உன்மத்த நிலையின் 360 டிகிரி!

“ஸீரோ டிகிரியை எழுதிய போது இருந்த அதே உன்மத்த நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். நேற்று காலையிலிருந்து மாலை வரை எழுதினேன். அதையெல்லாம் என் சுயநினைவிலிருந்து எழுதினேன் என்று சொல்ல முடியாது. ஏதோ ஒரு பேய் அல்லது மோகினி என் உடலில் புகுந்து கொண்டு எழுதுவது போல் தோன்றுகிறது. சாமியாடி சாமி ஆடுவானே அது போல என்று வைத்துக் கொள்ளலாம்.”

உத்தமத் தமிழ் எழுத்தாளரின் ஜென்ம விரோதியும், ஸாரா பப்பில் மட்டுமே குடித்து வாழ வேண்டிய அவல நிலையில் தத்தளிக்கும் ஏழைத் தமிழ் எழுத்தாளரும், கூட்டத்தோடு கூட்டமாய் நித்யானந்தருக்கு பொது மாத்துப் போட்டு தனது நேர்மையை நிரூபித்த நடமாடும் ஹமாம் சோப்பும், வுமனைசர் என்றால் என்னவென்றே தெரியாத பரிதாப நிலையில், தன்னையே வுமனைசர் என சரியாக, சாரி, தவறாக ஜூனியர் விகடன் பேட்டியில் அழைத்து விட்ட அப்பாவியுமான சாரு நிவேதிதா, தமது படைப்பு மனநிலை குறித்து அளித்த, அருளிய வாக்குமூலம் தான் மேலே நாம் கண்ட வரிகள்…

சாருவின் உன்மத்த நிலை குறித்து இலக்கியக் கனவான்கள் அறியாததல்ல. ஆனால், நேற்று அவரது “மை நேம் இஸ் கான்” திரைப்படம் குறித்த விமர்சனம் படித்த பொழுது, அவரது உன்மத்த நிலையின் 360 டிகிரி தரிசனமும் கிடைத்தது. படத்திற்கு பிறகு வருவோம். முதலில், சாருவின் உன்மத்த நிலை உண்டாக்கிய ‘அதிர்வுகளை’ பகிர்ந்து கொள்கிறேன்.

“16 கோடி இஸ்லாமியர்கள் வாழும் இந்தியாவில் முழுமையான இஸ்லாமிய அடையாளத்துடன் இதுவரை ஒரு படம் கூட வந்ததில்லை. குல்ஸார் இயக்கிய மாச்சிஸ் (1996) என்ற படத்தை இஸ்லாமிய அடையாளத்துடன் கூடிய படம் என்பதை விட காஷ்மீர், தீவிரவாதம் பற்றிய படம் என்று சொல்வதே சரியாக இருக்கும்.”

குல்ஸார் இயக்கிய மாச்சிஸ் திரைப்படம், எண்பதுகளில் பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் கோரிய சீக்கிய மதத் தீவிரவாதத்தின் கொந்தளிப்பான காலகட்டத்தைக் குறித்த திரைப்படம். படத்தின் நாயகன், நாயகி கதாபாத்திரங்கள் முதல் அனைவரும் சீக்கியர்கள். அதில் காஷ்மீரும், இஸ்லாமியரும் எங்கிருந்து வந்தார்கள்? எனவே, அந்தத் திரைப்படம் பார்க்கும் பொழுதே, சாரு உன்மத்த நிலையில் இருந்தாரா, அல்லது கட்டுரை எழுதும் பொழுது இருந்த உன்மத்த நிலையில் இது குழம்பி விட்டதா என ருவாந்தாவிலிருந்து முனியாண்டி கேட்கிறார். பின்குறிப்பில், இதைப் படித்து விட்டு, “What the f***? bulls***. He is out of Control!” என நேநோ கத்தியதாக வேறு வருத்தப்படுகிறார். சாருவின் உன்மத்த நிலை குறித்து அறிந்திருந்தும், நேநோ ஆத்திரப்பட்டதுதான் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

பிறகு, திரைப்படத்தை வானளாவப் புகழ்ந்து ஒரு பாட்டம் பாடித் தீர்த்து, தொழில்(நுட்பம்) சம்பந்தமான விசயங்களுக்கு நுட்பமாக வருகிறார். ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவு, அதில் அண்ணனுக்கு தென்படும் குறைகள், அதே நேரத்தில் நிறைகள், இடையில் ராமு காரியத் என எங்கெங்கோ பயணித்து பயணித்து பயணித்து, திரைப்படத்தின் க்ளோசப் ஷாட்டுகளுக்கு வந்து சேர்கிறார். “தமிழ் சினிமா உலகத் தரத்தை எட்டாமல் போனதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, இந்த க்ளோஸ் அப் ஷாட்டுகள்.””ஷாருக்கின் நடிப்பை நாம் அனுபவிப்பதற்குப் பெரும் தடையாக இருப்பது ரவி கே. சந்திரனின் அதிகபட்சமான க்ளோஸ் அப் ஷாட்டுகள்.” ஒரு திரைப்படத்தில் அதிகபட்சமான க்ளோஸ் அப் ஷாட்டுகள் இருப்பதன் பொறுப்பு இயக்குனரைச் சாருமா அல்லது ஒளிப்பதிவாளரைச் சாருமா என்ற கேள்வியை, கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளை ஓலை மூலம் கேட்டனுப்பியிருக்கிறது. இதுவும் உன்மத்த நிலையின் சதி என மிஸ்ரா எவ்வளவோ எடுத்துக் கூறிய போதிலும், செத்த மூளை அதனைக் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.

“தமிழ்ப் படங்களில் வசனம் தட்டையாகவும், மொண்ணையாகவும் இருப்பதற்கு முக்கிய காரணம், படத்தின் இயக்குனர்களே வசனத்தையும் எழுதுகிறார்கள் என்பதுதான்.” “தமிழைப் போல் இந்தியில் இயக்குனர் மட்டுமே வசனம் எழுதுவதில்லை.” என சாரு எழுதியிருப்பதன் பின்னால், எந்த உள்நோக்கமோ, ஆதாய நோக்கமோ இல்லை, இல்லை, இல்லவே இல்லை, இருக்கப் போவதும் இல்லை, இல்லை என்பது கூட இல்லை எனச் சத்தியம் செய்த பின்னாலும், உத்தமத் தமிழ் எழுத்தாளருக்கு உள்குத்து உட்பட எல்லாம் இருப்பதாக நிலாமகன் கலா கெளமுதியில் முதல் முறையாக தாம் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

உன்மத்த நிலையில் இருப்பதற்காக எதையெடுத்தாலும் குற்றம் சொல்வதா, அதுவும் ஜூனியர் விகடனே பெரியாரிஸ்ட் என்று அழைக்கும் எழுத்தாளனைப் பற்றி, அதுவும் இந்து நாளிதழில் இந்தியப் பெண்கள் மிக விரும்பிப் படிக்கும் எழுத்தாளர்களில் பட்டியலிடப்பட்டதைத் தானே அறிவித்துக் கொண்ட, அதில் இளம் பெண்கள் என்பதைக் குறிப்பாகக் குறிப்பிடாததால் கடுகளவேனும் வருத்தமடையாத ஒரு கண்ணியமான எழுத்தாளனைப் பற்றி நிலாமகன் குறை சொல்வதா என சூர்யாவும் கோபப்பட்டிருக்கிறான். “சாரு பெரியாரிஸ்ட் என்றால் நித்தியானந்தர் ஃபெமினிஸ்ட்” என நிலாமகன் பதிலுக்கு எழுத, சூர்யா பதில் எதுவும் பேசவில்லை.

எல்லாம் சரி, தற்பொழுது நித்தியானந்தர் தான் இருந்ததாகக் குறிப்பிடும் சமாதி நிலையும், சாருவின் உன்மத்த நிலையும் ஒன்றா அல்லது வேறு வேறா? பதில் தெரியவில்லை. இந்த மோசமான உன்மத்த நிலையிலிருந்து தமிழ் கூறும் நல்லுலகு தவம் கிடந்து பெற்ற எழுத்தாளனைப் எப்படி பாதுகாப்பது என்றும் புரியவில்லை. இதனைக் கேள்விப்பட்ட வாசுகி என்கிற நேநோ, சூர்யா என்கிற மிஸ்ரா என்கிற முனியாண்டி என்கிற நிலாமகன் என்கிற கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளை என்கிற சாருவுக்கு, சீரோ டிகிரி, பக்-67லிருந்து கீழ்க்காணும் இரு வரிகளை மட்டும் மேற்கோளிட்டு எழுதி அனுப்பியிருக்கிறாள்.

“நீ மனநோய் மருத்துவரை போய்ப் பார்ப்பதே நல்லது என்றாள் வாசுகி.”
“கோபப்படாதே உன் மீது கொண்ட அக்கறையினால்தான் சொல்கிறேன் என்றாள் வாசுகி.”

பி.கு: படைப்பாளியின் உன்மத்த நிலை ஒரு கதை என்றால், அவரது ரசிகர்களின் உன்மத்த நிலை தனிக்கதை. ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் எழுதும் படைப்பாளியிடம் சாராய வகைகளைப் பற்றி மட்டுமே கேட்டு கடிதம் எழுதுகிறார்கள் என அவரே வருத்தப்பட்டிருந்தார். பின்னர், ஆறு தலைப்புகளில் சாராய வகைகள் குறித்து விளக்கம் அளித்து, தமிழில் இதுகாறும் இல்லாத “சாராய இலக்கியம்” எனும் புதிய இலக்கியப் பிரிவை உண்டாக்கி புரட்சி செய்தார். இந்தக் கருத்து அடிப்படையிலேயே தவறு, அவரது மொத்த எழுத்துமே இலக்கியச் சாராயம்தான் என்றார் ஃபோர்ஹே.

“மை நேம் இஸ் கான்” குறித்த விமர்சனம் அடுத்த பதிவில்…

Advertisements

6 thoughts on “உன்மத்த நிலையின் 360 டிகிரி!

 1. உங்களோட உன்மத்த நிலை தலை சுத்துதுங்க!

  பாரு குபேதிதா உங்களை ரொம்பவே பாதிச்சிருக்காரு!

  Like

 2. எல்லா வரிகளையும் ரசித்துப் படித்தேன்.நன்றி.

  Like

 3. //இந்தப் பதிவில் குறுக்கு நெட்டாக வரும் கதாபாத்திரங்கள், சாருவின் ‘சீரோ டிகிரி’ நாவலில் வரும் கதாபாத்திரங்கள். கட்டுரையின் சிக்கலான, நையாண்டியான, குழப்பம் தரும் வடிவமும், அந்நாவலில் சாரு கையாண்ட வடிவமே!//

  இதைப் படிச்சுட்டு குழம்பி போய், சாரு கூட கிறுக்குத்தனமா எழுதினாலும்…இவ்வளவு குழப்பமா எழுதமாட்டாரே! என இரண்டுநாள் புலம்பி திரிந்தேன். இப்ப தான் புரிகிறது!

  Like

 4. //இந்தப் பதிவில் குறுக்கு நெட்டாக வரும் கதாபாத்திரங்கள், சாருவின் ‘சீரோ டிகிரி’ நாவலில் வரும் கதாபாத்திரங்கள். கட்டுரையின் சிக்கலான, நையாண்டியான, குழப்பம் தரும் வடிவமும், அந்நாவலில் சாரு கையாண்ட வடிவமே!//

  எதையுமே சொல்லிட்டு செய்றதில்லையா தோழர்?

  தலையும் புரியாம வாலும் புரியாம, என்ன மாதிரி ஆளுங்க எல்லாம் எப்புடி படிக்குறது?

  🙂

  நையாண்டி சிறப்பாக இருந்தது!

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s