நக்சலைட் பூச்சாண்டி!

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையின் புறநகர்ப் பகுதியான குன்றத்தூரில், மக்கள் ஜனநாயகக் குடியரசுக் கட்சியின் 13 உறுப்பினர்கள் தமிழகக் கியூ பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டதை நீங்கள் அறிந்திருக்கலாம். குன்றத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தாளாளர் அனுமதியுடன் கூடிய அவ்வமைப்பின் தோழர்களை போலிசு கைது செய்ததும், அதற்காக முன்வைக்கும் காரணங்களும் அபத்தமானவை என்பதை ஒரு மேலோட்டமான அரசியல், சட்ட அறிவுடையவர் கூட கூற முடியும். எனவே, ஊடகங்களில் நக்சலைட் பீதியூட்டுவதன் மூலம் தனது செயலை நியாயப்படுத்த போலிசு முயன்றது. அதனை தமிழக ஊடகங்களும் வெட்கமின்றி வழி பற்றி, ஓரிரு தினங்களுக்கு ‘சென்னையில் நக்சலைட்டுகள் ரகசியக் கூட்டம்’, ‘ரகசியப் பயிற்சி’, ‘சதித் திட்டம்’ எனத் தமது வழக்கமான பல்லவிகளை அவிழ்த்து விட்டன.

ஆனால், கைது செய்யப்பட்டவர்களில் தோழர்கள் துரைசிங்கவேல், பாஸ்கர், பழனி ஆகியோரைத் தவிர வேறு யார் மீதும் எந்த குற்ற வழக்குகளும் கிடையாது. அம்மூவர் மீதும் 2001-ல் ஊத்தங்கரையில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டதாக பொடா வழக்கு உள்ளது. அவ்வழக்கிலும் சட்டரீதியாக பிணையில் வெளிவந்து வெளிப்படையான அரசியல் செயல்பாடுகளிலேயே அவர்கள் ஈடுபட்டு வந்தனர். மேலும், 2001-ல் எந்த மாவோயிஸ்டுக் கட்சியில் அவர்கள் உறுப்பினர்களாக இருந்தார்களோ, அந்த அமைப்பிலிருந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே கருத்து வேறுபாடுகள் காரணமாக மூவரும் விலகி விட்டனர். தமது கருத்து வேறுபாடுகளை தமது அரசியல் பத்திரிக்கையான ‘புதிய போராளி’-யில் பகிரங்கமாகவே வெளியிட்டனர். அவர்களது கட்சித் திட்டம் கூட இணையத்தில் பகிரங்கமாகவே முன்வைக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் மாவோயிஸ்டு கட்சியிலிருந்து வெளியேறி விட்டதும், தமக்கென ஒரு வெளிப்படையான கட்சியைக் கட்டி இயங்கி வருவதும் பொதுவில் தமிழக அரசியல் முன்னணியாளர்கள், மாற்று அரசியல் சக்திகள் அனைவரும் அறிந்ததே. ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான தமிழகக் கியூ பிரிவு போலிசுக்கு மட்டும் இது தெரியாமல் போய் விட்டதா என்ன?

வேடிக்கை என்னவென்றால், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட நக்சலைட்டுகள் ரகசியக் கூட்டம் போட்டு சதி செய்வதாக நாளேடுகள் எழுதின. ஒரு புறம், வழி தவறிய நக்சலைட் சகோதரர்கள் மைய நீரோட்டத்திற்கு வர வேண்டுமென அரசியல்வாதிகள் உருக்கமாக வேண்டுகிறார்கள். மறு புறமோ, தேர்தலில் போட்டியிடுவது கூட சதித் திட்டமாகுமென போலிசும், ஊடகங்களும் சிறிதும் கூச்சமின்றி ஊளையிடுகின்றன. தேர்தல் அரசியலில் பங்கேற்பது மைய நீரோட்டத்தில் கலப்பதாகாதா? ஒரு முறை நக்சலைட்டுகள் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் பங்கேற்கக் கூடாது என தேர்தல் கமிசன் விதிகள் ஏதேனும் வகுத்துள்ளதா? ஒரு வேளை அவர்கள் தேர்தலில் பங்கேற்றால் நாடாளுமன்றத்திற்கு தீவிரவாதத் தீட்டுப் பட்டு விடுமா? நாலாம் தூண் போலிசின் வேட்டை நாயாக மாறி விட்டதையே அச்செய்திகளில் காண முடிந்தது.

குறிப்பிட்ட விசயத்தில் தமிழக ஊடகங்களின் அயோக்கியத்தனம் குறித்து ‘கவனிக்கிறோம்’ இணையத் தளத்தில் முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு செய்தித்தாள்களின் முரண்பட்ட நிலைகளும் குறிப்பாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசியல் சூழலில் தோழர் அ.மார்க்சையும், அவருடன் சில தோழர்களையும் தவிர, வேறு எந்த மாற்று அரசியல் சக்தியும் காவல்துறையின் அராஜகத்தைக் கண்டிக்கவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விசயமாகும். குறைந்தபட்சம் ஒரு அடக்குமுறை பட்டவர்த்தனமாக நடக்கும் பொழுது கூட, தமது காழ்ப்புணர்வுகளை மறந்து, வாய் திறக்க முடியாதவர்கள் எல்லாம் தம்மை முற்போக்காளர்கள், நக்சல்பாரிகள், புரட்சியாளர்கள் என வெட்கமின்றி அழைத்துக் கொள்கிறார்கள்.

அடுத்த சில தினங்களிலேயே, தென் தமிழகத்தில் உள்ள கூடங்குளத்திற்கு உண்மை அறியும் குழுவில் சென்ற 11 பேர் மாவோயிஸ்டுகள் என கைது செய்யப்பட்டனர். இவர்களில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்களும், மாணவர்களும் கூட அடங்குவர். ஒரு வாதத்திற்கு அவர்கள் மாவோயிஸ்டுகள் என்றே வைத்துக் கொள்வோம். பினாயக் சென் வழக்கில் உச்சநீதிமன்றம் “மாவோயிஸ்டுக் கட்சி உள்ளிட்ட எந்த தடை செய்யப்பட்ட அமைப்பையும் ஒருவர் கருத்துரீதியாக ஆதரிக்கும் காரணத்தால், அத்தகைய அமைப்புகளின் பத்திரிக்கைகள், இலக்கியங்களைக் கொண்டிருக்கும் காரணத்தால் அவர்களை கைது செய்ய இயலாது. அத்தகைய செயல், இந்திய அரசியல் சட்டம் வழங்கிய அவர்களது கருத்துரிமையை காவு கொள்வதாகும்.” எனக் கூறியதே, அதற்கு என்ன பொருள்?

அவர்கள் என்ன கூடங்குளத்திற்கு ஆயுதம் ஏந்திக் கொண்டா சென்றார்கள்? அல்லது அவர்கள் அங்கே சென்றதால் ஏதேனும் சட்டம்-ஒழுங்கு குலைந்து விட்டதா? எனவே, ஒரு மாதத்திற்கு முன்பு சென்னை நந்தனம் கலைக் கல்லூரிக்கு முன்பாக மே பதினேழு இயக்கப் பொறுப்பாளர் திருமுருகன் காந்தி அடித்து இழுத்துச் செல்லப்பட்டதும், தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை எனும் அமைப்பில் செயல்பட்டு வரும் தோழர் சதீஷ் (இவர் மீதும் ஊத்தங்கரையில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டதாக பொடா வழக்கு உள்ளது) எந்த அடிப்படையுமின்றி கூடங்குளம் போராட்டத்தில் ஊடுருவிய நக்சலைட் என கோட்டூர்புரம் நூலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதும் தொடர்பற்ற தனித்தனி சம்பவங்களல்ல. உண்மையில், தமிழகக் காவல் துறையின் அடக்குமுறைகள் ஒரு பாசிசப் போக்காக நாளுக்கு நாள் வளர்ந்தோங்கி வருவதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.

தமிழகக் கியூப் பிரிவு போலிசு புரிய வைக்க விரும்பும் விசயம் நேரடியானது. நக்சலைட்டுகள், மாவோயிச ஆதரவாளர்கள் என அரசியல் செயல்பாட்டாளர்களை கைது செய்வதன் மூலம், மக்களுக்கான அரசியல் செயல்பாடுகளில் யாரும் ஈடுபட முடியாமல் தடுத்து, நக்சலைட் பூச்சாண்டி காட்டுவதுதான் அதன் நோக்கம். இத்தகைய பீதியூட்டலின் மூலம், மக்கள் ஜனநாயகக் குடியரசுக் கட்சி போன்ற அமைப்புகளை கருவிலேயே அழித்து விடவும், அதன் மூலம் மக்கள் நலனை உயர்த்திப் பிடிக்கும் எவரையும் ‘நக்சலைட்’, ‘மாவோயிஸ்ட்’ என முத்திரை குத்தி ஒடுக்கி, அத்தகைய திசையில் எவரும் சிந்திக்கவே அஞ்சும் சூழலை உருவாக்குவதுமே அதன் நோக்கங்களாக உள்ளன. எனவே, இப்போக்கு இப்படியே தொடருமாயின், மாற்று அரசியல் முயற்சிகளில் ஈடுபடும் எவரும் – அவர்கள் தமிழ் தேசியவாதிகளோ, தலித்திய போராளிகளோ, மார்க்சிய ஆதரவாளர்களோ – நக்சலைட் முத்திரை குத்தி முடக்கப்படும் பாசிச இருள் தமிழகத்தை மொத்தமாக மூடும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணரவும், அதற்கு எதிராக குரல் கொடுக்கவும் முன்வர வேண்டும்.

(கீற்று இணையதளத்தில் முதலில் பிரசுரமானது)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s