுமக்கும்
எத்தர் கூட்டம்
நந்திகளிடமிருந்து
எம்பெருமானை மீட்க வந்தாரில்லை.

அசுரர்கள் மட்டுமே
யுத்தம் தொடர்கின்றனர்.
தெறித்த குருதித் துளிகளில்
அடங்க மறுக்கிறது
தீந்தமிழ்.
தீய்க்காமல் ஓயுமோ
நந்தனைத் தீயிலிட்ட கரங்களை?

Advertisements

One thought on “அசுர யுத்தம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s