தோபி காட்: நுட்பமான திரைமொழி!

சில திரைப்படங்கள் திரையரங்கை விட்டு வெளியேறியவுடன் மனதை விட்டும் வெளியேறி விடுகின்றன. சில திரைப்படங்கள் கரை அலம்பும் அலைகளாய் மீண்டும் மீண்டும் நினைவில் எழும்பிக் கொண்டிருக்கும். சமீபத்தில் வெளியான இந்தித் திரைப்படம், ‘தோபி காட்'(வண்ணான் படுகை) அத்தகைய திரைப்படங்களில் ஒன்று.

இந்தித் திரைப்படவுலகை தொடர்ந்து கவனிப்பவர்கள், சமீப காலங்களில் இரு விதமான போக்குகள் அருகருகே தொடர்ந்து வளர்ந்து கொண்டிருப்பதை காணலாம். ஒரு புறம், கோடிக்கணக்கான பணத்தை வீணடித்து, அபத்தங்களின் புதிய புதிய உச்சங்களை தொடும் வண்ணம் எடுக்கப்படும் ‘தீஸ் மார் கான்’, ‘தபங்’ முதலான குப்பைகள். மறுபுறம், ‘இஷ்கியா’, ‘லவ், செக்ஸ் அவுர் தோகா'(LSD) முதலான, ஏறத்தாழ 70-களின் புதிய அலைத் திரைப்படங்களுக்கு இணையான திரைப்படங்கள். (70-களின் புதிய அலைத் திரைப்படங்களில் இடம்பெற்றிருந்த அரசியல் உள்ளடக்கம், அழுத்தமான கண்ணோட்டம் ஆகியன இன்று குன்றியிருப்பதன் விளைவாகவே, ‘இணையான’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறேன். அதே வேளையில், Multiplex Cinema திரைப்படங்களையும் இப்பிரிவில் குறிப்பிடவில்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.)


முதல் வகைத் திரைப்படங்களுக்காக செலவழிக்கப்படும் கோடிகளும், தொழில்நுட்பம் மற்றும் நேர விரயமும், 24 மணி நேரத் தொலைக்காட்சிகளின் படையெடுப்பின் விளைவாக, இவ்வகைத் திரைப்படங்களும், திரைப்பட நட்சத்திரங்களும் உருவாக்கும் பண்பாட்டுச் சீரழிவும் ஒருங்கே அதிர்ச்சியையும், அருவெறுப்பையும் அளிக்கக் கூடியது.

மேலும், உலகமயமாக்கத்திற்கு பிந்தைய காலகட்டத்தில், மேற்குறிப்பிட்ட வகைத் திரைப்படங்களின் ஆதிக்கத்தின் காரணமாக, இரண்டாம் வகைத் திரைப்படங்கள் வெளி வருவதும், மக்களிடம் பரவலாக எடுத்துச் செல்லப்படுவதும் சிக்கலானதாகவும், பெரும்பாலும் தோல்வியிலுமே முடிந்துள்ளன. அதே வேளையில், கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விசயம், இத்தகைய இரண்டாம் வகைத் திரைப்படங்கள் படித்த, உயர், நடுத்தர வர்க்கப் பார்வையாளர்களையே தமது பார்வையாளர்களாகக் கொண்டிருக்கின்றன. அவற்றின் உள்ளடக்கமும், வடிவமும் அவ்வர்க்க கண்ணோட்டங்களின் எல்லைகளுக்குட்பட்டே உருவாக்கப்படுகின்றன.

ஆனால், குறைந்தபட்சம் இத்தகைய வித்தியாசமான முயற்சிகள் கூட தமிழில் எடுக்கப்படுவதில்லை. கடந்த சில ஆண்டுகளில் பாலாஜி சக்திவேல், பாலா, அமீர், மிஷ்கின் முதலான பலரும் தமிழில் சில குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்ட போதும், அவர்களது திரைப்படங்களில் தொடர்ந்து வெளிப்படும் மிகைப்படுத்தல்கள், வன்முறைகள், தொலைத்துக் கட்ட முடியாத பாடல் காட்சிகள் முதலான அம்சங்கள் காரணமாக இந்தித் திரைப்படங்களின் முயற்சிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் திரையுலகம் பின்தங்கியே உள்ளது.

சில அம்சங்களில் ‘தாரே ஜமீன் பர்’ திரைப்படத்தை தவிர்த்து, அமீர்கானின் வேறு எந்தத் திரைப்படமும் என்னைப் பெரிதாக ஈர்த்ததில்லை. ‘தோபி காட்’ திரைப்படத்தை அமீர்கான் திரைப்படம் என்று சொல்வது தவறில்லை. ஏனெனில், கிரண் ராவின் படைப்பாகவே இருந்த போதிலும், அமீர்கான் என்ற பெரிய பாலிவுட் பிராண்ட் பின்புலம் இல்லாமல் இருக்குமேயானால், இத்திரைப்படத்தை யாரும் தயாரிக்க முன்வந்திருப்பார்களா, வினியோகஸ்தர்கள் வாங்கியிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

திரைப்படத்தின் கதை எளிமையானது. அமெரிக்காவில் முதலீட்டு வங்கி நிபுணராக பணிபுரியும், தற்காலிக விடுமுறைக்கு மும்பைக்கு வரும் ஷாய் எனும் பெண், வெளி மாநில கட்டுமானத் தொழிலாளர்களை ஓவியங்களாக வரையும் அருண் எனும் ஓவியன், சல்மான் கான் போல சினிமா நட்சத்திரமாக ஆசைப்படும் சலவைத் தொழிலாளியும், இரவில் எலி அடிக்கும் நகர சுத்தித் தொழிலாளியுமான முன்னா என்றழைக்கப்படும் ஜகீம், யாஸ்மின் என்ற திருமணமான இளம் பெண் ஆகிய நால்வரது வாழ்க்கையையும் திரைப்படம் பேசுகிறது.

திரைப்படத்தின் வலிமை அதன் தங்கு தடையற்ற, இழைகளாக பின்னப்பட்ட அழுத்தமான திரைக்கதையில் அடங்கியிருக்கிறது. செயற்கையாக நான்கு கதாபாத்திரங்களும் ஒட்ட வைக்கப்படாமல் அல்லது தனித்தனி பாகங்களாகவும் அல்லாமல், ஊடாடியும், விலகியும் சொல்லப்படும் முறையில் அவர்களது உலகத்தின் வெவ்வேறு அம்சங்களை பார்வையாளர்கள் விளங்கிக் கொள்ள முடிகிறது. நால்வரது வாழ்க்கையும் சில புள்ளிகளில் ஒன்று கலப்பதையும், ஒருவர் மீது ஒருவர் ஏற்படுத்தும் பாதிப்புகளையும், அதன் மூலம் பெருநகர வாழ்வின் வர்க்க, சமூகப் பிரிவினைகளை ஒவ்வொருவரும் தத்தமக்கே உரிய முறையில் உணரத் தலைப்படுதலையும், திரைப்படம் ஒரு கவிதை போல எடுத்துச் சொல்கிறது.

அருணுக்கும் ஷாய்க்கும் ஏற்படும் உறவையும், அவளுக்கும் முன்னாவுக்கும் ஏற்படும் உறவையும் மிகைப்படுத்தல்கள் இன்றி, நுட்பமான காட்சிகள் மூலம், அவர்களது உறவில் உள்ள நெருக்கத்தின் வளர்ச்சியை, வீழ்ச்சியை, ஈர்ப்பை, விரிசலை உணர்த்தி செல்கிறது திரைப்படம். கிரண் ராவ் குறிப்பிடுவது போல, ‘ஐந்தாவது கதாபாத்திரமாக’ மும்பை விளங்குகிறது.

மும்பையின் புகழ் பெற்ற வீதிகளும், நினைவுச் சின்னங்களும், சுற்றுலாத் தலங்களும், சந்தைகளும், அதன் உழைக்கும் மக்களும், சொகுசுவாசிகளும் புகைப்படங்களாகவும், அசையும் படங்களாகவும் திரைக்கதையுடன் இணைந்து பயணிக்கின்றனர். காட்சிகளுடன் இசைந்து இயங்கும் இசையும், நேர்த்தியான ஒளிப்பதிவும் படத்தின் உணர்வு நிலையை தக்க வைப்பதில் பாராட்டத்தக்க விதத்தில் பங்காற்றுகிறது.

முன்னாவிடம் ஷாய் அறிந்து கொள்ளும் காதலை, வர்க்கப் பிரிவினையை, யாஸ்மினிடம் அருண் கண்டறியும் தனிமையை, அன்பின் மொழியை ஆர்ப்பாட்டமில்லாத கண்ணீர்த் துளிகள் வெளிப்படுத்துகின்றன. யாஸ்மின் தொடர்பான காட்சிகளில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள HANDYCAM காட்சிகள் மெல்ல மெல்ல வளர்ந்து நம்மையும் அருணுடன் கதைக்குள் இழுத்துச் செல்கின்றன. HANDYCAM காட்சிகள் LSD திரைப்படத்தை நினைவூட்டுகின்றன. இந்திய சினிமா வரலாற்றில் LSD திரைப்படத்தின் முக்கியத்துவத்தை சமகாலம் சரியாக உணரவில்லை என்பது வேறு கதை.

துவக்கக் காட்சியில் வரும் டாக்சி ஓட்டுனர், யாஸ்மின், முன்னா என, உத்தரப் பிரதேசத்திலிருந்தும், பீகாரிலிருந்தும் மும்பைக்கு வாழ வழி தேடி வந்திறங்கிய மக்கள் – பால் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் குறி வைத்துத் தாக்கும் ‘வட இந்தியர்கள்’ – எவ்வாறு மும்பையின் இன்றியமையாத பகுதியாக வாழ்கின்றனர் என்பதை திரைப்படம் நுடபமாக உணர்த்துகிறது.

சில இடங்களில் திரைப்படம் உறுத்தாமலில்லை. உதாரணமாக, முன்னாவிடம் ஷாய் தனது பீகார் கிராமத்தின் நினைவு வருவதில்லையா எனக் கேட்கிறாள். கிராமத்தை நினைத்தாலே தான் உணர்ந்த பசிதான் நினைவுக்கு வருவதாக முன்னா கூறுகிறான். நகருக்கு இடம் பெயர்ந்த தொழிலாளிகள், உரையாடலின் துவக்கத்திலேயே தமது கிராமத்தைக் குறித்து நினைவு கூறும் பொழுது, இப்படியொரு கருத்தை உதிர்ப்பார்கள் எனத் தோன்றவில்லை.

படம் பார்த்த பலரும், ஏன் பல செய்தித்தாள்களும் கூட இது ஒரு டாகுமெண்ட்ரி திரைப்படம் போல உள்ளது எனக் கூறியுள்ளனர். திரைப்படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. மெதுவாக நகர்ந்து செல்லும் திரைக்கதை என்றாலே டாகுமெண்ட்ரி எனும் மனநிலைக்கு மக்கள் ஆட்பட்டுக் கிடக்கும் நிலையில், “இடைவேளை இல்லாத திரைப்படம்” என அறிவித்து துவங்கும் இத்திரைப்படம், மக்களின் திரைப்பட ரசனைக் கண்ணோட்டத்தை உயர்த்தும் நோக்கில் எடுக்கப்பட்ட சீரிய முயற்சி என்றுதான் கருத வேண்டும்.

சர்வதேச திரைப்படங்களுக்கு இணையாக ஒரு திரைப்பட அனுபவத்தின் முழுமையை உணரச் செய்யும் திரைப்படமாகவும், திரைப்படம் எனும் ஊடகத்தின் காட்சி மொழியை நுட்பமாகவும், அளவோடும் பயன்படுத்திய திரைப்படங்களில் ஒன்றாகவும் இத்திரைப்படத்தை கருதுகிறேன். இத்தகைய திசையில் இந்தியத் திரைப்படங்கள் மேலும் நகரும், தோல்வியினால் மனம் தளர்ந்து விடாமல் கிரண் ராவ் தமது பாணியில் மேலும் சில நல்ல திரைப்படங்களைத் தருவார் என நம்புவோமாக.

பி.கு: மும்பை எனும் சொல்லைப் பார்த்தாலே, ‘கமீனே’ திரைப்படத்தின் உரையாடல் நினைவுக்கு வருகிறது. ராஜ் தாக்கரேயை பிரதிபலிக்கும் ஒரு மராத்திய வெறி அரசியல்வாதி, உ.பியிலிருந்து வரும் நாயகனிடம் கேட்பான்.

“நீ எப்பொழுது மும்பைக்கு வந்தாய்?”
“நான் பம்பாயில்தான் பிறந்தேன்.”
“நாயே, பம்பாய் என்று சொல்லாதே. மும்பை!”
“அப்பொழுது அது பம்பாயாகத் தான் இருந்தது.”

Advertisements

5 thoughts on “தோபி காட்: நுட்பமான திரைமொழி!

  1. A slow-moving, but a deep analysis of Dhobi Ghat in its own style. Wish you had mentioned the role of the Mumbai rains. Hats off to Kiran Rao for being able to so deftly capture such sharp layers to human emotions and the role of class, society, and nature in all this. Truly a brilliant attempt.

    Like

  2. படத்தை டிவிடியில் பார்த்தேன். நல்ல படம். மும்பையை ஒரு சித்திரமாக காட்டியிருந்தது.

    சிறுத்தை, போக்கிரி எனப் தொடர்ச்சியாக பார்த்துவிட்டு இந்த மாதிரி படங்களை பார்க்க முடிவதில்லை. இந்த மாதிரி படங்களை தொடர்ந்து பார்த்துவிட்டால், அந்த படங்களை பார்க்க முடிவதில்லை.

    தொடர்ச்சியாக அறிமுகப்படுத்துங்கள். விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s