லுமும்பா: இரத்தம் தோய்ந்த வரலாறு!

குறிப்பு: கடந்த ஜனவரி 17-ஆம் தேதியுடன், ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள காங்கோவின் தேச விடுதலை நாயகன் பத்ரீஸ் லுமும்பா படுகொலை செய்யப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து விட்டன. அவர் காங்கோவிலுள்ள கடாங்கா மாகாணத்தில், கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரைப் படுகொலை செய்த புனிதக் கூட்டணி, அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, பெல்ஜிய அரசு, காங்கோவை சூறையாடிய சுரங்க நிறுவனங்கள் மற்றும் மக்களை கட்டுப்பாட்டில் வைக்க முயன்ற கூலிப்படைகள் என நீள்கிறது. ஐம்பதாண்டுகள் கழிந்தும் மாறாத வடுக்களினால், ஆப்பிரிக்காவில் லுமூம்பாவை நினைவு கூறுவோரின் நம்பிக்கை தொலைத்த  விழிகளில், இழப்பின் துயரத்தையும், ஆத்திரத்தையும் நாம் இன்றும் காணலாம். பத்தாண்டுகளுக்கு முன்பு மைக் ஈலி என்பவர் எழுதியதும், தற்பொழுது கசாமா எனும் இணைய தளத்தில் அவரால் திருத்தி எழுதப்பட்டு வெளியிடப்பட்டதுமான கட்டுரை கீழே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

பதிவை PDF கோப்பாகத் தரவிறக்கம் செய்யவும், அச்சிடவும்: http://bit.ly/hJW1IZ

பத்ரீஸ் லுமும்பா: காங்கோ எழுச்சியும், படுகொலையும்!

மைக் ஈலி

1960, ஜூலை 30- ஆம் நாள், உலகம் முழுவதும் காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடி வந்த கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை தரும் நாளாகவிருந்தது. ‘பெல்ஜியன் காங்கோவின்’ மக்களை ஈவிரக்கமின்றி சுரண்டிக் கொழுத்த பெல்ஜிய காலனியாதிக்கவாதிகள், தாது வளம் நிறைந்த மண்ணை விட்டு வெளியேறவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திரத்தை வழங்கவுமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். காங்கோ எனும் குடியரசு மலர்நதது, அதன் தலைவர்களில் ஒருவர்தான்  பத்ரீஸ் லுமும்பா! காலனிய எதிர்ப்பு கனன்று கொண்டிருந்த, துடிப்பு மிக்க இளம் அரசியல்வாதி.

லியோபோல்ட்வில்லே-யில்(இன்றைய கின்ஷாசா) நடைபெற்ற விழாவில், பெல்ஜியாவின் அரசன் ஒன்றாம் பதோயின் நேரடியாக கலந்து கொண்டு காங்கோ சுதந்திரம் பெற்று விட்டதை அறிவிக்க வந்திருந்தான். அவ்விழாவில், காலனியாதிக்கவாதிகளும், அடிமைப்பட்டவர்களும் தமக்குள் ஒரு புதிய உறவை ஏற்படுத்திக் கொண்டு, முன்பு போலவே எதுவும் மாறாமல் தொடரும் நோக்கத்துடன், பரஸ்பரம் ஒருவரையொருவர் புகழ்ந்து தள்ளுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பெல்ஜிய அரசர் திமிரோடு தமது உரையில் கூறினார்: “கனவான்களே, நீங்கள் நம்பிக்கை வைக்கத் தகுந்தவர்கள் என நிரூபிப்பது இனி உங்கள் பொறுப்பு! “

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் லுமும்பா மேடைக்கு வந்து பேசத் துவங்கியவுடன்தான், அரங்கில் அமர்ந்திருந்த காங்கோ மக்கள் எழுச்சியும், உற்சாகமும் கொள்ளத் துவங்கினர். அவரது ஆற்றொழுக்கான உரை வானொலி மூலம் ஒளிபரப்பப்பட்டது. பெல்ஜியர்களின் கீழ் மக்கள் அனுபவித்த இன்னல்களையும், எதிர்காலத்திற்கான தமது எண்ணங்களையும் லுமும்பா எடுத்துரைத்தார். பெல்ஜிய அரசர் பேயறைந்தது போல உறைந்து போனார்.

லுமும்பா கூறினார்:

“எண்பதாண்டுகளாக, காலனிய ஆதிக்கத்தின் கீழ், எமது தலைவிதி இப்படித்தான் இருந்தது. எமது காயங்கள் காலங் கடந்தவையல்ல. அவை தாங்கொணாத வலி கொண்டவை. எனவே, இன்னமும் எங்களது மனங்களிலிருந்து அவை அகன்று விடவில்லை. மிகக் குறைவான கூலிக்கு முதுகு தேய நாங்கள் வேலை செய்திருக்கிறோம். ஒருபோதும் நாங்கள் வயிறார உண்ண முடிந்ததில்லை. பட்டினிச் சாவுகளை தடுக்க இயன்றதில்லை. நாங்கள் நல்ல உடைகளை அறிந்ததில்லை. வசிக்கத்தக்க வீடுகளில் வசித்ததில்லை. எமது அருமைக் குழந்தைகளை நேசித்து வளர்க்க முடிந்ததில்லை. காலையும், மதியமும், மாலையும், இரவும் என ஒவ்வொரு நாளும் நாங்கள் பீதியூட்டப்பட்டோம், இழிவுபடுத்தப்பட்டோம், கடுமையாகத் தாக்கி ஒடுக்கப்பட்டோம்,  ஏனெனில் நாங்கள் கறுப்பர்கள்…

வல்லான் வகுத்ததே நியாயம் என  அங்கீகரிக்கும் சட்டங்களின் மூலம், சட்டப்பூர்வமான வழிகளில் எமது நிலங்கள் எமது கண்களுக்கு முன்பாக ஆக்கிரமிக்கப்பட்டன. சட்டம் வெள்ளையனுக்கு இணக்கமாகவும், கறுப்பனுக்கு குரூரமானதாகவும், மனிதத் தன்மையற்றதாகவும் விளங்கும், அது ஒருபோதும் சமமாக இராது என்பதைக் கண்கூடாகக் கண்டறிந்தோம்.

தமது அரசியல் அல்லது மதக் கருத்துக்களுக்காக கண்டனம் செய்யப்பட்டு, சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்க நேர்ந்தவர்களை நாங்கள் அறிவோம். அவர்கள் தமது சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டவர்கள்; மரணத்தை விடவும் கொடியது அவர்களது நிலை. நகரங்களில் வெள்ளையர்கள் தமது மாட மாளிகைகளில் வீற்றிருக்க, கறுப்பர்களாகிய நாங்கள் இடிபாடுகளில் வசித்து வந்திருக்கிறோம். நாங்கள் திரை அரங்குகளிலோ, உணவு விடுதிகளிலோ, ஐரோப்பியர்களின் கடைகளிலோ ஒருபோதும் அனுமதிக்கப்பட்டதில்லை. வெள்ளையர்கள் தமது சொகுசு கேபின்களில் பயணம் செய்ய, அவர்களது காலடிகளில், ரயிலின் வாசல்களில் நின்று நாங்கள் பயணம் செய்திருக்கிறோம். இந்த அடக்குமுறையும், சுரண்டலும் உருக்கொண்ட அரசை எதிர்த்து நின்ற, எமது எத்தனையோ சகோதரர்கள் வெஞ்சிறைகளில் தள்ளப்பட்டதை,  உருத்தெரியாமல் கொன்றொழிக்கப்பட்டதை நாங்கள் எவ்வாறு மறக்க முடியும்?

சகோதரர்களே, இவையனைத்தையும் நாங்கள் சகிக்திருக்கிறோம். ஆனால், உங்களது ஓட்டுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிதிகள், இன்று நமது நாட்டை வழிநடத்தும் பொறுப்பை எங்களுக்கு அளித்திருக்கிறார்கள்.  காலனிய ஒடுக்குமுறையால், மனதாலும், உடலாலும் நொறுக்கப்பட்ட நாங்கள் உங்களுக்கு உரக்கவும், உறுதிபடவும் கூற விரும்புகிறோம். நான் கூறிய ஒடுக்குமுறைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டன. காங்கோ குடியரசு அறிவிக்கப்பட்டு விட்டது, நமது நாடு தற்பொழுது அதன் சொந்தக் குழந்தைகளின் கரங்களில் உள்ளது.”

கடந்த காலம் குறித்த லுமும்பாவின் சொற்கள் உண்மையே. ஆனால், எதிர்காலம் குறித்த சொற்கள் அவரது உண்மையாகவில்லை.

உண்மையில், நாடு “அதன் சொந்தக் குழந்தைகளின் கரங்களில்” இன்னமும் வந்து சேர்ந்திருக்கவில்லை. அதிகாரப்பூர்வமான சுதந்திரம் என்ற நாடகத்தின் பின்னே, பெல்ஜியத்தின் இராணுவ அதிகாரிகள் காங்கோவின் இராணுவத்தையும், காவல்துறையையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். சுரங்க நிறுவனங்கள் நாட்டின் வளங்களையும், ஊழல் அரசியல்வாதிகளையும் தமது கரங்களில் வைத்திருந்தனர். அமெரிக்காவின் சி.ஐ.ஏ, பெல்ஜிய உளவுத்துறை மற்றும் இதர ஏகாதிபத்திய நாடுகளது உளவுத் துறை நிறுவனங்களின் ஏஜெண்டுகள், ஏகாதிபத்திய விசுவாசிகளின் கரங்களில் அதிகாரம் உறுதியோடும், நிரந்தரமாகவும் நிலைத்திருப்பதற்கான சதிவேலைகளில் மும்முரமாக ஈடுபட்டார்கள்.

பதவியேற்ற இரு நூறு நாட்களில் பத்ரீஸ் லுமும்பா ஏகாதிபத்திய ஏஜெண்டுகளால் படுகொலை செய்யப்பட்டார்.

காங்கோவில் நடந்த நிகழ்வுகள் உலகம் முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்ட நாடுகளின் மக்களின் இதயத்தை உலுக்குவதாக இருந்தன. தேச விடுதலையின் அடிப்படையிலான புதிய சமுதாயம் எனும் வெற்றியை சாதிப்பதற்கு, மக்கள் படையும், புரட்சிகரப் பாதையும் இன்றியமையாதவை எனும் உண்மையை, கோடிக்கணக்கான மக்களுக்கு  காங்கோவில் நடைபெற்ற நிகழ்வுகள் உணர்த்தின.

இன்று, 40 வருடங்களுக்குப் பிறகும், ஆப்பிரிக்க நாடுகள் இன்னமும் சுதந்திரமான நாடுகள் என்றே அறியப்படுகின்றன. ஆனால், அந்நாடுகளின் மக்கள் உண்மையான விடுதலைக்காக காத்திருக்கின்றனர். காங்கோ போரிடும் தரப்புகளுக்கு இடையே துண்டாடப்பட்டுக் கிடக்கிறது. ஒவ்வொரு தரப்பையும் தூண்டி மோத விட்டு, தமது நிழல் யுத்தத்தை ஏகாதிபத்தியங்கள் நிகழ்த்துகின்றன.

லியோபோல்ட்டின் சொத்து

மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து பாய்ந்தோடும் காங்கோ நதி, மழைக்காடுகளையும், சவன்னா (வெப்பப் புல்வெளிகள்) வெளிகளையும், 200 வகைப்பட்ட மக்களது நிலங்களையும் கடந்து, ஆயிரக்கணக்கான மைல்களைத் தாண்டி அட்லாண்டிக் பெருங்கடலைச் சென்றடைகிறது.

அதன் கடற்கரையோரங்களில் நடைபெற்ற 300 வருட அடிமை வர்த்தகத்தைத் தொடர்ந்து, 1885-ல், பெல்ஜிய அரசன் இரண்டாம் லியோபோல்ட் காங்கோ நதிநீர்ப் பெருநிலங்களை தனது தனிப்பட்ட சொத்தாக மாற்றிக் கொண்டான். 1885-ல் நடைபெற்ற புகழ்பெற்ற பெல்ஜிய மாநாடு அரசனின் அபகரிப்பை அங்கீகரித்தது. அம்மாநாட்டில், ஐரோப்பிய அரசுகள் ஆப்பிரிக்க மக்களை சுரண்டுவதற்கான தமது உரிமைகளை பரஸ்பரம் அங்கீகரித்துக் கொண்டன.

பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகள் ஒன்றிணைந்தால் கிடைக்கத்தக்க அளவு பெரிய நிலப்பகுதியை பெல்ஜிய அரசன் பெற்றுக் கொண்டான். அந்த நிலப்பகுதி பெல்ஜியத்தின் மொத்தப் பரப்பை விடவும் 80 மடங்குப் பெரியதாகும். தனது நிலப்பகுதிகளுக்கு ‘சுதந்திரக் காங்கோ’ என்று பெயரிட்ட அரசன், ஆயுதப் படைச் சாவடிகளின் வலைப்பின்னலையும், அடிமை உழைப்பு முகாம்களையும் கட்டியமைத்தான். முதலாளித்துவமும், காலனியாதிக்கவாதமும்தான் எத்தனை முறை ‘சுதந்திரம்’ என்ற சொல்லை வக்கிரமான முறையில் திரித்துப் புரட்டியிருக்கின்றன?

பெல்ஜிய அரசனின் அடிமை உழைப்பு முகாம்களில் ஆப்பிரிக்க மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூர வன்முறைகள்தான், வரலாற்றில் இதுகாறும் பதிவு செய்யப்பட்ட சித்திரவதைகளிலேயே மிகக் கொடூரமானதும், இதயத்தை நடுங்கச் செய்வதுமாகும். இத்தகைய முகாம்களில் அடிமைகளின் கடும் உழைப்பில் விளைந்த ரப்பர், வெட்டு மரங்கள், பாமாயில் ஆகியன பெல்ஜிய மற்றும் அமெரிக்க முதலாளிகளை பணத்தில் கொழிக்க வைத்தன. இச்சுரண்டலில், குக்கென்ஹெய்ம், மார்கன் மற்றும் ராக்ஃபெல்லர் முதலான அமெரிக்க முதலாளிகள் முக்கிய பங்கு வகித்தனர். இத்தகைய கொலைகார நடவடிக்கைகளின் விளைவாக, இருபது வருடங்களில் காங்கோவின் மக்கள்தொகை இரண்டரைக் கோடியிலிருந்து ஒரு கோடியாகக் குறைந்தது.

1908-ஆம் ஆண்டு, காங்கோ மக்களின் கலகங்களைத் தொடர்ந்து, பெல்ஜிய ஆளும் வர்க்கம் தனது விலையுயர்ந்த காலனியின் மீதான ஆட்சி முறையை மாற்றியமைத்தது.  நேரடி நிர்வாகத்தை அரசே எடுத்துக் கொண்டு, நாட்டுக்கு ‘பெல்ஜியன் காங்கோ’ என பெயர் சூட்டியது. இதனைத் தொடர்ந்த பத்தாண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ‘பெல்ஜியன் காங்கோவில்’ நடந்தேறின. ஏனெனில், காங்கோவின் தென்கோடியில் தனித்திருந்த கடாங்கா மாகாணத்திலுள்ள தாமிர வயல்களையும், கசாய் மாகாணத்திலுள்ள வைர வயல்களையும் காலனியாதிக்கவாதிகள் சுரண்டத் துவங்கினர். இரண்டாம் உலகப் போர்(1939-1945) காலகட்டத்தில், ஏகாதிபத்தியப் போர் நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான தாதுப் பொருட்களுக்கும், உலகின் மொத்த கோபால்ட்டில் 65 சதவிகிதத்திற்கும், ரப்பர், டைட்டானியம் உள்ளிட்ட பொருட்களுக்கும் காங்கோ தான் மூலாதாரமாக விளங்கியது. இம்மாற்றங்களின் விளைவாக, நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மை வகித்த கோடிக்கணக்கான விவசாயிகளோடு, ஒரு நவீனப் பாட்டாளி வர்க்கமும் உருவாகி வளரத் துவங்கியது. 1941-ஆம் ஆண்டு வாக்கில், போர்க்கால உற்பத்தியின் விளைவாக, உழைக்கும் வர்க்கத்தின் எண்ணிக்கை 5 இலட்சத்தைத் தொட்டது. (இத்தொகை அன்றைய ஆப்பிரிக்கக் கண்டத்தில் இரண்டாம் பெரிய பாட்டாளி வர்க்க மக்கள் தொகையாகும்.) அடுத்த 15 ஆண்டுகளில், லியோபோல்ட்வில்லே நகரத்தின் மக்கள் தொகை பத்து மடங்கு உயர்ந்து, 3 இலட்சம் எண்ணிக்கையை எட்டியது.

சுழன்றடித்த போராட்டப் புயல்

இரண்டாம் உலகப் போரின் முடிவில் உலகக் காலனிய அமைப்பு பலமாக ஆட்டம் கண்டது. தனது ஆப்பிரிக்க காலனிகளிலிருந்து நாஜி ஜெர்மனி துண்டிக்கப்பட்டது. பெல்ஜியமும், பிரான்சும் ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டன. ஐரோப்பாவினுள் நடைபெற்ற யுத்தங்களில் பிரிட்டன் ஆழ்ந்து கிடந்தது. மொத்தத்தில், மரபார்ந்த காலனிய சக்திகள் போரின் இறுதியில் மிகவும் பலவீனமடைந்தன.

இதனிடையே, சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி மற்றும் மாவோ தலைமையில், சீன மக்கள் தமது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியை நிகழ்த்திக் காட்டினார்கள். ஜப்பானியர்களிடமிருந்து தமது நாட்டை விடுவித்து, அமெரிக்க ஆதரவு பெற்ற கோமிண்டாங்கை முறியடித்து, அமெரிக்காவை கொரியாவுடன் தடுத்து நிறுத்தினர். இதற்கு முன்னர் ஒருபோதும் அடிமைப்பட்ட மக்கள் இத்தகைய முறையில் ஏகாதிபத்திய சக்திகளை தோற்கடித்ததில்லை. உலகம் முழுவதும் குறிப்பாக வியட்னாம், அல்ஜீரியா, கியூபா முதலான பல்வேறு நாடுகளில் ஏகாதிபத்தியங்களை விரட்டியடித்த போராட்டங்கள் மாபெரும் அலைகளாக வெடித்தெழுந்தன.

1963-ல் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி எழுதியது:

“இரண்டாம் உலகப் போர் தொடங்கியதிலிருந்து ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒரு மாபெரும் புரட்சிப் புயல் சுழன்றடிக்கிறது. 50-க்கும் மேற்பட்ட ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது… பற்றியெறியும் தேசிய விடுதலை எனும் காட்டுத் தீயை ஏகாதிபத்தியங்களால் கட்டுப்படுத்த இயலவில்லை. அவர்களது பழைய காலனித்துவ அமைப்பு வெகுவேகமாக நொறுங்கி வருகிறது. சில காலனி நாடுகளிலும், சார்பு நாடுகளிலும் ஏகாதிபத்திய ஆட்சி தூக்கி எறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளிலும் ஏகாதிபத்தியம் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி சிதிலமடைந்து கொண்டிருக்கிறது. “

காங்கோவிலும் பெல்ஜிய ஆட்சிக்கு எதிராக, கடுமையான அடக்குமுறையையும், சிக்கலான சூழல்களையும் எதிர்கொண்டு மக்கள் போர்க்குணத்தோடு அணிதிரண்டு போராடினர். பெல்ஜியாவிலிருந்து குடியேறியவர்களிடம் அனைத்து அதிகாரங்களும் இருந்தன. காவல்துறையையும், படைகளையும் அவர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சுரங்க நிர்வாகத்திலும், அரசு நிர்வாகத்திலும் அவர்களே வீற்றிருந்தனர். சில விதிவிலக்குகளை தவிர்த்து, காங்கோ மக்கள் யாரும் பள்ளிப் படிப்பைக் கூட தாண்ட முடிந்ததில்லை. 1950-வாக்கில்,  வெறுமனே 100 காங்கோ மக்கள் மட்டுமே கல்லூரிப் படிப்பை முடித்திருந்தனர். பெல்ஜிய ஏகாதிபத்தியவாதிகள் தொடர்ந்து தமது பழைய பிரித்தாளும் கொள்கையின் வழிமுறைகளைக் கொண்டு, மக்களுக்கிடையிலும், பிரதேசங்களுக்கிடையிலும் தொடர்ந்து முரண்பாடுகளைத் தூண்டி விட்டனர்.

எதிர்காலத்தை கட்டியம் கூறிய நிகழ்வுகள்

மக்களிடையே நிலவிய இன வேறுபாடுகளைக் கடந்து, ஒன்றுபட்ட சுதந்திரக் காங்கோவிற்கான போராட்டத்தை முன்வைத்த தேசிய காங்கோலிய இயக்கத்தை (தே.கா.இ) காலனியவாதிகளின் அரசு கடுமையாக ஒடுக்கியது. தே.கா.இ-யின் முன்ணணித் தலைவரான லுமும்பாவும், அவரது சக போராளிகளும் சட்ட விரோதக் குற்றச்சாட்டுகளின் பேரில் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

அதே வேளையில், 1959-ல், பெல்ஜிய ஏகாதிபத்தியவாதிகள் விரைவாக காங்கோவிற்கு பெயரளவு சுதந்திரம் அளிக்க முடிவு செய்தனர். தமது பழைய வழிமுறைகள் நீண்ட காலம் நீடிக்க இயலாது என்பதை அவர்கள் கண்டு கொண்டனர். பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மேற்கு ஆப்பிரிக்காவிலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவிலும் செய்தததைப் போல, மக்கள் இயக்கம் தமது கட்டுப்பாட்டைத் தாண்டிச் செல்வதற்குள், தாம் தேர்வு செய்த ஒரு ‘சுதந்திர’ அரசை உருவாக்க விரும்பினர். புதிய காங்கோ அரசானது, பலவீனமானதாகவும், பிற்போக்கான பெல்ஜிய ஆதரவு சக்திகளால் தலைமை தாங்கப்படுவதாகவும், பெல்ஜிய அதிகார வர்க்கத்தையும், பெல்ஜிய ராணுவ அதிகாரிகளையும், பெல்ஜிய நிதியையும் சார்ந்து நிற்பதாகவும் இருக்க வேண்டுமென விரும்பினர்.

உண்மையான அதிகாரத்தையும், பொருளாதார வாழ்வையும் அன்னிய ஏகாதிபத்தியக் கட்டுப்பாட்டில் வைக்கும் ஒரு பெயரளவு போலி சுதந்திரத்தை வழங்கும் நவ காலனியத்தின் மூலம் காலனியத்தின் முகத்தை மாற்றியமைப்பதுவே அவர்களின் திட்டமாக இருந்தது. சின்னஞ்சிறிய பெல்ஜிய ஏகாதிபத்தியம், தனது இத்தகைய திட்டங்களை நிறைவேற்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தையே பெரிதும் சார்ந்திருந்தது. ஏனெனில், அமெரிக்க ஏகாதிபத்தியம் இரண்டாம் உலக யுத்த முடிவில், பலம் வாய்ந்த மேலாதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்தியமாக உருவாகியிருந்தது. காங்கோவில் தனக்கென பிரத்தியேக திட்டங்களை அமெரிக்க ஏகாதிபத்தியம் கொண்டிருந்தது.

மக்களை அணிதிரட்டி சுதந்திரத்திற்கான வாக்குறுதியை நிறைவேற்றுமாறு, பெல்ஜியத்தை நிர்ப்பந்திப்பதே தே.கா.இ-யின் வழிமுறையாக இருந்தது. பெல்ஜிய ஏகாதிபத்தியவாதிகள் ஏற்பாட்டில் நிகழ்த்தப்பட்ட தேர்தல்களில் பங்கேற்று வெற்றி பெறுவதன் மூலம், நிலவும் காலனியக் கட்டமைப்பை, காவல் துறையை, ஆயுதப் படைகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர தே.கா.இ எண்ணியது. அதிகாரத்தை அடைந்தவுடன், பெல்ஜிய ஆதிக்கத்தை காங்கோவிலிருந்து படிப்படியாக முடிவுக்கு கொண்டு வரலாம். அதன் பின்னர், காங்கோவின் வளமான இயற்கை மூலப் பொருட்களைக் கொண்டு மக்களின் வாழ்வை மேம்படுத்தவும், உலக நாடுகளின் வரிசையில் சரிசமமான தமது பங்கை பெறவும் இயலும் என தே.கா.இ நம்பியது.

தே.கா.இ ஒரு அமைதியான ஆட்சி மாற்றத்தையே எதிர்நோக்கியது. காலனியவாதிகளின் படைகளை எதிர்கொள்ளத்தக்க தனக்கான ஆயுதப் படைகளை உருவாக்க தே.கா.இ முயற்சிகள் எடுக்கவில்லை. 1960-ன் துவக்கப் பகுதியில் லுமும்பா கூறினார். “கடந்த காலத்தில் ஆப்பிரிக்காவில் நிறைய தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன. எனினும், ஒரு புதிய பலம் வாய்ந்த அணியை உருவாக்கும் பொருட்டு உள்ள சக்திகளுடன் நாங்கள் இணைந்து பணியாற்ற தயாராகவே இருக்கிறோம். இம்முயற்சி தோல்வியுறுவதென்பது, மேற்கின் தவறான செயல்களினாலேயே நடந்தேறும்.”

தே.கா.இ-யின் அதிகரிக்கும் பலத்தைக் கண்டு அஞ்சிய பெல்ஜிய ஏகாதிபத்தியவாதிகள், சுதந்திரம் வழங்குவதற்கான தமது நிகழ்ச்சி நிரலை விரைவுபடுத்தினர். 1960-ஆம் ஆண்டு, ஜூலை 30-ஆம் நாள், புதிய சுதந்திரமான காங்கோ அரசு பொறுப்பேற்றது. தேர்தலில் அதிக வாக்கு எண்ணிக்கைகள் பெற்ற தே.கா.இ ஆட்சியமைத்தது. லுமும்பா நாட்டின் பிரதமராகி, ஆட்சிப் பொறுப்பில் இரண்டாம் இடத்தை வகித்தார்.

கொடூரமான நவ காலனிய சூழ்ச்சி

மிக விரைவிலேயே, பத்ரீஸ் லுமும்பாவும், தே.கா.இ-யும் அங்கம் வகிக்கும் எந்தவொரு கூட்டணி ஆட்சியும் தமது நலன்களுக்கு அபாயகரமானது என ஏகாதிபத்தியவாதிகள் முடிவு செய்தனர். நாட்டில் பிரிவினைகளை உருவாக்கி குழப்பத்தை உண்டாக்கவும், லுமும்பாவை நீக்கவும், தனிமைப்படுத்தி இயங்க விடாமல் செய்யவுமான சக்திகளை அவர்கள் அணிதிரட்டினர். அத்தகைய சக்திகள் நிறையவே இருந்தன. லுமும்பாவிற்கு மக்களிடம் ஆதரவு இருந்தது. ஆனால், அரசு அதிகாரத்தின் முக்கிய கருவியும், நிதி மற்றும் சுரங்க நிர்வாகமும் காலனியவாதிகள் விட்டுச் சென்ற நிலையிலேயே நீடித்தன. பெல்ஜிய அதிகாரிகள் நாட்டை விட்டு அகன்ற பொழுது, கோப்புகளையும், ஆவணங்களையும், ஏன் தொலைபேசிகளையும் கூட கையோடு எடுத்துச் சென்றனர். இதன் மூலம் லுமும்பா அரசுக்கு திட்டமிட்டு நெருக்கடிகளை உண்டாக்கினர்.

காங்கோ தேசிய இராணுவம் என இராணுவத்தின் பெயர் மாற்றப்பட்டிருந்த போதிலும், இராணுவம் இன்னமும் காலனியவாதிகளின் இராணுவமாகவே இருந்தது. இராணுவத்தில் மிகப் பெரிய கலகம் வெடித்தது. வெள்ளை அதிகாரிகள் தம்மை இழிவாக நடத்துவதை கறுப்பர்களான படைவீரர்கள் ஏற்க மறுத்தனர். வெள்ளை அதிகாரிகளோ புதிய தேசிய அரசின் ஆணைகளுக்கு கீழ்ப்படிய மறுத்தார்கள்.

அன்னிய உளவாளிகள், குறிப்பாக அமெரிக்க சி.ஐ.ஏ, நாட்டை சீர்குலைக்கும் வேலைகளில் செயல்பட்டது. அரசிலும், இராணுவத்திலும் தனக்கான ஏஜெண்டுகளை வென்றெடுத்தது. அத்தகைய நபர்களில் ஒருவன் தான் ஜோசப் டிசியரே மொபுடு. காலனிய காலத்து காவல்துறையில் காவலாளியாக இருந்த மொபுடுவை, புதிய தேசிய் அரசு இராணுவத்தின் தலைவனாக அமர்த்தியிருந்தது.

இதனிடையே, சுரங்க நிறுவனங்கள், தமது நம்பகமான சக்திகளின் கைகளில், சுரங்க வளம் நிறைந்த பகுதிகளின் அரசியல் அதிகாரம்  நீடித்திருப்பதை உறுதி செய்தன. அவர்களது உள்ளூர் கைப்பொம்மையான மோயீஸ் ஷோம்பே என்பவன், தொலைதூர கடாங்கா மாகாணம் காங்கோவிடமிருந்து விடுதலையடைந்து விட்டதாக, லுமும்பா பதவிக்கு வந்த ஒரு மாதத்திலேயே அறிவித்தான்.  இப்பிரிவினைக்கு பெல்ஜிய அரசு அளித்த ரகசிய ஆதரவு தற்பொழுது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான சீர்குலைவை பயன்படுத்திக் கொண்ட பெல்ஜிய அரசு அதிகமான துருப்புகளை காங்கோவிற்கு அனுப்பியது. லுமும்பா அரசின் கண்டனங்களை பெல்ஜியம் கண்டு கொள்ளவில்லை. காலனிய அதிகாரத்தை மீண்டும் நிலை நாட்டுவதற்கான முயற்சிகளை எதிர்த்து, மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் அலை அலையாக வெடித்தெழுந்தன.

அன்னிய ஆக்கிரமிப்பு, உள்நாட்டுப் போர், அரசு நிர்வாகம் நிலைகுலைதல் என ஒன்றிணைந்த ஆபத்துக்களை லுமும்பா எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனால், இவற்றுக்கெதிராகப் போராடுவதற்குத் தேவையான அமைப்பாக்கப்பட்ட சக்திகள் லுமும்பாவிடம் குறைவாகவே இருந்ததன. வேறு வழியின்றி, ஒன்றன்பின் ஒன்றாக அன்னிய சக்திகளிடம் லுமும்பா உதவி நாடினார். முதலில் அவர் ஐ.நாவை நாடினார். ஆனால், அவர்கள் ஏகாதிபத்தியவாதிகளுக்கு, குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்குத் தான் பதில் அளித்தார்களேயன்றி தனது அரசுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்பதை கண்டு கொண்டார்.

பின்னர், லுமும்பா சோவியத் ஒன்றியத்தை நாடினார். மேற்குலக ஏகாதிபத்திய சதிகளுக்கு எதிராக சோவியத்தை பயன்படுத்த இயலும் என எண்ணினார்.

அக்காலகட்டத்தில், சோவியத் யூனியன் இன்னமும் பரவலாக ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோலிச சக்தியாகவே அறியப்பட்டு வந்தது. ஆனால், சோவியத் ஒன்றியத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டிருந்தன. அங்கே நிகிதா குருச்சேவின் தலைமையில் முதலாளித்துவ மீட்சி நடைபெற்றிருந்தது. ஆனால், இம்மாற்றத்தை அன்றைய புரட்சியாளர்கள் பரவலாக அறிந்திருக்கவில்லை. காங்கோ போன்ற நாடுகளிடம் புதிய சோவியத் ஆளும் வர்க்கம் தனக்கான நவ காலனிய உறவுகளை மேற்கொள்ளவே எண்ணியது. ‘ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியை மேற்கொள்ளக் கூடாது, இல்லையேல் அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையில் அணு ஆயுத உலகப் போர் மூண்டு விடும்’ என சோவியத் திரிபுவாதிகள் வாதிட்டது. மாறாக, காலனிய நாட்டு மக்கள் சோவியத் ‘ஆலோசகர்களுக்கும்’, இராணுவ வல்லுனர்களுக்கும் தமது கதவுகளை திறந்து வைக்க வேண்டுமென்றும், சோவியத் ஆளுமையின் கீழ் உற்பத்தியை பெருக்க வேண்டுமென்றும் கூறியது. 1960 செப்டம்பரில், சோவியத் ஆலோசகர்களும், இராணுவ வல்லுனர்களும் காங்கோவில் வந்திறங்கினர். அமெரிக்க தூதர் பிரதமர் லுமும்பாவை ‘லுமும்பாவிட்ச்’ (ரஷ்யப் பெயர் போல) என அழைக்கத் துவங்கினார்.

அனைத்து வகையான பிற்போக்கு மற்றும் ஏகாதிபத்திய சக்திகளும் காங்கோவைக் கைப்பற்ற போராடிக் கொண்டிருந்தன. காங்கோ மக்களின் எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டிருந்த லுமும்பா, தான் மென்மேலும் தனிமைப்படுவதையும், தனது அதிகாரம் பலவீனப்படுவதையும் உணர்ந்தார்.

லுமும்பாவை கொலை செய்ய ஆணை!

“விளையாடுபவர்கள் விரைவாகவும், இரகசியமாகவும் விளையாடுவார்கள். ஒவ்வொரு வளைவும் நதிகளையும், காடுகளையும், கண்டங்களையும், பெருங்கடல்களையும் தாண்டிப் பாயும். ஒவ்வொரு நகர்த்தலும் கண்ணாடிக்கு பின்னான அன்னியக் கண்களுக்கும், ஒரு காலத்தில் மாபெரும் மரங்களாக இருந்து இன்று வேரறுந்து நிற்பவைகளுக்கும் மட்டுமே புலப்படும்… 1960, ஆகஸ்ட் மாதத்தின் ஒரு நாளன்று, சி.ஐ.ஏ-வின் பொறுப்பிலிருந்த அலென் டல்ஸ், காங்கோ சி.ஐ.ஏ நிலையத் தலைமை அதிகாரிக்கு ஒரு தந்தி அனுப்பினார். அத்தந்தியில் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் காங்கோ அரசை மாற்றியமைக்குமாறு தெரிவித்தார். நிலையத் தலைமை அதிகாரி லாரன்ஸ் டெவ்லின் தைரியமாகவும் அதே வேளையில் இரகசியமாகவும் ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டார். ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சரியானதே. அதற்கான பணமும் கூட படைவீரர்களுக்கு வந்து சேரும். ஆனால் கொலை செய்வது அதனை விடவும் அதிகம் செலவு இல்லாத வேலை…”

பார்பரா கிங்சால்வர், நச்சுமரத்தின் வேதாகமம் எனும் நூலிலிருந்து…

“லுமும்பா தொடர்ந்து உயர் பதவி வகிப்பாரானால், மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதே, இங்கு உயர் மட்டங்களின் உறுதியான முடிவாக உள்ளது. “

அலென் டல்ஸ், சி.ஐ.ஏ இயக்குனர், 1960 குறிப்பாணையிலிருந்து…

“எந்தவொரு அடக்குமுறையும், சித்திரவதையும் என்னைப் பணிய வைக்க முடிந்ததில்லை. ஏனெனில், அடிமைப்பட்டும், தலை குனிந்தும் எனது புனிதமான கொள்கைகளுக்கு துரோகம் செய்தும் வாழ்வதை விட, எனது நாட்டின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையைக் கைவிடாமலும், அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமலும் மரிக்கவே நான் விரும்புகிறேன். எனது கூற்றை வரலாறு ஒரு நாள் சரியென நிரூபிக்கும். அந்த வரலாறு பிரஸ்ஸல்சும், பாரிசும், வாஷிங்டனும், ஐ.நாவும் கற்பிக்கும் வரலாறாக இராது. மாறாக காலனியாதிக்கத்திலிருந்தும், அதன் கைப்பொம்மைகளிலிருந்து விடுபட்ட ஒடுக்கப்பட்ட நாட்டு மக்களின் வரலாறாக இருக்கும்.”

1961 ஜனவரியில் தாம் கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரம் முன்பு, லுமும்பா தமது துணைவி பாலினுக்கு எழுதிய கடிதத்திலிருந்து…

1960 செப்டம்பர் இறுதியில் சி.ஐ.ஏ ஏஜெண்டான கர்னல் மொபுடு தலைநகரத்தில் அரசியல் அமைப்புகளைத் தடை செய்து ஆட்சிக் கவிழ்ப்புக்கு நிகரான நடவடிக்கையில் ஈடுபட்டான். அடுத்த சில நாட்களிலேயே, அக்டோபர் 10-ஆம் தேதியன்று, ஐ.நா மற்றும் காங்கோ தேசிய இராணுவப் படைகளால் லுமும்பா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். நவம்பர் 27-ஆம் தேதியன்று வீட்டுக் காவலிலிருந்து தப்பிய லுமும்பா, தனது மக்கள் செல்வாக்கின் மையக் கேந்திரமான ஸ்டான்லிவில்லே நோக்கி செல்ல முயன்றார். ஆனால், டிசம்பர் 2-ஆம் தேதியன்று சங்குரு நதிக்கரையில் வைத்து மொபுடுவின் ஆட்களால் மீண்டும் கைது செய்யப்பட்டார். லுமும்பா விசயத்தில் தலையிட வேண்டாம் என நியூயார்க்கிலிருந்து வந்த கண்டிப்பான ஆணையையொட்டி, ஐ.நா படைகள் வெறுமனே வேடிக்கை பார்த்து நின்றன.

முதலில் லியோபோல்ட்வில்லே-வுக்கு கொண்டு செல்லப்பட்ட லுமும்பா, அங்கே குழுமியிருந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளின் முன் நிறுத்தப்பட்டார். பின்னர், அவரது எதிரிக் குழுக்கள் ஒவ்வொன்றிடமாக கைமாற்றப்பட்டார். ஒரு மாதம் முழுதும் ஒவ்வொரு எதிரிக் குழுவும் லுமும்பாவை கடுமையாகத் தாக்கி சித்திரவதை செய்தன. இறுதியாக கடாங்கா மாகாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட லுமும்பா, அங்குள்ள பிரிவினைவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

1961, ஜனவரி 18-ஆம் தேதி அதிகாலையில், லுமும்பா சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் அனைத்து சித்திரவதைகளையும் உறுதியோடு எதிர்கொண்டதாகவும், தனது மரண நொடியிலும் கூட கொலையாளிகளை தைரியமாக எதிர்கொண்டதாகவும் பிற்காலத்தில் அவரது கொலையாளிகள் ஒப்புக் கொண்டனர்.

சி.ஐ.ஏ-வின் பொய்கள்

துவக்கத்தில்,லுமும்பா “சினமுற்ற கிராமவாசிகளால்” கொல்லப்பட்டதாக பெல்ஜிய, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் அறிவித்தனர். அடுத்த சில பத்தாண்டுகளுக்குப் பிறகும் கூட, லுமும்பா “அவரது காங்கோ எதிரிகளால்” படுகொலை செய்யப்பட்டதாகவே கூறி வந்தனர். இப்பொய்கள் அனைத்தும், ஆப்பிரிக்க மக்கள் தம்மையே ஆண்டு கொள்ளும் திறனற்றவர்கள் எனும் கருத்தின் அடிப்படையில், தமது இனவெறியையும், நவ காலனியக் கொள்கைகளையையும் நியாயப்படுத்தும் நோக்கத்துடனேயே, கொலையாளிகளால் கூறப்பட்டன.

உண்மையில், லுமும்பா அரசை ஆட்டுவித்த பிரச்சினைகள் அனைத்தும் ஏகாதிபத்தியவாதிகளின் சீர்குலைவு வேலைகளின் காரணமாகவே உருவாகியது.

சி.ஐ.ஏ ஏஜெண்ட் ஃபிராங்க் கார்லூசி

கடந்த சில வருடங்களில், படுகொலையை நிறைவேற்றிய பெல்ஜிய-அமெரிக்க கூட்டு நடவடிக்கை குறித்து நிறைய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. காங்கோ விடுதலையடைந்து இரண்டே மாதங்களில், அதாவது 1960 ஆகஸ்ட் மாதத்தில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் தாமே நேரடியாக, லுமும்பாவை படுகொலை செய்வதற்கான ஆணையை பிறப்பித்தார் எனத் தற்பொழுது தெரிய வந்துள்ளது. இந்த ஆணையை நிறைவேற்ற, பின்னாளில் அமெரிக்க அதிபர் ரீகன் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை செயலாளராகப் பணியாற்றிய ஃபிராங்க் கார்லூசி உள்ளிட்ட அமெரிக்க ஏஜெண்டுகள் களமிறக்கப்பட்டனர்.

லுமும்பா வீட்டுக்க் காவலில் வைக்கப்பட்ட சில நாட்களில், அக்டோபர் 6-ஆம் தேதியன்று, ஆப்பிரிக்க விவகாரங்களுக்கான பெல்ஜிய அமைச்சர் லிண்டன், லுமும்பாவை “தீர்மானகரமாக கொன்றொழித்து விடுமாறு” கடாங்கா தலைநகருக்கு தந்தி அனுப்பினார். டிசம்பர் 2-ஆம் நாள் கைது செய்யப்பட்டதிலிருந்து, லுமும்பா ஏகாதிபத்திய ஏஜெண்டுகளின் கட்டுப்பாட்டிலேயே வைக்கப்பட்டிருந்தார். பெல்ஜிய துருப்புகளால் காவல் காக்கப்பட்ட வீட்டில் வைத்துதான் சித்திரவதை செய்யப்பட்டார்.

1961, ஜனவரி 15-ஆம் நாள், லுமும்பாவை உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு, ஏகாதிபத்தியக் கைப்பொம்மையான கடாங்காவின் ஷோம்பே அரசுக்கு, அமைச்சர் லிண்டன் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதினார். இரண்டு நாட்களில் அவரது ஆணை நிறைவேற்றப்பட்டது. பெல்ஜிய டிசி-4 விமானத்தில் கடாங்காவிற்கு லுமும்பா அழைத்து செல்லப்பட்டார்.கடாங்கா அதிகாரிகளும், பல்வேறு ஏகாதிபத்திய ஏஜெண்டுகளும் பார்த்திருக்க, பெல்ஜிய காப்டன் தலைமையிலான தண்டனை நிறைவேற்றக் குழு, லுமும்பாவையும், அவரது நெருங்கிய தோழர்களான எம்போலோ,ஒகிட்டோ ஆகியோரை சுட்டுக் கொன்றனர்.

அடுத்த சில மணி நேரங்களில், பெல்ஜிய காவல்துறை அதிகாரிகளின் குழுவொன்று, புதைக்கப்பட்ட லுமும்பாவின் உடலை தோண்டியெடுத்து, சுரங்க நிறுவனங்களால் வழங்கப்பட்ட அமிலத்தில் எரித்து சாம்பலாக்கியது. கொலைக்குற்றத்தின் சிறு ஆதாரத்தைக் கூட அவர்களது எஜமானர்கள் விட்டு வைக்க விரும்பவில்லை. ஆனால், அவர்கள்து முயற்சிகள் வெற்றி பெறவில்லை. லுமும்பாவை யார் கொலை செய்தார்கள், யார் காங்கோ மக்களின் நம்பிக்கைகளை சிதைத்தார்கள் என்பதை இன்று உலகம் அறியும்.

இரத்தத்தை விலை கொடுத்து பெற்ற பாடம்

“காங்கோவை ஆதிக்கம் செய்ய அமெரிக்கா எப்பொழுதும் முயன்று வந்துள்ளது. அங்கே ஐ.நாவின் படைகளைக் கொண்டு அனைத்து வகையான அரக்கத்தனங்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. காங்கோவின் தேசிய நாயகன் லுமும்பாவை படுகொலை செய்து, சட்டப்பூர்வமான காங்கோ அரசை கவிழ்த்துள்ளது. தனது கைப்பொம்மையான ஷோம்பேயை காங்கோ மக்களின் மீது திணித்து, காங்கோவின் தேசிய விடுதலை இயக்கத்தை ஒடுக்குவதற்காக கூலிப்படைகளை களமிறக்கியுள்ளது. அமெரிக்காவின் நோக்கம் காங்கோவை கட்டுப்படுத்துவது மட்டுமல்ல. மாறாக ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவையும் சுற்றி வளைப்பதேயாகும். குறிப்பாக, புதிதாக விடுதலை பெற்றுள்ள ஆப்பிரிக்க நாடுகளை தனது நவ காலனிய சங்கிலிகளால் பிணைப்பதேயாகும்.”

– 1964, நவம்பர் 28- ஆம் நாள், மாவோ வெளியிட்ட “அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான காங்கோ மக்களை ஆதரிக்கும் அறிக்கையிலிருந்து”…

லுமும்பா படுகொலை செய்யப்படும் பொழுது, அவரது வயது 35 மட்டுமே. அவர் பதவியேற்று சில மாதங்களே கடந்திருந்தன. அவர் படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்ததும், உலகம் முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கான மக்கள் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தனர். காங்கோவில் வெவ்வேறு அமைப்புகள் நவ காலனிய சக்திகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராட முயன்றன. ஆனால், லுமும்பா படுகொலையையொட்டி ஏற்பட்ட சிக்கலான நிலைமைகளால், அவர்களது போராட்டம் ஒரு தீர்மானகரமான ஆயுதந்தாங்கிய புரட்சிகர யுத்தமாக வளர்ச்சியடையவில்லை. ஐ.நா படைகளும், வெள்ளைக் கூலிப்படைகளும், அமெரிக்காவால் பயிற்சியளிக்கப்பட்ட மொபுடுவின் காங்கோ இராணுவத்துடன் இணைந்து மக்களின் எதிர்ப்பை கடுமையாக ஒடுக்கினர்.

சிறிது காலத்தில், மொயிசே ஷோம்பே ஏகாதிபத்திய ஆதரவு கொண்ட புதிய அரசை அமைத்தான். ஆனால், அந்த ஆட்சி அதிக காலம் நீடிக்கவில்லை. ஷோம்பேயின் ஆட்சியைக் கவிழ்த்த மொபுடு, அடுத்த பல பத்தாண்டுகளுக்கு ஈவிரக்கமின்றி மக்களை ஒடுக்கியும், சொத்துக்களை கொள்ளையடித்தும் ஆட்சி நடத்தினான். ஏகாதிபத்தியங்கள் தொடர்ந்து காங்கோவின் வளம் மிகுந்த தாது வளங்களை தமது கரங்களில் வைத்துக் கொள்ள முயன்றாலும், அவர்களுக்கிடையிலான சதிகளும், உட்சண்டைகளும், காங்கோவை மீண்டும் போரினாலும், பிரிவினையாலும் சிதறுண்ட தேசமாக்கியது.

இன்று, உலகின் பல்வேறு வகையான மக்களும், அமைப்புகளும், புரட்சியை சாதிக்கவும், தேச விடுதலையை சாதிக்கவுமான சவால்களை எதிர்கொண்டு நிற்கும் வேளையில், நமக்கு லுமும்பாவின் நாட்கள் ஏகாதிபத்தியம் மற்றும் நவகாலனியத்தின் குரூர அடக்குமுறைகளுக்கு உதாரணமாக விளங்குகின்றன.

ஆதாரங்கள்:

 • மார்க்சிஸ்ட் தளத்தில் உள்ள லுமும்பாவின் எழுத்துக்கள்
 • நவ காலனியத்தின் ஆதரவாளர்கள், சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி வெளியீடு
 • லுமும்பாவின் மரணம், ஜான் ஹென்ரிக் கிளார்க்
 • லுமும்பா: கடைசி ஐம்பது நாட்கள், ஹெய்ன்ஸ்,ஜி மற்றும் டோன்னே, குரோவ் வெளியீடு, நியூயார்க், 1969
 • நச்சுமரத்தின் பைபிள், பார்பரா கிங்சால்வர், ஹார்ப்பர் பெரனியல் நூலக வெளியீடு, 1999
 • கீழ்த்தரமான வேலைகள் 2: ஆப்பிரிக்காவில் சி.ஐ.ஏ, எலன் ரே, வில்லியம் ஷாப், கார்ல் வென் மீட்டர், லூயிஸ் உல்ஃப் மற்றும் லைல் ஸ்டுவர்ட் ஆகியோரால் தொகுக்கப்பட்டது, 1979
 • லுமும்பாவின் படுகொலை, லுடோ டே விட்டே, வெர்சோ வெளியீடு, ஜூன் 2001
 • லுமும்பா குறித்த திரைப்படத்தை http://www.zeitgeistfilm.com இணையதளத்தில் காணலாம்.

ஜூலை 2001 புரட்சிகரத் தொழிலாளி செய்தித்தாளில் மேற்காணும் கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது.

பி.கு:


http://www.zeitgeistfilm.com இணையத்தளம் செயல்பாட்டில் இல்லை என்றே தொடுப்பில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, லுமும்பா திரைப்படத்தைக் காண விரும்புவர்கள், இந்த torrent-ல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரு சிக்கலான அரசியல் வரலாற்றை நுட்பமான காட்சிகள் மூலமும், தொய்வில்லாத திரைக்கதையின் மூலமும், திரைப்படம் அழுத்தமாக விளக்குகிறது. எனினும், லுமும்பாவின் கொந்தளிப்பான அரசியல் வரலாறு குறித்த குறைந்தபட்ச அறிமுகமின்றி ஒருவர் லுமும்பா திரைப்படத்தை முழுமையாக புரிந்து கொள்வது சற்று சிரமமானதென்றே கருதுகிறேன். எனவே, இக்கட்டுரையை வாசிக்கும் வாசகர்கள், அதன் பின்னர் அவசியம் இத்திரைப்படத்தையும் காண வேண்டுமெனக் கோருகிறேன். லுமும்பா திரைப்படம் குறித்த கவிஞர் மாலதி மைத்ரியின் விமர்சனத்தை இங்கே காணலாம். ‘லுமும்பா இறுதி நாட்கள் என்ற பெயரில் அவரது இறுதி நாட்கள், படுகொலை குறித்த விரிவான மொழிபெயர்ப்பு நூல் தமிழில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. நான் இன்னமும் அந்நூலை படித்துப் பார்க்கவில்லை. படித்தவர்கள் வாய்ப்பிருப்பின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

லுமும்பாவின் வரலாற்றைப் படிக்கும் பொழுது, நிகழ்காலத்தில் நேபாள மாவோயிஸ்டுக் கட்சி எதிர்கொண்டு வரும் நெருக்கடிகளும் நினைவுக்கு வருகின்றன. லுமும்பா ஒரு மார்க்சியரல்ல. ஆனால் அந்த மாவீரரின் வரலாற்றுப் பக்கங்களை புரட்டும் பொழுது, அவரது அர்ப்பணிப்பும், சலியாத போராட்ட உணர்வும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. காங்கோவைப் போல எண்ணற்ற காலனி நாடுகளின் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்து, சுரண்டிக் கொள்ளையடித்து உருவாக்கப்பட்டதுதான் இன்றைய உலகமயப் பேரரசு. இன்றும் ஈராக், ஆப்கானிஸ்தான், சோமாலியா போன்ற எத்தனையோ நாடுகளை ஒட்டச் சுரண்டி, அதன் மக்களை பிணங்களாக்கி வருகிறது உலகமயம் என்ற பெயரிலான தனியார்மயம்-தாராளமயம். இந்த உலகமயப் பேரரசை அடித்து நொறுக்குவதுதான், அதற்கான பணியில் ஒவ்வொருவரும் தம்மை இணைத்துக் கொள்வது தான், லுமும்பாவுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

(இக்கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் புதிய கலாச்சாரம், மார்ச் 2011 இதழில் வெளியானது)

Advertisements

One thought on “லுமும்பா: இரத்தம் தோய்ந்த வரலாறு!

 1. லூமூம்பா போன்றவர்களின் வரலாற்றை பலர் நினைவு கூர்வதில்லை…

  அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு. வாழ்த்துக்கள்.

  – சிந்தியுங்கள்.
  Thozhare.wordpress.com

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s