ஒரிசா: கொந்தளிக்கும் மறுகாலனியாக்கப் போர்க்களம்!

கடந்த சில மாதங்களாக, ம.க.இ.க முதலான புரட்சிகர அமைப்புகளும், நாடு முழுவதுமுள்ள அறிவுஜீவிகளும், மறுகாலனியாக்கத்தின் கீழ், வரை முறையற்ற நிலப்பறிப்பு நாடு முழுவதும் நடந்து வருவதை தீவிரமாக அம்பலப்படுத்தி இயக்கங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, மத்திய, மாநில அரசுகள் இணைந்து கொண்டு, இந்தியாவின் மத்தியப் பகுதியில் வாழும், நமது நாட்டின் பூர்வகுடிகளான பழங்குடி மக்களை, கூண்டோடு நிலங்களிலிருந்து அடித்து விரட்டியும், திமிறுபவர்களை இரக்கமின்றி கொலை செய்தும், பெண்களை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியும் வருகின்றன. மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தி அவர்களது நியாயமான போராட்டங்களை ஒடுக்கி வருகின்றன. இந்த மறுகாலனியாக்க உள்நாட்டு யுத்தத்தில், அப்பட்டமாக முதலாளிகளின் அடியாட் படையாக போலிசும், துணை இராணுவப் படைகளும் வெறியாட்டம் நிகழ்த்தி வருகின்றன.

செய்தி ஊடகங்களில் மறைக்கப்படும் இத்தகைய வெறியாட்டங்கள் ஏதோ தனித்த விதிவிலக்குகளல்ல. மாறாக, நாடு முழுவதும் மாவோயிஸ்டுகள் மீதான போர் என்ற போர்வையில், பழங்குடி மக்களையும், மீனவர்களையும், விவசாயிகளையும் தத்தமது வாழ்விடங்கள், நிலங்களிலிருந்து விரட்டியடிக்கும் மறுகாலனியாக்கப் போரானது, பல்வேறு போர்க்களங்களில், வெவ்வேறு திசைகளில் உள்ள பல்வேறு போர் முனைகளில் தன்னை அன்றாடம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அத்தகைய உக்கிரமான போர்முனைகளில் ஒன்றுதான் ஒரிசா. ஒரிசா எனும் மறுகாலனியாக்கப் போர்க்களத்தின் பின்புலத்தை சுருக்கமாக அறிய தோழர் அசுரன் எழுதிய, ஒரிஸ்ஸாவில் பயங்கரவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் சண்டை!! பதிவை படித்து விட்டு மேற்கொண்டு தொடரலாம்.

கடந்த ஜனவரி 26, 2010 முதல் நூற்றுக்கணக்கான கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள், போஸ்கோ எதிர்ப்புப் போராட்ட சங்கம் (PPSS) எனும் அமைப்பின் தலைமையில், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை விழுங்கவுள்ள 12 மில்லியன் மதிப்புள்ள போஸ்கோ உருக்காலையை எதிர்த்து, பலிடுதா கிராமத்தில் அமைதியாக தர்ணா செய்து வந்தனர். இந்நிலையில், இருட்டடிப்பு செய்யப்படும் நீண்ட போராட்டத்தை பிரச்சாரம் செய்யும் விதமாக, பல்வேறு அமைப்புகள் இணைந்து, மே-15 முதல் ஒரு வாரத்திற்கு நாடு தழுவிய அளவில் முற்போக்கு, புரட்சிகர சக்திகள் அனைவரும் பலிடுதாவில் அணிதிரண்டு மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க அறைகூவல் விடுத்தனர். இதனை ஏற்று பலரும் ஒரிசா நோக்கி பயணித்தனர்.

இதனை கருவிலேயே ஒடுக்க நினைத்த அரசு, குறிப்பிட்ட நாளன்று அப்பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பித்தது. 30 பிளாட்டூன்கள் அளவிலான காவல் துறையைக் களமிறக்கி, நூற்றுக்கும் மேற்பட்டோரை காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்கி காயப்படுத்தியது மட்டுமல்லாமல், தர்ணாவுக்கான கூடாரங்களையும் தீயிட்டுக் கொளுத்தி வெறியாட்டம் போட்டுள்ளது. அந்த வெறியாட்டக் காட்சித் தொகுப்பு, தற்போது எதிரோட்டங்கள்(countercurrents) இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அரசின் கொலைமுகத்தை, ப.சிதம்பரத்தால் ஒரே சமயத்தில் அறிவிக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் வரும், அதே வேளையில் தங்கு தடையின்றி அமல்படுத்தப்பட்டும் வரும் காட்டு வேட்டையின் உண்மையான நோக்கத்தை மக்களிடம் ம.க.இ.க முதலான புரட்சிகர அமைப்புகள் அம்பலப்படுத்தி வருகின்றனர். பினாயக் சென், அருந்ததி ராய், மகாஸ்வேதா தேவி முதலான போராடும் அறிவுஜீவிகள் கடுமையாகவும், தொடர்ச்சியாகவும் அரசை சாடி அம்பலப்படுத்தி வருகின்றனர்.

அதே வேளையில், ம.க.இ.க முதலான புரட்சிகர அமைப்புகளும், மேற்குறிப்பிட்ட அறிவுஜீவிகளும், மாவோயிஸ்டுகளை விமர்சனபூர்வமாக மட்டுமே அணுகி வருகின்றனர். எனினும், அரசு வன்முறையைப் பேசினாலே, அவர்களை மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் என முத்திரை குத்தி தனிமைப்படுத்தும் நோக்கோடு, உடனடியாக மாவோயிஸ்டுகளின் தீவிரவாதச் செயல்களைப் பற்றி பலர் ஆவேசக் கூச்சலிடத் துவங்குகின்றனர். “வேறெதுவும் பேசக் கூடாது. மூச், மாவோயிஸ்டுகளைக் கண்டிக்கிறாயா, இல்லையா?” என ஆக்ரோசமாகக் கேட்டு சாமியாடுகிறார்கள்.

அத்தகைய அதீத தேசபக்தி நோய்வாய்ப்பட்ட நியாயவான்கள், வினவு முதலான புரட்சிகர இணையத்தளங்களில் ஆவேசமாக பின்னூட்டமிடும் பதிவுலக அர்னாப் கோஸ்வாமிகள்*, எக்கட்சியும் சாராத நடுநிலைமையில் நின்று பேசுவதாக மழுப்பும் சுப்பிரமணிய சுவாமிகள், எதற்கெடுத்தாலும் பத்து ஆங்கில சுட்டிகளை பரிசளித்து ‘ஆதாரப்பூர்வமாக’ பேச அறிவுறுத்தும் அதியமான்கள்… ஆகிய சகல பலவண்ண மேதாவிகளும், கீழ்க்காணும் காட்சிகள் எழுப்பும் ஒற்றைக் கேள்விக்கு கட்டாயம் பதில் சொல்லியாக வேண்டும்.

கடந்த மே-15 ஆம் தேதியன்று, ஒரிசாவிலுள்ள பலிடுதாவில் ஈவிரக்கமின்றி தாக்கப்பட்டவர்கள் மாவோயிஸ்டுகளா, போராடும் பழங்குடி மக்களா? பதிலளிக்கும் முன், கீழ்க்காணும் ஓளிப்பட ஆதாரத்தை ஒரு முறை கண்ணைத் திறந்து பார்க்கவும். அதன் பின்னர் தங்கள் மேலான கருத்தை அவசியம் திருவாய் மலர்ந்தருளலாம்.

மாவோயிஸ்டுகள் என்று பதிலளிக்கப் போகும் கோயபல்சுகளிடமும், இது கிராபிக்ஸ் வேலை என்று பதிலளிக்கப் போகும் முத்தாலிக்குகளிடமும், நாம் மேற்கொண்டு பேசுவதற்கு எதுவுமில்லை. போராடும் மக்கள்தான் என்று பதிலளிப்பவர்கள் இந்த மறுகாலனியாக்க உள்நாட்டு யுத்தத்தை, முதலாளித்துவ பயங்கரவாதத்தை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கும் சேர்த்துப் பதிலளிக்க வேண்டும்.

இப்பதிவு, எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய தொலைநோக்குப் பார்வை கொண்ட, இந்தியாவின் இதயத்தின் மீதான போர்! கட்டுரையின் சில வரிகளோடு நிறைவு பெறட்டும்.

சத்தீஸ்கர், ஒரிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மக்கள் – அவர்களில் சிலர் மாவோயிஸ்டுகள், பலர் மாவோயிஸ்டுகள் அல்ல – அரும்பாடுபட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் ஆக்கிரமிப்பைக் கடந்த சில ஆண்டுகளாய் தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த ’காட்டு வேட்டை’ நடவடிக்கை அவர்களது போராட்டத்தின் தன்மையை எப்படி மாற்றப் போகிறது என்பதுதான் தற்போதைய கேள்வி. எதிர்த்துப் போராடும் மக்கள் எதிர்கொண்டு நிற்கும் சக்தி எது என்பதுதான் கேள்வி.

வரலாற்று ரீதியாகப் பார்த்தோமானால், உள்ளூர் மக்களுடனான மோதல்கள் பலவற்றிலும் சுரங்கத்தொழில் நிறுவனங்களே வெற்றி பெற்றிருக்கின்றன என்பது ஒரு உண்மை. போர்த்தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை விட்டுத்தள்ளுங்கள், அநேகமாக எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களின் கடந்தகாலமும் ஈவிரக்கமற்றதுதான். கார்ப்பரேட் முதலாளிகள் குரூரமானவர்கள், களம் பல கண்டு இறுகி உரமேறியவர்கள். “உயிரைக் கூடத் தருவோம், ஒருபோதும் எமது நிலத்தைத் தர மாட்டோம்” என்று மக்கள் எழுப்பும் முழக்கம், குண்டு வீச்சைத் தாங்கும் கூடாரத்தின் மீது விழும் மழைத் தூறல் போல, அவர்கள் மீது பட்டுத் தெறிக்கிறது. இந்த முழக்கங்களையெல்லாம் பல காலமாக அவர்கள் கேட்டிருக்கிறார்கள் – ஆயிரக்கணக்கான மொழிகளில், நூற்றுக்கணக்கான நாடுகளில்.

உண்மையான பிரச்சினை என்னவென்றால், இந்தியாவின் அதிசயிக்கத்தக்க ‘வளர்ச்சிக்’ கதையின் பதாகையைத் தாங்கி வந்த கப்பல் தரை தட்டி விட்டது. பாரிய சமூக, சுற்றுச்சூழல் சீர்குலைவை அது விலையாகக் கொடுத்துள்ளது. இப்போது ஆறுகள் வற்றுகின்றன, காடுகள் மறைகின்றன, நிலத்தடி நீர்மட்டம் இறங்குகிறது, தமக்கு இழைக்கப்பட்டிருப்பது என்ன என்பதை மக்கள் உணரத் தலைப்பட்டு விட்டதால், விதைத்த வினைகளுக்கான அறுவடைக் காலம் துவங்கி விட்டது. நாடெங்கிலும் கலகங்கள் வெடிக்கின்றன. மக்கள் தமது நிலங்களையும், இயற்கை வளங்களையும் விட்டுக் கொடுக்க மறுத்து ஆவேசமாகக் கிளர்ச்சி செய்கிறார்கள். இனியும் அவர்கள் பொய் வாக்குறுதிகளை நம்பத் தயாராக இல்லை. பத்து சதவீத வளர்ச்சி விகிதமும், ஜனநாயகமும் ஒன்றுக்கொன்று ஒத்து வராதவையாக தீடீரென்று தோன்றத் தொடங்குகிறது.

ஒளிப்பட ஆதாரம்:  எதிரோட்டங்கள்

பின்குறிப்பு:

இந்த உள்நாட்டு யுத்தத்தில் பழங்குடி மக்கள்  பாடவும், நாடு முழுவதும் எதிரொலிக்க வேண்டியதுமான, இந்தி மொழியில் எழுதப்பட்ட போர்க்களப் பாடலை கீழ்க்காணும் ஒளிப்படக் காட்சியில் காணலாம். பாடல் வரிகளின் தமிழாக்கம் ஒளிப்படத்திற்கு கீழே தரப்பட்டுள்ளது.

எமது கிராமங்களை விட்டு செல்ல மாட்டோம்,
எமது காடுகளை விட்டுத் தர மாட்டோம்,
எமது தாய் நிலத்தை என்றும் கைவிட மாட்டோம்,
எமது போராட்டத்திலிருந்து ஒருக்காலும் பின்வாங்க மாட்டோம்!

எமது கிராமங்களை விட்டு செல்ல மாட்டோம்,
எமது காடுகளை விட்டுத் தர மாட்டோம்,
எமது தாய் நிலத்தை என்றும் கைவிட மாட்டோம்,
எமது போராட்டத்திலிருந்து ஒருக்காலும் பின்வாங்க மாட்டோம்!

அவர்கள்
அணைகளைக் கட்டினார்கள்,
கிராமங்களை மூழ்கடித்தார்கள்…
ஆலைகளை நிறுவினார்கள்,
மரங்களை வெட்டித் தள்ளினார்கள்…
நிலங்களை அகழ்ந்தார்கள்,
வனவிலங்கு பூங்காக்களை அமைத்தார்கள்…

நீரின்றி,
தாங்கும் நிலமின்றி,
அரவணைக்கும் வனமின்றி
நாங்கள் எங்கே போவோம் ஐயா?
‘வளர்ச்சியின்’ கடவுளே, நீயே சொல்!
நாங்கள் எமது வாழ்வை எப்படித்தான் பாதுகாப்பது?

எமது கிராமங்களை விட்டு செல்ல மாட்டோம்,
எமது காடுகளை விட்டுத் தர மாட்டோம்,
எமது தாய் நிலத்தை என்றும் கைவிட மாட்டோம்,
எமது போராட்டத்திலிருந்து ஒருக்காலும் பின்வாங்க மாட்டோம்!

யமுனை வறண்டது,
நர்மதை வறண்டது,
சுவர்ணரேகாவும் வறண்டது…
கங்கை சாக்கடையானது,
கிருஷ்ணா வெறும் கறுப்புக் கோடானது…

நீங்கள் பெப்சி கோலா குடிப்பீர்கள்,
மினரல் வாட்டரில் குளிப்பீர்கள்…
நாங்கள் மட்டும்
அசுத்தமான கழிவு நீரில்
எப்படித் தாகம் தீர்ப்பது ஐயா?

எமது கிராமங்களை விட்டு செல்ல மாட்டோம்,
எமது காடுகளை விட்டுத் தர மாட்டோம்,
எமது தாய் நிலத்தை என்றும் கைவிட மாட்டோம்,
எமது போராட்டத்திலிருந்து ஒருக்காலும் பின்வாங்க மாட்டோம்!

காடுகளை தாயாய்ப் பராமரித்த,
நிலத்தைப் உழுது பசுமையாக்கிய,
நதிகளை தேன் போல ஓடச் செய்த
எங்கள் மூதாதையர்கள் மூடர்களா என்ன?

உனது பேராசை நிலத்தை கூறு போட்டது,
அதன் பசுமையைக் கொள்ளையடித்தது…
மீன்கள் செத்தன, பறவைகள் காணாமல் போய் விட்டன…
அவை எந்தத் திசையில் போயின என யாரறிவார்?

எமது கிராமங்களை விட்டு செல்ல மாட்டோம்,
எமது காடுகளை விட்டுத் தர மாட்டோம்,
எமது தாய் நிலத்தை என்றும் கைவிட மாட்டோம்,
எமது போராட்டத்திலிருந்து ஒருக்காலும் பின்வாங்க மாட்டோம்!

முதலாளியின் புரோக்கர்களான
அமைச்சர் பெருமக்கள்
எமது நிலத்தைப் பிடுங்கி விட்டனர்…
ஆயுதம் தரித்த பிளாட்டூன்களோ
பறித்துக் கொண்டவர்களைப் பாதுகாக்க
பாய்ந்து வருகின்றனர்…

அதிகாரி அரசராகி விட்டார்,
காண்டிராக்டர் கோடிசுவரராகி விட்டார்…
எங்கள் கிராமங்கள் அவர்களது அடிமை நாடுகளாகி விட்டன…
ஆம் சகோதரனே,
அவர்களது அடிமை நாடுகளாகி விட்டன…

எமது கிராமங்களை விட்டு செல்ல மாட்டோம்,
எமது காடுகளை விட்டுத் தர மாட்டோம்,
எமது தாய் நிலத்தை என்றும் கைவிட மாட்டோம்,
எமது போராட்டத்திலிருந்து ஒருக்காலும் பின்வாங்க மாட்டோம்!

பீர்சா முண்டா*
அமைதியைக் கிழித்து
ஒன்றுபடுமாறு அறைகூவுகிறார்…
மீனவர்களே, தாழ்த்தப்பட்ட மக்களே, பழங்குடி மக்களே
ஒன்றுபடுவோம், நாம் ஒன்றுபடுவோம்!
வயல்களிலிருந்தும்,
அகழப்பட்ட நிலங்களிலிருந்தும்,
போர்ப்பறை முழங்க எழுவோம்!
அலைகளாய் ஒன்றுபட்டு எழுவோம்!
கேளுங்கள்
அருமை நாட்டு மக்களே,
போராட்டம் ஒன்றே வழி!
போராட்டம் ஒன்று மட்டுமே வழி!

எமது கிராமங்களை விட்டு செல்ல மாட்டோம்,
எமது காடுகளை விட்டுத் தர மாட்டோம்,
எமது தாய் நிலத்தை என்றும் கைவிட மாட்டோம்,
எமது போராட்டத்திலிருந்து ஒருக்காலும் பின்வாங்க மாட்டோம்!

குறிப்புகள்:

 • ஒரிய மாநிலத்தைச் சேர்ந்த, காசிபூர் பகுதியில் பாக்சைட் அகழ்வுக்கு எதிராகப் போராடிய பகவான் மாஜி என்ற பழங்குடித் தலைவரின் பாடலைத் தழுவிய, இப்பாடலின் காட்சித் தொகுப்பிற்கான நெறியாள்கை கே.பி.சசி எனும் ஆவணப்பட இயக்குனரால் செய்யப்பட்டுள்ளது. இப் பாடலை ஆக்சன் அய்ட்(ACTION AID) என்ற தன்னார்வக் குழு முதலான பல்வேறு தன்னார்வக் குழுக்கள் இணைந்து தயாரித்து வெளியிட்டுள்ளன. இப்பாடலை இங்கே அறிமுகப்படுத்துவதும், ஆதரிப்பதும், மேற்கூறிய தன்னார்வக் குழுக்களையும், அவர்களது செயல்பாடுகளையும் ஆதரிப்பது அல்ல. கூடுதலாகச் சொல்வதானால், தன்னார்வக் குழுக்களை முழுமையாக எதிர்ப்பது என்ற எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதையும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
 • பீர்சா முண்டா* – இந்தியாவின் மூத்த பழங்குடி இனங்களில் ஒன்றான முண்டா இனத்தில் 1875-ல் பிறந்த பீர்சா முண்டா, பழங்குடி மக்களை அணிதிரட்டி வெள்ளையர்களுக்கு எதிராக சமரசமின்றி போராடி மடிந்த போராளியாவார். மேலதிக விவரங்களுக்கு அவர் குறித்த விக்கிபீடியா பக்கத்தில் பார்க்கலாம்.
 • அர்னாப் கோஸ்வாமி* – டைம்ஸ் நவ் ஆங்கில செய்தித் தொலைக்காட்சியின் பிரதான செய்தித் தொகுப்பாளர். பச்சையான மறுகாலனியாக்க ஆதரவு, அரசு பயங்கரவாத ஆதரவு, பார்ப்பன பயங்கரவாத ஆதரவுக் கூச்சலிடுபவர். விருந்தினர்களை பேச விடாமல் கத்தும் பண்பாளர்.
Advertisements

5 thoughts on “ஒரிசா: கொந்தளிக்கும் மறுகாலனியாக்கப் போர்க்களம்!

 1. ஒரிசாவில் நடக்கும் மறுகாலனியாக்க எதிர்ப்பு போராட்டங்களைப் பற்றிய அருமையான தொகுப்பு. நன்றி தோழரே!

  Like

 2. சிறப்பான பதிவு தோழர்,

  மறுகாலனியாக்கத்தின் எதிர்ப்பு எரிமலை வெடித்துக்கிளம்பட்டும் எங்களின் அடிமைத்தனத்தை சுட்டு பொசுக்கட்டும். தாயின் கையில் ஆயுதம்.சொல்ல வார்த்தகளே இல்லை அது சொல்லாத அழகு கவிதை. நக்சல் பாரிகள் மக்களிடமிருந்து தான் மக்களிடமிருந்து மட்டும் தான் உருவாகிறார்கள் என்பது கண் முன்னே நடக்கிறதே. காளகஸ்தி கோயில் இடிந்தால் அது தேசிய செய்தி உழைக்கும்மக்கள் அரச பயங்கரவாதத்தால் நொறுக்கப்படுகிறார்கள் அது கொசுறு செய்தியாகக்கூட மிளிர்வதில்லை.

  உழைக்காத பேனா
  உழைப்போரின் விதியை/ வழியை
  எழுதிடுமா என்ன?

  ஏந்திய ஆயுதத்தால் எழுதுவோம்
  மறுகாலனிக்கு ஒப்பாரி
  கூடவே அதன் புரோக்கர்களுக்கும்.

  தோழர், அந்தப்பாடலின் மொழியாக்கம் நீங்கள் செய்ததா? நன்றாக இருக்கிறது. எப்படிங்க எல்லாம் தானாய் வருகிறதா:-)

  தோழமையுடன்
  கலகம்

  Like

 3. சிலசமயங்களில் நமது செயல்பாடுகள், போராட்டங்கள் போதுமானதாக இல்லையோ என நினைக்கத் தோன்றுகிறது.

  Like

 4. வெறும் பதிவிற்கு நன்றி என்று சொல்லமுடியவில்லை தோழர்.

  நெஞ்சம் புகுந்து கிழிக்கும் பாடல் வரிகளும், நடந்தேறிய அநீதி பற்றிய பதிவுகளும் ஏதோ விலங்குக்குள் அடைபட்ட கைகளை உடைத்தெறிய துணிக்கிறது..

  வித்யாசாகர்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s