இரங்கல் – II

கடந்த மாதம், வங்காளத்தில் ஒரு முதுபெரும் ‘கம்யூனிஸ்ட்’ தலைவர் மறைந்தார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இடதுசாரிகள், கூட்டணி அரசில் பங்கேற்ற பொழுது, பங்குச் சந்தைகள் சரிந்தன.  உலகமயமத்தின் ‘ஒளிமயமான’ பாதைக்கு ஊறு நேர்ந்து விடுமே என ஆங்கிலத் தொலைக்காட்சிகள் பதைபதைத்தன.. ஆனால், ”வங்கத்துச் சிங்கத்தின்’ வாழ்வு முடிவுக்கு வந்த போதோ, அதே தொலைக்காட்சிகள் ஒப்பாரி வைப்பதில் போட்டி போட்டன.  ‘இடதுசாரிகள்’ எனப் பொதுவாக அழைக்கப்படும் போலிக் கம்யூனிஸ்டுகள் ‘தேசிய நீரோட்டத்தில்’ கலந்து யுகங்கள் கழிந்த பின்னால், அவை வருந்தாமல் இருந்தால் தான் ஆச்சரியம். எனவே, இந்தியக் கம்யூனிச இயக்கத்தை பாராளுமன்றச் செக்கு மாடாக மாற்றிய, பிழைப்புவாதிகளின் கூடாரமாக்கிய, குண்டர் படைகளை கட்டியமைத்த போலிக் கம்யூனிசப் பிதாமகனுக்காக டாடா வருந்தினார். அத்வானி வருந்தினார். வருத்தம் தாளாமல் நானும் இரங்கல் தெரிவித்தேன். புதிய ஜனநாயகமும் தெளிவான வரலாற்றுப் பார்வையோடு இரங்கல் தெரிவித்தது.

இம் மாதம், அதே வங்காளத்தில், இன்னொரு ‘கம்யூனிஸ்ட்’ தலைவர் மறைந்து விட்டார். ஆனால், அவருக்கு இரங்கல் தெரிவிப்பதென்ன, அவரது மரணத்தை அறிவிக்கக் கூட எந்த அரசியல் தலைவரோ, ஊடகங்களோ தயாராக இல்லை. ஏனெனில் அது இயற்கையான மரணமில்லை. ஒரு கொலை. அகிம்சாமூர்த்திகளின், கம்யூனிச ஆஷாடபூதிகளின் ஆசீர்வாதத்துடன், குறைந்தபட்ச மனிதநேயம் கூட அற்று நிகழ்த்தப்பட்ட படுகொலை. ஆம், மாவோயிஸ்டுகளின் ஆதரவுப் பத்திரிக்கையான ‘பீப்பிள்ஸ் மார்ச்’ (மக்கள் பேரணி) பத்திரிக்கையின் வங்க மொழிப் பதிப்பின் ஆசிரியர் ஸ்வபன் தாஸ்குப்தா அரசின் திட்டமிட்ட மெத்தனத்தால், மருத்துவ உதவி மறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் ‘பீப்பிள்ஸ் மார்ச்’ தடை செய்யப்பட்ட பத்திரிக்கையல்ல. மேலும், தற்காலிகமாக தடை விதிக்கப்பட்ட ‘பீப்பிள்ஸ் மார்ச்’ ஆங்கிலப் பதிப்பின் மீதான தடையும் கடந்த ஆகஸ்ட் 2009-ல் அரசால் விலக்கப்பட்டது. ஆனால், அடுத்த இரண்டே மாதத்தில் தடை செய்யப்படாத பத்திரிக்கை நடத்திய ‘குற்றத்திற்காக’ ஸ்வபன் தாஸ்குப்தா கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டார். ஸ்வபன் தாஸ்குப்தா குறித்து கீழே மொழிபெயர்க்கப்பட்டுள்ள சிறு கட்டுரையிலிருந்து நமக்கு கிடைக்கும் சித்திரம் என்ன? கடுமையான பொருளாதாரச் சிக்கல்களுக்கும், தன்னை சார்ந்திருந்த உடல் ஊனமுற்ற தங்கையின் அவல நிலைக்குமிடையில் புரட்சியை நேசித்து, மார்க்சிய லெனினிய அரசியலில் ஊன்றி நின்று, போராடி மடிந்த ஒரு போராளி தான் ஸ்வபன் தாஸ்குப்தா! மாவோயிஸ்ட் கட்சியின் இடது தீவிரவாதத் தவறுகள் மீது ஆழமான விமர்சனங்களைக் கொண்டிருக்கும் அதே வேளையில், அக் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்கொண்டிருக்கும் அரசின் மூர்க்கத்தனமான தாக்குதல்களையும், தியாக தீபங்களாக எரிந்து மடியும் அதன் எண்ணற்ற போராளிகளையும் எண்ணுகையில் மனம் கனக்கிறது. கருத்தால் வேறுபட்டாலும், புரட்சிகரக் கம்யூனிச உணர்வால் ஒன்றுபட்ட போராளியின் வாழ்விற்கும், மரணத்திற்கும் முன்னே தலை வணங்குகிறது. முஷ்டி உயருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ட்ரெவோர் செல்வம் எனும் கட்டுரையாளர் ‘எதிரோட்டங்கள்'(countercurrents) எனும் இணையத்தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். “தனது குடிமக்களை தெரிவு செய்து கொலை செய்யும் இந்தியா” எனும் தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

சமீபத்தில், ப.சிதம்பரத்தின் இணை அதிகாரியொருவர், பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்த திட்டத்தின் வழிமுறைத் தந்திரம்,  நக்சல்பாரிகளை ‘தலையில்லா முண்டங்களாக்குவதே’ என்றார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நக்சல்பாரிகளின் தலைவர்களை அழித்தொழிப்பதே இலக்காகும். அதே செய்தியின்படி, “பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரியொருவர் கடந்த வாரம், “ஒரு ஐம்பது தலைவர்கள் இவ்வாறு எல்லா இடங்களிலும் சிதறிக் கிடக்கலாம் என நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களை குறி வைப்பதன் மூலம் மொத்த இயக்கத்தையும் தலையில்லா முண்டமாக்கி, தீவிரமான பாதிப்புக்குள்ளாக்க எண்ணுகிறோம்.”எனத் தெரிவித்தார். பி.பி.சி-யின் சிறப்பு அறிக்கையில், ஒரு பாதுகாப்பு அதிகாரி, “எனவே, மாவோயிஸ்ட் தலைமையைக் குறிப்பாக நாங்கள் குறி வைக்கிறோம். சிறப்பு உளவுத் தகவல்களின்படி, சிறப்பு நடவடிக்கைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.

இசுரேலியப் படைகளின் உதவியுடன் இந்திய இராணுவம் மாவோயிஸ்ட் தலைவர்களைக் குறிவைத்துக் கொல்ல வகுத்து வரும் சதித் திட்டங்களை அவரது கட்டுரை சுட்டிக் காட்டியது. இந்தச் செய்தியின் ஒளியில், ஸ்வபன் தாஸ்குப்தாவின் கொலையை அரசு ஏன் நிகழ்த்தியது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு புறம், ஒரு இலட்சம் இராணுவப் படைகளை குவித்து ஆறு மாநிலங்களில், “ஆப்பரேசன் கிரீன் ஹண்ட்” என, மாவோயிஸ்டுகளை வேட்டையாடுவது என்ற முகாந்திரத்தில், பழங்குடிகளை மக்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து பெயர்த்தெறியும் உள்நாட்டு யுத்தத்தை அரசு முடுக்கி விடுகிறது. மறுபுறம், சதிகார முறையில் மாவோயிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களை கொனறொழித்து, அக்கட்சியை முடக்க முனைகிறது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட கோபாட் காந்தி, நேற்று முதல் நாளன்று (08-01-01) உ.பி மாநிலத்தில் கைது செய்யப்பட்ட அக்கட்சியின் முக்கியமான தோழர்கள் என அரசு இத்திசையில் விரைவாக திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. கோபாட் காந்தியை ‘நார்கோஅனாலிசிஸ்’ செய்யத் திட்டமிட்டிருப்பதும், ஸ்வபன் தாஸ் குப்தா திட்டமிட்டு கைவிடப்பட்டதும் அரசின் கொலைவெறியை எடுத்தியம்புகின்றன.

இதனூடாக, மாவோயிஸ்ட் ‘லேபிளை’ பயன்படுத்தி அரசின் அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் மனித உரிமைப் போராளிகள், அறிவுஜீவிகளையும் அரசு ஒடுக்கி வருகிறது. உ.பி மாநிலத்தில் கைது செய்யப்பட்டவர்களில், பியூசிஎல் மனித உரிமை அமைப்பின் மாநிலச் செயலாளர் சீமா ஆஜாத்-தும் கைது செய்யப்பட்டிருக்கிறார். சத்தீஸ்கரில் பொய்க் குற்றச்சாட்டில் இரண்டாண்டு காலம் சிறை வைக்கப்பட்ட பினாயக் சென், தற்பொழுது தலைமறைவாகியிருக்கும் ஹிமான்சு குமார் முதலான பலரும் அரசு ஒடுக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் ஜனவரி-26 குடியரசு நாளன்று, அரசின் உள்நாட்டு யுத்தத்தை எதிர்த்து துண்டறிக்கை வினியோகித்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பியூஷ் என்பவர் சேலத்தில் கைது செய்யப்பட்டு, அவர் மீது 124-A(அரசுக்கு எதிராக கலகம் செய்தல்) வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. இவையனைத்தும் முழுவேகம் பெற்று வரும் நரவேட்டையை எடுத்துக் காட்டுகின்றன.

ஏறத்தாழ, எழுபதுகளின் துவக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் நிகழ்த்தியதைப் போன்ற நக்சல் வேட்டை தொடங்கி நடந்து கொண்டிருப்பதை நிகழ்வுகளிலிருந்து எவரும் புரிந்து கொள்ளலாம். 1970-களின் இரத்தம் பரவியோடிய நாட்கள் மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கின்றன. அப்பு, பாலன், சீராளன், பச்சையப்பன், சுப்பாராவ் பாணிக்கிரஹி, வேம்படப்பு சத்தியநாராயணா, வர்கீஸ் என கொலை செய்யப்பட்ட நக்சல்பாரிப் புரட்சியாளர்களின் பட்டியலில் புதிய பெயர்களை வெகு வேகமாக அரசு எழுதி வருகிறது.

பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், வெண்ணிற ஆடையில், கண்ணியமான சிரிப்போடு, நுனி நாக்கு ஆங்கிலத்தில் மாவோயிஸ்டுகளை ‘பேச்சுவார்த்தைக்கு’ அழைக்கிறார் ப.சிதம்பரம். “ஆப்பரேஷன் கிரீன் ஹண்ட் ஊடகங்களின் கற்பனை” எனச் சொல்லி சிரிக்கிறார். “நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை எடுத்துச் செல்வோம். நக்சல்பாரிகளும் இந் நாட்டு குடிமக்களே! நக்சலியம் சமூகப் பிரச்சினைதான், சட்ட ஒழுங்குப் பிரச்சினையல்ல”என வேதம் ஓதுகிறார். பத்திரிக்கையாளர்கள் கலைந்தவுடன், தனியறைக்குள் சென்று, ஒரு நாக்கை கழற்றி சுத்தம் செய்து வைக்கிறார். மறு நாக்கிலிருந்து  பழங்குடி மக்களினதும், இந்த நாட்டின் உண்மையான கம்யூனிசப் புரட்சியாளர்களான நக்சல்பாரிகளின் இரத்தமும் வழிகிறது.

ஒரிசாவின் எல்லைகளை
சுற்றி வளைத்து வழிகளை அடைக்கிறது இராணுவம்.
ஒரு இரு மாதக் குழந்தை
தாண்டேவாடாவின் ஏதோ ஒரு இருளடைந்த சிறையில்
வெட்டப்பட்ட இரு விரல்களை தேடிக் கொண்டிருக்கிறது.
தண்டகாராண்யாவின் அடர்ந்த வனங்களினூடாக
சப்பாத்துக் கால்கள் அணிவகுக்கின்றன.
சுடப்பட்ட காலில் வலி வதைக்க,
சோதி சாம்போ எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
நியம்கிரி மலைக்கு மேலே சூரியன் மெல்ல எழும்புகிறது.
சூரியனில் நக்சல்பாரி கிராமம் தெரிவதை
வியந்து பார்க்கிறாள் ஒரு பழங்குடிப் பெண்.
அங்கே ஸ்வபன் தாஸ்குப்தாவின் சிரிப்பொலி கேட்கிறது.
அது ஒருவரின் ஒலியல்ல…

தோழர் ஸ்வபன் தாஸ்குப்தா குறித்து “இந்திய மக்கள் மீதானபோரை எதிர்த்த சர்வதேசப் பிரச்சார இயக்கம் ” இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியின் சுருக்கமான வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.

ஸ்வபன் தாஸ்குப்தா (19 ஏப்ரல் 1949 - 2 பிப்ரவரி 2010) நன்றி: democracyandclasstruggle.blogspot.com

கடந்த பிப்ரவரி 2, 2010 அன்று ‘பீப்பிள்ஸ் மார்ச்’ பத்திரிக்கையின் வங்காள மொழிப் பதிப்பு ஆசிரியர் ஸ்வபன் தாஸ்குப்தா மரணமடைந்தார்.  இப்பத்திரிக்கை  கல்கத்தாவிலிருந்து வெளி வந்து கொண்டிருந்தது. சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம்(ஊபா) 2008-ன் படி அவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இறந்து போன முதல் கைதியாவார்.

ஸ்வபன் தாஸ்குப்தா கடந்த அக்டோபர் 2009 அன்று கைது செய்யப்பட்டார். அன்று முதல் சிறைக் கொட்டடியில் உடல்ரீதியிலும், உளவியல்ரீதியிலும் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டதன் விளைவாகவும், சிறைக்குள்ளும், மருத்துவமனையிலும் அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு மறுத்து விட்டதாலும் தான் அவர் மரணமடைய நேர்ந்திருக்கிறது. ஜனநாயக இயக்கங்களும், பலரும் அவரது மரணம் ஒரு திட்டமிட்ட கொலை எனக் குற்றம் சாட்டுகின்றனர். அவரது இறப்பிற்கு வித்திட்ட சூழ்நிலைகளை விசாரிக்க வேண்டும் எனக் குரல் எழுப்பி வருகின்றனர்.

ஆகஸ்ட் 2004-ல் ‘பீப்பிள்ஸ் மார்ச்’ பத்திரிக்கையின் வங்காள மொழிப் பதிப்பு துவக்கப்பட்டதிலிருந்து ஸ்வபன் தாஸ்குப்தா அதன் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இறுதி வரை துணிவோடும், அர்ப்பணிப்போடும் பத்திரிக்கையை நடத்தி வந்தார். ‘பீப்பிள்ஸ் மார்ச்’ பத்திரிக்கையின் ஆங்கில மொழிப் பதிப்பு தடை செய்யப்பட்ட போதிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் புரட்சிகரப் போராட்டங்கள் குறித்த கருத்துக்களையும், செய்திகளையும் எல்லாத் தடைகளையும் தாண்டி பத்திரிக்கையில் வெளிக் கொணர்ந்தார். அரசின் அச்சுறுத்தல்கள் அவரை அசைக்க முடியவில்லை. அவரது மரணம் அரசினால் நடத்தப்பட்ட ஒரு பச்சைப் படுகொலையாகும். அவரது வாழ்க்கை மற்றும் சிறை வாசம் குறித்த கீழ்க்காணும் செய்திகள், 61 வயதில், அவரது இறுதிக் கணம் வரை அவருடன் இணைந்து நின்ற நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து திரட்டப்பட்டவை.

1949, ஏப்ரல் 19-ஆம் நாளில்  ஸ்வபன் தாஸ்குப்தா டெல்லியிலுள்ள திமார்பூரில் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தார்.  அவரது தந்தை சிசிர் குமார் தாஸ்குப்தா மத்திய அரசு ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவர் ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய அனுசீலன் சமிதி என்ற அமைப்புடனும், சுதேசி இயக்கத்துடனும் தொடர்பு கொண்டிருந்தவர். ஸ்வபன் தாஸ்குப்தாவிற்கு இரு சகோதரர்களும், அவரை முழுமையாக சார்ந்து வாழ்ந்த உடல் ஊனமுற்ற சகோதரியொருவரும் உள்ளனர். ஸ்வபன் தாஸ்குப்தா திருமணம் செய்து கொள்ளவில்லை.

தில்லியிலும், கல்கத்தாவிலும் கல்வி பயின்ற ஸ்வபன் தாஸ்குப்தாவிற்கு, 1972-ல் மத்தியக் கலால் துறையில் வேலை கிடைத்தது. ஒரிசாவில் கலால்துறை ஆணையரின் உதவியாளராக இரு ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர், 1974 இறுதியில் தனது வேலையைக் கைவிட்டு, புரட்சிகர அரசியலில் முழுநேரமாக செயல்படத் துவங்கினார். அதனையொட்டி அவர் தலைமறைவாகச் செல்லவும் நேர்ந்தது. தமது அரசியல் கொள்கையைக் கை விட்டால், மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக அரசு கூறியது. தமது கொள்கையில் உறுதியோடிருந்த ஸ்வபன், அரசின் வேண்டுகோளை நிராகரித்தார். 1980-ல் அவரது தந்தையின் மரணத்தையொட்டி மீண்டும் கல்கத்தா வந்து சேர்ந்தார். குடும்பப் பொருளாதாரச் சிக்கல்களின் விளைவாக, உயர்நீதிமன்ற வளாகத்தில் தட்டச்சு செய்வது, வழக்கறிஞர்களுக்கு தட்டச்சு செய்வது என குறைவான சம்பளத்திற்கு வேலை செய்தார். பம்பாயில் ஒரு சாயப்பட்டறை நிறுவனத்தில் தட்டச்சுப் பணியாளராக வேலை செய்தார். அலுவலகத்திலுள்ள தொழிலாளிகளின் போராட்டங்களில் ஈடுபட்டதற்காக, 1992-ல் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதன் பின்னர், கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பல வழக்கறிஞர்களுக்கு தட்டச்சுப் பணியாளராக வேலை செய்து வந்தார்.

அரசியல் வாழ்வு

1966-ல் வங்காளத்தில் பெரும்பாலான பகுதிகளில் கிளர்ந்தெழுந்த விலைவாசி உயர்வு எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கெடுத்தார். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான போராட்டங்களிலும் ஈடுபட்டார். மாணவப் பருவத்தில் முதலில் சி.பி.ஐ-லும், பின்னர் சி.பி.எம்-மிலும் இணைந்து செயல்பட்டார். வடக்கு வங்காளத்தில், நக்சல்பாரி கிராமத்தில், ‘வசந்தத்தின் இடிமுழக்கம்’ கம்பீரமாக எழுந்த பொழுது, தியாகி ஆஷீ மஜீம்தார் போன்ற தோழர்களோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். (ஆஷீ மஜீம்தார் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் பயின்று வந்தார். 1971-ல், தெற்கு கல்கத்தாவில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்.) அக் காலகட்டத்தில் தனித்திருந்த மாவோயிசக் கம்யூனிச மையத்துடனும் ஸ்வபன் தொடர்புகள் கொண்டிருந்தார். சில பத்தாண்டுகள் கழித்து, மாவோயிசக் கம்யூனிச மையம், மக்கள் யுத்தக் குழுவுடன் இணைந்து சி.பி.ஐ(மாவோயிஸ்ட்)-ஆக உருவெடுத்தது. 1969-ல் சி.பி.ஐ (எம் – எல்) துவங்கப்பட்ட பொழுது, ஸ்வபன் கட்சியில் இணைந்தார். இளைஞர் படைகளின் பணிகளில் ஈடுபட்டார்.

பின்னர், சி.பி.ஐ (எம் – எல்) உடைந்த பிறகு, 1973-ல் ஒரிசாவிலிருந்த ‘கிஷோர்-சாந்தோ-மகேந்திர சிங்’ மா-லெ குழுவுடன் இணைந்து செயல்பட்டார். அன்றைய தருணத்தில், சத்யநாராயணா சிங்கின் பாராளுமன்றப் பாதைக்கும், இடது சாகசவாதத்திற்குமெதிராக அக் குழுவினர் போராடிக் கொண்டிருந்தனர். பின்னர் அக்குழுவின் செயல்பாடுகள் முடங்கிப் போயின. 1992-1996 வரை மாவோயிசக் கம்யூனிச மையத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சி.பி.ஐ(எம்-எல்)[கட்சி ஒற்றுமை] குழுவின் தலைமைத் தோழர்களோடு தொடர்பு கிடைக்கப் பெற்றார். சி.பி.ஐ(எம்-எல்)[கட்சி ஒற்றுமை] மக்கள் யுத்தக் குழுவுடன் இணைந்த காலகட்டத்தில், வெளிவந்த பல்வேறு புரட்சிகர எழுத்தாக்காங்களில் அவர் பங்களிப்பு செலுத்தினார். இந்த நிகழ்ச்சிப் போக்கில், ‘பீப்பிள்ஸ் மார்ச்’ பத்திரிக்கையின் வங்காள மொழிப் பதிப்பின் ஆசிரியராக வளர்ந்தார்.

கைது, கொலை குறித்த உண்மைகள்

அக்டோபர் 6, 2009 அன்று லால்கர் மன்ச் எனும் அமைப்பு கல்கத்தாவில் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலிருந்த பொழுது, ஸ்வபன் தாஸ்குப்தாவிற்கு காவல்துறையின் சிறப்புப் பிரிவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. தான் கைது செய்யப்படவிருப்பதை உணர்ந்து கொண்ட ஸ்வபன், அரங்கிலிருந்த நண்பர்களிடம் இத் தகவலைத் தெரிவித்தார். இடையிலேயே, காவல்துறை தனது வீட்டில் சோதனையிடும் தகவலும் அவருக்கு கிடைத்தது. அன்று இரவு கரியா ரயில் நிலையத்தினருகில் ஒரு தேனீர்க் கடையின் முன்பாக கைது செய்யப்பட்டார். பவானி பவன் எனுமிடத்திலும், லால் பஜார் காவல் நிலையத்திலும் வைத்து 28 நாட்கள் ‘விசாரணை’ என்ற பெயரில் சித்திரவதைகள் துவங்கின. பல நாட்கள் தொடர்ச்சியாக தூங்க விடாமல் சித்திரவதை செய்யப்பட்டார். கடும் குளிர் வாட்டிய அந் நாட்களில் வெறுந்தரையில் உறங்க நிர்ப்பந்திக்கப்பட்டார். தான் ஒரு ஆஸ்துமா நோயாளி, எனவே குறைந்த பட்சம் ஒரு போர்வையாவது வழங்கக் கோரினார். அவரது கோரிக்கையை ஈவிரக்கமின்றி போலிசு நிராகரித்தது. கொடூரமான சித்திரவதையின் விளைவாக,  பலவீனமான அவரது உடல்நிலை மேலும் நசிவடையத் துவங்கியது.

ஊபா-வின் மூன்று பிரிவுகளிலும், குற்றவியல் சட்டத்தின் மூன்று பிரிவுகளிலும் (அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல் உட்பட) அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நவம்பர் 3, 2009 அன்று சிறையில் அடைக்கப்பட்டார். அவரை உறவினர்களும், நண்பர்களும் சந்திக்கச் சென்ற பொழுதுதான், மண்ணீரல் அழற்சியடைந்து புண்ணாகி, அவர் சிறை மருத்துவமனையில் படுக்கையில் கிடப்பதை அறிய நேர்ந்தது. நவம்பர் 9, 2009 அன்று மண்ணீரல் வீக்கம் மற்றும் சிறுநீரக உறுப்புப் பகுதியில் பிரச்சினைகள் ஏற்பட்டதால், பாங்குர் மருத்துவமனைக்கு காவல் துறை அழைத்துச் சென்றது. டிசம்பர் 17, 2009 அன்று எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் ஆஸ்துமா, மூச்சுத் திணறலுக்காக கொண்டு செல்லப்பட்டார்.இரத்தப் பரிசோதனையில் தொழுநோய் தாக்கியிருப்பதாகத் தெரிய வந்தது. அவரது நண்பர்கள் யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. பொது வார்டில் எந்த உதவியாளரும் இல்லாமல் படுக்கையில் கிடந்தார். அவரது உதடுகளின் வழியே இரத்தம் கசிந்து கொண்டிருந்ததை கவனித்த நண்பர்கள் அவருக்கு உதவ முயன்றனர். அவர் சிறுநீர் கழிக்க உதவ முயன்றால் கூட, காவலுக்கு நின்ற போலிசு தலையிட்டு தடுத்தது. இரண்டாம் நாள், அவரை சந்திக்க வந்த நண்பர்களை, பெண்கள் உட்பட எந்தப் பாரபட்சமுமின்றி காது கூசும் சொற்களால் திட்டி வெளியேற்றியது. அவருக்கு மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை என்பதை ஸ்வபன் நண்பர்களிடம் கூறியிருக்கிறார். தொடர்ச்சியாக இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்ததால், அவருக்கு இரத்தம் ஏற்ற வேண்டியிருந்தது. ஆனால், போலிசு எதுவும் செய்ய முன்வரவில்லை. சிறை அதிகாரிகள் எந்த உதவியும் செய்ய முன் வரவில்லை என மருத்துவர்கள் ஸ்வபனின் நண்பர்களிடம் கூறியுள்ளனர்.

ஜனவரி 17-ஆம் தேதியன்று, என்.ஏ.பி.எம், ஏ.பி.டி.ஆர் முதலான பல்வேறு அமைப்புகள் இணைந்து, ஸ்வபன் தாஸ்குப்தாவிற்கு மருத்துவ உதவிகள் செய்ய மறுப்பதன் மூலம் அவரை திட்டமிட்டு கொலை செய்ய அரசு முனைந்திருக்கிறது என பத்திரிக்கை செய்தி வெளியிட்டனர். ஜனவரி 17-ஆம் தேதியன்று, போலிசு உதவியை இனி எதிர்பார்த்து பிரயோசனமில்லையென, அவரது நண்பர்களை மருந்துகள் வாங்கி வர மருத்துவர்கள் கேட்டுக் கொண்டனர். மிகுந்த சிரமத்திற்கிடையில், அவருக்கு இரத்தம் சேகரிக்கப்பட்டது. இந் நிலையில், செய்தி பரவத் துவங்கியது. பலர் சிறைத் துறை அமைச்சரைத் தலையிடக் கோரி குரல் கொடுத்தனர். இறுதியில், சிறைத்துறை ஐ.ஜியே மருத்துவமனைக்கு வர நேர்ந்தது. மருத்துவ உதவிக்கான குழுவும் உருவாக்கப்பட்டது. ஆனால், காலம் கடந்து விட்டிருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில், பிப்ரவரி 2-ஆம் தேதி காலை 5 மணிக்கு ஸ்வபன் தாஸ்குப்தா மரணமடைந்தார். செங்கொடி போர்த்திய அவரது உடல், மெளன ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.அவரது இறுதி ஊர்வலத்தில் வங்கத்தின் குறிப்பிடத்தக்க ஜனநாயக சக்திகளும், அறிவு ஜீவிகளும், மனித உரிமை செயல்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர். ஸ்வபன் தாஸ்குப்தாவின் மரணம் காவல்துறையின் பிடியில் அரசினால் நடத்தப்பட்ட படுகொலையாகும்.

Advertisements

2 thoughts on “இரங்கல் – II

  1. தோழர் ஸ்வபன்தாஸ் குப்தா அவர்களுக்கு நமது சிவப்பு வணக்கங்களை தெரிவிப்போம். தமிழில் இது குறித்து யாரும் எழுதவில்லை நீங்கள் எழுதியதற்கு நன்றி். இந்த விசயம் பலருக்கும் தெரியாது என்பதால் இந்த கட்டுரையை வினவிற்கு அனுப்பி வையுங்கள்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s