சடுதியில் பரிமாணம்
புதிராக மாறும் பாதையில்
என்றோ ஒரு வெயில் நாளில்
வின்சென்ட் தென்பட்டான்.
விரிந்து கிடக்கும் மணற்பரப்பு
சதுரங்கக் கட்டங்களாக,
ஏற்ற இறக்கம் புரியாத வண்ணம்
மாய விளையாட்டாய்
மாறிக் கொண்டேயிருந்தது.
உடன் வந்த ஒட்டகத்தின் நிழலில்
அவ்வப்பொழுது
அவன் உறங்கிக் கொண்டான்.
அத்திபூத்தாற் போல தென்பட்ட
சொற்களின் சுனைகளில்
இருவரும் தாகம் தீர்க்க,
நெடுந்தூரம் தொடர்ந்தது தீராப் பயணம்.
இடையில்
ஒரு வானவில் இடைவேளையில்
ஒட்டகத்தை அவன் காதலோடு முத்தமிட்டான்.
ஒட்டகத்தின் நிழல் அவனுடைய நிழலாகத்தான் இருந்தது.
Advertisements