ஒண்டிப்புலி கவிதையும், புண்படும் உரிமையும்!

உனக்கும், எனக்கும்,
அவனுக்கும், எனக்கும்,
உனக்கும், அவனுக்கும்,
அவனுக்கும், இவனுக்குமான
வாள்வீச்சுகளில்
உருத்தெரியாமல் கிடக்கிறது
கொலையுண்ட வரலாறு.

உனதான வரலாற்றின் குருதியெடுத்து
முகம் முழுக்கப் பூசி,
சினமேறிச் சிரிக்கிறாய்.
தோபா தேக் சிங்கின் குரலில்
உன்னிலிருந்து பாய்கின்றது குருதி.
வெடிக்கிற வார்த்தைகள்
சங்கீதமாக ஒலித்ததாக சரித்திரமில்லை.

பிறகென்ன,
அவனுடையதான வரலாறு
ஆவேசம் கொண்டெழுகிறது.
இவனுடையதான வரலாறு
இடையில் ஏதோ கூச்சலிடுகிறது.

தொலைதூரத்தில்
கால நதிக்கரையில்
காகிதக் கப்பல் விட்ட வண்ணம்
மாயகோவ்ஸ்கி முணுமுணுத்தான்.
“கவிதையல்ல பிரச்சினை. கூடவே
கோனார் நோட்ஸ் ஏன் கொடுக்கவில்லை?”

சாம்ராஜ்-க்கு

எனது கோனார் நோட்ஸ் இதோ:
மே 2009-க்குப் பிறகு நான் எங்கும் புலிகளை விமர்சித்ததில்லை. வழிபாடுகளை காண நேர்ந்தாலும், மெளனமாகக் கடந்து விடுவதுண்டு. அரசியல், காலத்தின் அவசியத்தை ஒட்டி, காலத்தின் முன்னிலைப்படுத்தல்களை ஒட்டி இயங்குகிறது. எனது மெளனம் அதன் வழி இயங்குகிறது. ஆனால், சாம்ராஜ் முதலான கலைஞர்களின் கலை காலத்தை கடந்தும், காலத்தை மீறியும் இயங்கும். கலை காலகட்டத்தின் அரசியல் அஜெண்டாவுக்கு உட்பட்டு, உணர்வுநிலைக்கு உட்பட்டுத்தான் இயங்க வேண்டுமென்றால், கலைஞன் அரசியல்வாதியாகி விடுவான். ஆனால், மாயகோவ்ஸ்கிகள் அதற்கு சம்மதிப்பதில்லை.

“மோசேயின் சட்டப்படி இவ்வாறு பாவம் செய்கிற ஒவ்வொரு பெண்ணையும் கல் எறிந்து கொல்லவேண்டும். நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று நீர் சொல்கிறீர்?”
யோவான் 8:5

யூதத் தலைவர்கள் அதே கேள்வியை இயேசுவிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். ஆகையால் இயேசு எழுந்து நின்று, “பாவமே செய்யாதவன் எவனாவது இங்கே இருக்கிறானா? இருந்தால் பாவம் செய்யாத அந்த மனிதன் இவள் மீது முதல் கல்லை எறியட்டும்” என்றார்.
யோவான் 8:7

சமீப காலத்திலிருந்து யோசித்தால் சங்கர் ராம சுப்பிரமணியன், லீனா மணிமேகலை, ஜோ.டி.குரூஸ், ஹெச்.ஜி.ரசூல், தற்பொழுது சாம்ராஜ் என யூதத் தலைவர்கள் குற்றம் சாட்டுபவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

என்ன, ஒவ்வொரு காட்சியிலும், யூதத் தலைவர்கள் (இடது, வலது, நடு, சிவப்பு, பச்சை, மஞ்சள் என எவரும் நீக்கமின்றி) மாறிக் கொண்டேயிருப்பார்கள். இந்தப் பக்கமும், அந்தப் பக்கமுமாய் அணிசேரும் அறிவுஜீவிகள், தாம் யூதத் தலைவர் பாத்திரம் வகிக்காத காட்சிகளில் மட்டும், கருத்துரிமைக்காக நா வறள குரல் கொடுப்பார்கள்.

பாரதிய ஜனதா முதல் மா-லெ புரட்சியாளர்கள் வரை பொசுக்கென புண்பட்டு விடுவார்கள். கோனார் உரை கேட்பதில் தொடங்கி கூடிக் கும்மியடிப்பது வரை கடமையாற்றிய பின்னால்தான் அவர்களது புண்கள் ஆறத் துவங்கும்.

குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது எல்லோருக்கும் தார்மீகக் கோபம் இருப்பதில்லை. பலருக்கு தனிப்பட்ட கோபத்தை வெளிப்படுத்திக் கொள்ள, குறிப்பிட்ட காட்சி பயன்படும். பலரது அறிந்த மெளனத்திற்கும் கூட அதுவோ அல்லது “அவர் அத்துணை பழக்கமில்லை” என்பதான அற்புதக் காரணமோ அல்லது “தலையைக் கொடுப்பானேன், தலைவலியை வாங்குவானேன்?” எனும் அற்பக் காரணமோ பின்னிருந்து இயக்கும்.

மொத்தத்தில், மாறி மாறி நடக்கும் காட்சி மாற்றங்களிலும், கதாபாத்திர மாற்றங்களிலும் தொடர்ந்து கல்லடி வாங்கி மொத்தமாக மடிந்து கிடப்பதென்னவோ, கடந்த நான்கைந்து நாள் காட்சியில் பலரும் கிண்டலும், கேலியுமாய் குறிப்பிடும் கருத்துரிமை எனும் வஸ்துதான்.

வாழ்க புண்படும் உரிமை! வளர்க அதன் புகழ்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s