சத்தீஸ்கரில் நிகழ்ந்த பழங்குடிகள் படுகொலை: வெறுமனே போர் விபத்தல்ல!

கடந்த ஜூன் 28, 2012 அன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசுப் படைகள் நிகழ்த்திய படுகொலையை கண்டித்து, புது தில்லியைச் சேர்ந்த ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் நடுவம் (PUDR) வெளியிட்ட அறிக்கையின் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சர்கேல்குடா கிராமத்தில் பாதுகாப்புப் படைகள் நிகழ்த்திய, கோழைத்தனமான 19 கிராமவாசிகளின் பச்சைப் படுகொலையை ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் நடுவம் (PUDR) வன்மையாக கண்டிக்கிறது. கொல்லப்பட்டவர்களில் 12-15 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளும் அடங்குவர். மேலும், கத்தி, அரிவாள் மற்றும் துப்பாக்கிக் குண்டுகளால் மக்கள் கொல்லப்பட்டதுடன், பதின்வயதுக்குட்பட்ட நான்கு இளம்பெண்கள் பாலியல் தாக்குதலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரில் உள்ள பழங்குடிகளின் உயிரைப் பறிப்பதை இந்திய அரசு கிஞ்சித்தும் பொருட்டாகக் கருதவில்லை என்பதையே இச்சம்பவம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டுகிறது.

பாதுகாப்புப் படைகளின் கொடூரமானதும், குற்றவுணர்ச்சியற்றதுமான செயல்கள், அரசியல்வாதிகளின் இரட்டை நாக்குக்கு இணையானவையாக உள்ளன. நமது மத்திய உள்துறை அமைச்சர் மூன்று ‘தீவிரமான’ நக்சலைட்டுகளை சுட்டுக் கொலை செய்ததாகக் கூறினார். ஆனால் அவர் குறிப்பிட்ட மகேஷ் எனும் பெயருடைய எவரும் உயிரிழந்தவர்களில் இல்லை. நாகேஷ் எனும் பெயருடையவர் உண்மையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்; மற்றொரு ‘நாகேஷ்’ என்பவர் தோலக் எனும் இசைக் கருவி இசைக்கும் கலைஞர். ‘நக்சலைட்’ எனக் குற்றம் சாட்டப்படும் இன்னொரு நபரான சோமுலு, உண்மையில் ஒரு அப்பாவி விவசாயி. மத்திய உள்துறைச் செயலாளரோ எந்தக் குழந்தைகளும் கொல்லப்படவில்லை என அறிவித்தார். கொல்லப்பட்ட ஐந்து குழந்தைகள் குறித்து விளக்கமளிக்கக் கூட அவர் கவலைப்படவில்லை. நமது அரசியல் தலைவர்கள் பெரிதும் தம்பட்டமடிக்கும் ‘வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில்’ பங்கு பெறும் தகுதியற்றவர்களாகவே, கொல்லப்பட்ட மக்களை அவர்கள் கருதுகிறார்கள் என்பது கண்கூடு.

இப்படுகொலையை மூடிமறைப்பதில் அதிகார வர்க்கம் ஒத்திசைவுடன் ஈடுபட்டிருப்பது மற்றொரு அதிர்ச்சிக்குரிய விடயமாகும். ‘மக்கள் கவசங்களாக'(Human Shields) பயன்படுத்தப்பட்டவர்களே கொல்லப்பட்டார்கள் என அதிகாரத் திமிரோடு சத்தீஸ்கர் முதல்வர் படுகொலையை நியாயப்படுத்தினார். ஆனால் இந்த ‘மக்கள் கவசங்கள்’ கதையை கிராமவாசிகள் அடியோடு மறுத்துள்ளனர். சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சரோ நக்சல் கூட்டங்களில் பங்கேற்கும் மக்கள் கொல்லப்படுவது சரியானதே என வாதாடியுள்ளார். இதனை மத்திய உள்துறைச் செயலாளர் பாராளுமன்ற நிலைக் குழுவிடம் அளித்த வாக்குமூலத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். அவ்வாக்குமூலத்தில் பாதுகாப்புப் படையினர் “கைது அல்லது கொலை செய்ய” ஆணையிட்டுள்ளதாகத் தெரிவித்தார். எனவே, குழும முதலாளித்துவத்தின் (corporate) நிலப்பறிப்பு, வனம் மற்றும் நீர்க் கொள்ளைக்கெதிராக போராடும் மக்கள் மீதான போர், தனது காட்டுமிராண்டித்தனத்தின் புதிய உச்சங்களை எட்டியுள்ளது மிகத் தெளிவாகப் புலப்படுகிறது.

அதனால்தான், தம் மீது ‘தாக்குதல்’ துவங்கியவுடனேயே, சுடத் துவங்குவது நியாயமானது தான் என பாதுகாப்புப் படையின் உயர் அதிகாரிகள் விளக்கமளிப்பது அதிர்ச்சியளிப்பதாக இல்லை. இவ்விவகாரத்திலோ, படையினர் தாக்குதலுக்கு ஆளானார்களா என்பதே ஐயத்திற்கிடமானதாக உள்ளது. ஏனெனில், கிராமவாசிகள் அதனை முழுமையாக மறுத்துள்ளனர். எனவே, இது கட்டுப்பாடுடன் கூடிய ஒரு காவல்துறை நடவடிக்கையல்ல, மாறாக கொலைவெறியுடன் அரசுப் படைகள் நிகழ்த்தும் ஒரு யுத்தம் என்பதன் வெளிப்படையான ஒப்புதலாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். படையினர் கிராமத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகும், சில கிராமவாசிகள் கொல்லப்பட்டதே இதற்கான சான்றாகும்.

இவ்வுண்மைகள் அனைத்தும் சத்தீஸ்கரில் ஒரு போர் நிகழ்ந்து கொண்டிருப்பதையே உறுதிப்படுத்துகின்றன. இப்போரில் சத்தீஸ்கர் மக்கள் கொல்லப்படுவது தவிர்க்கவியலாத விபத்தல்ல. மாறாக, அம்மாநிலத்தில் வாழும் பழங்குடிகள்தான் இப்போரில் கொல்லப்பட வேண்டிய எதிரிகள், தாக்குதல் இலக்குகள்!

மேலும், இது போன்ற நியாயப்படுத்தல்கள் அனைத்தும் சம்பவங்களுக்கு பிறகாக உரைக்கப்படுவது மட்டுமின்றி, இவை கூறாமலேயே விளங்கப்பட வேண்டியவையாக கருதப்படுவது மேலும் அபாயகரமானதாக உள்ளது. கொல்லப்படுபவரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதோ, விசாரணை நடத்துவதோ அல்லது அவரது குற்றத்தை நிரூபிப்பதோ தேவையில்லை; கொலை முடிந்த பின் சரியான நடைமுறைகளை பின்பற்றுவதோ, அடிப்படை உரிமைகளை உயர்த்தி பிடிப்பதோ தேவையில்லை; பிரேதப் பரிசோதனை நடத்தத் தேவையில்லை; இவை குறித்த அறிக்கைகளை பொதுவெளியில் வைக்கத் தேவையில்லை; அல்லது கொல்லப்பட்டவர்களின் உடல்களில் உள்ள அரிவாள் காயங்கள் குறித்து விளக்க வேண்டிய தேவையில்லை. தாம் கூறும் விடயங்களைக் கூட நிரூபிக்க வேண்டியதில்லை. உதாரணமாக, காவல்துறையினர் உடலில் ஏற்பட்ட காயங்கள் துப்பாக்கிக் குண்டுச் சிதறல்களால் ஏற்பட்டவை என அரசு மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஏ.கே.47/ எஸ்.எல்.ஆர் துப்பாக்கி குண்டுகளால் ஏற்பட்டவை என அதிகாரிகளும், சிப்பாய்களும் கூறுகிறார்கள். ஆனால், இது குறித்தெல்லாம் உண்மையில் யார் கவலைப்படுகிறார்கள்? நிச்சயமாக அரசு கவலைப்படுவதில்லை.

பிரிவினைக்குப் பிறகான 60 ஆண்டுகளில், மருத்துவ வசதியின்றியும், ஊட்டச் சத்துக் குறைபாட்டுடனும், இடம் பெயர்தலை எதிர்கொண்டு மெதுவாக பேரழிவை நோக்கி தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் சத்தீஸ்கரின் பழங்குடி மக்கள். அப்பேரழிவு கடந்த சில ஆண்டுகளில், முதலில் சல்வா ஜூடும் மூலமாகவும், பின்னர் பச்சை வேட்டை மூலமாகவும் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று இது எத்தகைய கட்டத்தை நோக்கி வந்து விட்டதென்றால், தற்போது அரசு குறைந்தபட்சம் தனது பொறுப்புணர்வு குறித்து நடிக்கக் கூட முன்வருவதில்லை. இம்மாநிலத்தின் தாதுப் பொருட்களை, குழும முதலாளிவத்தின் நலன்களுக்காக அரசு வரைமுறையின்றி கொள்ளையடிப்பதும், அதன் பொருட்டு மக்களின் உயிரையும், உரிமைகளையும் (மக்களின் மானம் குறித்தெல்லாம் எப்பொழுதுமே அது கவலைப்பட்டதில்லை) பலி கொடுப்பதும் ஒரு வெளிப்படையான, வெட்கமற்ற உண்மையாகி விட்டது. இதனைப் பாராமல் கண்களை மூடிக் கொள்வோமேயானால், சத்தீஸ்கர் மக்கள் மீது நடத்தப்படும் போரில் அரசுடன் கைகோர்ப்பது என்றே பொருள்படும்.

இவற்றிற்கு எதிராக, நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் வீதியில் அணிதிரண்டு போராட வருமாறு நாங்கள் கோருகிறோம். நமது மக்களுக்கு எதிரான இந்த காட்டுமிராண்டித்தனமான போரை நிறுத்துவதற்கான ஒரே வழி, சி.ஆர்.பி.எஃப், கோப்ரா, சத்தீஸ்கர் ஆயுதப் படை ஆகிய பாதுகாப்புப் படைகளின் குற்றவாளிகளை (மற்றும் அவர்களது அதிகார வர்க்க மற்றும் அரசியல் எசமானர்களையும்) கூண்டில் நிறுத்துவதும், மத்திய, மாநில அரசுகள் தமது குற்றங்களுக்கு பொறுப்பேற்க வலியுறுத்துவதுமேயாகும்.

பரம்ஜீத் சிங்
ப்ரீத்தி செளகான்
(ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் நடுவத்தின் செயலாளர்கள்)

ஆங்கில மூலம்: http://pudr.org/content/not-merely-collateral-damage-tragic-killing-adivasis-chhattisgarh
புகைப்படம் மூலம்: தி இந்து

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s