மே-17: ஓயாது நினைவுகள்!

ஓயாத நினைவுகள், சால்வடார் டாலி, 1931

இனி
ஒவ்வொரு ஆண்டும்
பல கவிஞர்கள் தவறாமல்
கவிதைகள் எழுதும் நாளாயிருக்கும்.

அவற்றில்,
எது உண்மையான
உணர்ச்சியிலிருந்து எழும்பியது,
எது வார்த்தைகளை
மடித்துப் போட்டது என்பது,
சித்தி பெற்ற நிறைபோதையில்
விக்கிரமாதித்யன் கூட
கண்டறிய இயலாத புதிராயிருக்கும்.

பதிவர்கள் காத்திருந்து
பதிவிடும் நாளாயிருக்கும்.

கொல்லப்பட்ட
இலட்சக்கணக்கான
மக்களைப் பற்றி…

ஏன் தாக்குகிறார்கள் என்பதை
புரிந்து கொள்ளாத குற்றத்தைச் செய்த
குழந்தைகளைப் பற்றி…

ஷெல் விழும் வேளைகளில்
கர்ப்பமுறாத வயிறுகளே வெடிக்கையில்,
எனது சிசுவைக் காப்பாற்று என,
வெடிகுண்டு வந்த வானத்திலிருக்கும்
கடவுளிடம் கைகூப்பித் தொழுத
கர்ப்பிணிகளைப் பற்றி…

தமது வயதில் கால் பங்கு கூட இல்லாத
கண்மணிகள் செத்து விழுவதைக் கண்டவாறு
வானிலிருந்து விழும் ஆர்ட்டலரிகளுக்கு அஞ்சி ஓடிய
முதியவர்களைப் பற்றி…

புத்தனின் அகிம்சையை
போர்க்களத்தில் கடைபிடித்து
அசையாது மரணத்திற்காய்
அன்றாடம் காத்திருந்த
உடல் ஊனமுற்றவர்கள்,
நோயாளிகளைப் பற்றி…

வாழ்நாள் இலட்சியமான ஈழம்
தமது கண்முன்னே
கழுத்தறுத்து கொலை செய்யப்படுவதைக்
காணச் சகியாது,
இறுதி நொடி வரை
சயனைட் குப்பிகளோடு போராடி மடிந்த
புலிகளின் சாதாரணப் போராளிகளைப் பற்றி…

யார் பிணமானார்கள்,
யார் மிஞ்சினார்கள்,
யார் காணாமல் போனார்கள் என்று
இன்னமும் தெரியாத நிலையில்,
வாய் திறவாமல் மெளனித்து விட்ட
இலங்கையில் வாழும் மனிதகுல அகதிகளைப் பற்றி…
இந்தியாவிற்கு ஓடி வந்த இலங்கை அகதிகளைப் பற்றி…

இவர்கள் யாரைப் பற்றியும்
ஒற்றைச் சொல் கூட இல்லாமல்,
எனது தலைவன் சாகவில்லை
என சிலர் பெருமூச்சு விடலாம்.
பதிவெழுதலாம்.
மீள்பிரசுரம் செய்யலாம்.

உண்மையில்,
ஒரு அரை நூற்றாண்டுக் கனவு
ஈவிரக்கமின்றி கொலைசெய்யப்பட்ட பின்,
தனது சக வீரர்களெல்லாம்,
வெள்ளைக் கொடி ஏந்தியவர்கள் கூட
மிச்சமின்றி அழிக்கப்பட்ட பின்,
வாழ நேர்வது,
அதுவும் தலைமறைவாய்
உயிர் சுமக்க நேர்வது
ஒரு உண்மையான வீரனுக்கு
சாவை விட சித்திரவதையானதாகும்.

இவை வரலாற்றின் தீராத பக்கங்களில்
கரிபால்டி உணர்ந்து சொல்லிய வார்த்தைகள்.

கரிபால்டியின் வலியை
உணராமல் பேசுகிறவர்கள்
உண்மையில்,
அவர் உயிரோடிருந்தால்
புண்ணாகியிருக்கக் கூடிய இதயத்தில்
அனுதினமும் கூரான வேல் பாய்ச்சி,
அவரை உயிரோடு இருக்கச் சொல்லி கொல்கிறார்கள்.

பலர்
கருத்தரங்குகள்,
அரங்கக் கூட்டங்கள் நடத்தலாம்.

நிகழ்த்தப்படும் உரைகளிலிருந்து
எது இலங்கை அரசு ஏற்பாடு செய்தது,
எது இந்திய அரசு ஏற்பாடு செய்தது,
எது ஓட்டுப் பொறுக்கி அரசியல் ஏற்பாடு செய்தது,
எது வருடாந்திரக் கணக்கிற்காக ஏற்பாடு செய்தது,
எது நேர்மையான சந்தர்ப்பவாதம்,
எது நேர்மையற்ற சந்தர்ப்பவாதம்
என்பதையெல்லாம் கண்டறிவது கடினமாயிருக்கும்.

பெரியாரை தலித் விரோதி என நிராகரிக்கும்
தலித் எம்.எல்.ஏ வியாசர்கள்,
கோவையில் தெருவிலிறங்கி
இசுலாமியரை வேட்டையாடிய அர்ச்சுனனை,
கொலைக்கஞ்சாத பார்ப்பன பயங்கரவாதியை,
மக்கள் விரோதி என நிராகரிக்காமல்,
ஈழ விடுதலைப் போராளியாக அங்கீகரித்து,
ஒரே மேடையில் நின்று பேசும்
வரலாற்றுக் குற்றங்கள்
உலகப் போர்க் குற்ற நாளில் அரங்கேறும்.

உரைகளில்
மெய்சிலிர்த்து போனதால்தான்,
வானத்திலிருந்து
அம்பேத்கர் சிந்தும் கண்ணீரில்
இரத்தம் வழிகிறதென
எல்லோரும் எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

சத்குருக்களும்,
உலக நாயகர்களும்,
நெற்றிக்கண்ணை
மூடிக் கொள்ளும் நக்கீரர்களும்,
சீட்டுக்கவிஞர்களும்
என எல்லா டிக்கெட்டுகளும்
உணர்ச்சி பொங்க மேடையேறி
அரசனுக்கு சோப்புப் போட்டவாறு,
இசைக்கும் சோக கீதத்திலிருந்து
எழும்பும் பிடில் இரைச்சலில்,
நமது செவிப்பறைகள்
இயங்க மறுத்து ஊனமாகும்.
முத்துக்குமாரின் புத்திசாலித்தனம்
மெல்ல உறைக்கத் துவங்கும்.

“எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கிறது.
எது நடக்குமோ, அதுவும் நன்றாகவே நடக்கும்”
என ஒரு பாதிரியார் கீதாபதேசம் செய்யும்
பல்சமய தெய்வீகக் காட்சியில்,
ஈழத்தில் மிச்சமிருக்கும்
புல்பூண்டுகளும் கருகி மடிந்திருக்கும்.

“கரிபால்டியின் மீது சிறு துரும்பு விழுந்தாலும்,
தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும்”
என அன்று சூளுரைத்தவர்கள்,
ஒவ்வொரு ஆண்டும்
ஸ்பார்ட்டகஸ் வரலாறு தொடங்கி
சாக்ரடீஸ் வரலாறு வரை சொல்லி,
புதிய புதிய வார்த்தைகளில்
சுடச்சுட சூளுரைத்துக் கொண்டிருப்பார்கள்.
காவல்துறையினர் தேநீர் அருந்தியவாறு
உரைகள் கேட்டு புத்துணர்ச்சியடைவார்கள்.

ஒரு அடிமையாக மற்றொரு அடிமைக்கு
உதவி செய்ய முடியா விட்டாலும்
மானத்தோடு வாழ்ந்த,
பிழைக்கத் தெரியாத அசடான
அந்த ஈரோட்டுக் கிழவன்,
புகைப்படப் பிரேதமாய் பின்னிருக்க,
அவரது பெயர் மட்டும் மிஞ்சிய திடலின்
மேடையில் பேசும் மானங்கெட்ட அடிமைகள்
மனுநீதிச் சோழனுக்கு மனுப்போடுவார்கள்.
ஆவேசமாய் ஆற்றும் சொற்பொழிவு
அடுத்த தெருவுக்குக் கூட கேட்கவில்லை
என்பதை உத்திரவாதம் செய்த பின்னால்,
கவனமாய் கடமையாற்றிய திருப்தியோடு
கூட்டம் மெல்லக் கலையும்.

உணர்வுபூர்வமான
சிலர் உண்ணாவிரதம் நடத்தலாம்.
தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தலாம்.
கருத்துரிமையில் அக்கறை கொண்ட
காவல்துறை வாஞ்சையோடு
கைகாட்டும் தேசிய நெடுஞ்சாலைகளில்,
தொண்டை கிழிய முழக்கமிடலாம்.
விரையும் வாகனங்களின்
சக்கரங்களில் இழுபட்டு
முழக்கங்கள் விபத்துக்குள்ளாகலாம்.

மக்களிடம் பேசிய முத்துக்குமார்…
மக்களை பேச வைத்த முத்துக்குமார்…
மக்கள் பேச வேண்டுமென
செத்துப் போன முத்துக்குமார்…
அந்த முத்துக்குமார் மட்டும்
கட்சி வேறுபாடின்றி,
பெரும்பாலான மேடைகளில்
எதுவும் பேசாமல்
புகைப்படமாகக் காட்சியளிப்பார்.

மவுண்ட்ரோடிலிருந்தும்,
முட்டைக் கறை
பட்ட வேட்டியிலிருந்தும்,
வருடாந்திர வாழ்த்துச் செய்தி
இலங்கை அரசருக்கு
ஒவ்வொரு ஆண்டும்
கூரியர் செய்யப்பட்டிருக்கும்.

ஏதோ ஒரு பாலிவுட் நட்சத்திரம்
அல்லது ஒரு விளையாட்டு வீராங்கனையின்
அத்தியாவசியத் திருமணச் செய்தியால்
வழக்கமான இரங்கல் செய்திகளுக்கு
இடம் ஒதுக்க இயலவில்லை என
இனிவரும் காலங்களில்
பத்திரிக்கைகள் கைவிரிக்கலாம்.

யார் மறந்தாலும்
அம்பானிக்கும்,
டாட்டாவுக்கும்,
மிட்டலுக்கும்
மறக்க முடியாத நாளாக
என்றும் நினைவில் நிற்கும்.
இலங்கையில்
புதிய காண்ட்ராக்டுகள்
கையெழுத்திடும்
வருடாந்திர முகூர்த்த நாளை
அவர்கள் மறக்க வாய்ப்பில்லை.

சில ஆண்டுகள் கழித்து
தில்லி அரசியின் தலைமையில்
மெழுகுவர்த்தி அஞ்சலி நடக்கும்.

கோபாலபுரத்திலிருந்து வந்த,
மெழுகை விடவும் அதிகமாக உருகும்
கவிதை போன்றதொரு வஸ்து
அங்கே வாசித்துக் காட்டப்படும்.

கவிதை எழுத முடியாத
குஜராத் அரசரும், அறிக்கை அரசியும்
மலர்ச்செண்டுகளை அனுப்பி நயமாக
தமது வருத்தங்களை தெரிவிப்பார்கள்.

“ஈழப் பிரச்சினைக்குக் கூட
இரங்கல் தெரிவிக்காதவர்கள் நாய்கள்!”
என மக்கள் பிரதிநிதிகள்
வீற்றிருக்கும் அவையில்
பாரதப் பண்பாட்டைப் பேணிக் காக்கும்
கட்சியின் தலைவர் ஆவேசமாகக் குலைப்பார்.
பின்னர்,
தமது கண்ணியமான கருத்திற்கு
கனமான இரங்கல் தெரிவிப்பார்.

சிறப்பு விருந்தினராகக்
கலந்து கொள்ளும்
சீன அரசரும்,
இலங்கை அரசரும்
ஈழப் படுகொலையை எண்ணி
தமது உரையில்
உணர்ச்சிவசப்பட்டு அழ,
தேசமே உச்சு கொட்டும்.

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு
ரிமோட்டை எடுத்து
சேனல் மாற்றும்.

இந்த ஆண்டு போல்
வரும் ஆண்டுகளிலும்
இதே நாளில்
கடும் மழை பொழிந்து,
இலங்கை அரசர்
வெற்றி விழாவை
ரத்து செய்வதாக அறிவித்து விட்டால்,
நாத்திகர்கள்
தமது கடவுள் மறுப்பை
மறுபரிசீலனை செய்யலாம்.

சில ஆண்டுகள் கழித்து
ஒரு தமிழ்நாட்டுச் சிறுமி
தனது அப்பாவிடம் கேட்பாள்:
“அப்பா, இந்த ஈழம்னா என்னப்பா?
மே-17 அன்னிக்கு என்னப்பா நடந்துச்சு?”
“அதுவா, அது ஒரு பழைய கதம்மா, அத விடு”
என முகத்தைத் திருப்பிக் கொள்வார் அப்பா.

சில அப்பாக்களை
அந்தக் கேள்வி துரத்தும்.
இரவில்
மகனுக்கோ,
மகளுக்கோ,
மனைவிக்கோ தெரியாமல்
அந்தக் கேள்வியை எண்ணி
அவர் அழலாம்.

சில அப்பாக்கள்
தான் சொன்ன பதில்தான் உண்மை
என தனக்குத் தானே
திரும்ப திரும்ப சொல்லிக் கொள்ளலாம்.
புரண்டு படுத்து தூங்கலாம்.

வருடத்தில் வரும்
இந்த ஒரு நாள்
கடந்த பின்னால்,
வேறு நாட்களில்,
வேறு நாட்களின்
வரலாற்று முக்கியத்துவம் பற்றி,
கவிதை எழுதி,
கவிதைகளாக எழுதி எழுதி,
பதிவு எழுதி,
பதிவுகளாக எழுதி எழுதி,
கூட்டம் போட்டு…
கூட்டங்களாக போட்டு போட்டு…
அடுத்த ஆண்டு
மே-17 வரை காலத்தை ஓட்டலாம்.

பின்னர் ஒரு நாள்,
காலத்தின்
இரக்கமற்ற விதியைக் கிழித்து
வானுயர்ந்து எழும்பும்
ஓயாத நினைவுகள்
ஊழித் தாண்டவமாடும்.

அன்று
இலங்கை அரசர்களும்,
இந்திய அரசர்களும்,
உலக முதலாளிகளும்
இரண்டாம் உலகப் போரின்
சைபீரியப் பனியை
தமது ஊனக் கண்ணில் தரிசிப்பார்கள்.
எழும்பும் பனிப்படலத்தின் நடுவே,
தற்கொலையின்
இறுதி நொடியில் நிற்கும் ஹிட்லர்
கண்ணியமான ஜெர்மானியப் புன்னகையுடன்
அரசர்களை வரவேற்று
காத்து நிற்கும் காட்சி
தெள்ளத் தெளிவாகப் புலப்படும்.

முள்ளிவாய்க்காலில்
மீண்டும் புல் முளைக்கும்.
ஒரு வரலாற்றுக் கடமை
முடிந்த அமைதியில்,
இந்து மகா சமுத்திரம்
வானத்தை வெறிக்கும்.

Advertisements

12 thoughts on “மே-17: ஓயாது நினைவுகள்!

 1. வரிக்கு வரி திரும்பத்திரும்பப் பலரிடம் காட்ட முயல்கிறேன்.

  Like

 2. அடுத்த இடுக்கைக்கு அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறதே?

  Like

 3. //சில அப்பாக்களை
  அந்தக் கேள்வி துரத்தும்.
  இரவில்
  மகனுக்கோ,
  மகளுக்கோ,
  மனைவிக்கோ தெரியாமல்
  அந்தக் கேள்வியை எண்ணி
  அவர் அழலாம்.

  சில அப்பாக்கள்
  தான் சொன்ன பதில்தான் உண்மை
  என தனக்குத் தானே
  திரும்ப திரும்ப சொல்லிக் கொள்ளலாம்.
  புரண்டு படுத்து தூங்கலாம்.//

  தோழர் பேச வார்த்தைகளில்லை. இதைப் பற்றி பேசும் எந்த ஒரு பேச்சும் அன்றைய நாளை அலைக்கழைக்க்ச் செய்து விடுவதாய் மட்டுமே முடிகிறது. கவிதை உருவாக்கிய உணர்வுகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அதை வார்த்தைகளில் சொல்ல ஆரம்பித்தால் பிறழ்வு மட்டுமே மிஞ்சும். 😦

  Like

 4. உங்கள் கவிதை பல நினைவுகளை கீறுகிறது. மே 17 நினைவு கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகின்றன. அதில் பல கேலிக்கூத்துக்களும் அடக்கம். உங்கள் கவிதையிலேயே சுட்டியும் இருக்கிறீர்கள். கோபம், கோபமாய் வருகிறது.

  தொடர்ந்து வினையாற்றுங்கள்.

  Like

 5. கவிதை நன்றாக இருக்கிறது, தமிழ் மணத்தில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..

  Like

 6. சிறப்பான கவிதைக்கும் அதற்குக் கிடைத்த விருதுக்கும் வாழ்த்துகள் தோழர்.

  Like

 7. வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்……

  தொடர்ந்து பதிவுகளை எழுதுமாறு எனது வேண்டுகோளையும் வைக்கிறேன்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s