தார்மீகத் திசைகாட்டி!

குறிப்பு: மனித உரிமைப் போராளி முனைவர் கே.பாலகோபாலின் நினைவாக இப்பதிவு எழுதப்பட்டுள்ளது. திரு.கோ.சுகுமாரன் எழுதிய இரங்கலிலிருந்து சில மேற்கோள்களும், எழுத்தாளர் வ.கீதா எழுதிய இரங்கலின் மொழியாக்கமும் தரப்பட்டுள்ளது. கீழ்க்காணும் கட்டுரைகளின் சில கருத்துக்களிலும், பாலகோபால் அவர்களின் சில கருத்துக்களிலும், எனக்கு கருத்து மாறுபாடு உண்டென்றாலும், மனித உரிமைச் செயல்பாடுகளில் முன்னுதாரணமாக விளங்கிய பாலகோபால் அவர்களைக் குறித்து தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடனேயே இப்பதிவு வெளியிடப்படுகிறது.

வாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மனித உரிமைப் போராளி டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 52) நேற்று (08.10.2009), ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு மனைவி (வசந்தாலஷ்மி), ஒரு மகன் (பிரகதா) உள்ளனர். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஈடு செய்ய முடியாத இழப்பு இது. மனித உரிமைத் தளத்தில் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் ஒரு சிறந்த வழிகாட்டி.

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் பிறந்த பாலகோபால், கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.வாராங்கலிலுள்ள கக்காடியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிவர். நக்சல்பாரி அரசியல் மீது ஏற்பட்ட ஈர்ப்புக் காரணமாக அவர் தன் வேலையை உதறிவிட்டு, மனித உரிமைக் களத்தில் இறங்கியவர்.

காவல் மரணங்கள், போலி மோதல், மரண தணடனை ஒழிப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்திப் போராடியவர். ‘ஆந்திரபிரதேச சிவில் உரிமைக் குழு’ என்ற அமைப்பில் பணியாற்றியவர். நக்சலைட் அமைப்புடன் முரண்பாடு ஏற்பட்டு, தனியாக ‘மனித உரிமை அமைப்பு’ நிறுவி செயல்பட்டவர்.

80-களில் ஆந்திர போலீசார் முன்னின்று நடத்திய ‘பிரஜா பந்து’ என்று அமைப்பினரால் கடத்தப்பட்டவர். இவரைக் கடத்தி வைத்துக் கொண்டு நக்சலைட் அமைப்பினர் பிடியில் இருந்த இரண்டு போலீசாரை விடுவிக்க ‘பிரஜா பந்து’ அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். பின்னர் நக்சலைட்கள் இரண்டு போலீசாரையும் விடுவித்த பின்னர் விடுவிக்கப்பட்டவர்.

போலி மோதல் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வாதாடி, போலி மோதல் நடந்தால் இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின்கீழ் போலீசார் மீது வழக்குப் பதிய வேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை பெற்றுத் தந்தவர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தவர்.

தலை சிறந்த எழுத்தாளர். தொடர்ந்து EPW போன்ற இதழ்களில் எழுதி வந்தவர். அவரது எழுத்தில் நேர்மையும், கறாரான பார்வையும் வெளிப்படும்.

புதுவை கோ.சுகுமாரன்,மனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்!,09-10-2009

முதலில், அவரது மரணம் குறித்த செய்தி, ஒரு மிகப் பெரிய பொய்யாகத் தோன்றியது. அது சாத்தியமில்லை. கடந்த வாரம் கூட அவர் சுறுசுறுப்பாக எப்பொழுதும் போல் வேலை செய்து கொண்டிருந்தார். 1998-ல் அவரும், வேறு சிலரும் துவக்கிய மனித உரிமை மன்றத்தின் பத்தாண்டு நிறைவையொட்டி, அனந்தபூரில் நடைபெறவிருந்த மனித உரிமை மாநாட்டுக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தார். ஒவ்வொரு வார இறுதியிலும் பல்வேறு மாவட்டங்களுக்கு அவர் பயணிப்பதும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக அரசோ, தனியார் நிறுவனங்களோ நிகழ்த்தும் நிலப் பறிப்பு… அபாயகரமான திறந்தவெளி அகழ்வு(open cast mining)… விவசாயிகள் தற்கொலை..பழங்குடி சமூகங்களில் உடல் நலப் பிரச்சினைகள்…என ஒவ்வொரு உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதும், அவரது வாழ்க்கை முறையாகி விட்டிருந்தது.

மற்றுமொரு குடியுரிமை ஆர்வலர் என பாலகோபாலை சுருக்கி விட முடியாது. பொது வாழ்க்கைக்காக தான் பார்த்து வந்த பல்கலைக்கழகப் பணியை உதறிய சிறந்த கணித நிபுணர்.. அறம் சார்ந்த சந்தேகங்களும், அக்கறைகளும் இருந்த போதிலும், அரசியலுக்கு அர்ப்பணித்துக் கொண்டவராகவும், மக்களுக்கு கடமைப்பட்டவராகவும் வாழ்ந்தவர்… சொல்லும், செயலும், சிந்தனையும் ஒத்திசைவோடு இயங்கியவர்…

எங்களில் பலருக்கு அவர் எந்த முறையில் தமது வாழ்க்கையை வாழ்ந்தோரோ, அது அவர் பேசியவற்றுக்கு இணையாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவர் ஒரு தார்மீகத் திசைகாட்டி. உங்கள் அரசியல் நோக்கையும், திசையையும் அவரைக் கொண்டு நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

அவரது நோக்கமாகவோ, விருப்பமாகவோ இல்லாத போதிலும், அவர் சமூக மனசாட்சியின் காவலனாகவே திகழ்ந்தார். இந்த வகையில் ஒரு தலைசிறந்த பொது வாழ்க்கையை அவர் வாழ்ந்தார். இருந்த போதிலும், மிகப் பலரது உள்ளங்களின் நெருக்கமானதும், அமைதியானதுமான தாழ்வாரங்களில் கவனத்திற்குரிய ஒருவராக உருவானார்.

ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு, ஜனநாயகம் குறித்த நமது புரிதலை ஆழப்படுத்தவும், விரிவடையச் செய்யவும் அவர் கடுமையாக உழைத்தார். ஆணித்தரமாக வாதாடினார். கொள்கையும், நடைமுறையும் அவரது வேலைகளில் இசைந்திருந்தன. அவர் கட்டுரைகள் எழுதினார். வழக்குகளில் வாதாடினார். உண்மை அறியும் குழுக்களை அமைத்தார். அரசு அதிகாரத்தின் இருண்ட அம்சங்களை கவனத்திற்கு கொண்டு வந்தார். 1980-களின் துவக்கத்தில் அவர் ஆந்திரப் பிரதேச குடியுரிமை அமைப்பின்(APCLC) பொதுச் செயலாளராக பணியாற்றிய போது, அவரது குடியுரிமைச் செயல்பாடுகள் பரவலாக கவனம் பெற்றது.

அது புகழ்பெற்ற மோதல் படுகொலைகளின் காலம். ஆந்திராவின் பின்தங்கிய, பழங்குடிப் பகுதிகளில் முந்தைய மக்கள் யுத்தக் குழுவின் இலட்சியப் பிடிப்புள்ள ஏராளமான போராளிகளும், அவர்களது ஆதரவாளர்களும் கொல்லப்பட்ட காலம். அடக்குமுறை சட்டங்களும், ‘நீளக் கத்திகளும்’ கோலோச்சிய அந்தக் காலத்தில், அவர் கொலை மிரட்டல்களை எதிர்கொண்டார். காவல்துறையின் நிழல் அமைப்பால் கடத்தப்பட்டார். ஒரு சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்தார் என பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவையனைத்தையும் தாண்டி வந்து, 1990-களின் மத்தியில் அக்காலம் முடிவுக்கு வந்த பொழுதில், உரிமை மீறல்கள் குறித்து பரந்ததும், விரிந்ததுமான பொருளில் சிந்திப்பதன் முக்கியத்துவம் குறித்து அவர் எழுதத் துவங்கினார்.

கேள்விகேட்பாரற்று குடிமக்கள் மீது அரசு நிகழ்த்தும் வன்முறையே ஜனநாயகத்திற்கான மிக மோசமான ஆபத்து எனபதை அவர் ஏற்றுக் கொண்ட போதிலும், இன்னும் பல அம்சங்களில் நிகழும் உரிமை மீறல்களையும் கவனத்திற்கு கொண்டு வந்தார். சாதிரீதியாகவும், பாலினரீதியாகவும் நிகழ்த்தப்படும் அமைப்பாக்கப்பட்ட ஏற்றத்தாழ்வே இந்த உரிமை மீறல்களின் தோற்றுவாயாக விளங்குகிறது என அவர் வாதிட்டார். மேலும், ‘வர்க்கப் போர்’ என்ற பெயரில், பாதுகாப்பற்ற குடிமக்களும், சிறிய அரசு ஊழியர்களும் உயிரிழப்பதற்கு கம்யூனிசப் போராளிகளின் பிற்போக்கான வன்முறை வழிவகுக்கிறதென்றும், அதே வேளையில் அரசு அதிகாரத்தின் உண்மையான, பொருளாதார அடித்தளங்கள் தங்குதடையின்றி எவ்விதப் பாதிப்புமின்றி நீடிக்கின்றன என்பதை சுட்டிக் காட்டினார். ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தையும், மக்கள் போராட்டங்களின் விளைவாக அரசியல் சட்டத்தில் உத்திரவாதம் செய்யப்பட்டுள்ள உரிமைகளின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். வரலாற்றுரீதியாகக் கடுமையாகப் போராடிப் பெற்ற இந்த உரிமைகளை குடியுரிமை அமைப்புகள் பாதுகாக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிலையில், நிறைய வேலைகள் செய்யப்பட வேண்டியிருந்தன. காஷ்மீர், வடகிழக்கு பிரச்சினைகளுக்காக அவர் ஹைதராபாத்தை விட்டு, தொடர்ந்து பயணிக்க நேர்ந்தது. காஷ்மீர் குறித்த அவரது எழுத்துக்கள்… இந்திய அரசு, இராணுவம் மற்றும் பள்ளத்தாக்கிலிருந்து மூடிமறைக்கப்பட்ட செய்திகளை அன்றாட செய்திகளாக வழங்கும் இந்திய பத்திரிகையுலகின் கைக்கூலித்தனத்தை குறித்த நடுநிலைமையானதும், அச்சமூட்டக் கூடியதும், கூர்மையானதுமான ஆய்வுகள், ஈடுஇணையற்றவையாகும். பிற இயக்கங்கள், குறிப்பாக மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் இயங்கிய சாதி எதிர்ப்பு இயக்கங்கள் குறித்து அவர் ஆய்வு செய்தார். அதன் மூலம், தனது இயல்புப்படி, சாதிப் படிநிலை குறித்த பிரமிக்கத்தக்க அவதானிப்புகளை முன்வைத்தார். சாதி ஒரு உற்பத்தி உறவாக நிலவுவதையும், எதிர்த்துப் போராடாத வரை, மூலப்பொருட்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஒருவர் கைக்கொள்வதை வரையறுத்து ஒடுக்கும் சக்தியாக விளங்குவதையும் சுட்டிக் காட்டினார்.

தொடர்ந்து வரும் இந்திய அரசின் மக்கள் விரோத, முதலாளித்துவ ஆதரவு நிலைகள்… எதிர்ப்பை வெளிப்படுத்துவதில் தடைகளை உருவாக்கும் சல்வா ஜூடும் போன்ற அரசு ஆதரவு காவல் படைகளின் பங்கு… அதே வேளையில் மாவோயிஸ்டுகளின் பெரிதும் பிரச்சினைக்குரிய வன்முறைப் பயன்பாடு…குறிப்பாக அதிகாரத்திற்கெதிராக மக்களை அணிதிரட்ட வாய்ப்புள்ள இடங்களிலும் அவ்வாறு வன்முறையைப் பயன்படுத்துவது… என பல்வேறு சுரங்கள் இணைந்த ஒரு இசைப் பாடலுக்கு ஒப்பானதும், செறிவானதுமான அவரது கருத்துகள், எங்களில் பலருக்கு கடந்த வருடத்திலும், எப்பொழுதும் வழிகாட்டின.

வன்முறை மற்றும் வன்முறையல்லாத வழிமுறைகள் குறித்த அவரது சமீபத்திய கட்டுரைகள் ஒன்றில், வன்முறைப் பயன்பாடு குறித்த வறட்டுவாதத்தை கைவிடுவது முக்கியமானது என்பதை சுட்டிக் காட்டினார். அதே வேளையில், முதலாளித்துவ மற்றும் அரசு பயங்கரவாததிற்கெதிரான வன்முறையின் எல்லைகள் குறித்தும் கவனம் கொள்வது அவசியமானது என்பதை வலியுறுத்தினார். ஒரு எளிமையான அமைதிவாதத்தை அவர் முன்வைக்கவில்லை. மாறாக, மக்களை அணிதிரட்டுவதன் அவசியத்தை, போர்க்குணமிக்க இயக்கங்களைக் கட்டுவதைப் பேசினார்.

முற்போக்கான மக்கள் போராட்டங்களை விரும்பிய ஒருவராக, அத்தகைய போராட்டங்களின் அறங்களை எல்லா சமயத்திலும் சோதிக்க விரும்பியவராக, கொள்கைக்கும், நடைமுறைக்குமான உறவை எப்பொழுதும் பரிசோதிக்க விரும்பியவராகவும்தான், அவர் தன்னை நினைவு கூர விரும்புவார் எனச் சொல்லலாம்.

எழுத்தாளர் வ.கீதா, ‘தி இந்து’, 10-10-2009

மேலும் படிக்க:
பாலகோபால் பேட்டி பாகம்-1
பாலகோபால் பேட்டி பாகம்-2
பாலகோபால் பேட்டி பாகம்-3

பின்குறிப்பு: திரு.பாலகோபாலின் மறைவிற்குப் பிறகு, அவரது எழுத்துக்கள் தொகுக்கப்பட்டு, மேலும் இரங்கல் செய்திகள், புகைப்படங்கள் அடங்கிய இணையத்தளம் துவக்கப்பட்டுள்ளது. பார்க்க: http://balagopal.org

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s