சர்ச்சை என்ற சொல் எப்பொழுதும் ‘சர்ச்சைக்குரியதாகவே’ இருக்கிறது. பல சமயங்களில் சர்ச்சைக்குரிய கட்டிடம் என ‘நட்ட நடுநிலைமை’ வகிக்கும் தினமணியால் குறிப்பிடப்பட்ட ‘சர்ச்சைக்குரிய’ பாபர் மசூதியைப் போல, இன்று(06-03-2008) ‘ஓய்ந்தது சிதம்பரம் சர்ச்சை’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது தினமணி. ‘சர்ச்சை’ என்ற சொல் திட்டமிட்டு சர்வத்தையும் மூடி மறைக்கும் சர்வரோக நிவாரணியாக நடுநிலைமை வேடம் போடுபவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
சிதம்பரம் விசயத்தில் சர்ச்சைக்கிடமானதாக எதுவும் இருக்கிறதா? தீட்சிதர்களும், சிவனடியாரும் முழுநம்பிக்கை வைத்து, இரு தரப்பாக நின்று வாதாடிய வழக்கில், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில், இந்து அறநிலையத்துறை முறைப்படி வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில், குமுடிமூலை சிவனடியார் ஆறுமுகசாமியும், அவரது வழிபாட்டு உரிமையான மனித உரிமையை பாதுகாப்பதற்காக, அவருக்கு பாதுகாவலாக மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்களும் கடந்த ஞாயிறு(02-03-2008) தேவாரம் பாடச் செல்கின்றனர். ஆனால், வாயிலை மறித்து நின்ற தீட்சிதர்களாலும், உள்ளே நடராஜர் சிலை மேல் ஏறி அமர்ந்து, (நடராஜர் அப்பொழுது கப்பு தாங்காம மூக்கைப் பொத்திக் கொண்டாராம்.) அதனைச் சுற்றிலும் மறித்துக் கொண்ட தீட்சிதர்களாலும் அவர்கள் தாக்கப்படுகின்றனர். அரசாணை நிறைவேற்றச் சென்ற காவல்துறையினர் தாக்கப்படுகின்றனர். கடந்த திங்கட்கிழமை தினமலர் குறிப்பிட்டது போல் காவல்துறையினரை தீட்சிதர்கள் ‘கடித்தனர்’. (ஈஸ்வரா!…)
‘சர்ச்சைக்கு’ இடமில்லாமல், தெளிவாக, சட்ட விரோதமாக, துலக்கமான நீதிமன்ற அவமதிப்பாக, தீட்சிதர்கள் காலித்தனத்தில் ஈடுபட்டது உலகுக்கே தெரிய வந்து, ஒட்டு மொத்த தமிழகமும் காறித் துப்பிய பிறகு, சிதம்பரம் ‘சர்ச்சை’ என்றால் என்ன அர்த்தம்? நாடு முழுதும் உள்ள மக்களுக்கு செய்தி சொல்லும் பத்திரிக்கை இப்படி ஒரு பச்சை அயோக்கினத்தனத்தில் ஈடுபடுவதன் காரணம் என்ன, சமீபத்தில் ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ள வைத்தியநாதன் சோவிடம் ஞானப் பால் குடித்த காரணத்தைத் தவிர?
காரணம் மட்டுமே காரியங்களைத் தீர்மானிப்பது சாதாரண மனிதர்களுக்குத்தான். பொதுக் கருத்தை குறிப்பிட்ட திசையில் உருவாக்கும் பத்திரிக்கை பிதாமகர்களுக்கு காரணம் மட்டுமல்ல, நோக்கம் தான் காரியங்களைத தீர்மானிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை சிவனடியாரும், தோழர்களும் தாக்கப்பட்ட பிறகு தீட்சிதர்கள் முழுமையாக மக்கள் அரங்கில் தனிமைப்பட்டு போயினர். ஜெயலலிதா, சோ முதலான தலைகள் வாய் திறக்கவில்லை. நாட்டு ஆமை சரத்குமார், பொன். இராதாகிருஷ்ணன், இல.கணேசன் போன்ற வால்கள் தான் ஆடின. சட்டத்திற்கு உட்பட மறுக்கும் தீட்சிதர்களிடமிருந்து கோயிலைப் பறிமுதல் செய்ய வேண்டும் என பல திசைகளிலிருந்தும் குரல் எழும்ப, முதலுக்கே மோசம் வந்ததே எனப் பயந்துதான் தீட்சிதர்கள், நேற்று(05-03-2008) உள்ளே சென்ற தோழர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்திருக்கின்றனர். மொத்தத்தில் இவர்களது நோக்கம், இத்தோடு இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான்.
1952-ல் சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் சொத்துதான், அது பொதுச் சொத்தல்ல என வழக்கு நியாயங்களைக் கவனிக்க மறுத்து தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்படுமானால், அரசு இக் கோவில் நிர்வாகத்தில் தலையிடலாம் எனத் தீர்ப்பளித்தது. பின்னர் சில ஆண்டுகள் கழித்து, அரசால் நியமிக்கப்பட்ட நிர்வாக அதிகாரியை, கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக கோவில் கணக்குகளை பார்க்க விடாமல இழுத்தடித்து, நீதிமன்றத்தின் துணையோடு தமது உண்டியல்களையும், கணக்கு வழக்கற்ற தமது கொள்ளையையும் பாதுகாத்துக் கொண்டார்கள் தீட்சிதர்கள். கடந்த மூன்று நாள் சம்பவங்கள், உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட அசாதாரண சூழ்நிலையை மக்களுக்கு உணர்த்தி விட்டது. சொத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக, சட்டத்தைக் கூட மீறும் ரெளடிகள்தான் தீட்சிதர்கள் என்பது தெளிவாகப் புலப்பட்டு விட்டது. எனவே, இப்பொழுது ‘சர்ச்சை’ ஓய்வதுதான் தீட்சிதர்களுக்கும், தினமணிக்கும் நோக்கமாக இருக்கிறது.
ஆனால், சர்ச்சை ஓயாது. வரலாற்று விரோதமாக, ஆதாரங்களின்றி இத்தனைகாலம் மக்களுக்கு சொந்தமான சிதம்பரம் கோவிலை ஆக்கிரமித்து, அங்கே குடி, விபச்சாரம் எனக் கொட்டமடித்தது மட்டுமல்லாமல், தமிழில் வழிபடுவதை தமது ஆதிக்கத்திற்கும், பார்ப்பனீய மேலாண்மைக்கும் சவாலாகக் கருதி, முன்பொரு முறை ஆறுமுகசாமியின் கையை முறித்தவர்களும், இன்று மீண்டும் மக்கள் மீதும், காவல்துறையின் மீதும் தாக்குதல் நடத்தி விட்டு, இப்பொழுது ஒண்ணும் தெரியாத பாப்பாக்களாக மாலை அணிவிக்கும் இக் கிரிமினல் கும்பலான தீட்சிதர்களிடமிருந்து அக் கோவிலை பறிமுதல் செய்து மக்கள் சொத்தாக்கும் வரை சிதம்பரம் சர்ச்சை ஓயவே ஓயாது. ஓய முடியாது. இந்த வெற்றி முதல் அடிதான். இரண்டாவது அடி சிதம்பரம் கோவிலை மீட்பது. மூன்றாவது அடி மொத்த பார்ப்பனீய சக்திகளின் தலை மீதேறி மனுதர்மக் கொடுங்கோன்மைக்கு மூடு விழா நடத்துவது. பெருமாளே உலகளக்கும் போது, புரட்சியாளர்கள் சோளப் பொரியோடு சும்மா உட்காருவார்களா, என்ன?
கொசுறு : எது எப்படியோ, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தேவாரம் பாடியதன் மூலம் நடராஜருக்குத்தான் வெற்றி என்று தீட்சிதர்களும், பொதுமக்களும் பெருமிதத்துடன் கூறினர் என தினமணி குறிப்பிடுகிறது. தினமணி சொன்னா சரியாத்தான் இருக்கும். எவ்ளோ நல்ல மனசு,..ஆக, இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், நல்ல மனசுடைய தீட்சிதர்கள் பெருமிதம் மேலும் அதிகரிக்கும் வண்ணமாக ஆத்திகர்கள், நாத்திகர்கள் எல்லோரும் குடும்பம் குடும்பமாக சிதம்பரத்திற்கு சென்று கனகசபையில் நின்று தேவாரம் பாட வேண்டும். போகும் பொழுது, அவர்களிடம் நல்ல மனதோடு பேசிப் பழக வேண்டும். பெண் கொடுத்து பெண் எடுக்கிற வரைக்குப் போனாலும் பரவாயில்லை. என்ன இருந்தாலும் நடராஜருக்குத்தானே இறுதி வெற்றி!..
புகைப்பட உதவி: வே.மதிமாறன்
மேலும் படிக்க:
வ.கெளதமனின் தீ மிதிப்பதை நிறுத்து! தீட்சிதரை மிதி!
வே. மதிமாறனின் சிதம்பர ரகசியம் அம்பலமானது
தோழர் அசுரனின் செவ்வணக்கங்கள்