நந்தவனத்தின் ஆண்டிக்கு…

பிணத்திற்கு பக்கத்தில் நின்று
படம் எடுத்துக் கொள்வதைப் போன்ற இரங்கல் குறிப்புகளை
எழுத மனம் ஒப்பியதில்லை

பத்திரிக்கையாளர் கவின்மலரின் நிலைத் தகவலில் மேற்காணும் வரிகளைப் படித்தேன். இன்று அத்தகைய ‘புகைப்படங்கள்’ பலவற்றைக் காண நேர்ந்தது. பிறகு நானும் ஏன் எழுதத் துணிகிறேன்? அவருக்காக எழுத வேண்டுமெனத் தோன்றுகிறது. என்னைப் பற்றியன்றி, அவரைப் பற்றி மாத்திரம் எழுதத் தோன்றுகிறது.

இந்தநாள் முற்றிலும் எதிர்பாராத நாளல்ல. இப்படி ஒரு நாள் வரும் என்று தெரியத் தான் தெரியும். அவர் சில வருடங்களாகவே உடல்நலக் குறைவுடன்தான் இருந்தார். அவர் எழுதுவதை நிறுத்தி பல்லாண்டுகள் ஆகி விட்டன. ஆயினும், இன்று அவர் இறந்து விட்டார் என்ற செய்தி உருவாக்கும் ஒரு இனம் புரியாத மெல்லிய சோகத்தை எப்படி புரிந்து கொள்வது?

தோழர் பாலமுருகனின் செறிவான வரிகள் அதன் வேரை கோடிட்டுக் காட்டுகிறது. பலரது கருத்துக்களின் பிரதிபலிப்பாய் வெளிப்படுகிறது.

“ஜெயகாந்தனின் படைப்புலகமானது பலரை எழுத தூண்டியது. வாழ்க்கையின் மீதும் சமூகத்தின் மீதும் நம்பிக்கைகளை அளித்த எழுத்து ஜெயகாந்தனுடையது. அவரின் பிற்காலத்திய அரசியலுடன் கடுமையாக மாற்றுக்கருத்துடன் அவரை விலகியபோதும், எனது துவக்க காலத்தில் அவர் ஒரு கதாநாயகனே.”

ஆம். ஜே.கே, அவரது எழுத்துக்களாலும், தனது ஆளுமையாலும் தமிழகத்தின் இடதுசாரி அரசியல், இலக்கிய வட்டாரங்களில் ஒரு தன்னிகரற்ற கதாநாயகனாகத் திகழ்ந்தவர். இன்றுள்ள பெரும்பாலான எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்களின் ஆதர்சமாக, குறைந்தபட்சம் அவர்களது துவக்க கால ஆதர்சமாக வாழ்ந்தவர். ஒரு எழுத்தாளனுக்கென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியது அவருக்குத்தான். அவரது சபைகள் பிரசித்தி பெற்றவை. ஆவணப்பட இயக்குனர் ரவி சுப்பிரமணியனின் ‘எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்’, அவரது சபை சுவாரஸ்யங்களின் கோட்டுச் சித்திரத்தை வழங்கும்.

பிற்காலத்தில் அவரது ‘ஓரடியும் பின்னே, ஈரடியும் பின்னே’-யான கருத்துக்களுடன் உடன்பட முடியாமல், பலர் அவரை வியந்து போற்றுவதிலிருந்து விலகிக் கொண்டனர். அக்காலத்தில் அவர் முன்வைத்த அரசியல் கருத்துக்கள் எல்லாம் அவரை நேசித்த எனைப் போன்ற பலருக்கு சோவியத் தகர்விற்கு இணையான அதிர்ச்சியைத் தந்தவைதான். ஆனால், அந்த முதல் கதாநாயகன் மீது கொண்ட முதல் நேசத்தை எப்படித்தான் முழுக்க கைவிடுவது? அவன் படைத்த அற்புதமான இலக்கியங்களை எப்படித்தான் மறந்து விடுவது? அவன் உருவாக்கி உலவ விட்ட மனிதர்களை, அவர்கள் அன்று நம்முன் எழுப்பிய மதிப்பீடுகளை, அவை உண்டாக்கிய உணர்வுகளை, அவை நமது வாழ்க்கையின் அந்தரங்க நினைவுகளாக, நமது சொந்த மதிப்பீடுகளாக மாறியதை எப்படிக் கைவிடுவது?

அவருடன் கொண்ட அரசியல் கருத்து மாறுபாடுகளுக்காக, அவர் பல ஆண்டுகள் முன்பே மரணமடைந்து விட்டாரே என இன்று சிலர் அதிதீவிரமாக எழுதுவதைக் காண முடிகிறது. அவர்களது கருத்தில் முழுமையாக உடன்பட்டு அதற்கேற்ப நடந்து கொண்டது அதிதீவிர புரட்சித்தலைவி அரசு மாத்திரமே. நவீன தமிழ் இலக்கியத்தைப் பேசத் துவங்கினால், எவரைக் குறிப்பிடாமல் கடக்க முடியாதோ, அவரது மரணத்தை இவர்கள் கடக்கும் விதம், இவர்களது வரலாற்றுப் பார்வையின் ஆழத்தையும், தமிழ் இலக்கியம் என்ற வஸ்துவின் மேல் இவர்கள் கொண்டுள்ள மாளாக் காதலையும் விளக்குகிறது.

இன்றுதான் அவரை முதன்முறையாகவும், இறுதி முறையாகவும் நேரில் பார்த்தேன். ‘நான் இருக்கிறேன் அம்மா’ என்ற வரி நிழலாடியது. நாங்கள் இருக்கிறோம். நீங்கள் புறப்பட்டு விட்டீர்கள். நாளை நாங்களும் இருக்க மாட்டோம். ஆனால், நீங்கள் கண்டதைச் சொல்லியதும், எங்கள் கதையைச் சொல்லியதும் மாத்திரம் நிச்சயம் இருக்கும் என்றே தோன்றுகிறது.

தங்களது இந்தப் பாடலில் வருவது போல காலத்தின் முடிவற்ற சாலையில், எங்கோ நீங்கள் விசிலடித்தபடி, எங்களைக் கண்டு சிரித்தபடி கூடவே வருவீர்கள்தானே?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s