சத்தீஸ்கரில் ஒரு சத்திய சோதனை!

சத்தீஸ்கர் போலிசின் ‘புத்திசாலித்தனமான’ சில நடைமுறைகளை கேட்கும் பொழுது, நீங்கள் வியப்படையாமலிருக்க முடியாது. உதாரணமாக, சத்தீஸ்கர் போலிசார் மற்றும் சல்வா ஜூடும் எனும் அரசு ஆதரவு கூலிப்படையினர் பயன்படுத்தும் எந்தக் கார்களிலும் நம்பர் பிளேட் கிடையாது. இது ஏன் என விசாரித்தால், அவர்கள் கூறும் காரணம், “நம்பர் பிளேட்டை வைத்து மாவோயிஸ்டுகள் போலிஸ் வாகனங்களை அடையாளம் கண்டு கொள்வார்கள்.” சரி, நம்பர் பிளேட் இல்லாமலிருப்பதே ஒரு அடையாளமாகி விடாதா என நீங்கள் கேட்கலாம். சிரிக்கவும் கூட செய்யலாம். ஆனால், இந்தக் கேள்வியை நீங்கள் சத்தீஸ்கரில் கேட்க முடியாது. மாவோயிஸ்டு ஆதரவாளர் என உடனடியாக கைது செய்யப்படுவீர்கள். சத்தீஸ்கரில் போலிசார் சீருடை அணிவதில்லை. பேட்ஜ் அணிவதில்லை. ஒரு போலிசுக்காரன் மக்களைத் தாக்கினால், அவனுடைய வாகன எண்ணையோ, பெயரையோ கூட ஒருவர் அறியக் கூடாது என்பதற்காகவே மேற்கூறிய ‘கட்டுப்பாடான’ நடைமுறையை போலிசு பின்பற்றி வருகிறது. ஆம், இத்தகைய சட்ட விரோதக் காட்டாட்சிதான் அங்கே நடந்து கொண்டிருக்கிறது.

2005-ல் டாடா, மித்தல் போன்ற முதலாளிகள் நிலங்கள், இயற்கை வளங்களை அபகரிப்பதற்காக, மாவோயிஸ்டுகளை வேட்டையாடுவது என்ற முகாந்திரத்தில், சல்வா ஜூடும் எனும் அரசு ஆதரவு கூலிப்படை அங்கே துவக்கி வைக்கப்பட்டது. இன்று வரை, சல்வா ஜூடும் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களை காக்கை, குருவிகளைப் போல சுட்டுக் கொன்று வருகிறது. கணக்கற்ற பழங்குடிப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான கிராமங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. இலட்சக்கணக்கான பழங்குடி மக்கள் ஒன்று, சத்தீஸ்கரை விட்டு தப்பியோடியுள்ளனர் அல்லது ராய்ப்பூர் நெடுஞ்சாலையின் இரு மருங்கிலுமுள்ள முகாம்களில் அகதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். 70 வயது முதிய பழங்குடி பெண்மணியின் முலைகள் அறுக்கப்பட்டன; நிறை மாத கர்ப்பிணி ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டார்; 2 வயது குழந்தையின் விரல்கள் துண்டிக்கப்பட்டன. இவை அனைத்தும் எங்கோ தொலைதூர ஆப்பிரிக்க நாட்டில் நடக்கவில்லை. உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாம், பாரதத் தவத்திரு நாட்டில்தான் நடந்து கொண்டிருக்கிறது. வளர்ந்து வரும் வல்லரசின் ஜனநாயக யோக்கியதையை, காந்தி தேசத்தின் கொலைவெறி முகத்தை, தற்பொழுது சத்தீஸ்கரில் ஒரு காந்தியவாதியே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.

1992-ல், வினோபாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஹிமான்சு குமார், உத்தரப் பிரதேசத்திலிருந்து தனது மனைவி, மகள்களோடு, மிகவும் பின் தங்கிய பகுதியான சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா மாவட்டத்திற்கு வந்திறங்கினார். பழங்குடியினர் மத்தியில் கல்வி, சுகாதாரம் முதலான நலப் பணிகளை, ‘வனவாசி சேத்னா ஆசிரமம்'(விசிஏ) என்ற தனது தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலமாக, 15 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வந்தார். 2005-லிருந்து நிலைமைகள் மாறத் துவங்கின. சல்வா ஜூடுமின் அட்டூழியங்களுக்கெதிராக, ஹிமான்சு குமார் குரல் கொடுக்கத் துவங்கினார். பல்வேறு உண்மை அறியும் குழுக்களில் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களோடு இணைந்து செயல்பட்டு, எண்ணற்ற அடக்குமுறைகள், கொலைகள், பாலியல் வன்முறைகளை வெளிக் கொணர்ந்தார். உச்ச நீதிமன்றத்தில் சல்வா ஜூடுமின் அக்கிரமங்களை அம்பலப்படுத்திய நந்தினி சுந்தர் முதலான அறிவுஜீவிகளுக்கு துணை நின்றார். ஏறத்தாழ 600-க்கும் மேற்பட்ட குற்றங்களை காவல்துறையில் புகார்களாகப் பதிவு செய்யப் போராடினார். லிங்ககிரி, பசகுடா முதலான கிராமங்களிலிருந்து ஆந்திராவிற்கு உயிர் பிழைக்கத் தப்பியோடிய மக்களை மீட்டு, அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, மீள்குடியமர்த்தும் பணியில் ஈடுபட்டார். விளைவு, அரசு தனது நெற்றிக்கண்ணைத் திறந்தது.

2009, மே மாதத்தில், எந்த அறிவிப்புமின்றி, புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டது எனக் கூறி ஹிமான்சு குமாரின் ஆசிரமம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அவரது அமைப்பின் ஊழியர்கள் மிரட்டல்களுக்கு ஆளாயினர். ஆகஸ்டு மாதத்தில் கோபா குஞ்சம் என்ற முன்னணி ஊழியர் கடுமையாகத் தாக்கப்பட்டார். ஜனவரி 8, 2009 அன்று சிங்காரம் எனும் பகுதியில், 15 பழங்குடி மக்கள் கொலை செய்யப்பட்டனர். அதே போன்று, ஜீன் 18, 2008 அன்று மத்வாடா எனும் பகுதியில், காவல் நிலையம் எதிரிலேயே மூன்று பழங்குடி இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த இரண்டு சம்பவங்களிலும், கொலை செய்யப்பட்டவர்கள் மாவோயிஸ்டுகள் என சல்வா ஜூடும் கதை கட்டியது. இதனை அம்பலப்படுத்தி, சாட்சிகளுக்கு நம்பிக்கையூட்டி, வழக்குப் பதிவு செய்ய துணை நின்றவர் கோபா குஞ்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில், அக்டோபர் 1, 2009 அன்று கூம்பட் எனும் கிராமத்தில் பெயரில், ஐம்பது வயது முதியவர், எட்டு வயது சிறுமி உட்பட, ஒன்பது பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் என சல்வா ஜூடும் கூலிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டே வயதான மாத்வி முகேஷ் எனும் குழந்தையின் மூன்று விரல்கள் துண்டிக்கப்பட்டன. சோதி சாம்போ எனும் பழங்குடிப் பெண் காலில் சுடப்பட்டார். அவர் ஹிமான்சு குமார் ஆசிரமத்தில் அடைக்கலம் தேடினார். கூம்பட் படுகொலை மற்றும் கச்சன்பள்ளி படுகொலையை அம்பலப்படுத்தி உச்சநீதிமன்றத்தில் ஹிமான்சு ரிட் மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றமும் சத்தீஸ்கர் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அரசின் தாக்குதல்கள் மென்மேலும் மூர்க்கத்தனமாக அதிகரிக்க துவங்கியது. “ஆப்பரேசன் கிரீன் ஹண்ட்” (பசுமை வேட்டை) எனும் உள்நாட்டு யுத்தத்திற்கான அறிவிப்பை அரசு உரத்த குரலில் பேசத் துவங்கியது. நவம்பர் 25-தேதியன்று, பசுமை வேட்டை நடவடிக்கை காரணமாக, விசிஏ ஊழியர்கள் எவரும் மக்களை சந்திக்க செல்லக் கூடாது என அரசு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தது. இதனையொட்டி, பி.யூ.சி.எல், என்.ஏ.பி.எம் முதலான அமைப்புகளுடன் இணைந்து, ‘டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தண்டேவாடாவின் 17 கிராமங்களுக்கு பாதயாத்திரை செல்வது, மாத இறுதியில் அமைதியான முறையில் மக்களைத் திரட்டி சத்தியாக்கிரகம் செய்வது, ஜனவரி முதல் வாரத்தில் மக்கள் கருத்தறிதல் கூட்டம் நடத்துவது’ என ஹிமான்சு அறிவித்தார். அரசும் தனது இறுது ‘நடவடிக்கையைத்’ துவங்கியது.

குரூர நகைச்சுவையாக, மனித உரிமை நாளான டிசம்பர் 10-ம் தேதியன்று, விசிஏ-வை முழுமையாக முடக்குவதற்கான அடக்குமுறை துவங்கியது. “ஹிமான்சுவை விரட்டு, பஸ்தாரைக் காப்பாற்று!”, “ஹிமான்சுவைக் கொன்றொழிப்போம்!” என்ற முழக்கங்களோடு சல்வா ஜூடும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. தண்டேவாடாவில் உள்ள யாரும் ஹிமான்சுவுக்கு நிலமோ, இடமோ அளிக்கக் கூடாது, மீறினால் கொலை செய்வோம் என போலிஸ் முன்னிலையிலேயே பகிரங்கமாக மிரட்டல் விடுக்கப்பட்டது. மாவோயிஸ்டுகளால் கடத்திக் கொலை செய்யப்பட்ட சல்வா ஜூடும் உறுப்பினர் வழக்கில் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு, கோபா குஞ்சம் கைது செய்யப்பட்டார். அவருக்குத் துணையாக சென்ற வழக்கறிஞர் ஆல்பன் தாப்போ காவல் நிலையத்தில் வைத்துக் கடுமையாகத் தாக்கப்பட்டார். 25,000 ரூபாயை கோபாவின் கையில் திணித்து விசிஏ-வை விட்டு வெளியேற போலிசு மிரட்டியது. அம்மிரட்டலுக்கு அவர் பணிய மறுக்கவே, கடுமையாகத் தாக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார். முனிசிபல் தேர்தல்கள் என்ற காரணத்தைக் காட்டி, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை மீறினால் கைது செய்வோம் என போலிசு மிரட்டியது. வேறு வழியின்றி, ஹிமான்சு பாத யாத்திரையை ரத்து செய்தார்.

அதிகரிக்கும் நெருக்கடிகளையொட்டி, டிச-26 ஆம் தேதி முதல் ஹிமான்சு உண்ணாவிரதம் இருக்கத் துவங்கினார். இதனிடையே, சாம்செட்டி எனும் கிராமத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு புகார் அளித்த நான்கு பெண்களை குற்றம் புரிந்த போலிசாரே கடத்திச் சென்று வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினர். மேற்கொண்டு வாய் திறந்தால் உயிர் மிஞ்சாது என மிரட்டி ஊருக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 29- ஆம் தேதியன்று தண்டேவாடாவுக்கு வந்த நந்தினி சுந்தர், உஜ்வல் குமார் ஆகிய அறிவுஜீவிகளை சுற்றி வளைத்து, ‘பாதுகாப்பு’ என்ற பெயரில் சல்வா ஜூடும் ஆட்களை துப்பாக்கிகளோடு நிறுத்தி அரசு பீதியூட்டியது. இதன் விளைவாக, அவர்கள் பாதியிலேயே பயணத்தை ரத்து செய்து டெல்லிக்குத் திரும்பினர். அவர்களுக்கு மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலிருந்து வந்த பல்வேறு அரசியல் சக்திகள், பத்திரிக்கையாளர்களுக்கும் லாட்ஜுகளில் அனுமதி மறுக்கப்பட்டது. டிசம்பர் 31-ஆம் தேதியன்று, ஹிமான்சு குமாரின் வீட்டு உரிமையாளர் தனக்கு நெருக்குதல்கள் தரப்படுவதால், வீட்டை காலி செய்யுமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஜனவரி 3-ஆம் தேதியன்று மருத்துவத்திற்காக டெல்லிக்கு பயணப்பட்ட சோதி சாம்போ, காங்கர் எனும் இடத்தில் வைத்து போலிசால் கைது செய்யப்பட்டார். கூம்பட் படுகொலையின் ஒரே சாட்சியான சோதி சாம்போவை அவரது உறவினர்கள் தேடியதாலும், உச்ச நீதிமன்றம் அவருக்கு பாதுகாப்பு, மருத்துவ சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளதாலேயே தடுத்து நிறுத்தியதாக கதையளந்த போலிசு, ஹிமான்சு குமார் சோதி சாம்போவை கடத்தி வைத்திருந்தார் என வழக்கு சோடிக்க முயன்றது. சோதி சாம்போவை சந்திக்க முயன்ற பத்திரிக்கையாளர்கள் தடுக்கப்பட்டனர். அதனை எதிர்த்துப் போராடிய பத்திரிக்கையாளர்கள் மீது, உள்ளூர் பத்திரிக்கையாளர்களைத் தாக்கி, கேமராக்களை கொள்ளையடிக்க முயன்றதாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜனவரி 6-ஆம் தேதியன்று, மக்கள் கருத்தறிதல் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த சந்தீப் பாண்டே, மேதா பட்கர் முதலான பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீது முட்டைகள், தக்காளிகளை வீசி சல்வா ஜூடும் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டனர். போலிசின் நெருக்குதல் காரணமாகவும், நிலவும் அசாதாரணமான சூழல் காரணமாகவும் அவர்கள் வந்த வழியே திரும்பிச் செல்ல நேர்நதது. மக்கள் கருத்தறிதல் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த பழங்குடி மக்கள் கொத்து, கொத்தாக கைது செய்யப்பட்டனர். இக் கட்டுரையை எழுதும் இந்த நொடி வரை அவர்கள் எங்கு சிறை வைக்கப்பட்டிருக்கிறார்களென்பதே தெரியவில்லை. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் விரல்கள் துண்டிக்கப்பட்ட இரண்டு வயது் ‘மாவோயிஸ்ட்’ மாத்வி முகேசும் அடக்கம்.

இறுதியாக, வேறு வழியின்றி, ஜனவரி 7- ஆம் தேதி அதிகாலையில் ஹிமான்சு குமார் தலைமறைவானார். தற்பொழுது, தண்டேவாடாவை விட்டும் வெளியேறியுள்ளார். தற்பொழுது, இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒளிப்படத்தில், ஹிமான்சு குமார் தனது நிலையை விளக்குகிறார்.”அரசு செய்ய வேண்டிய நலப்பணிகளை நாங்கள் செய்து கொண்டிருந்தோம். நாங்கள் என்ன தவறு செய்தோம்? மக்களின் துயரத்தை எடுத்துச் சொன்னோம். சாத்வீகமான முறையில் பாதயாத்திரை செல்ல முயன்றோம். ஒரு ஜனநாயக நாட்டில் நடப்பதற்கு கூட உரிமை இல்லையா? நான் தண்டேவாடாவில் செயல்படுவதை அரசு விரும்பவில்லை. என்னால் பலரும் தாக்குதலுக்குள்ளாவதிலிருந்து தடுக்கும் பொருட்டு, நான் வெளியேறி விட்டேன்” என வருத்தத்தோடு கூறுகிறார். சட்டப் பூர்வமான வழியில் போராட முயலும் காந்தியச் சட்டகத்தின் குரல் வளையில் ஏறி மிதித்து, மீண்டும் ஒரு முறை தான் யார் எனப் புரிய வைத்திருக்கிறது அரசு. நக்சல்பாரிகள் வன்முறையாளர்கள், வழி தவறிப் போனவர்கள், எந்தப் போராட்டத்தையும் சட்டத்திற்கு உட்பட்டு நடத்த வேண்டும் என உபதேசிக்கும் அகிம்சாமூர்த்திகள், ஹிமான்சு குமாரின் சத்திய சோதனையிலிருந்து என்ன பாடம் பெறுவது என விளக்க வேண்டும். இதனிடையே, சோதி சாம்போ யாருக்கும் தெரியாமல், டெல்லி அய்ம்ஸ் மருத்துவமனைக்கு போலிசால் கொண்டு வரப்பட்டார். அங்கேயும், யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. மீண்டும் ஜனவரி 19- ஆம் தேதியன்று ரகசியமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தற்பொழுது அவர் எங்கு உள்ளார் என்பதை அரசு அறிவிக்க மறுக்கிறது. அய்ம்ஸ் மருத்துவமனைக்கு எதிரில், ஹிமான்சு குமாருக்கு ஆதரவான அறிவுஜீவிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். மெழுகுவர்த்திகளைக் கண்டு அரசு அஞ்சுவதில்லை. தேவைப்படுவது தீப்பந்தங்கள்தான்!

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2010 இதழில் வெளியானது

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s