கருத்துரிமை: பெருமாளுக்கும் வேண்டும், முருகனுக்கும் வேண்டும்!

மாதொருபாகன் வாசிக்கத் துவங்கியாகி விட்டது. காளியும், பொன்னாவும் ஈர்க்கிறார்கள். ஆசானுக்கும், அவரது ரத்தத்தின் ரத்தத்திற்கும் மட்டுமே தென்படும் எழுத்துநடைப் பிரச்சினையோ, குறைபாடுகளோ எனது ஊனக் கண்களுக்குத் தட்டுப்படவில்லை.

முன்னுரையில் பெருமாள் முருகன் எழுதுகிறார். “என் நாவல்கள் பற்றிய பரபரப்புகளை உருவாக்குவதில் எப்போதும் நான் முனைவதில்லை. முந்தைய என் நாவல்கள் மிக மெதுவாகவே வாசகர்களிடம் சென்று சேர்ந்திருக்கின்றன. ‘கங்கணம்’ வெளியாகி மூன்றாண்டுகளுக்குப் பின் இப்போதுதான் பரவலான கவனம் பெறுகின்றது. எனக்கும் ஒன்றும் அவசரமில்லை. இந்நாவல் தொடர்பாகவும் அதே மனநிலையில்தான் இருக்கின்றேன்.” அவரது எண்ணத்திற்கு நேர் எதிராக, தற்பொழுது மாதொருபாகன் நாவல் வாஷிங்டன் போஸ்ட் வரை கவனம் பெற்று விட்டது. இதனை சாதித்துக் காட்டிய கவுண்டர் குல (அ)சிங்கங்களுக்குத் நாம் மனதார நன்றி சொல்ல வேண்டும்.

பெருமாள் முருகன் தான் செத்து விட்டதாகவும், இனி எழுதப் போவதில்லை எனவும், தனது அனைத்துப் படைப்புகளையும் திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தவுடன், அவரைக் கண்டிக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் அவரைக் கோழையென்றும், துரோகியென்றும் ஒரு மாவீரர் ஆரவாரித்தார். அபிலாஷ், போகன் சங்கர் போன்ற சில எழுத்தாளர்கள்தான் சற்று நிதானித்து கருத்துத் தெரிவித்தனர். பலரோ காலச்சுவடு வெளியிட்ட ஒரே காரணத்திற்காக, துவக்கத்திலிருந்தே எந்த ஆதாரமுமின்றி சதிவலைகள் பின்னியதொரு மர்ம நாவலை உருவாக்கும் கடும் பிரயத்தனத்திலிருந்தனர். இறுதியாக, ஆசான் கூட ஏறத்தாழ அதற்கிணையான புனைவை உருவாக்கி, பின்னர் தளத்திலிருந்து நீக்கி விட்டார்.

ஸ்லிமா நசுரீன் கூட ஒரு கட்டத்தில் சமரசங்களை மேற்கொண்டு, சரணடைய நேரிட்டது. தனது சுயசரிதையின் ஆறாம் பாகத்தை முழுமையாக நிறுத்தவும், முந்தையதில் சில வரிகளை நீக்கவும் நேரிட்டது. ஒரு எழுத்தாளன் அல்லது எல்லா எழுத்தாளர்களும் மாவீரர்களாக இருக்க வேண்டுமென்றோ, எத்தகைய கும்பலையும் எதிர்த்து நிற்க வேண்டுமென்றோ கட்டாயமில்லை. அவ்வாறு நின்றால் மகிழ்ச்சி. ஆனால், அப்படியின்றி விரக்தியுற்று பின்வாங்குபவரை உடனடியாக துரோகி என்போமெனில், அந்தக் கோபத்தில் வெளிப்படுவது கொள்கைப் பிடிப்பல்ல, பலவீனப்பட்டிருப்பவரை மேலும் புண்படுத்தி, தனது வீரத்தைக் வெளிக்காட்டிக் கொள்ளும் எத்தனம் மாத்திரமே. ஏறத்தாழ தற்கொலை முயற்சியில் தோல்வியுற்றவனிடம் வீரவுரைகள் நிகழ்த்தும் அநாகரிகம்தான். இன்று நடைபெறும் நிகழ்வுகளையெல்லாம் காண்போமானால், தனிமையிலும், அமைதியிலும் தனது வாழ்வைக் கழிக்க நேர்ந்துள்ள தஸ்லிமாவாக, பெருமாள் முருகன் மாற நேருமோ எனத் தோன்றுகிறது.

ஆனால், நம்பிக்கையூட்டும் விதமாக, பல்வேறு அமைப்புகள், குறிப்பாக தமுஎகச முதலான இடதுசாரி அமைப்புகள் மற்றும் தற்பொழுது இப்போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் ‘கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு’ ஆகியவை தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றன. இணையத்திலும் ‘மாதொருபாகன்’ pdf வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. திமுக பொருளாளர் ஸ்டாலின் (கூட) கண்டித்துள்ளார்.

பெருமாள் முருகனின் வழக்கறிஞர் இப்பிரச்சினையில் இந்து முண்ணணிக்கோ, ஆர்.எஸ்.எஸ்-க்கோ பங்கில்லை என்கிறார். அப்படியானால், ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும், இசுலாமிய அமைப்புகளை “நீ இதனை கண்டிக்கிறாயா, இல்லையா?” என மிரட்டும் அவ்வமைப்புகள், இத்தகைய மூர்க்கத்தனமான சாதி வெறிக்கு எதிராக முதல் நபராக நின்று கண்டிக்க வேண்டுமே? ஏன் செய்யவில்லை? போகிற போக்கில் இல.கணேசன் மட்டும் எங்கோ ஒரு மூலையில், பல எச்சரிக்கை ஷரத்துக்களுடன், முணுமுணுத்துக் கொண்டிருப்பதன் காரணமென்ன?

தனிடையே, இதனைக் கொண்டு வழக்கம் போல, தனது நீண்ட கால அரசியல் நோக்கமான பெரியாரிய அழிப்பை எடுத்து வைக்கிறார் ஆசான். கொளத்தூர் மணி அங்கே திருச்செங்கோட்டுக்கே போய் பேசியிருக்கிறார். தொடர்ச்சியாக தமிழகமெங்கும் உண்மையில் பெரியாரிய அரசியலை ஏற்றுக் கொண்டவர்கள், ஆதரிப்பவர்கள் இதனைக் கண்டிக்கிறார்கள். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால், இடைநிலைச் சாதிகள், அவரைப் பொருத்தவரை பெரியாரிய அமைப்புகள், அங்கே திரள வேண்டும் என்கிறார்.“என்னை விடுங்கள் நான் பிற்போக்கு. அவர் உங்களவர். இருபதாண்டுக்காலமாக உறுதியான பெரியாரியர்களில் ஒருவர். அத்தனை பிரிவுகளும் சேர்ந்து சென்று திருச்செங்கோட்டை நிறையுங்கள்.ஃபேஸ்புக்கில் மட்டும் எப்படியும் பத்தாயிரம் பேர் இருப்பீர்கள் அல்லவா?” என எழுதுகிறார்.

perumal-muruganவேண்டும்தான். யாரும் யாரையும் தடுத்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால், தனது வாதத்தில் உள்ள ஒரு நகைமுரணை அவரோ, அவரது சீடர்களோ ஒரு போதும் கவனிக்கப் போவதில்லை. பெரியாரை உயர்த்திப் பிடிக்கும் பெருமாள் முருகன், தனது சொந்த சாதிக்கெதிராக நிற்கையில், அவரை சாதிப் பெயரைக் கெடுத்த சண்டாளனாகக் கருதி, அவருக்கு எதிராக அவரது சாதியினரே அணிதிரண்டு நிற்கும் நிலையில்தான், இத்தகைய கருத்தை ஆசான் உதிர்க்கிறார். மேலும், ஆசான் சொல்லியபடி பார்த்தால், கொளத்தூர் மணி திருச்செங்கோட்டுக்கு சென்றிருக்கக் கூடாதே? தமிழகம் முழுவதும் உள்ள இடைநிலைச் சாதிகள் உள்ள பெரியாரிய அமைப்புகள் வாய் மூடி இருந்திருக்க வேண்டுமே? அப்படியானால், ஏன் திருச்செங்கோடு அதிரவில்லை என்று கேட்பாரோ? எனக்குத் தெரிந்து உத்தப்புரத்திலும் பல காலம் இப்படித்தான் கேள்வி கேட்கப்பட்டது. இறுதியில், சி.பி.எம் தீண்டாமைச் சுவரை தகர்த்த பொழுதோ, கேள்வி கேட்ட எல்லோரும் பாராட்டி விடவில்லை.

றுதியாக, பல காலமாகக் கேட்டு கேட்டு புளித்துப் போன வாசகம் தான். “உனது கருத்தில் நான் உடன்பட வேண்டிய அவசியமில்லை, ஆனால், அக்கருத்தை நீ தெரிவிப்பதற்கான உனது உரிமைக்காக உயிரையும் கொடுப்பேன்” – வால்டேர். நான் மேற்கொண்டு சொல்லப் போவதை, பல நண்பர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை நன்கறிவேன்.

‘டேம் 999’ திரைப்படம் தடை செய்யப்பட்ட பொழுதும், ‘விஸ்வரூபம்’ தடை செய்யப்படவிருந்த பொழுதும், நானறிந்த இடதுசாரி அரசியல் நண்பர்கள், பெரியாரியவாதிகள், அரசியல் முற்போக்காளர்கள், முற்போக்கு அறிவுஜீவிகள் (பல விதிவிலக்குகள் உண்டு) அனைவரும் ஒன்று தடை செய்ய வேண்டும் அல்லது தடை செய்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, எங்களுக்கு கவலையில்லை, அவை பிற்போக்கு திரைப்படங்கள் என்ற நிலையையே கொண்டிருந்தனர். நான் கலந்து கொண்ட ‘விஸ்வரூபம்’ குறித்ததொரு அரங்கக் கூட்டத்தில் ஆவணப்பட இயக்குனர் நண்பர் அமுதனைத் தவிர மற்ற அனைத்துப் பேச்சாளர்களும் தடையை பெயருக்கேனும் கண்டிக்க கூட முனையவில்லை. மாறாக, படம் எத்தனை பிற்போக்கானது, இசுலாமியருக்கு எதிரானது என முன்வைப்பதிலேயே கவனம் கொண்டிருந்தனர். உண்மையாக இருந்தாலும், கருத்துரிமை என்பதனை ஒரு அரசியல் தந்திரமாகக் கருதுவது என்பது ஏற்றுக் கொள்ளவியலாததாக இருந்தது.

யானைகளின் காலம் முடிந்து பூனைகளின் காலம் வந்து விட்டது. இன்று நாம் கருத்துரிமை என்கிறோம். அவர்கள் “முற்போக்கு” என்பதற்காக தடை கோருகிறார்கள். இது ஒரு தீராத விளையாட்டாக மாறி விட்டது. முற்போக்காளர்கள் (மார்க்சிஸ்டோ, மார்க்சிஸ்ட்-லெனினிஸ்டோ, பெரியாரிஸ்டோ, அம்பேத்கரிஸ்டோ), தூக்கு தண்டனை, கருத்துரிமை ஆகிய ஜனநாயக விழுமியங்களை – முதலாளித்துவ அரசமைப்பிற்குள்ளும் கூட – முரணற்று உயர்த்திப் பிடிக்க வேண்டியதன் அவசியத்தை பரிசீலிக்க வேண்டும். தாரா சிங்கிற்கு தூக்கு தண்டனை வேண்டும், அஜ்மல் கசாப்பிற்கு கூடாது, அருண் சோரி எழுத்துக்களை தடை செய்ய வேண்டும், பெருமாள் முருகனுக்கு கூடாது என்பதான நமது முரண்பட்ட நிலைகள் இறுதியில் ஆளும் வர்க்கத்திற்கும், வலதுசாரி அரசியலுக்குமே சாதகமானதாக மாறுகின்றன.

நிபந்தனையற்ற கருத்துரிமைக்கான போராட்டமே நமது சாதிய, பிற்போக்கு சமூகத்தில் ஜனநாயக விழுமியங்களை வளர்க்க வழிவகுக்குமேயன்றி, கருத்துரிமையின் எல்லைகள் என்பதான தெளிவற்ற, முரணான நிலைப்பாடு நமக்கு பாதகத்தையே விளைவிக்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s