கரை தொடும் அலைகள் #2

டந்த ஞாயிறு காலையில் மகஇக பொருளாளர் தோழர் சீனிவாசனின் இறுதி நிகழ்விற்கு சென்றிருந்தேன். அவ்வமைப்பிலிருந்து விலகி விட்ட போதிலும், அவர் மீதான அன்பின், மரியாதையின் காரணமாக அவரது கடைசிப் பயணத்தில் உடனிருப்பது அவசியமெனப்பட்டது. அதிகாலையில் சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலை சென்றடைந்ததும், அவரது உடலை வணங்கச் சென்றேன். மெலிந்து கூடாகக் கிடந்தார். பலரது நினைவில் இன்னமும் நிழலாடும் உற்சாகமான சிரிப்பும், சற்றே பூசிய உடலும் கொண்ட சீனிவாசன் அவரல்ல எனத் தோன்றியது.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சீனிவாசனை நான் அறிவேன். மகஇகவில் இணைந்த துவக்க நாட்களில் ஒரு தமிழ் மக்கள் இசை விழாவில் சீனிவாசன் இட்ட சிறு சிறு வேலைகளை செய்த நாட்களிலிருந்து அவை துவங்கின. பின்னர், மே 2002 வாக்கில் ஈரோட்டில் நடைபெற்ற மே நாள் பொதுக்கூட்டத்தில் அவரும், நானும் உரையாற்றினோம். பொதுக்கூட்ட நாளுக்கு முதல் நாள் மிகவும் பொறுமையோடு எனது கன்னிப் பேச்சிற்கு உதவி செய்து என்னை உற்சாகப்படுத்தினார். “தோழர், இவர் இளைஞர் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?” எனத் தோழர்களிடம் எனது உடல் பருமனை கிண்டல் செய்தார். அன்றைய நிகழ்வுகள் மங்கலாகவே நினைவிருந்த போதிலும், அவையனைத்திலும் மேவி நின்ற சீனிவாசனின் கலகலப்பான சிரிப்பும், உற்சாகமும் மறக்க முடியாதவை. பிற்காலத்தில் சீனிவாசன் நிறைய மேடைகளில் பேசவில்லையென்றாலும், அக்காலகட்டத்தில் மகஇகவின் முக்கியமான பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவரது அன்றைய மே நாள் உரை (பாகம் 1, பாகம் 2) தமிழரங்கம் தளத்தில் கேட்கக் கிடைப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. அனேகமாக இணையத்தில் கிடைக்கும் சீனிவாசனின் ஒரே உரை இதுவாகத் தானிருக்கும்.


பின்னர், பல்வேறு நிகழ்ச்சிகளில் வெவ்வேறு வேலைகளில் தோழரோடு வேலை செய்ததுண்டு. குறிப்பாக, இரவு பகல் பாராது, மும்பையில் தன்னார்வக் குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக சமூக மாமன்றத்திற்கு எதிரான வேலைகளில் அவர் ஈடுபட்டதை உடனிருந்து கவனித்திருக்கிறேன். தமது இரங்கல் உரையில் தோழர் ராஜூ குறிப்பிட்டதைப் போல, எந்த ஊராக இருந்தாலும் தமது சொந்த ஊர் போல, கையில் ஒரு பையும், வேட்டி சட்டையுமாக நடந்து சென்று கொண்டிருப்பார் சீனிவாசன். இறுதி நாட்களில், சில மாதங்களுக்கு முன்பு சமச்சீர் கல்விக்கான அரங்கக் கூட்டமொன்றில் உடல் மெலிந்து, நலிந்து அமர்ந்திருந்த சீனிவாசனைக் கண்ட பொழுது அதிர்ச்சியாக இருந்தது. அவரது கணையப் புற்றுநோய் அவரை உருக்கிக் கொண்டிருந்தது கண்கூடாகத் தெரிந்தது. சில மணித் துளிகள் அவரருகில் சென்று நலம் விசாரித்தேன். மெலிந்து கிடந்த முகத்தில் மட்டும் அதே பழைய புன்னகையும், சிரிப்பும் மேலெழும்பி வர உற்சாகத்தோடு பேசினார். ஒரு எளிமையான, எவரிடத்தும் உள்ளன்போடும், தோழமையோடும் நேசித்து உறவாடக் கூடிய, எத்தகைய கடுமையான உழைப்புக்கும் அஞ்சாத தோழராக சீனிவாசனின் நினைவுகள் என்றும் நினைவில் நிற்கும் என்றே தோன்றுகிறது.

பாலாஜி சக்திவேல் மிகச் சிறந்த தமிழ் இயக்குனர்களில் ஒருவர். அவரது காதல் மற்றும் கல்லூரி திரைப்படங்கள் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக, கல்லூரி திரைப்படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறாத போதிலும், அத்திரைப்படத்தை நான் வெகுவாக ரசித்தேன். சிறு நகரத்து கலைக் கல்லூரி வாழ்க்கை, அத்தகைய கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் பண்பாட்டுச் சூழல், அவர்களது கேலிகள், கிண்டல்கள், கவலைகள் என அனைத்தையும் அழகாக வெளிக் கொணர்ந்திருந்தார். அதனால், அவரது வழக்கு எண் 18/9 திரைப்படத்திற்காக உண்மையில் காத்திருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ்த் திரைப்பட உலகில் வழக்கு எண் 18/9 ஒரு முற்றிலும் மாறுபட்ட அனுபவம் என்பதில் சந்தேகமில்லை. மிகை நடிப்புகள் இல்லாமல், இயல்பாக, அழகாக கதாபாத்திரங்களை செதுக்கியும், விறுவிறுப்பாகவும், அதே வேளையில் சமூகத்தின் பல்வேறு அவலங்களை நுண்மையாக சுட்டிக் காட்டியும், திரைக்கதை அழகாக நகர்கிறது.

சமீபத்தில் சசிகுமாரின் ‘போராளி’ திரைப்படம் பார்க்கச் சென்றேன். சசிகுமார் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை ‘மெசேஜ்’ சொல்கிறேன் பேர்வழி எனப் பண்ணிய சித்திரவதை தாளாமல், படம் துவங்கி அரை மணி நேரத்தில் திரையரங்கை விட்டு வெளியே வந்தேன். ஆனால், பாலாஜி சக்திவேல் காட்சிகளின் மூலமாகவே தமது கருத்துக்களையும், கண்ணோட்டங்களையும் நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இரு வேறு உலகங்களில் வசிக்கும் இரு வேறு வர்க்கங்களின் இளைஞர்கள் ஒரு குற்றத்தின் புள்ளியில் சந்திக்க நேர்கையில் நேரும் அவலத்தை எடுத்துக் காட்டியிருக்கிறார். நாம் அன்றாடம் படிக்கும் செய்தித்தாள்களில் காவல்துறையால் அளிக்கப்படும் செய்திகளில் 99.5 சதவீதம் அவர்களால் தயாரிக்கப்படுபவை என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். படத்தின் இறுதிக் காட்சிகளில் நாம் காணும் நாடகத்தன்மையிலான பழிவாங்கலை ரசிகர்களின் மனக்கொந்தளிப்புகளுக்கான வடிகாலாகவே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. புதுமுகங்கள் என்பதான உணர்வே ஏற்படாமல், கதாபாத்திரங்களை நடிகர்கள் வெளிப்படுத்தியிருந்த முறை மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. பாலாஜி சக்திவேல் போன்ற இயக்குனர்களின் திரைப்படங்கள் வெளிவரும் போதுதான், மடத்தனங்களிலிருந்து விடுபட்டு தமிழ் சினிமா முன்னேறும் என நம்பிக்கை பிறக்கிறது.

குளச்சல் மு.யூசுப் தமிழில் மொழிபெயர்த்த ‘வினயா’ எனும் மலையாள மொழியில் எழுதப்பட்ட சுயசரிதை படித்தேன். கேரளக் காவல்துறையில் பெண்கள் மீது காட்டப்படும் பாகுபாடுகளுக்கு எதிராக போராடிய வினயா எனும் பெண் காவலரின் கதையை அந்நூல் கூறுகிறது. சீருடை துவங்கி வேலைகள் வரை அனைத்திலும் காட்டப்படும் பாலின ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராகப் போராடும் வினயா, அதன் விளைவாக தொடர்ச்சியாக பழிவாங்கல்களுக்கும், பிற காவலர்களது வெறுப்பிற்கும் ஆளாகிறார். பெண்ணிய அடையாளத்தை தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கண்டறியும் வினயா, ஆண்களைப் போலவே உடைகள் அணியவும், சிகையை வெட்டிக் கொள்ளவும் செய்கிறார். கணவனிடம் வெளிப்படும் ஆணாதிக்கத்தையும் எதிர்த்துப் போராடுகிறார். எவ்வித சித்தாந்தப் பின்புலங்களும் இன்றி, தன்னந்தனி மனுஷியாக வினயா நடத்திய போராட்டங்களைப் படிக்கும் பொழுது வியப்பும், மரியாதையும் ஒருங்கே தோன்றுகிறது. அவரது போராட்டங்களின் விளைவாக இன்று அத்தகைய பாகுபாடுகள் சற்றே குறைந்திருக்கின்றன எனும் செய்தி நம்பிக்கையளிக்கிறது. பிழைப்புவாதமே வாழ்க்கையென வாழும் மனிதர்களுக்கு மத்தியில், தமது விழுமியங்களுக்காகவும், விடுதலைக்காகவும் போராடத் துணியும் மனிதர்கள் அடைந்தே தீர வேண்டிய உளவியல் நெருக்கடிகளையும், சிக்கல்களையும் வினயாவின் வாழ்விலிருந்து நாம் உணர முடிகிறது. ஏராளமான வினயாக்கள் தமிழகத்திலும் இருக்கக் கூடும். அவர்களெல்லாம் ஏன் எழுதுவதில்லை?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s