மை நேம் இஸ் கான்: உலகமய மசாலா!

இது “Feel Good Movie”-க்களின் யுகம்.  தமிழில் சொன்னால், ‘மனதுக்கு இனிமை தரும் படங்களின்’ காலம். உலகம் கிராமமாகச் சுருங்கும் உலகமய, தகவல் தொழில்நுட்ப யுகத்தின் பொற்காலத்தில் வாழும் உலகமயக் குடிமக்கள் Feel Good Movie-க்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறார்கள். பரவசமடைகிறார்கள். கண்ணீர் விடுகிறார்கள். யதார்த்த உண்மை மனதுக்கும், சிந்தனைக்கும் இனிமையாக இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்கு அங்கு இடமில்லை. உண்மை போல தோற்றமளித்தால் போதும். மனதுக்கு இனிமையளிப்பதுதான் முக்கியம். பிறகு, ஸ்லம்டாக் மில்லியனரைக் கொண்டாடியதைப் போல, அதனைத்  தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். மை நேம் இஸ் கான் இதே பட்டியலில் தான் வருகிறது.

சிறு வயது முதல் “Asperger syndrome” எனும் நோயினால் பாதிக்கப்பட்ட ரிஸ்வான் கான்(ஷாருக் கான்), தனது தாயின் மரணத்தையொட்டி, அமெரிக்காவில் வாழும் தம்பியுடன் வாழச் செல்கிறான். அங்கே, மந்திரா(காஜோல்) எனும் விவாகரத்தான பெண்ணை சந்தித்து திருமணம் செய்து கொள்கிறான். அவளது மகன் ஸமீரும்(யுவன்), ரிஸ்வானை நேசிக்கிறான். செப்-11-க்கு பிறகு அமெரிக்கா முழுதும் வெளிப்படும் இஸ்லாமியர் வெறுப்பின் விளைவாக, பள்ளிச் சிறுவர்களிடையேயான் தகராறில் ஸமீர் கொல்லப்படுகிறான்.

அதிர்ச்சியுற்று மனம் உடையும் மந்திரா, “கான் என்ற உனது பெயர்தான் என் மகனை கொன்றது!” எனக் கத்துகிறாள். “இங்கிருந்து போய் விடு” என விரட்டுகிறாள். “நான் எப்பொழுது திரும்பி வரட்டும்” எனக் கேட்கிறான் ரிஸ்வான். “அமெரிக்க அதிபரை சந்தித்து ‘என் பெயர் கான். நான் தீவிரவாதி இல்லை’ என்று சொல்! அதன் பிறகு வா” என அவள் கூறும் வார்த்தைகளைக் கொண்டு, அமெரிக்க அதிபரை சந்திக்கப் புறப்படுகிறான் ரிஸ்வான்.  கையில் காசின்றி, கார்களை ரிப்பேர் செய்து பயணத்தை தொடர்கிறான். தீவிரவாதி என சிறை வைக்கப்பட்டு, பின்னர் விடுதலையாகி… என நீண்ட அலைக்கழிப்புகளைத் தாண்டி, புதிய அமெரிக்க அதிபரை சந்திப்பதில் வெற்றி பெற்றுகிறான்.

இந்தக் கதையைப் படிக்கும் பொழுதே, போஸ்டரில் உள்ள அமெரிக்க கொடி தற்செயலாக இடம் பெறவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். மிகத் தெளிவாக படத்தின் உள்ளடக்கத்தை உணர்த்தும் குறியீடாக அமெரிக்க கொடி ஷாருக்கின் மீது படிந்திருக்கிறது. இதனை லக்கிலுக் நேரடியாகக் குறிப்பிட்டிருந்தார். “ஒவ்வொரு அமெரிக்கனும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் இது.” படத்தின் உன்னதத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், இந்த அடிப்படையான கேள்வியை பரிசீலிப்போம். முதலில், இது அமெரிக்கர்களுக்கான படமா, இந்தியர்களுக்கான படமா, அல்லது சொல்லப்படுவது போல உலகப் படமா?

திரைக்கதை முழுவதும் அமெரிக்காவைச் சுற்றி வருகிறது. செப்-11க்குப் பிறகு, அமெரிக்காவில் நிலவும் இஸ்லாமியர்  மீதான வெறுப்பைப் பேசிச் செல்கிறது. இதற்கு சற்று முன்பாக, “நியூயார்க்”, “குர்பான்” முதலான பாலிவுட் திரைப்படங்களும் இஸ்லாம்+அமெரிக்கா+பயங்கரவாதம்+வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற ஃபார்முலாவில் வெளி வந்தன. இப்படி இந்தித் திரையுலகம், அமெரிக்கா வாழ் இந்திய முஸ்லீம்கள் குறித்து மாய்ந்து மாய்ந்து வரிசையாகத் திரைப்படம் எடுக்க வேண்டிய அவசியம்தான் என்ன?

“செப்டம்பர் 11 பற்றி இதுவரை வந்த படங்களிலேயே ஆகச் சிறந்த படம் இதுதான்” என சாரு போற்றிக் கொண்டாடும் இந்தத் திரைப்படத்தின் அதியற்புதக் கருவிற்கான தூண்டுதல் எதிலிருந்து பிறக்கிறது? குஜராத்தின் வடுக்கள் இன்னமும் ஆறாத இந்தியாவை விட்டு விட்டு, திரைக்கதை அமெரிக்காவை கதைக்களனாக தேர்ந்தெடுப்பதன் நோக்கம் தான் என்ன? இந்தக் கேள்விகளுக்கான விடையை, எகானமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் ஷாருக் கான் சொல்கிறார். “இந்தியாவில் அற்புதமாகவும், வெளிநாடுகளில் மிக நன்றாகவும் ஓடக் கூடிய திரைப்படங்களை உருவாக்க நாங்கள் முயற்சிக்கிறோம். ஆனால், மை நேம் இஸ் கானைப் பொருத்தவரை, வெளிநாடுகளில் அற்புதமாகவும், இந்தியாவில் மிக நன்றாகவும் ஓடியிருக்கிறது. எனவே, நாம் செய்ய வேண்டியது எங்காவது ஓரிடத்தில் நம்மை பேலன்ஸ் செய்து கொள்வது தான்.” ஷாருக்கின் விளம்பர முத்திரையுடன் கூடிய வரிகளைத் தாண்டி, மை நேம் இஸ் கான் திரைப்படத்திற்கான அடிப்படையான படைப்பு உந்துதல், இங்கே தெளிவாகப் புலப்படுகிறது.

பாலிவுட் திரைப்படங்களுக்கு உருவாகியிருக்கும் சர்வதேச சந்தைதான் “மை நேம் இஸ் கான்” போன்ற திரைப்படங்களுக்கான அஸ்திவாரம். இந்த அஸ்திவாரத்திலிருந்து தான் ‘அமெரிக்காவில் இஸ்லாமியர் இனஒதுக்கல் குறித்த திரைக் காவியம்’ தோன்றுகிறதேயன்றி, இதற்கு நேர்மாறான முறையில்உருவாகவில்லை. அதே எகானமிக் டைம்ஸ் பேட்டியில், இந்தித் திரைப்படங்கள் எதிர்கொள்ளும் வணிகச் சிக்கல்களை ஷாரூக் மேலும் விளக்குகிறார்.  “அரங்கு நிறைந்த காட்சிகளுக்கும், வெள்ளிவிழாக்களுக்குமான காலம் முடிந்து விட்டது. எவ்வளவு சீக்கிரமாக இதனை ஏற்றுக் கொள்கிறோமோ, அந்த அளவிற்கு மொத்த திரைப்படத் தொழிலுக்கும் நல்லது.” அவர் மேலும் விளக்கிச் செல்கிறார். திரையரங்கிற்கு மக்களை வரவழைக்க, ஒரு திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே பேட்டிகள், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, இணையத்தில் பிரபலப்படுத்துவது என பல வழிகளில் மார்க்கெட்டிங் செய்ய வேண்டியிருக்கிறது. அதனை விட முக்கியம், திரைப்படத்திற்கு உள்ள பரபரப்பை பயன்படுத்தி, முதல் சில வாரங்களில் எவ்வளவு அதிகமான தியேட்டர்களில், எவ்வளவு அதிகமான நாடுகளில் திரையிட முடியுமோ, அவ்வளவு அதிகமாகத் திரையிட்டு வசூல் செய்து விட வேண்டும். இதன் மூலம் தான், “எங்காவது ஓரிடத்தில் நம்மை பேலன்ஸ் செய்து கொள்ளலாம்.” ஆக, மை நேம் இஸ் கான் எனும் மாபெரும் காவியத்தின் ரிஷி மூலம் இதுதான்!

அதாவது, இந்தித் திரைப்படங்களுக்கான சந்தை, வட இந்திய மாநிலங்களாக இருந்த வரை, பணக்கார வில்லன்களின் பணக்கார மகள்களை ஏழை ஷாரூக் திக்கித் திக்கி காதலித்துக் கொண்டிருந்தார். ஆன்டி ஹீரோவாக ஆர்ப்பரித்தார். சந்தை இந்தியாவைத் தாண்டி சற்று விரிவடைந்த நேரத்தில், அமெரிக்காவிலும், லண்டனிலும் டூயட் பாடி, இந்தியாவின் பெருமையை, இந்தியப் பெண்களின் கற்புத் தூய்மையை பறைசாற்றும் படங்களை தந்து கொண்டிருந்தார். சந்தை மொத்த உலகமான பொழுதோ, அமெரிக்காவே கதைக் களனாகி விட்டது. திரைப்படத்தில் இந்தியா ஊறுகாயாகி விட்டது. உலகமய குடிமக்கள் புரிந்து கொள்ளத் தக்க கதையாக, அடையாளப்படுத்திக் கொள்ளத் தக்க கதையாக மாறி விடுகிறது. அதனால் தான், இந்த ‘முற்போக்குப் படத்தை’ அமெரிக்க ஃபாக்ஸ் நிறுவனம் நூறு கோடிகளுக்கு விரும்பி வாங்குகிறது. ஸ்டார்-ஃபாக்ஸ் நிறுவனத்தின் முதலாளி விஜய் சிங், தமது லாஸ் ஏஞ்செல்ஸ் தலைமையகம் ஷாருக் கானின் திரைப்படத்தை ஏன் விரும்புகிறது எனத் தெளிவாகக் கூறுகிறார். “முதல் நாளிலிருந்தே, கான் திரைப்படத்தை ஒரு காதல் கதையாகத்தான் பார்க்கிறோமேயல்லாமல், சமூகப் பிரச்சினைகள் குறித்த படமாக அல்ல.” எனவே, இந்த மாபெரும் கலை படைப்பின் உள்ளடக்கமும், வடிவமும் விரிவடையும்  ஹாலிவுட்-பாலிவுட் சந்தைத் தேவைகளிலிருந்து பிறக்கிறது.

இந்தப் பொருளியல் அடிப்படையில் பிறக்கும் கலைப் படைப்பு, அதன் ஆதாரமாக விளங்கும் கட்டமைப்பை, அந்தக் கட்டமைப்பிலிருந்து பிறக்கும் வன்முறையை கேள்விக்குள்ளாக்குமா என்ன? அதனால் தான், கதைப்படி ரிஸ்வான் கான் சூறாவளியால் பாதிக்கப்பட்டகறுப்பின மக்களை காப்பாற்றியும், இஸ்லாமிய பயங்கரவாதிகள் எனத் தான் சந்தேகப்படும் டாக்டர் ஃபைஸுர் ரஹ்மானைப் போட்டுக் கொடுத்தும், அமெரிக்கர்களிடமும், அமெரிக்க ஜனாதிபதியிடமும்  ‘நல்ல பெயர்’ வாங்குகிறான். ஆனால், இது சாருவுக்கு நெருடலாகப் படுகிறது.  “ரிஸ்வான் தான் ஒரு சிறந்த குடிமகன் என்று நிரூபிப்பதற்காக கத்ரீனா சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஜார்ஜியா மாநிலத்துக்குச் சென்று பலவிதமான சாகச வேலைகளைச் செய்து அமெரிக்கர்களிடமும், அமெரிக்க ஜனாதிபதியிடமும், அவன் ஒரு முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக அவனை விரட்டி விட்ட மந்திராவிடமும் ’நல்ல’ பெயர் வாங்குகிறான். மிகவும் குரூரமான கற்பனை. நான் ஒரு முஸ்லிமாக இருந்தால் பயங்கரவாதி என்றுதான் முத்திரை குத்தப்படுவேன். போலீஸால் தாக்கப்படுவேன். மனைவியால் விரட்டி அடிக்கப்படுவேன். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து மீண்டு வந்து நான் ஒரு நல்ல குடி மகன் என்று நிரூபிப்பதற்காக ஒரு சூப்பர்மேனாக மாறி சூறாவளியில் சிக்கித் தவிக்கும் மக்களைக் காப் பாற்றியே ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்தகைய கொடுமை! “ பிறகு அவரே தன்னை சமாதானம் செய்து கொண்டு, “ஆனால் இந்த ஒரு விஷயத்தைத் தவிர, மற்றபடி மை நேம் இஸ் கான் ஒரு அருமையான படம்.” என விளம்புகிறார். யா அல்லா, என்ன கொடுமை சாரு இது?

இந்த ‘நெருடலான’ காட்சிகளால் தானே, “எந்த மதமும்  வன்முறையைப் போதிக்கவில்லை; இறைவன் கருணையானவன்; அன்பு ஒன்றே எல்லா மதங்களின் ஆதாரமாக உள்ளது” என்று சாருவே கூறும் இப்படத்தின் அடிப்படை செய்தியே உணர்த்தப்படுகிறது? அதனால் தானே, இறுதிக் காட்சியில் அதிபரிடம் ரிஸ்வான் கை குலுக்கும் பொழுது, தன்னுடைய வெறுப்பால் சாதிக்க முடியாததை ரிஸ்வான் அன்பினால் சாதித்திருக்கிறான் எனப் படத்தின் ‘மெசெஜை’ மந்திரா சொல்கிறாள்? அதற்கு வித்திடும் காட்சிகளே இவைதானே? எனவே, திரைப்படத்தின் அடிப்படை தர்க்கத்தை உருவகப்படுத்தும் காட்சிகளை, ஏறத்தாழ திரைப்படத்தின் இரண்டாம் பாதியை, மொத்தமாக “அந்த ஒரு விஷயம்” எனச் சாதாரணமாக எப்படி ஒதுக்கித் தள்ளுகிறீர்கள் சாரு? பிறகு அது அருமையான படமாவது எப்படி? ஒன்று, நீங்கள் அந்தப் படத்தின் அடிப்படை மெசேஜை மறுக்கிறீர்கள் அல்லது அடிப்படை மெசேஜ் எது என்று புரியாமலேயே பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள். உன்மத்த நிலையில் எழுதுவதன் பக்க விளைவுகள்தான் எத்தனை எத்தனை?

‘அமெரிக்க அதிபரை ஏன் சந்திக்க விரும்புகிறான், இவன் ஒரு தீவிரவாதியாக இருக்கலாம்’ என அமெரிக்கப் போலிசால் ரிஸ்வான் கான் சிறையில் அடைக்கப்படுகிறான். சிறையில் இருந்து விடுதலை பெறுவதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது, அவன் தான் மசூதியில் விவாதித்த டாக்டர் ஃபைஸுர் ரஹ்மானை அமெரிக்கப் போலிசிடம் தீவிரவாதி என போட்டுக் கொடுப்பது தான். ஜார்ஜ் புஷ் ‘கண்டறிந்ததைப் போல’ சதாம் உசேன் வைத்திருந்த ‘பேரழிவு ஆயுதங்களோடு’, டாக்டர் ஃபைஸுர் ரஹ்மானை ரிஸ்வான் கண்டு பிடிக்கவில்லை. மாறாக அவருடன் நடத்தும் ஒரு விவாதத்திலேயே அவர் தீவிரவாதி என முடிவு கட்டி போலிசுக்கு தகவல் சொல்லுகிறான். ஃபைஸுர் ரஹ்மான் கவுண்டனமோ சிறைக்கு அனுப்பப்பட்டாரா, அங்கே அவரை எத்தகைய மனிதாபிமானமிக்க, கண்ணியமான முறைகளில், அமெரிக்க கண்யவான்கள் விசாரித்தார்கள், அல்லது அவர் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு வரப்பட்டு ஒரு மலைப் பகுதியில் வைத்து ஒசாமாவின் வலது கை அல்லது இடது கண் என சுட்டுக் கொல்லப்பட்டாரா என்பதெல்லாம் திரைப்படத்தில் இடம் பெறவில்லை. ஒரு Feel Good Movie-ல், இது போன்ற ரசாபாசமான  காட்சிகள் இடம் பெற்றால் என்னாவது?

இறுதிக் காட்சியில், திரையில்  தோன்றும் நிழல் ஒபாமா, ரிஸ்வான் கானிடம் கை குலுக்குகிறார். “நான் பயங்கரவாதியில்லை” என ரிஸ்வான் சொல்ல, புன்னகையோடு ஆமோதிக்கிறார். ரிஸ்வான் கானின் புரட்சியும் முழுவடைகிறது. படமும் முடிவடைகிறது. ஆனால், நிஜ ஒபாமா என்ன செய்கிறார்? ஆப்கானிஸ்தானுக்கு ஜார்ஜ் புஷ்ஷை விடவும் அதிகமான துருப்புகளை அனுப்புகிறார். “நாங்களும் பயங்கரவாதிகள் இல்லை” எனக் கதறும் நூற்றுக்கணக்கான ரிஸ்வான் கான்களை, மனித குலம் கற்பனை செய்யவியலாத வகையில் சித்திரவதை செய்த கவுண்டனமோ பே சிறைக் கொடுமைகள், “அமெரிக்க வரலாற்றின் துயரமான அத்தியாயம்” என உருகுகிறார். உருகிய மறு நொடியே, கவுண்டனமோ பே சிறையை மூடி விட்டு, கைதிகளை இல்லியனோஸ் சிறைக்கு மாற்ற உத்தரவிடுகிறார். இடம் மாற்றுவதே சாதனையாகி விடுகிறது.

இடம் மாற்றுவது போலவே, அமெரிக்க அரசின் அதிபர் முகமூடி மட்டும் மாறியிருக்க, “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” மட்டும் உக்கிரம் மாறாமல் தொடர்கிறது. சாருவே சொல்வது போல, “பாலஸ்தீனம், லெபனான், ஆஃப்கனிஸ்தான், ஈராக் என்று இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதிகள் தேசம் தேசமாக அழிக்கப்பட்டு வரும் காலம் இது. இந்த தேசங்களில் தினம் தினம் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள்; வெடிகுண்டுகளால் உடல் உறுப்புகளை இழந்த எண்ணற்ற குழந்தைகள் இந்த தேசங்களில் தாய், தந்தையின்றி அனாதைகளாய்த் திரிகின்றன.” ஆனால், இந்த நிஜ ஒபாமாவைத் தான், “பயங்கரவாதத்திற்கெதிரான போர்” என அழைக்கப்படும் அமெரிக்க ஆக்கிரமிப்புப் போரின் குரூர யதார்த்தத்தைத்தான், “மை நேம் இஸ் கான்” அறிமுகப்படுத்துகிறதா?அப்படி இல்லையென்றால், இது ஒடுக்குமுறையாளர்களுக்கு இசைவான மொழியில் பேசும் படமல்லாமல் வேறென்ன? இந்த இலட்சணத்தில், “இது ஒரு வழக்கமான கரன் ஜோஹர் படம் இல்லை. ஷ்யாம் பெனகல், கேத் தான் மேத்தா போன்றவர்களின் அரசியல் சினிமாவோடு ஒப்பிடத்தக்க ஒரு படம்” என கூறுகிறீர்களே சாரு, நல்ல வேளை ஷ்யாம் பெனகலுக்கும், கேத்தன் மேத்தாவுக்கும் தமிழ் படிக்கத் தெரியாது. தெரிந்திருந்தால், நொந்து போயிருப்பார்கள். இது வழக்கமான கரன் ஜோஹர் படமில்லை என்பது உண்மைதான். “குச் குச் ஹோத்தா ஹை” போன்ற அபத்தக் களஞ்சியங்களிலிருந்து, உலகமயத்தின் சுவையை உணர்ந்த உலகமய மசாலாவுக்கு அவர் பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறார்.

சாருவின் கட்டுரை வெளிவந்திருக்கும் அதே உயிர்மை இதழில், குஜராத் படுகொலையின் புகைப்படமாக, அடையாளமாக மாறிப் போன குத்புதீன் அன்சாரி குறித்த கட்டுரையொன்றும் வந்திருக்கிறது. அனைவரும் படிக்க வேண்டிய அவசியமான கட்டுரை. அன்சாரியைக் குறித்து, இது வரை எந்தக் கரன் ஜோஹரும் திரைப்படம் எடுக்கவோ, அமெரிக்காவில் என்ன, இந்தியாவில் கூட வெளியிடவோ முன் வரவில்லை. ஏனெனில், அன்சாரியின் ‘கதையும்’, வாழ்வும், Feel Good Feeling-ஐ உண்டாக்குவதுமில்லை, அதிலிருந்து கல்லா கட்டுவது சாத்தியமுமில்லை.

பி.கு: “படத்தில் ரசிப்பதற்கு எதுவுமே இல்லையா? இப்படி ஏன் எல்லாவற்றையும் குறை சொல்கிறீர்கள்? உங்க கண்ணுக்கெல்லாம் நல்லதே படாதா” என்று தானே கேட்க வருகிறீர்கள்? திரைப்படத்திலிருந்து சொல்வதானால், சாரு உருகும் அந்த ‘சஜ்தா’ பாடல், ஒரு அருமையான கவ்வாலிப் பாடல். இதயத்தை ஊடுருவும் இசை… ஆழமானதும், கவித்துவமானதுமான வரிகள்… என்ன, அதனைக் கேட்கும் பொழுது, ரிஸ்வான் கானை மட்டுமல்ல, குத்புதீன் அன்சாரியையும் சற்று மறந்து விட வேண்டியிருக்கிறது. திரைப்படத்திலிருந்து வெளியே வந்து சொல்வதானால், நந்திதா தாஸ் இயக்கிய ‘ஃபிராக்’ திரைப்படம் பாருங்கள். அத் திரைப்படத்தில் இசைக் கலைஞராக நடிக்கும் நசிருதீன் ஷா ஓரிடத்தில் சொல்வார்: “வெறும் ஏழு சுரங்களைக் கொண்டு இத்துணை வெறுப்பை நான் எப்படி எதிர் கொள்வேன்?” அத் திரைப்படம் எங்கோ அமெரிக்காவில் ரிஸ்வான் கான் சந்திக்கும் வெறுப்பைப் பற்றியல்ல, இங்கே, நமது தவத்திரு நாட்டில் அன்சாரிகள் சந்திக்கும் வெறுப்பை பற்றிப் பேசுகிறது.

Advertisements

8 thoughts on “மை நேம் இஸ் கான்: உலகமய மசாலா!

 1. தமிழ்மணத்தில் கண்டேன். மகிழ்ச்சி!

  Like

 2. அற்புதமான கட்டுரை. நான் இன்னும் படம் பார்க்கவில்லை. சச்சிதானந்தன் சுகிர்தராஜா காலச்சுவடில் இந்த படத்தை ‘புளித்துப்போன காதல் கதை’ என எழுதியிருந்தார். அதில் எதுவும் ‘உள்நோக்கம்’ இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் உங்கள் விமர்சனம் ஆழமாக இருந்தது. சச்சிதானந்தன் கட்டுரையில் இத்தகைய அரசியல் பார்வைகள் எதுவுமில்லை.

  Like

 3. “செப்டம்பர் 11 பற்றி இதுவரை வந்த படங்களிலேயே ஆகச் சிறந்த படம் இதுதான்”. bull shit. he does not know anything about post-september world cinema. he is living in eighties indian cinema. last ten years eigther benegal or khetan mehta did not produce any single political movie. comparing ‘my name is khan’ to post-september cinema is nonsense and a crude joke. your review is splendid. yamuna rajendran

  Like

 4. i wrote an extended article on post-septmebr world cinema in uyirmmai some issues back covering from europe, america, pakistan to afghnistan. i reviewed nearly 15 movies on post-september. ‘my name is khan’ can’t come near any of these movies. politically it is a blind movie. yamuna rajendran

  Like

 5. உங்களின் பின் குறிப்புதான் என் சக நண்பர்களோடு உரையாடியதில் இருந்து எனக்கு முக்கிய குறிப்பாக தோன்றுகிறது.சிறப்பான கட்டுரை   

  Like

 6. ஒரு விமர்சனம் என்பது இப்படித் தான் இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டத் தகுதி கொண்ட விமர்சனம்.

  மிக அழகாக, திரைப்படத்தில் வரும் காட்சிகளின் ஊடே சென்று விமர்சிப்பதையும் தாண்டி, அந்தக் காட்சிகள் சினிமாவில் வைக்க ஆதாராமான சமூக பொருளாதார காரணங்களையும் தொட்டுச் சொல்கிறது.

  மிக அருமை..!

  தோழமையுடன்

  கார்க்கி

  Like

 7. உண்மையில் கதைப்படி அவர் ஜோர்ஜியாவில் அந்த மக்களைக் காப்பாற்ற செல்வதன் நோக்கம் அவர் தான் நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக அல்ல. அந்த தாயையும் மகனையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே அல்லது அவர்கள் நிலைமை எவ்வாறு என்று சென்று பார்ப்பதற்கு என நான் எண்ணுகிறேன். ஏன் என்றால் ஜோர்ஜியாவில் புயல் என்று அறிந்த உடன் அந்த சிறுவனையும் தாயையும் பற்றியே ரிஸ்வான் கான் எண்ணுகிறார்.
  மற்றப்படி உங்கள் விமர்சனம் அருமை. நானும் படத்தினைப் பார்த்துவிட்டு இது ஒரு நல்ல படைப்பே என நினைத்திருக்கிறேன். உங்கள் அளவில் நான் இவ்வளவு தூரம் சிந்திக்கவில்லை.

  Like

 8. உலக சினிமா என்ற பதத்தையே அசிங்கப்படுத்த பிறந்திருக்கும் உலக மய சினிமாவை சமூக பொருளாதார காரணங்களோடு அலசியிருக்கிறீர்கள்.
  சிறப்பான விமர்சனம்.

  வாழ்த்துக்கள்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s