நாளி: வரலாற்றின் தெளிந்த நீரோடை!

பாலு மகேந்திராவின் திரைப்படங்களில் தவறாமல் இடம் பெறும் முக்கியமான கதாபாத்திரம் ஊட்டி. அவரது ஓளிப்பதிவின் வண்ணங்களில் ஊட்டியின் எழில்மிகு அழகு, அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. எண்பதுகள் வரை நமது தமிழ் சினிமாக் கதாநாயகர்களும், கதாநாயகிகளும் பாடல் காட்சிகளில் ஓடியாடி கட்டிப்பிடித்ததும், உருண்டு புரண்டதும் ஊட்டியின் புல்வெளிகளில் தான். ஊட்டி என்றதும் நினைவுக்கு வருவது அங்கு நிலவும் இதமான குளுமையும், புல்வெளிகளும், மேகங்கள் கவிந்த மலை முகடுகளும் தான். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு ஊட்டி என்று அழைக்கப்படும் நீலமலையின் உண்மையான வரலாறு தெரியும்? அதனைத் தெரிந்து கொள்ள எத்தனை பேருக்கு உண்மையில் ஆர்வம் உண்டு? ஆர்வம் இருந்தாலும், அதனைத் தேடிக் கண்டறியும் பொறுமை எத்தனை பேருக்கு உண்டு? விரல் விட்டு எண்ணி விடலாம்.

சமீபத்தில் இரா.முருகவேள் மற்றும் இலட்சுமணன் ஆகியோர் வெளியிட்டுள்ள ‘நாளி’ (ஓடை) ஆவணப்படத்தைக் காணும் வரை, எனக்கும் தெரியாது. அதனைத் தெரிந்து கொண்ட பின்னால், ஊட்டி குறித்த பிம்பங்களில் ஒரு நிரந்தரமான மாற்றம் ஏற்பட்டு விடுகிறது. அது மென்மேலும் குளுமையும், இனிமையுமான பிம்பமாக நீடிப்பதில்லை. மாறாக, அம்மண்ணின் பழங்குடிகளது போராட்ட வரலாறாகி விடுகிறது. இது வரை நீலமலை குறித்து, ம.க.இ.க-வின் ‘தீக்கொழுந்து’ மற்றும் தவமுதல்வனின் ‘பச்சை இரத்தம்’ ஆகிய இரு ஆவணப்படங்களை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். முன்னது சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த தேயிலை விலை வீழ்ச்சி, அதன் வழியே உலகமயம் குறித்தும், பின்னது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வரலாறு மற்றும் அவர்களது இன்றைய வாழ்க்கை நெருக்கடிகள் குறித்தும் பேசுகிறது. இவற்றிலிருந்து மாறுபட்டு, நீல மலையின் வரலாற்றுச் சுவடுகளின் அடியொற்றி, அதன் நிகழ்காலப் பிரச்சினைகள் வரை தொட்டு விரியும் ‘நாளி’ ஒரு ஆழமானதும், முழுமையானதும், செறிவானதுமான அனுபவத்தை அளிக்கிறது. ஒரு வகையில் இப்படி சொல்லலாம். ‘இது வரையிலான வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்’ என்றார் கார்ல் மார்க்ஸ். அவ்வாறே, நீல மலையின் வரலாறு என்பது அதன் மைந்தர்களான பழங்குடி மக்கள் இதுகாறும் ஒடுக்கப்பட்ட, ஒடுக்கப்படுகின்ற வரலாறேயாகும் என தீர்க்கமாக முன்வைத்திருக்கிறது ‘நாளி’.

ஆவணப்படத்தின் துவக்கத்திலேயே, அதன் மையப்பொருளை வர்ணனையாளர் தெளிவுபடுத்துவது போல், வயநாடு, அட்டப்பாடி மற்றும் நீலமலையின் வரலாற்றுச் சுவடுகளில் பயணிக்கிறது நாளி. இதனை நான்கு பாகங்களாக பிரித்து விவரிக்கிறது. முதல் பாகம், 10, 12-ஆம் நூற்றாண்டுகளில், எவ்வாறு மேலிருந்து நிலபிரபுத்துவம் கட்டமைக்கப்பட்டு, பழங்குடி மக்களின் பொதுவுடைமைச் சமூகம் அழிக்கப்படுகிறது என்பதையும், அதன் தொடர்ச்சியாக மானந்தவாடியில் உள்ள வள்ளியூர்க் காவு எனும் கோவிலிலில் பழங்குடிகள் தம்மை விற்றுக் கொள்ளும் அடிமை வணிகம் எவ்வாறு துவங்கியது என்பதையும் விளக்குகிறது. அன்றிலிருந்து 1970-கள் வரை, நக்சல்பாரிப் புரட்சியாளர் வர்கீஸ் முன்கையெடுத்து போராடி நிறுத்தும் வரை, வள்ளியூர்க் காவு அடிமை வணிகம் நிகழ்ந்து கொண்டிருந்தது என்ற தகவல் நம்மை அதிர்ச்சியுற வைக்கிறது. கருப்புத் தங்கம் என அழைக்கப்பட்ட மிளகுக்காக வனங்களையும், மலைகளையும் பேர்த்துக்கீசியர்கள் முதல் பிரிட்டிஷ்காரர்கள் வரை படையெடுத்து ஆக்கிரமித்த வரலாற்றையும், சமணம், சைவம், வைணவம் ஆகிய மதப் பிரிவுகள் நிகழ்த்திய பண்பாட்டுத் தாக்குதல்களையும், அதற்கான ஆதாரங்கள், இன்றளவும் தொடரும் பாதிப்புகளையும் விவரித்து அடுத்த பாகத்திற்கு ஆவணப்படம் நகர்கிறது.

வனங்களை அழித்து, தமது கப்பல் கட்டும் தேவைகளுக்காக தேக்கு மரங்களை பல்லாயிரக்கணக்கான அளவில் பயிரிடுமாறு வெள்ளையர்கள் ஆணையிட்டதே பழங்குடிகள் மீதான முதலாவது மிகப்பெரிய பொருளாதாரரீதியிலான, பூகோளரீதியிலான தாக்குதல் என ஆவணப்படம் தெரிவிக்கிறது. பின்னர் காப்பித் தோட்டங்களும், அதன் தொடர்ச்சியாக சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட தேயிலை விதைகளிலிருந்து உருவாக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களும், வனத்தின் இயற்கைச் சூழலுக்கு உகந்த, அதற்கு பங்கம் விளைவிக்காத பாரம்பரிய விவசாய முறைகளை அழிக்கின்றன. அக்காலத்திலேயே ‘காப்புக் காடுகள்’ என காட்டின் பகுதிகள் வரையறுக்கப்பட்டு, பழங்குடிகள் காடுகளிலிருந்து விரட்டியடிக்கப்படும் நிகழ்வுப் போக்கு துவங்குகிறது. பச்சைத் தங்கத்தை தேடி வந்த வெள்ளையர்கள், தமது ஓய்வு வாசஸ்தலமாகவும், கணக்கு வழக்கின்றி விலங்குகளை வேட்டையாடி மகிழ்ந்த களியாட்டக் களமாகவும் மாற்றியமைத்து, எவ்வாறு நீல மலையின் இயற்கைச் சமன்பாட்டை அழித்தனர் என்து விளக்கப்படுகிறது. மேலும், தேயிலைத் தோட்டங்களில் கொத்தடிமைகளாக உழல மறுத்த பழங்குடிகளான தோடர்கள், குறும்பர்கள், வேடர்கள் முதலானோரை தேக்கு சாகுபடிக்காக நாடோடிகளாக மாற்றிய சோக வரலாறும் நம் கண் முன்னே எழுப்பப்படுகிறது. சுதந்திர இந்தியாவிலும் கூட, காட்டின் சொந்தக்காரர்களான பழங்குடிகளை காடுகளை விட்டு விரட்டியடிக்கும், அவர்களது பாரம்பரிய விவசாய முறைகளுக்கு தடை விதிக்கும் போக்கு தொடர்ந்து வருவதையும், வனங்களை இலாபமீட்டும் நோக்கில் மட்டுமே அரசு அணுகி வருவதையும் ஆவணப்படம் தீர்க்கமாக அம்பலப்படுத்துகிறது.

அடுத்த பாகமான ‘துன்பக் கேணி’ தனது பெயருக்கேற்றாற் போல், தேயிலைத் தோட்டங்களின் துயர வரலாற்றை விவரிக்கிறது. சமவெளிப் பகுதிகளிலிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வாறு குடும்பம், குடும்பமாக கொத்தடிமைகளாக அழைத்து வரப்பட்டதை விளக்குகிறது. கொள்ளை நோய்களுக்கு கொத்து கொத்தாகப் பலியாகியும், போதுமான அடிப்படை வசதிகள் கூட இன்றியும், குறைவான கூலிக்கும், கங்காணிகளின் கொடுங்கோலாட்சிக்கு கட்டுப்பட்டும் துன்பத்தில் உழன்ற, உழலும் வாழ்வு விளக்கப்படுகிறது. பொதுவுடைக் கட்சிகள் தமது சங்கங்களை உருவாக்கிய பின்னரே, வேலை நிறுத்தம் முதலான போராட்டங்களை நடத்திய பின்னரே, குறைந்த பட்சக் கூலி, தானியங்களுக்குப் பதிலாக பணமாகக் கூலி பெறுதல், குறைந்தபட்ச மருத்துவ வசதி, அடிப்படை வசதிகள் ஆகியனவற்றை தேயிலைத் தோட்ட உழைப்பாளர்கள் பெற முடிந்திருக்கிறது. எனினும், இன்றளவும் யானைத் தாக்குதல்களில் உயிரிழப்பது, போதுமான கல்வி, சுகாதார, மருத்துவ வசதிகள் இன்றி வாடுவது எனும் நிலை தொடர்வதையும் ஆவணப்படம் பதிவு செய்கிறது.

வனங்களில் பழங்குடி மக்களின் சொத்துரிமையை அங்கீகரிக்கும், ஒப்பீட்டளவில் முற்போக்கான சட்டமான ‘வன உரிமைப் பாதுகாப்புச் சட்டம்’ தமிழகத்தில் மட்டும் முடக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் நாம் அறிந்து கொள்கிறோம். மேலும், தற்பொழுது ‘புலிகள் காப்பகம்’ என்ற பெயரில் முழுவதுமாக பழங்குடி மக்களை காட்டிலிருந்து விரட்டியடிக்க, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், அரசும் எவ்வாறு கைகோர்த்து செயல்படுகின்றன என்பதை நான்காம் பாகம் விரிவாக விவரிக்கிறது. இது பழங்குடி மக்களை விரட்டியடிக்க அரசு எடுத்திருக்கும் கடைசி அஸ்திரம் எனக் கூறுகிறார் பழங்குடி மக்கள் சங்கத் தலைவர். மேலும், ஏகாதிபத்திய நாடுகள் தமது சுற்றுச்சூழல் மாசு நடவடிக்கைகளை மறைப்பதற்காக, க்யோட்டோ மாநாட்டில் உருவாக்கிய ‘கார்பன் கடன்கள்’ திட்டம் குறித்தும், அத்திட்டத்தின் மூலம் இலாபமீட்டும் நோக்குடன் இந்திய அரசு பழங்குடி மக்களை முழுமையாக விரட்டியடித்து காடுகளை ஆக்கிரமிக்க விரும்புகிறது என்பதும் ஆதாரபூர்வமாக தர்க்கரீதியில் தெளிவுபடுத்தப்படுகிறது.

நூற்றாண்டுகளாக நவீன சமூகம் எத்தகைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை, தொன்மையான நாகரீகம் வாய்ந்த பழங்குடிகள் மீது தொடுத்து வருகிறது என்பதையும், அதன் இறுதிக் கட்டப் போர் தற்போது நிகழ்வதையும் ஆவணப் படம் ஒருங்கே நமக்குப் புரிய வைக்கிறது. இதனை இத்தனை நாட்களாக அறியத் தவறியிருக்கிறோம் என்ற குற்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது. இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும், போராடும் பழங்குடி மக்களுடன் கை கோர்க்க வேண்டும் என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது. ஆவணப்படத்தில் ஓரிடத்தில் குறிப்பிடப்படுவது போல, ‘தேவைக்கு ஏற்ப விவசாயம், தேவைக்கு ஏற்ப வேட்டை’ என இயற்கையோடு நெகிழ்வாகவும், ஒத்திசைவாகவும் வாழும் பழங்குடி மக்களை பாதுகாக்கும் போராட்டம் வெல்ல வேண்டும் எனும் ஆவல் ஏற்படுகிறது. இவ்வாறு நீலமலையின் பழங்குடிகள் குறித்த செறிவான, ஆழமான புரிதலையும், ஒடுக்கப்படும் அவர்கள் பால் நேசத்தையும் ஏற்படுத்துவதில் ஆவணப்படம் முழு வெற்றியடைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

வடிவ ரீதியாக, இலட்சுமணனின் தங்கு தடையற்ற, சீரான வர்ணனையே ஆவணப்படத்தின் பிரதான பலம் அல்லது அதன் உயிர்நாடியாக விளங்குகிறது. மற்றொரு வகையில், அதுவே படத்தின் பலவீனம் என்றும் சொல்லலாம். ஒரு காட்சி ஊடகத்தில் தொடர்ச்சியான வர்ணனையில் தங்கி ஒரு ஆவணப்படம் விரிவதை ஒரு பலவீனமாகவே கருத வேண்டியிருக்கிறது. மேலும், ஏறத்தாழ ஒன்றரை மணி நேரத்திற்கு ஆவணப்படம் ஓடுகிறது. இத்தகைய பின்ணணியில், பொதுவில் “டாக்குமெண்டரியா?” என அலுத்துக் கொள்ளும் பார்வையாளர்களிடம் ‘நாளி’ பாதிப்பை ஏற்படுத்துவது ஐயத்திற்கிடமானதே. ஆனால், நாளியின் வரலாற்றுரீதியிலான உள்ளடக்கத்திலிருந்து பரிசீலிப்போமாயின், தொடர்ச்சியான வர்ணணை மற்றும் அதன் நீண்ட கால அளவு நிச்சயம் தவிர்க்கவியலாதது என்பதை புரிந்து கொள்ள முடியும். அதே வேளையில், ஒரு பொதுவான, குறைந்தபட்ச வரலாற்று ஆர்வம் உடைய எவரையும் நாளி வசீகரித்து விடும் என உறுதியாக சொல்ல முடியும்.

குறிப்பாக, நாளியில் பல்வேறு வடிவரீதியிலான சிறப்புகள் உண்டு. ஒரிரண்டு இடங்களைத் தவிர, வேறெங்கும் ஒரு காட்சி மறுமுறை திரும்பக் காட்டப்படுவது என்பது அறவே இல்லை. இத்தகைய திரும்பக் காட்டுதல் (repeating shots) இன்றி, நாளி போன்ற ஒரு வரலாற்றுப் படத்தை உருவாக்குவது எத்தகைய சிரமமான காரியம் என்பதை ஆவணப்பட இயக்குனர்கள் நன்கு உணர முடியும். மேலும், வர்ணனைக்கு பொருத்தமான காட்சிகள், அவசியமான இடங்களில் மட்டும் பொருத்தமாகவும், அழுத்தமாகவும் ஒலிக்கும் அருமையான பிண்ணனி இசை, வர்ணனைக்கு பொருத்தமான முறையில் அழுத்தமான பதிவை உண்டாக்கும் வண்ணம் சேர்க்கப்பட்டுள்ள புகைப்படங்கள், தேவையான இடங்களில் பொருத்தமாக பயன்படுத்தப்பட்டுள்ள slow motion shots, சில இடங்களில் தேவையை ஒட்டி அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பழங்குடி மாடல் காட்சிகள் என நேர்த்தியாகவும், செறிவாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, வடிவ ரீதியாகவும், உள்ளடக்க ரீதியாகவும் பண்பட்ட ஆவணப்படமாக, வரலாற்றின் தெளிந்த நீரோடையாக விளங்கும் ‘நாளி’யை பரவலாக மக்களிடம் எடுத்துச் செல்வது நமது ஓவ்வொருவரின் கடமையாகும்.

(படப்பெட்டி இதழுக்காக எழுதப்பட்டது)

Advertisements

6 thoughts on “நாளி: வரலாற்றின் தெளிந்த நீரோடை!

 1. where to get this documentary. it will be more helpful, if you provide any address.
  hope you will do the need full.
  thank you.

  Like

 2. திரு.லெட்சுமணன் அவர்களை தொடர்பு கொள்ளவும். அவரது எண்: 9843142245

  Like

 3. Article is very fine. How could i get my copy of this short film, given mobile does not working, Please help me.
  Thanks

  Like

 4. திரு.லெட்சுமணனிடம் கேட்டுள்ளேன். தொடர்பு எண் கிடைத்தவுடன் அழைக்கிறேன்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s