மெத்தப் பெரிய உபகாரம்

ஷோபா சக்தியின் எழுத்திற்கு உள்ள மாபெரும் பலம் என்ன? நீங்கள் ஒரு மோசமான மனச்சோர்வில் இருப்பினும் கூட, ஒரு சில பக்கங்களை கடந்து அவரது கதைக்குள் பயணிக்க தொடங்கி விட்டால், பின்னர் அக்கதை தானாக முடியும் வரை, நீங்கள் உங்களை விடுவித்துக் கொள்ள முடியாது. அவரது கதையும், கதை சொல்லும் முறையும் ஒரு பிசாசைப் போல உங்களை ஆட்கொண்டு விடும்.

அவரது சொற்கள் கொண்டிருக்கும் கவர்ந்திழுக்கும் வாதைக்கு நீங்கள் தன்னையே ஒப்புக் கொடுத்து விடுவீர்கள். ‘கொரில்லா’-வை எதிர்கொண்ட பொழுதும், ‘ம்’-டன் உரையாடிய பொழுதும், எனக்கு இதுவே நிகழ்ந்தது. ஒரே மூச்சில் – அத்தியாவசிய இடைவேளைகளைத் தவிர – நூலைப் படித்து முடித்த பின்னால்தான் நிம்மதி கிடைத்தது. அவரது கதைகள், ஒரே நேரத்தில் மொழி விளையாட்டாகவும், காட்சிகளை கலைத்துப் போட்டு ஆடும் புதிராகவும், நெகிழ வைத்து தூய்மைப்படுத்தும் மனமொன்றிய பிரார்த்தனையாகவும் விரிந்த வண்ணமிருக்கும்.

box-cover

பாக்ஸ் கதைப்புத்தகமும் இதே தன்மையுடையதே. காலத்தின் எதிர்பாராத ஏதோவொரு கணத்திற்கு தாவிக் கொண்டே இருக்கிறது கதைக்களம்… அதன் மூலம் நாலாதிசைகளிலும் முற்றுகையிட்டு அழிக்கும் எதிரியின் உத்தியை பதிவு செய்யும் மைய இழை… அதனூடாக வாசகனாகவும், பிரதான கதாபாத்திரமாகவும் உருக்கொள்ளும் கார்த்திகை.. இன்னும் இதய ராணி, அமையாள் கிழவி, கார்த்திகைத்தம்பி, டைடஸ் லெமுவேல், சகோதரம், நாச்சியார், பிரணவன், மயூரன், சைனீஸ் திலகர், அமிர்த கலா… என எத்தனை எத்தனை பேரின் வாழ்க்கைக் கதைகள்… உரைமொழிப் பதிவுகள்…

காலத்துடனும், மொழியுடனும், வரலாற்றுடனும், நிலப்பரப்புடனும் ஷோபா நிகழ்த்தும் மொழி விளையாட்டின் விளைவாக ஒரு சேர கதைப் புத்தகமாகவும், ஈழத்தின் எளிய மக்களது பண்பாட்டு ஆவணமாகவும் இந்நூல் உருக்கொள்ளுகிறது.

இருபத்து மூன்றாம் கதையில் தொடங்கி இருபத்தி ஏழாம் கதை வரை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கார்த்திகைக்காக நடித்துக் காட்டும் காட்சிகள்… இலக்கியத்தில் மாத்திரமே சாத்தியப்படும் கட்டுகளற்ற காட்சிப்படுத்தலுக்கான உதாரணம். புலிகள் குறித்த மனம் திறந்த சுயவிமர்சனப் பார்வை கொண்ட விசாரணையும், ஈழ சமூகத்தில் அன்றும், இன்றும் ஆதிக்க சாதியினர் எத்துணை வலுவானவர்களாக, வன்முறை கொண்டவர்களாக கோலோச்சுகின்றனர் என்பது குறித்த பார்வையும், பதிவும், பல்வேறு கதைகளினூடாக வெளிப்படுகின்றன.

நாவல் முழுதும் எது புனைவு, எது உண்மை எனப் புரியாமல் நாம் தடுமாற நேர்கிறது. தன்னிலையில் ஆசிரியர் மொழிவதைக் கூட விடுங்கள். ஆங்காங்கே ஊரின் புகைப்படங்கள் கூட வருகின்றன. நம்மை முழுமையாக உலுக்கிப் போட்டு உறையச் செய்யும் உப பிரதி X-ஐ உண்மையென்று நம்பி ஆசிரியர் குறிப்பிடும் புலனாய்வு எழுத்தாளரது பெயரையும், அவரது நூலையும்  நான் கூகுளில் தேடி ஏமாந்தேன். இன்னமும் கூட ஆஸ்கர் சிங்கோ உண்மை மனிதரா, புனைவா எனும் ஐயம் எனக்குத் தெளிந்தபாடில்லை. 40-வது பக்கத்திலும், 155-வது பக்கத்திலும் பிரான்சின் La Basilique du Sacré Cœur de Montmartre-க்கு அருகில் ஒரு முகவரியை வைத்து ஷோபா ஆடும் புதிர் விளையாட்டு, புனைவு மனநிலையில் மட்டுமே திறக்கின்ற, புன்முறுவல் பூக்க வைக்கும் வாசல்.

கதையின் சஸ்பென்சை உடைக்கக் கூடாதென்பதால் பல விஷயங்களை சொல்லாமல் விடுகிறேன். ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும். 242 -பக்கத்தில் ஒரு வசனம் வருகிறது. “அம்மா! ஒரு நல்ல துறவி எப்போதும் துறவியாக இருப்பதில்லை.” அந்த வரியை பல முறை திரும்பத் திரும்ப படித்த வண்ணமிருந்தேன். துறவிக்கு பதிலாக புரட்சியாளன், எழுத்தாளன், கலைஞன் எனப் பலவாறாக மாற்றி படித்துப் பார்த்தேன். எத்தShobasakthi-in-Dheepanகைய அதிர்ந்து ஆற்றுப்பட வைக்கும் வாசகம் அது, “ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி”-யைப் போல?

நூலை சமர்ப்பிக்கும் பக்கத்தில் பலரையும் குறிப்பிட்டு “மெத்தப் பெரிய உபகாரம்” என எழுதியிருக்கிறார் ஷோபா. தமது கதைகளின் உலகத்தில் நம்மையும் சக பயணிகளாக சேர்த்துக் கொள்வதுதான் அவர் நமக்கு செய்து வருகிற மெத்தப் பெரிய உபகாரம். நன்றி சகோதரம்.

நூலைப் படித்து முடித்த நாளின் இரவில் வெகு நேரம் ஏதேதோ ஈழம் தொடர்பான கட்டுரைகளை படிக்க முயன்றேன். நான் பிரபாகரன் ரசிகனில்லை. ஆனால், அன்று இரவு, எண்பதுகளின் ஒரு மது விருந்தில், அறிவுரை பகரும் இந்திய இராணுவ அதிகாரிக்கு பிரபாகரன் சிரித்தவாறே முகத்திலத்தடித்தாற் போல பதிலுரைக்கும் யூடியூப் காட்சியை ஏனோ பார்த்துக் கொண்டேயிருந்தேன். நூலைப் படிக்க துவங்கியது முதல் பல முறை நினைவில் எழும்பியும் கூட, ராணுவ வாகனத்தில் பிஸ்கட் தின்றவாறு அமர்ந்திருந்த அந்தச் சிறுவனின் புகைப்படத்தை பார்க்க மட்டும் மனம் வரவேயில்லை.

Advertisements

2 thoughts on “மெத்தப் பெரிய உபகாரம்

 1. ஷோபாசக்தியின் BOX கதைப்புத்தகம் நாவல் – ஒரு வியாபார அரசியல்…

  ஷேபாசக்தியின் BOX கதைப்புத்தகம் நாவலினை நுகர்ந்து முடித்த பொழுதினில் இப்பதிவினை இடுகிறேன். ஏலவே கொரில்லா, ம் என இரு நாவல்களைத் தந்து மூன்றாவது நாவலாக BOX கதைப்புத்தகம் வெளிவந்திருப்பதில் மகிழ்ச்சி…

  அட்டைப்படத்திலிருந்து ஆரம்பித்தால் BOX முதல் தமிழ் கொலையினை தலைப்பில் விட்டுச் சென்றிருக்கிறார் ஷோபாசக்தி. தமிழில் பிற மொழி கலத்தல் என்பது ஆதி காலம் தொட்டு நிலவி வந்தாலும் அது ஆரோக்கியமானதாக இருந்ததில்லை. சங்கமருவிய காலம் தொட்டு நாயக்கர் காலப் பகுதிகளில் தமிழ் மொழியுடன் வட மொழி கலந்த அமைப்பியலை ‘மணிப்பிரவாள நடை’ என்று அழைத்தார்கள். நாயக்கர் கால இலக்கிய செயற்பாடுகள் ஜொலிக்காமைக்கு மொழிக்கலப்பே பெரும் காரணமாய் அமைந்ததால் அதே கதி இன்று ஷோபாசக்தியின் நாவலிற்கு கிடைத்திருக்கிறது.

  தமிழின் மீதும், தமிழ் இனத்தின் மீதும் தீராத பற்றுக் கொண்டவராய் தனது அனைத்து படைப்புகளிலும் கவனம் செலுத்தும் ஷோபாசக்தி ஆங்கிலத் தலைப்புடன் தமிழ் கலந்திருப்பது புலம் பெயர்ந்து தான் வாழ்வதால் அதன் மீதான தந்திரோபாய அரசியல் என்று முன்அட்டை விளம்பரத்தை முன் வைக்கலாம்…

  நாவலிலினை காணிக்கையாக பாலச்சந்திரனுக்கும் ஈழப்போரில் மாண்ட குழந்தைகளுக்கும் அர்ப்பணித்திருக்கிறார். தாங்கள் அச்சந்ததியினரை காக்க தவறிவிட்டதாகவும் பரிதவிக்கிறார். ஆம் நிச்சயமாக ஷோபாசக்தி அவரின் சந்ததிகளை காப்பதற்கு தவறிவிட்டார் என்பது இலகுவில் புரிந்து கொள்ளக்கூடிய உண்மை.

  புலம் பெயர்ந்து பிரான்ஸிலும் கனடாவிலும் வெறும் எழுத்து பொம்மைகளாகவும் திரைப்பட நடிகர்களாகவும் உல்லாசம் அனுபவிப்பவர்கள் இப்படி பேசுவதில் ஆச்சரியமில்லை. ஒரு போதும் இவர்கள் செயற்பாட்டாளர்களாக இருந்ததும் கிடையாது. யுத்தத்தின் அவலங்களை கவிதைகளாலும் கதைகளினாலும் வடிக்கும் இவர்கள் தனது சொந்த மண்ணிற்கு யுத்த முடிவிற்குப்பின் கால் வைத்ததும் கிடையாது. ஆனால் பேனை தூக்கி விட்டால் இவர்களைப் போல் தமிழ் இன பற்றுள்ளவர்களை காணவும் முடியாது. உண்மையில் சிறந்த நடிகருக்கான விருதினை வெள்ளக்காரன் அறிந்துதான் கொடுத்திருக்கிறான்….

  இனி நாவலுக்குள் வருவோம். அங்கே மீண்டும் அதே பல்லவி யுத்த அரசியலை மிகையாக்கப்பட்ட புனைவுடன் நிஜம் எனும் பெயரில் முன்வைக்கப்பட்ட ஒரு இருட்டடிப்பே BOX கதைப்புத்தகம்…

  மு.பொ வின் ‘நோயில் இருத்தல்’ பேசிய போரியல் செயற்பாட்டின் ஒரு துளியேனும் தொடவில்லை. குறைந்தது சாதி போராட்டத்தினை முன்வைத்த டானியலின் ‘பஞ்சமர்’ கொண்டிருக்கும் யாழின் காட்சிப்படுத்தல் கூட சரிவர இடம்பெறவில்லை. போருக்குப் பின்னரான வாழ்வியல் அம்சங்களை பேச முற்பட்டு புனைவே வாழ்வாகி மிகைப்படுத்திக் கூறும் ஷோபாசக்தியின் நாவல் எதனை மையப்படுத்துகிறது என்பதே பெரும் குழப்பம். இதை விட முன்பொரு காலம் ஷோபாசக்தி எழுதிய ரம்ழான் போன்ற கதைகள் எவ்வளவோ மேல்….

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s