“ஒரு துளிக்கே
மரணமென்றால்
எனக்கு மட்டும் ஏன்
இத்தனை கோப்பை விஷம்?”
எனும் வரிகளை
நீ எடுத்து வைத்தாய் சாம்.
அக்கணத்திலிருந்து
மனதின் சிறிய அறைகளுக்குள்
அவை மோதி விழுந்து
மெல்ல அலையத் துவங்கின.
அதிகாலைப் பொழுதில்
தூறல்களாய்த் தொடங்கி
நிலம் நனைத்ததொரு பெரும் மழை.
அண்டம் தழுவிய விருட்சமாய்
மழை விரிந்த பொழுதில்,
வெளியெங்கும் பரவிய ஈரத்தில்,
நிரம்பி நின்ற இதமான இசையில்
நிலை கொண்டிருந்த விஷம்
மெல்லக் கலைந்து
காலத்தின் சமுத்திரத்தில் கலந்தது.
கோப்பைகள் மீண்டும் வரும்.
மழையும்தான்.
Advertisements