தீட்சிதப் பூணூலுக்கு சூத்திரக் கவசமா?

“தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கு அடியேன்” என்ற தேவாரப் பண்ணைப் படிக்கும் பொழுது , ஆறறிவு படைத்த, மான ஈனமுள்ள மனிதன் எவனும் அவ்வாறு வாழ்ந்திருப்பானா என நாம் யோசித்திருப்போம். அப்படி யோசிப்பவர்களுக்கு ஒரு வாழும் உதாரணமாகத் திகழ்பவர்தான் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத். ஆனால், இவர் அடியாருக்கு அடியார் மட்டும் அல்ல, அதையும் தாண்டி, அடியாளுக்கு அடியாளாக (செல்லமாக அ.அ) இந்து மதத்துக்கு ‘சேவை’ செய்து வருபவர். கோவை ‘கலவரத்தில்’ அப்பாவி இசுலாமியர்களை ‘களையெடுக்கும் உழவாரப் பணி’ செய்த உத்தமர். அந்த மகா உத்தமர், நேற்று(07-03-2008) தினமணி நாளிதழில், ‘ஆன்மிகத்துக்கு விடுக்கப்பட்ட சவால்’ என சிதம்பரம் தேவாரப் போராட்டத்தைக் குறிப்பிட்டு ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அறிவாய்ந்த இக் கட்டுரையை, ஆறாண்டுகளுக்கு முன்பு, திராவிட, மகஇக கம்யூனிஸ்டுகள் ஆதரவின்றி, தன்னந்தனியனாய், சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் பாட முயன்ற ஆறுமுகசாமியைத் தாக்கி, தீட்சிதர்கள் அவரது கையை முறித்த பொழுதே, அவரோ அல்லது அவருக்கு எழுதிக் கொடுத்த ஐடியாமணிகளோ எழுதியிருக்கலாம்… ஆனால், பிரச்சினைக்கு அடிகொள்ளியான இச்சம்பவத்தையே மறைத்து விட்டு, இப்பொழுது ஒரு வெங்காய மூட்டைக் கட்டுரை எழுதியிருக்கிறார்கள். இப்பொழுது ஆறுமுகசாமியைத் தூண்டி விடுவதாகச் சொல்லும் இந்த யோக்கிய சிகாமணிகள் எல்லோரும் ஆறாண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு சம்பவம் நடந்ததா இல்லையா என்பதற்கு பதில் சொல்ல வேண்டும். நூற்றாண்டுகளுக்கு முந்தைய சோழர்கள் , சந்தானக் குரவர்கள் காலக் கதையையெல்லாம் பத்தி பத்தியாக விரிக்கத் தெரிந்த அ.அ, ஆறாண்டுக்கு முந்தைய நிகழ்வைப் பற்றி ஒரு வார்த்தையாவது எழுதியிருக்கலாம்.

பாசிசத்தின் உண்மை முகம் இதுதான். எது அடிப்படையான விசயமோ, எது பேசப்பட வேண்டிய விசயமோ, எது பிரச்சினைக்கு ஆதாரமோ அதை மூடி மறைப்பதும், அதனைச் சுற்றி புளுகு மூட்டைகளை அடுக்குவதும், அதன் மூலம் மொத்த விவாதத்தையும் திசை திருப்பி மக்களை மடையர்களாக்குவதும் தான் இட்லர் முதல் இ.ம.க வரை நடத்தி வரும் உத்தி.

சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடத் தடையில்லையாம், தீட்சிதர்களும், காசி திருப்பனந்தாள் மடத்திலிருந்து ஓதுவார்களும் அன்றாடம் பாடுகிறார்களாம். பிரச்சினை தீட்சிதர் பாடுகிறாரா, திருப்பனந்தாள் மட ஓதுவார் பாடுகிறாரா என்பதல்ல. அ.அ வியந்தோதுகிற சாதி மத பேதமின்றி கருவறை(அது சித்சபையாம், சிற்றம்பல மேடை இல்லையாம், நீ இன்னா வேணா சொல்லு நைனா, வணக்கம்-னு சொல்லு, நமஸ்தேஜி-ன்னு சொல்லு) வரை சென்று வழிபட முடிகிற சிதம்பரம் நடராஜர் கோவிலில், ‘சிவபெருமானின் அம்சமாகக் கருதப்படாத’ சாதாரண சிவனடியார்கள், பொதுமக்கள் தேவாரம் பாடி வழிபட முடியுமா, முடியாதா என்பதுதான் பிரச்சினை, வழக்கு. இதற்கு அ.அ பதில் சொல்லவில்லை. சிதம்பரம் தீட்சிதர்கள் உயர்நீதிமன்றத்தில் பதில்(தீர்ப்பு) சொன்னார்கள்.

“நடராசனே ஒரு தீட்சிதர்தான் என்பதால் நாங்கள் தெய்வப் பிறவிகள். இந்தக் கோவிலை நிர்வாகம் செய்வது தீட்சிதர்களின் பிறப்புரிமை. அதன்மீது ஆணையிட அறநிலையத்துறைக்கு அதிகாரம் கிடையாது.

மத நம்பிக்கைகளுக்கும், நடைமுறைகளுக்கும் எதிராக தமிழைப் புகுத்துவதுதான் இந்த அரசின் கொள்கை. எனவே, ஆணையரின் உத்தரவு தொடர்பாக இந்த அரசிடம் மனுச் செய்தால் நீதி கிடைக்காது. ஆறுமுகசாமியின் வழிபாட்டு உரிமை பறிக்கப்படுவதாக ஆணையர் கூறுகிறார். வழிபடுவதற்குத்தான் உரிமையே தவிர, எங்கே நின்று வழிபடுவது, என்ன பாடுவது என்பதெல்லாம் வழிபாட்டு உரிமையில் சேராது. “

– இது அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவுக்கு எதிராக கடந்த ஜுன் 8, 2007- அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தாக்கல் செய்த மனுவில் உள்ள வாதங்கள்.

ஆக, தீட்சிதர்கள் தான் சிதம்பரம் கோவிலில் என்ன பாடுவது, எப்படிப் பாடுவது, ‘புழக்கடையா, வாசற்படியா, வாசற்படி தாண்டியா’ -எங்கே நின்று பாடுவது என பாரம்பரிய பார்ப்பனீய உரிமையோடு தீர்மானிப்பார்கள். அதனை ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கேட்க முடியாது. அறநிலையத் துறை கேட்க முடியாது. ஆறுமுகசாமி கேட்டால் கையை முறிப்பார்கள். நீதிமன்றம் கேட்டால் ‘கைலாய மலையிலிருந்து சிவனோடு வந்த’ ஆதாரத்தைச் சொல்லி வியாக்கியானம் செய்வார்கள். காவல்துறை சென்றால் கடிப்பார்கள். இந்த இலட்சணத்தில், அங்கே தேவையில்லாமல் ‘சர்ச்சை’ செய்கிறார்களாம், இதற்கு விளக்கம் தர ஒரு வேதாந்தி! யார் தேவையில்லாமல் ‘சர்ச்சை’ செய்கிறார்கள்?

சிதம்பரம் கோவிலை ‘சர்ச்சை’க்குரியதாக மாற்றியது யார்? நடுநிலைமை வகிப்பதாக சொல்லும் ‘இந்துக்கள்’, நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள். நீதிமன்றத்தின் உத்தரவின்படி, அறநிலையத்துறையின் ஆணையின்படி, காவல்துறை அனுமதி பெற்று பாடச் சென்ற ஆறுமுகசாமியை பாட விடாமல் ‘சித்சபையில்’ நடராஜர் சிலையைச் சுற்றி நின்று ஊளையிட்டவர்கள் யார்? உடனடியாக கருவறையைச் சாத்தியவர்கள் யார்? பரப் பயலே என்று ஏசிக் கூச்சலிட்டவர்கள் யார்? அவரது கண்ணாடியை உடைத்தவர்கள் யார்? காவல்துறையினரோடு கருவறைக்குள் மல்யுத்தம் நடத்தியவர்கள் யார்? தொலைக் காட்சிப் பெட்டியில் இத்தனையையும் கண்ட நடுநிலைமையான ‘இந்துக்களே’, புனிதத்தை காப்பாற்றும் நோக்கம் உடையவர்களாக தீட்சிதர்கள் இருந்திருந்தால், என்ன செய்திருக்க வேண்டும்? முதல்வருக்கு மனுச் செய்திருக்கலாம். புனிதம் கெடும் கோவிலைக் காப்பாற்ற தனியாக பூஜை செய்திருக்கலாம். ஏன், வடக்கிருந்து உயிர் துறந்திருக்கலாம். ஆனால், தொலைக்காட்சிப் பெட்டிகள், பத்திரிக்கைகள் முன்னிலையில் கட்டப் பஞ்சாயத்து ரெளடிகளைப் போல காலித்தனம் செய்து விட்டு, தேவாரம் பாட முயன்ற ஆறுமுகசாமியும், அவரை ‘தூண்டி’ விட்ட மகஇக கம்யூனிஸ்டுகளும் சிதம்பரம் கோவிலுக்கு எதிராக சதி செய்கிறார்களாம்.

ஆறுமுகசாமி தன்னை யாரும் தூண்டி விடவில்லை என பலமுறை சொல்லியிருக்கிறார். ஞாயிறு(02-03-2008) மாலை, மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களை காவல்துறை வெறிகொண்டு தாக்கி கைது செய்த பொழுது, தானாக சென்று காவல் நிலைய வாசலில் தன்னையும் கைது செய்யுமாறு உண்ணாவிரதம் இருந்து போராடினார் அந்த எண்பது வயது முதியவர். அவருக்கு இருக்கும் தைரியத்திலும், மான உணர்விலும் பத்தில் ஒரு பங்கு கூட இல்லாத அ.அ, அவரைப் பார்த்துப் பரிதாப்படுவதற்கு எந்த அருகதையுமில்லை . அதே வேளையில், இனிமேல், சிதம்பரத்தில் தேவாரம் பாடுவதற்கு நிச்சயம் மக்களைத் ‘தூண்டுவோம்’ என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறோம். பூணூலுக்கு விடப்பட்ட சவாலை சிரமேற் கொண்டுள்ள அ.அ, தமது ‘நியாயமானக்’ கருத்துக்களை முன்வைத்து, மக்களை தேவாரம் பாட விடாமல் ‘தூண்டுமாறும்’ வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

இறைமறுப்புக் கொள்கை உடையவர்களும், மத நம்பிக்கை இல்லாதவர்களும் ஆன்மிக விஷயங்களில் தலையிட வேண்டிய அவசியம் என்ன என்ற ‘ஆழமான’ கேள்வியைக் கேட்கிறார் அ.அ. காஞ்சி சங்கர மடம் எனும் ஆன்மிக புனித நிறுவனத்தின் ‘புண்ணிய’ செயல்களில், ஆர்.எஸ்.எஸில் கூடச் சேராத ஆத்திகரான சங்கர ராமன் தலையிட்டார். விளைவு, தலையே போனது. நேர்மையான, நியாயமான பக்தர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? பாரபட்சமற்ற விசாரணைக்கு போராடியிருக்க வேண்டும். விவரங்களை சோதித்திருக்க வேண்டும். மகஇக கம்யூனிஸ்டுகள், திராவிடக் கட்சிகள் தூண்டி விடாத சொர்ணமால்யா, அனுராதா ரமணன் போன்ற இந்துப் பெண்களின் கருத்துக்களை கேட்டு, அதற்காகப் போராடியிருக்க வேண்டும். ஏன் பக்தர்கள் போராடவில்லை? ஏனென்றால், யாரும் சங்கர ராமனாகத் தயாரில்லை. நாத்திகர்களுக்கும், நக்சல்பாரிகளுக்கும் மட்டும்தான் சாவதற்கு பயம் இல்லை.

அட சாவதற்குத்தான் பயம், ‘இந்துக்களுக்கு’ சாப்பிடுவதற்கும் பயமா? கிடா வெட்டத் தடைச் சட்டம் வந்த பொழுது, ‘ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றக் கூடிய மரபுகளையும், சமய நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் மீறும்’ இந்த ‘இந்து’ விரோதச் செயலுக்காக கொதித்தெழுந்த ‘இந்து மக்கள்’ யார்? சிதம்பரப் பார்ப்பன ஆன்மிகத்தின் சவாலுக்கு களமிறங்கும் இந்து சூரர்கள், சாதாரண மக்களின் ஆன்மிகத்திற்கு களமிறங்க மறுத்தது ஏன்? அன்றும் திருச்சியில் கிடா வெட்டத் தடைச் சட்டத்தை எதிர்த்து மக்களின் சிறு தெய்வ வழிபாட்டு உரிமைகளை பாதுகாப்பதற்காக கிடா வெட்டி சிறை சென்றது மகஇக கம்யூனிஸ்டு நாத்திகர்களா, தொந்தி வளர்த்த ஆத்திகர்களா? சிதம்பரம் கோயில் வழிபாட்டு முறைகளை சீர்திருத்தம் செய்ய முயற்சிப்பது நமது சமய நம்பிக்கைகளை அழிக்கும் முயற்சி என அ.அ குறிப்பிடுகிறார். சிறு தெய்வ வழிபாட்டு முறைகளை அழிப்பது எந்த கணக்கில் சேர்த்தி?

ஆம். ‘இந்துக்களுக்கு’ பயம்தான். இரண்டாயிரம் ஆண்டு கால பயம். இந்து மதம் என்ற பெயரில் சுயமரியாதையற்ற அடிமைகளாக இந்து மதப் பட்டியில் கட்டி வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் ‘இந்து’ பயம். சைவப் பட்சிணிகளின் அகோரப் பற்களை அறிந்த பயம். புரிந்த தேவாரத்தை வீட்டிற்குள்ளும், புரியாத மந்திரங்களை கோவிலில் புனிதமென்றும் ஏற்றுக் கொள்ளும் சொரணையற்ற பயம். ஆம், ‘இந்து’ மதத்தின் அக்கிரமங்களை ‘இந்துக்களே’ தட்டிக் கேட்க முடியாத வெட்கக் கேடான நிலையில் ‘இந்து’ மதம் இருக்கிறதென்றால், நாத்திகர்களாகிய நக்சல்பாரிகள்தான் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது.

சிறீரங்க நாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வாய் வைத்து பிளப்பது எந்நாளோ எனச் சொல்பவர்கள்தான் மகஇக கம்யூனிஸ்டுகள் என்கிறார் அ.அ. அது பாரதிதாசன் பாடல். பார்ப்பன மேலாதிக்கத்திற்கு எதிரான ஒரு கவிஞனின் நெருப்பு வரிகள். பீரங்கி வைத்து பிளப்பதுதான் திட்டமென்றால், பேருந்துகளிலும், ரயில் நிலையங்களிலும் எமது தோழர்கள் முழங்கவும், ஆர்ப்பாட்டங்களும், பொதுக்கூட்டங்களும், பத்திரிக்கைகளும் நடத்தி தமிழ் மக்களின் சுயமரியாதை உணர்வை மீட்டெடுக்க வேண்டிய அவசியமுமில்லை. ரத்தம் சொட்டச் சொட்ட தடியடி வாங்க வேண்டிய நிர்ப்பந்தமுமில்லை. ஆனால் , ‘இந்து’ மதப் போராளிகள்தான் தென்காசியில் தமது அலுவலகத்திற்கு தாமே குண்டு வைத்துப் ‘பிளந்து’ கொண்டிருக்கிறார்கள். அயோத்தியில் ராம ஜென்ம பூமி விவகாரத்தில் தங்கள் நோக்கத்திற்கு உடன்பட மறுத்த எத்தனை இந்துக் கோயில்களை பாஜக இடித்துத் தள்ளியது என்பதற்கு அயோத்தியில் கொலை செய்யப்பட்ட ராம ஜென்மக் கோவில் பூசாரியும், அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் பூசாரிகளுமே சாட்சிகள்.

பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு , “எல்லோரும் இந்துக்கள் என்றால், ஏன் நாங்கள் கருவறைக்குள் நுழையக் கூடாது?” என்ற முழக்கத்தோடு, தாழ்த்தப்பட்டவர்களை அணிதிரட்டி, மகஇக தோழர்கள் திருச்சி சிறீரங்கம் கோவிலில் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தினார்கள். அங்கே ரங்கநாதருக்கு செருப்பு மாலை போட்டதாக ஒரு அவதூறு செய்திருக்கிறார் அ.அ. இது ஒரு முழுப் பொய். அம்பேத்கர், பெரியார் படங்களோடு கருவறை நுழைவுப் போராட்டம் நடத்திய தோழர்கள் போலிசாலும், சிறீரங்கப் பார்ப்பனர்களாலும் கொடூரமாகத் தாக்கப்பட்டனர் என்பது தான் நடந்த உண்மை. சொந்த மதத்தில் உள்ள மக்களையே சூத்திரர்கள், பஞ்சமர்கள் என இழிவுபடுத்தி, கருவறையிலிருந்து விலக்கி வைத்து விட்டு, இசுலாமியர்களை இந்து விரோதிகளாக சித்தரித்து, இசுலாமிய வழிபாட்டுத் தலங்களை இடிப்பதற்கும், அப்பாவி மக்களை கொன்று குவிப்பதற்கு கூலிப்படையாக தமிழ் மக்களை மாற்ற முடியாது என்பதற்கான அடையாளமாக, ஒரு பதில் நடவடிக்கையாக அப் போராட்டத்தை நாங்கள் நடத்தினோம். சிதம்பரத்திலோ ஒரு பக்தர் தேவாரம் பாடி வழிபட வேண்டுமென்பதற்காக, ஆறாண்டுகளாக தன்னந்தனியாகப் போராடுகிறார். வேடிக்கை பார்த்த வீடணர்களெல்லாம் இன்று வியாக்கியானம் செய்கிறார்கள்.

சரி, நாத்திகர்கள், நக்சலைட்டுகளை விடுங்கள். ஆத்திகரான பச்சையப்பன் அறக்கட்டளையின் முன்னாள் டிரஸ்டி சேரன், தீட்சிதர்களின் நகை களவாடலை, கோவிலுக்குள்ளேயே அரங்கேற்றும் சீர்கேடுகளை நக்கீரன் (மார்ச்-8, 2008) இதழில் சாடுகிறார். 1997-ல் சென்னை உயர்நீதிமன்றம் தீட்சிதர்களை கைது செய்து, கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என தெரிவித்திருக்கிறது. நாத்திகர்களுக்கு என்ன வேலை எனக் கேள்வி கேட்கிற அ.அ, சிதம்பரம் கோவிலுக்கு படியளக்கும் பச்சையப்பன் அறக்கட்டளைக்கும், உயர் நீதிமன்றத்திற்கும் என்ன பதில் சொல்வார்?

தீட்சிதப் பூணூலுக்கு விடுக்கப்பட்ட சவாலை ஆன்மிகத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாக மடை மாற்றுவதற்காகத்தான், வேண்டுமென்றே அர்ஜீன் சம்பத் என்ற பார்ப்பனரல்லாத, பெயர் தெரியாத இந்து மக்கள் கட்சியின் தலைவர் பெயரால், சூத்திரக் கவசமணிவித்து ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது தினமணி. தில்லைவாழ் அந்தணர்களின் அடியாட்களுக்கு அடியாட்களின் பொருமலையும், புலம்பலையும் வெளியிடுவது அரசாணையை அவமதிப்பதன் தொடர்ச்சி மட்டுமல்ல, நீதிமன்றத்தில் வழக்கில் உள்ள விவகாரத்தில் கருத்துத் தெரிவிக்கும் நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்ல, இது தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களின் சுயமரியாதை உணர்வுக்கும் விடுக்கப்பட்டுள்ள சவால். இம் மோசடித் தகிடுதத்தங்கள் எடுபடாது. கிரிமினல் கும்பலான தீட்சிதர்களிடமிருந்து சிதம்பரம் கோவிலை மீட்டெடுக்கும் வரை தமிழ் மக்கள் போராட்டம் ஓயாது. தேவாரப் பண்ணிசை முழக்கம் இப் போராட்டத்தின் முரசு மட்டும்தான். போர் உண்மையில் இப்பொழுதுதான் தொடங்குகிறது. ‘பக்தர்கள்’ என்று தம்மை கருதிக் கொள்ளும் தமிழ் மக்கள் இப்போரில் வெகு நாட்களுக்கு நடுநிலைமையில் தஞ்சமடைய முடியாது. இரண்டிலொரு நிலையை எடுத்துதானாக வேண்டும்.

மேலும் படிக்க:
தினமணியின் பூணூலில் பொங்கி வழியும் RSS கொழுப்பு!!!

Advertisements

4 thoughts on “தீட்சிதப் பூணூலுக்கு சூத்திரக் கவசமா?

  1. கஷ்டப்பட்டு (!) மணியாட்டி, நெய்யும், சோறுமாய் வாழும் தீட்சிதர்களுக்கே இவ்வளவு தெனாவட்டு என்றால், தன் சொந்த உழைப்பில் வாழும், உழைக்கும் மக்களுக்கு எத்தனை திமிர் இருக்க வேண்டும்.எம்.ஜி.ஆர் ஸ்டைலில் இரண்டு அடி வாங்கிவிட்டு, பிறகு, தின்று கொழுத்த தீட்சிதர்களை சிதம்பரம் கோயில் தரையில் உருளவிட்டு வெளுத்து கட்டியிருக்க வேண்டும். விட்டு வீட்டீர்கள்.ம.க.இ.க தோழர்களுக்கு நிறைய பொறுமை தான்! போங்கள்!

    Like

  2. உண்மையில் உங்கள் கட்டுரை மிகச்சிறப்பான பதிலடி தோழர், பல இடங்களில் பார்ப்பன கும்பலை சவுக்கால் உரித்திருக்கிறீர்கள், விரைவான நடையும், அடக்கமுடியாமல் சிரிக்க செய்யும் நகைச்சுவையும் இந்த கட்டுரையின் இன்னொரு சிறப்பு, விரிவாக கருத்துக் கூற எண்ணினாலும் கூட அவகாசம் இல்லாதா காரணத்தால் தட்டச்ச இயலவில்லை, இப்போதைக்கு நெஞ்சம் நிறைந்த புரட்சிகர வாழ்த்துக்கள்தோழமையுடன்ஸ்டாலின்

    Like

  3. மிகச் சிறப்பான பதிவு தோழர். இன்னும் கூட பார்ப்பன பயங்கரவாதிகள் அதே கேள்வியைத்தான் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். “நாத்திகர்களுக்கு இதிலென்னவேலை, சிவனடியாருடன் சென்ற வழக்குரைஞர்களில் இஸ்லாமியர்களும் சென்றது அத்துமீறல் தான்” என்று புலம்பலோ புலம்பல். இவ‌ர்க‌ள் ம‌ன்றாடிக் கேட்டுக்கொள்ளும் ஆன்மீக‌வாதிக‌ளின் ம‌வுனம், அல்ல‌து இவ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ இவ்விச‌ய‌த்தில் செய‌ல்ப‌டாத‌து, இவ‌ற்றில் தான் இவ‌ர்க‌ளின் சொத்தைக் கேள்விக‌ளுக்கு ப‌தில் அட‌ங்கியுள்ள‌து.தொட‌ர‌ட்டும் உங்க‌ள் தாக்குத‌ல்க‌ள்….

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s