ஒரு ‘கம்யூனிஸ்ட்’ கிராமத்தில் நிகழ்ந்த காதல் கதை!

தவு தட்டப்படும் ஓசை தொலைதூரத்தில் கேட்டது. திடுக்கிட்டு விழித்து எழுந்தவன், கதவைத் திறந்தேன். ஹவுஸ் ஓனர் தனது வழக்கமான அரை டிரவுசர், டீசர்ட்டுடன் நின்று கொண்டிருந்தார்.

கடுப்பை மறைத்து கொண்டு, “என்ன சார்?” என்றேன்.

“ஒனக்கு ஃபோன்பா”

“யாரு?”

“அந்தப் பையன் பிரேம் இல்ல, அவந்தான்”

அது மொபைல்கள் இல்லாத காலம். அதாவது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு. ஹவுஸ் ஓனரின் போர்ஷனிலிருந்த கிணுகிணுக்கும் தொலைபேசிதான் மற்றொரு போர்ஷனில் வாடகைக்கு தங்கியிருந்த எங்கள் நால்வரின் ஒரே தகவல் தொடர்பு சாதனம்.

கைலியை இழுத்துக் கட்டிக் கொண்டேன். ஹாங்கரிலிருந்த சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு, அவரது போர்ஷனுக்கு சென்றேன். அவர் வீட்டுத் தொலைக்காட்சியில் ஏதோவொரு எம்.ஜி.ஆர் பாடல் ஓடிக் கொண்டிருந்தது.

“ஹலோ”

“ஹலோ தோழர், எவ்ளோ நேரம், என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க?” பிரேம் கோபத்தோடும், பதட்டத்தோடும் இருந்தார். அது வழக்கமான ஒன்றுதான். அவர் பொறுமையாகப் பேசினால்தான் ஆச்சரியம்.

“தூங்கிட்டிருந்தேன் தோழர். சொல்லுங்க!”

“போன்லல்லாம் சொல்ல முடியாது தோழர். ஒரு அவசரமான பிரச்சினை. ஒடனே சரபோஜி காலேஜ் வாசலுக்கு வாங்க!”

“என்னாச்சு தோழர்? ஏன் இவ்ளோ பதர்றீங்க?”

“சொல்றேன் தோழர். ஒடனே கிளம்பி வாங்க..”

போனை வைத்து விட்டார். பிரேம் பதறுவார்தான். ஆனால் இத்தனை பதற்றம் இதுவரை காணாதது. ஏதோ தீவிரமான பிரச்சினைதான்..

பேருந்தில் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தேன். மதிய வெயில் உக்கிரமாக அடித்தது. பொதுவாக தஞ்சையில் வெயில் அதிகமிருப்பதில்லை என்பது என் எண்ணம். ஆனால், வெயில் அடித்தால் உக்கிரமாக அடிக்கும்.

தஞ்சையில் உள்ள பொறியியல் கல்லூரியில் சேர்ந்த ஒரு வருடத்திலேயே மார்க்சிய-லெனினிய அமைப்பொன்றில் உறுப்பினராக சேர்ந்து விட்டிருந்தேன். அவ்வமைப்பு தேர்தலில் பங்கெடுப்பதில்லை.  அவர்களது போர்க்குணம் மிக்க பாடல்களும், செயல்பாடுகளும் அக்காலத்தில் என்னை மிகவும் ஈர்த்தன. அடுத்த ஒரு வருடத்தில் அதே அமைப்பில் பிரேம் உறுப்பினரானார். அப்பொழுது பிரேம் உயிரியியலில் முதுகலைப் பட்டத்திற்கு படித்துக் கொண்டிருந்தார். குறுகிய காலத்திலேயே நானும் அவரும் நல்ல நண்பர்களாகி விட்டிருந்தோம்.

என்ன பிரச்சினையாக இருக்கும்? எதுவாக இருந்தாலும் போனில் சொல்ல முடியாத அளவிற்கு என்ன அவசரம்? பேருந்து புதிய பேருந்து நிலையம் வந்து விட்டிருந்தது. இறங்கி சரபோஜி கல்லூரிக்கு நடக்கத் துவங்கினேன்.

அன்று சனிக்கிழமை. அதனால் கல்லூரி வாயிலில் மாணவர்கள் யாரும் கண்ணில் படவில்லை. அக்கல்லூரிக்கு நாங்கள் அடிக்கடி செல்வதுண்டு. ராஜ்குமார் எனும் மாணவர்தான் அங்கே எங்களுடன் நெருக்கமாக இருந்தார். அவரது தலைமையில் மாணவர் அமைப்புக்கான கிளையொன்றை கட்ட முயன்ற காலமது.

IMG_2189சற்று பள்ளமாக உள்ளிறங்கும் கல்லூரி வாசலில் இறங்கி உள்ளே சென்றேன். சற்று தூரம் சென்றவுடன், பிரேம் தனது பைக்கினருகே யாரோ ஒரு பையனுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதைக் கண்டேன்.  அவர்களுக்கு அருகிலேயே ராஜ்குமாரும் நின்றிருந்தார். சற்று தள்ளி ஒரு இளம் பெண்ணும், இன்னொரு வாலிபரும் நின்றிருந்தனர். என்ன பிரச்சினை? யார் இவர்கள்?

ராஜ்குமார் என்னைக் கண்டு மெலிதாகப் புன்னகைத்தார். உடனே, வாக்குவாதம் செய்து கொண்டிருந்த பிரேம் என்னை நோக்கித் திரும்பினார்.

“இங்கயே நில்றா…” என்று அந்தப் பையனை பார்த்து சீறியவர், என்னை நோக்கி வந்தார்.

“என்னாச்சு பிரேம்? என்ன நடக்குது?”

“தோழர், அந்தா நிக்குறார்ல அவரு பேரு சேகர். நம்ம ராஜ்குமார் ஃப்ரெண்டு. பக்கத்து ஊர்க்காரர்தான். இங்க சரபோஜியில இரண்டாம் ஆண்டு எகானமிக்ஸ் படிக்கிறாப்ல. அந்தப் பொண்ணு பேரு ஜானகி. அவுங்களும் அதே ஊருதான். ரெண்டு பேரும் விரும்புறாங்க. கேஸ்ட் பிரச்சினை. அதுனால, இந்தப் பொண்ணு இப்ப வீட்ட விட்டு ஓடி வந்துட்டாங்க. ராஜ்குமார்ட்ட உதவி கேட்டிருக்காங்க. அவருதான் எனக்கு போன் பண்ணாரு…”

நான் இருவரையும் பார்த்தேன். ஒரு வெளிறிய சிவப்பு நிற சுடிதாரில் ஏறத்தாழ பிரமை பிடித்தவர் போல ஜானகி நின்றிருந்தார். கருத்து, களைத்திருந்த அவரது முகத்தில் கண்களில் ஏதோ ஒரு ஒளி தென்பட்டது. அதனில் அனாயாசமான உன்மத்தமும், தீவிரமும் விளங்கியது. அவர் என்னை வெறுமனே ஒரு முறை பார்த்தார். பின்னர், வேறு எங்கோ பார்த்தவண்ணம் யோசிக்கத் துவங்கினார். ஒரு வகையில் அவரது முதல் பார்வை மிரட்சியூட்டுவதாக இருந்தது.

இதற்கு நேர் மாறாக, ஒரு பழுப்பு நிற முழுக்கை சட்டையை மடித்து விட்டிருந்த சேகர் அமைதியாக எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அது ஒரு வகையான வேதனை மிக்க அமைதியாகவிருந்தது. அவர் முகத்திலிருந்த கலக்கம் அங்கே அமைதியாக பரவிக் கொண்டிருந்தாற் போலத் தோன்றியது.

“சரி தோழர்! கொஞ்சம் பொறுமையாப் பேசுவோம். இந்த சின்னப் பையன் யாரு? உங்க கூட ஏதோ வாக்குவாதம் பண்ணிக்கிட்டிருந்தானே?”

“இந்த புள்ளக்காப் பயலா? இவன் ஜானகியோட தம்பி. பிளஸ் ஒன் படிக்கிறான். ஜானகி ஊருல இருந்து பஸ் ஏறுனதும், அவுங்கள ஃபாலோ பண்ணி இங்க வரைக்கும் வந்துருக்கான். சின்னப் பையன்னு பாத்தா ஜாஸ்தியா சவுண்டு வுடுறான். இன்னிக்கு இவன் என்கிட்ட வாங்காமப் போக மாட்டான்…” என்றவாறு அவனை நோக்கி முறைத்தார். அவனும் பதிலுக்கு முறைத்தான்.

அவனுக்கு மீசை கூட முளைத்திருக்கவில்லை. சிகையும் கூட வெகுவாகக் குறைத்து வெட்டியிருந்தான்.

நான் சற்று முன்னகர்ந்து ஜானகி மற்றும் சேகருக்கு அருகில் சென்றேன். இருவருக்கும் வணக்கம் சொன்னேன். “எதுனால இப்படி தீடீர்னு…?”

“நேத்திக்கு சாயங்காலம்…இனிமே இவரோட பேசக் கூடாது, பழகக் கூடாதுன்னு… எங்கம்மா என்னைய…விறகுக்கட்டையால… அடிஅடின்னு அடிச்சாங்க… அதான்…” ஜானகியின் சொற்கள் தயங்கித் தடுமாறின.

“தோழர், இவுங்க கே.எல் பார்ட்டி. சேகரு பி.ஆர். அதுனால, இவுங்க அப்பாம்மாக்கு பயங்கரக் கோவம். ஏற்கெனவே, அரசல் புரசலா தெரிஞ்சப்பவே இவுங்கம்மா வஞ்சிருக்கு. நேத்திக்கு இவரப் பாத்துட்டு வீட்டுக்குப் போயிருக்காங்க. இவுங்க தம்பி பின்னாலேயே போயி வத்தி வச்சிருக்காப்ல. ஒடனே, அவுங்கம்மா வெறகுக் கட்டைய எடுத்து மாட்ட அடிக்கிற மாதிரி அடிச்சிருக்காங்க. எப்படின்னாலும் இவனுங்க நம்மள உசுரோட விட மாட்டானுங்கன்னு நெனச்சுதான் இவுங்க காலையில பஸ்ஸேறி வந்துட்டாங்க…”

ராஜ்குமார் சொல்லிக் கொண்டிருந்தார். ஜானகி தலைகுனிந்து தரையைப் பார்த்தவண்ணம் நின்றிருந்தார். மெல்லிய கோடாக அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது.

“பஸ் ஸ்டாண்டுல இவுங்க பஸ் ஏர்றதப் பாத்த தம்பிகாரன் பின்னாடியே ஃபாலோ பண்ணி வந்திருக்கான். இவுங்க போலிசு எக்ஸாம்லாம் எழுதியிருக்காங்க. இன்னும் ரெண்டு, மூணு மாசத்துல போஸ்டிங் கெடச்சிரும்குறாங்க. அதுனால, எப்படியாச்சும் கல்யாணம் மட்டும் பண்ணி வச்சிடுங்கங்கன்னு சொல்றாங்க… ஆனா, சேகர்தான் கொஞ்சம் தயங்குறாப்ல..”

ஏன் என்பது போல அவரைப் பார்த்தேன். அவர் மெளனமாகவே நின்றிருந்தார்.

“சொல்லுங்க சேகர்..” என்றார் ராஜ்குமார். சேகர் ஒருவித தயக்கத்துடன், “வேற என்னங்க… கீழத் தெருவுல மொத்தம் இருக்குறதே பத்து பதினஞ்சு வீடுதான். பிரச்சினையாச்சுன்னா ஒருத்தர் கூட ஊர்ல மிஞ்ச முடியாது…”

“இன்னொரு விசயம் தோழர். இவுங்க ஊரே கம்யூனிஸ்ட் கிராமம்தான். பட்டுக்கோட்டைக்கு பக்கத்துல இருக்கிற குரும்பனூரு… இவுங்க ரெண்டு பேர் வீடும் கூட எதுத்த வீடு தான்… இவுங்களுக்கு ஜானகிங்கற பேரு கூட ஒரு கம்யூனிஸ்ட் தியாகி நினைவா வச்சதுதான்” ராஜ்குமார் சாதாரணமாக சொன்னார். நான் அதிர்ச்சி அடைந்தேன்.

என்னது, கீழத்தஞ்சையா!? அது கம்யூ. கோட்டையாச்சே? இன்றைக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு தமிழகத்தில் உறுதியாக எம்.எல்.ஏ சீட்டும், எம்.பி சீட்டும் கிடைக்கிற பகுதிகளாச்சே? அப்படியானால், இதனை சுமுகமாக தீர்த்து விடலாம்.

“சரி தோழர். நானும் பிரேமும், தோழர்.பச்சையப்பன்-கிட்ட பேசிட்டு வர்றோம். அதுவரைக்கும் கல்லூரிக்குள்ள தனியா இருக்கிறத விட வெளிய கடைப்பக்கமா நில்லுங்களேன்…” என ராஜ்குமாரிடம் கூறி விட்டு, பிரேமை நோக்கித் திரும்பினேன். அவர் ஜானகியின் தம்பியை முறைத்த வண்ணம் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார்.

அந்தப் பையன் அருகில் சென்று, “ஏந்தம்பி, நீ படிக்கிற பையந்தான, ஒன் சொந்த அக்கா… ஏன்பா இப்படி இருக்குற” என்றேன். அவன் என்னை முறைத்துப் பார்த்தான். “அவளுக்கு இன்னிக்கு இருக்கு, ஊர்ல இருந்து எல்லாரும் கிளம்பி வர்றாங்க, மொத்தமா ஒங்க எல்லாரையும் சுளுக்கெடுத்துட்டுதான் மறுவேல..” என நிதானமாக, தெளிவாக சொன்னான். ஒரு சிறுவனின் குரலில் வெளிப்பட்ட கடுமையான சொற்கள் என்னை ஆச்சர்யப்படுத்தின.

உடனடியாக பிரேம் அவனை நோக்கிப் பாய்ந்தார். “எங்க, மேல கை வைடா பாப்பம். சுள்ளான் மாதிரி இருந்துகிட்டு வாயப் பாரு, ஓன் மூஞ்சியப் பேக்குறனா இல்லயா பாரு” என கை ஓங்க, நான் அவரை தடுத்து நிறுத்தினேன். “தோழர், வாங்க.. நாம தோழர்.பச்சையப்பன்-கிட்ட பேசிட்டு வருவம். அப்புறம் பாத்துக்கலாம்.” பிரேம் ஆத்திரம் அடங்காமல் திமிறிய வண்ணம் மெல்ல விலகினார்.

“நான் திரும்பி வர்றதுகுள்ள ஓடிப் போயிடு. இல்ல…” என்றவாறு பைக்கை உதைத்தார். நான் ராஜ்குமாரைப் பார்த்து தலையசைத்து விட்டு, அவருடன் ஏறி அமர்ந்தேன். ராஜ்குமார் ஜானகியையும், சேகரையும் அழைத்துக் கொண்டு கல்லூரி வாயிலை நோக்கி நடக்கத் துவங்கினார். அந்தப் பையன் அதே இடத்திலேயே நின்றவாறு திமிராக பார்த்துக் கொண்டிருந்தான்.

தோழர் பச்சையப்பன், எங்கள் அமைப்பின் மூத்த தோழர்களில் ஒருவர். தஞ்சை மாவட்டத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். முக்கியமாக, அந்த நாட்களில் அவசரத்திற்கு தொடர்பு கொள்ள தொலைபேசி வசதி இருந்த ஒரே தோழர். அவரைத் தொடர்பு கொண்டு விசயத்தை விளக்கினேன். இன்னொரு தோழர் வீட்டில் அவர்களை கொண்டு வைக்குமாறும், மாலையில் தான் வந்து சந்திப்பதாகவும் தெரிவித்தார். நானும் ஆமோதித்து விட்டு, பிரேமுடன் கல்லூரி வாசலுக்கு எதிரே வந்தேன்.

கல்லூரி வாயில் எதிரே ஒரு பெரிய வேப்பமரம் உண்டு. பைக் மரத்தை நெருங்குகையில்தான், மரத்தினடியில் ஒரு காவல்துறை ரோந்து வேன் நின்றிருந்ததை கவனித்தேன். அதனுள்ளே ராஜ்குமார் ஏறிக் கொண்டிருந்தார்… உள்ளே ஜானகியும், சேகரும் கூட இருந்தார்கள்… என்னவாயிற்று? ஏன் போலீஸ் வாகனத்தில்? அவர்கள் எப்படி இங்கே?

பைக்கை விட்டிறங்கி ஓடினோம்.

ஜன்னல் வழியே ராஜ்குமார் தலையை நீட்டி, “தோழர், காலேஜ விட்டு வெளிய வந்த கொஞ்ச நேரத்திலேயே இந்த வேன் வந்திருச்சு. என்ன ஏதுன்னு சும்மா பேருக்கு விசாரிக்க ஆரம்பிச்சுட்டு ‘வாங்க, வாங்க ஸ்டேஷனுக்கு போயி பேசிக்கலாம்’-ன்னு ஏத்திட்டாங்க.. எதுத்தாப்ல இருக்கிற கடைக்காரன் எவனாவதுதான் போட்டு குடுத்துருக்கணும்… இவுங்க தம்பி வேற அங்கயிருந்து தொணதொணன்னு வந்தான்…”

ஜானகியின் தம்பியும் வாகனத்தின் உள்ளே இருந்தான். ஜானகி அமைதியாக தலைகுனிந்து அமர்ந்திருந்தார். ஒரு கணம் தலை உயர்த்தி எங்களைப் பார்த்தார். அவரது கண்களில் அதே உன்மத்தம் மீண்டும் சுடர் விட்டது.

“நீங்க எதுக்கும் இ.கம்யூ ஆபிசுக்கு போயி அங்க ஒரு தகவல் சொல்லுங்க தோழர். பச்சையப்பன் தோழரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு வாங்க”

“சரி” எனத் தலையாட்டினேன்.

நான் போலீஸ்காரரிடம், “எந்த ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப் போறிங்க?” எனக் கேட்டேன். “மெடிக்கல் காலேஜ், அங்க வந்து ஐயாவப் பாருங்க..” என ரோட்டை பார்த்த வண்ணம் பதிலளித்து விட்டு, “வண்டிய எடுப்பா” என டிரைவரிடம் சொன்னார். வேன் கடந்து செல்லத் துவங்கியது. நாங்கள் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

கண்ணுக்கு நேராக அவர்களை தவற விட்டு விட்டோமே என இருவருக்கும் மனம் அடித்துக் கொண்டது. கசப்பும், எரிச்சலும் வெயிலுடன் சேர்ந்து ஏறியது. சிறிது நேர மெளனத்திற்குப் பின், “சரி பிரேம், பச்சையப்பன்-கிட்ட நடந்த விசயத்த சொல்லிட்டு, இ.கம்யூ அலுவலகம் வரைக்கும் போயிட்டு வருவோம். அதுக்கப்புறம் நேரா ஸ்டேஷனுக்கு போயிடலாம்” என்றேன்.

“அவனுங்க வேஸ்டு தோழர். போயிப் பாத்து பிரயோசனம் இல்ல…”

“பரவாயில்ல தோழர். முயற்சி பண்ணிப் பாப்போம். வேற என்னதான் வழி?”

“அப்பவே அவன அடிச்சி ஓட விட்டுட்டு, இவுங்கள எங்கயாவது கூட்டிட்டுப் போயிருக்கலாம் தோழர்..”

“இப்பிடி தீடீர்னு போலீசு வரும்ணு தோணாமப் போச்சே… என்ன, அமைப்பில ஒரு வார்த்த கேட்டுட்டு செய்யலாம்னு யோசிச்சோம்…”

“ஒரு பொண்ணு கண்ண கசக்கிட்டு நின்னாலே, எல்லாருக்கும் மூக்கு வேர்த்துரும்…நமக்கு முன்னாடியே தோணியிருக்கனும்…”

“சரி. வாங்க கிளம்புவோம்..”

விசயத்தை சொன்னவுடன், பச்சையப்பன் அதிர்ச்சியடைந்தார். எங்களை இ.கம்யூ அலுவலகத்திற்கு சென்று தகவல் தெரிவிக்கவும், தாம் விரைவில் வேலைகளை முடித்துக் கொண்டு மாலைக்குள் காவல் நிலையம் வந்து சேர்ந்து விடுவதாகவும் சொன்னார். நாங்கள் இ.கம்யூ அலுவலகத்திற்கு விரைந்தோம்.

தஞ்சை நகரம் மிகவும் சிறியது. அடுத்த பத்து நிமிடங்களில் இ.கம்யூ அலுவலக வாசலில் இருந்தோம். கம்யூ அலுவலகத்திற்கே உரிய அழுக்குடனும், பழமையுடனும், இடிபாடுகளுடனும் காட்சியளித்தது. நிலை வாசல் தாண்டி உள்ளே சென்ற பொழுது, அங்கே ஒரு வயதான மனிதர் உணவருந்திக் கொண்டிருந்தார். அவரருகில் ஹோட்டலில் வாங்கி வந்திருந்த உணவுப் பொட்டலங்கள் இருந்தன. நாற்காலியில் அமர்ந்திருந்தவர் என்ன என்பது போல பார்த்தார்.

“தோழர் ரங்கசாமி…” என இழுத்தேன். வயதான மனிதர் எங்களை நிமிர்ந்து பார்த்தார். அதற்குள் மற்றவர், “தோழர் சாப்பிட்டிக்கிட்டிருக்காரு… போயிட்டு ஒரு அரை மணி நேரம் கழிச்சு வாங்க.” என்றார். அவரது அரசு அலுவலர் தன்மையிலான பதில் என்னை வேறெதுவும் பேச விடவில்லை. சரியெனத் தலையாட்டி விட்டு நாங்கள் வெளியிலிருந்த தேநீர்க் கடையை நோக்கி சென்றோம்.

ராஜ்குமார் என்ன செய்து கொண்டிருப்பார்? ஜானகியும், சேகரும் பாதுகாப்பாக இருப்பார்களா? எனப் பதட்டத்துடன் எண்ணிக் கொண்டிருந்தேன். பிரேம் வெறுப்போடு அவர்களது அலுவலகத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அரை மணி நேரம் கழிந்ததும், மீண்டும் அங்கே சென்றோம்.

ஒரு பெரிய மர நாற்காலியில் ரங்கசாமி அமர்ந்திருந்தார். எங்களை பார்த்தவுடன் உள்ளே வருமாறு தலையசைத்தார். உட்கார்வதற்கான நாற்காலிகளையும் காண்பித்தார். விசயத்தை சுருக்கமாக எடுத்துரைக்கத் துவங்கினேன். நிதானமாக கேட்டுக் கொண்டிருந்தார். கண்களை மூடுவதும், பின்னர் அகல விரிப்பதும், மோட்டு வளையைப் பார்ப்பதும் என விசித்திரமாக ஏதோ செய்த வண்ணமிருந்தார்.

நான் சொல்லி முடித்தவுடன், கண்களை நிதானமாகத் திறந்தார். “குரும்பனூர் ஒரு கம்யூனிஸ்ட் கிராமம் தம்பி… அனேகமா நீங்க சொல்ற பொண்ணு எனக்கு தெரிஞ்ச பொண்ணாதான் இருக்கணும். அனேகமா நாந்தான் பேரே வச்சிருக்கணும்..” என சொல்லி புன்னகைத்தார். எங்களது எதிர்வினையை கணிப்பதற்காகவோ என்னவோ ஒரு கணம் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார். நாங்கள் அவரையே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

“இது சின்னப் பிரச்சினை தம்பி. ஊர்க்காரங்கட்ட பேசி யார், என்னென்னு விசாரிச்சுட்டு, நானே ஸ்டேஷனுக்கு போயிப் பாத்துக்குறேன். நானே ரெண்டு பேர் குடும்பத்துகிட்டயும் பேசி, சுமுகமா முடிச்சி வைக்கிறேன். நீங்க போயிட்டு வாங்க…” என்றவாறு கும்பிட்டார். வேறு ஏதாவது இருக்கிறதா என்பது போல பிரேமைப் பார்த்தேன். பிரேம் நாற்காலியை விட்டு எழுந்திருந்தார். நானும் எழுந்தேன். வணக்கம் போல ஒன்றை தெரிவித்து விட்டு வெளியேறினோம்.

மணி நாலை நெருங்கியிருந்தது. இருவரும் பைக்கில் ஏறினோம். பைக் ஓடத் துவங்கியது.

பிரேம் ஒரு கசந்த புன்னகையோடு “இவரு பேச்ச நம்புறீங்களா தோழர்…?” எனக் கேட்டார்.

“இல்ல தோழர்… அவர் பேச்சு நம்புற மாதிரி இல்ல…”

“ஒங்க வேலயப் பாருங்கன்னு மறைமுகமா சொல்றாரு… அவ்ளோதான்…”

பிரேம் கூறியது சரியெனப்பட்டது. பைக் மெடிக்கல் காலேஜை நோக்கி சென்று கொண்டிருந்தது. நெருப்பாக கனன்ற ஜானகியின் விழிகள் மனக்கண்ணில் தோன்றிய வண்ணமிருந்தது.

போலீஸ் ஸ்டேஷன் வாசலில் இருந்த ஏட்டிடம் ராஜ்குமாரைப் பற்றிக் கேட்டேன். என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு, “நீ யாரு?”

“நானும் அதே மாணவர் அமைப்பில் இருக்கேன். அவரு எங்க தோழர்.”

“அதுனால, அவரு என்ன பெரிய்ய மயிரா? எதக் கேட்டாலும் திமிரா பதில் சொல்லுறான் தாயோளி…”

“சார், கொஞ்சம் மரியாதையாப் பேசுங்க.. என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க…”

“தொரைக்கு மரியாத மசுரு வேற குடுக்கணுமா?… போ.. போ…இப்ப யாரையும் பாக்க முடியாது. கொஞ்ச நேரத்துல இன்ஸ்பெக்டர் அய்யா வருவாரு… அவர்ட்ட கேட்டுட்டு யார வேணும்னாலும் போயி பாரு…”

ஆத்திரம் வந்தாலும் நிலைமை கருதி அமைதி காத்தேன். இவரிடம் இப்பொழுது பேசிப் பிரயோசனமில்லை. பிரேமை திரும்பிப் பார்த்தேன். அவரைக் காணவில்லை.

ஸ்டேஷன் வாசலிலிருந்து திரும்பி அருகிலிருந்த மரத்தடிக்கு சென்றேன். ஸ்டேஷன் பக்கவாட்டிலிருந்து பிரேம் வேகவேகமாக மரத்தடியை நோக்கி வந்தார்.

“ராஜ்குமாரை அடிச்சிருக்கானுங்க தோழர்..!”

“என்ன!? யாரு சொன்னா?”

“நீங்க அங்க போயி பேசும் பொழுது, நான் ஜன்னல் வழியா ராஜ்கிட்ட பேசிக்கிட்டிருந்தேன். கொஞ்சம் நேரம் விசாரிச்சுட்டு, அவர சட்டைய கழட்டிட்டு கீழ உக்கார சொல்லியிருக்கானுங்க.. அவர் முடியாதுன்னதும் ஏட்டு அவர அறைஞ்சிருக்கான்…”

எனக்கு அதிர்ச்சியும், ஆத்திரமும் ஒருங்கே எழும்பியது. நான் மெல்ல ஸ்டேஷன் பக்கவாட்டை நோக்கி சென்றேன். அங்கே இரு ஜன்னல்கள் இருந்தன. ஒன்றின் அருகே ஜானகி அமைதியாக உட்கார்ந்திருந்தார். மற்றொன்றின் வழியே சற்றுத் தள்ளி தரையில் அமர்ந்திருந்த மூவரும் தென்பட்டனர். ராஜ்குமாரின் முகம் குன்றிப் போயிருந்தது. சேகர் தரையைப் பார்த்தவாறும், ஜானகியின் தம்பி என்னை முறைத்தவாறும் அமர்ந்திருந்தனர்.

என்னை நிமிர்ந்து நோக்கிய ராஜ்குமார் யாரோ இருப்பதாக கண்களால் சைகை காட்டினார். நான் மரத்தடியை நோக்கி திரும்பினேன். எதேச்சையாக ஜானகி அமர்ந்திருந்த  ஜன்னலைப் பார்த்தேன். அவர் என்னை சலனமின்றி பார்த்து கொண்டிருந்தார். அவரது முகம் தீயில் உருகும் மெழுகைப் போலிருந்தது. நான் கவலைப்படாமல் இருக்குமாறு சைகையால் தெரிவித்தேன். அவர் தலையசைக்க முயன்றார்.

உடனடியாக, நானும், பிரேமும் தோழர் பச்சையப்பன்-க்கு மீண்டும் போன் செய்து நிலைமை கை மீறிப் போய்க் கொண்டிருப்பதைத் தெரிவித்தோம். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் தான் வந்து விடுவதாக தெரிவித்தார். ஒரு தேநீரைக் குடித்து விட்டு, நாங்கள் மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரிலிருந்த மரத்தடிக்கு வந்து சேர்ந்தோம்.

ஸ்டேஷன் வாசலில் இன்ஸ்பெக்டரின் ஜீப் தென்பட்டது. வேறொரு அம்பாசிடர் காரும் நின்றிருந்தது. காரின் மீது ஒருவர் கைவைத்து சாய்ந்தபடி நின்றிருக்க, அவருடன் இருவர் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

“தோழர், இவனுங்க நிச்சயம் குரும்பனூர்க்காரனுங்கதான்” என்றார் பிரேம். அவர்கள் ஜானகி ஊரைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்றுதான் எனக்கும் பட்டது. நான் வெறுமனே தலையசைத்தேன். அப்பொழுதுதான் யதேச்சையாக ஸ்டேஷனின் பக்கவாட்டு ஜன்னலிலிருந்து ஜானகி எங்களை நோக்கி கையசைப்பதைக் கண்டேன்.

“தோழர், ஜானகி கூப்பிடுறாங்க. என்னன்னு கேட்டுட்டு வந்துடுறேன்.” என சொல்லி விட்டு, ஜன்னலை நோக்கி சென்றேன். அருகில் செல்லச் செல்ல, ஜானகியின் முகம் இருண்டும், கண்கள் வெளிறியுமிருப்பதைக் கண்டேன்.

“சொல்லுங்க ஜானகி…”

ஜானகி கலங்கிய குரலில் பேசலானார். “ இங்க வேற மாதிரி பேச்சு நடக்குதுங்க… அனேகமா எங்கள பிரிச்சிருவாங்க போலிருக்கு… எப்படியாவது எங்கள சேத்து வைங்க ப்ளீஸ்…”

“அது நடக்காதுங்க… நீங்க பயப்படாதீங்க…”

“இல்லங்க… ரங்கசாமி வந்திருக்காரு. எங்க ரெண்டு பேருக்கும் வேல இல்லங்கறதுன்னால இரண்டு வருசம் கழிச்சு கல்யாணம் பண்ணி வைக்கிறேங்கறாரு. அதுவரைக்கும் பாத்துக்க வேண்டாம்னு எழுதி கையெழுத்து போடச் சொல்றாரு…”

இதனை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால், அதிர்ச்சியாக இருந்தது. “நீங்க எதுலயும் கையெழுத்துப் போடாதீங்க.. எங்க தோழர் வந்திக்கிட்டிருக்காரு. அவரு வந்தவுடன பேசிக்கலாம். கவலைப்படாதீங்க…”

ஜானகி சற்று மெளனமாக இருந்தார். பின்னர் சட்டென கண்கள் சிவக்க, “ஆனா இவுங்க என்ன செஞ்சாலும் சரி, என் மனச மாத்த முடியாது. நாண்டுகிட்டு செத்தாலும் சாவனே ஒழிய இவனுங்க சொல்ற எவனுக்காவது கழுத்த நீட்ட மாட்டேன்…” நான் பேசுவதறியாமல் நின்றேன். அவரது கண்கள் தகிக்கிற நெருப்புச் சுடர்களாகக் காட்சியளித்தன.

கணநேர மெளனத்திற்குப் பின், “நீங்க கவலைப்படாம இருங்க… நாங்க இருக்கோம்” என்று சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டு அகன்று வந்தேன். பிரேமுடன் தோழர் ஏ.எல் நின்று கொண்டிருந்தார். அவரும் விஷயம் கேள்விப்பட்டு வந்திருக்க வேண்டும்.

இருவரிடமும் ஜானகி சொன்ன விஷயங்களை பகிர்ந்து கொண்டேன். பிரேம் முகத்தில் கோப ரேகைகள் படர்ந்தன. எனினும், ரங்கசாமி உள்ளே நிகழ்த்திக் கொண்டிருக்கும் பஞ்சாயத்தை எப்படி நிறுத்துவதெனப் புரியவில்லை. உடனடியாக, நானும், பிரேமும் மீண்டும் பைக்கை எடுத்துக் கொண்டு விரைந்தோம். பச்சையப்பன்-க்கு போன் செய்தோம்.

தொலைபேசி ஒலித்துக் கொண்டேயிருந்தது. யாரும் எடுக்கவில்லை. அனேகமாக அவர் கிளம்பியிருக்கக் கூடும் என்றெண்ணியவாறு திரும்பினோம். பாதி வழியிலேயே பச்சையப்பன் தனது மொபட்டில் சென்று கொண்டிருப்பதைக் கண்டோம். முன்னே சென்று அவருடன் ஸ்டேஷன் எதிரிலிருந்த மரத்தடிக்கு சென்றோம்.

இருவரும் விவரங்களை விரைவாகத் தெரிவித்தோம். பச்சையப்பன் கேட்டுக் கொண்டார். “சரி வாங்க, உள்ள போய் பாப்போம்” என கிளம்பினார். அம்பாசிடர் காரருகே நின்றவர்கள் எங்களை வெறுப்போடு பார்த்தனர். நாங்கள் அவர்களை கண்டு கொள்ளாமல் ஸ்டேஷன் வாசலுக்கு சென்றோம். அதே ஏட்டு உட்கார்ந்திருந்தார்.

“வணக்கம். எங்க தோழர் ராஜ்குமார பிடிச்சு வச்சிருக்கிங்கன்னு கேள்விப்பட்டேன்…”

“ஆமா…இப்பிடி உக்காருங்க. உள்ள அய்யா பேசிக்கிட்டிருக்காரு. அவரே கூப்பிடுவாரு…” அவர் சுட்டிக்காட்டிய நாற்காலிகளில் அமர்ந்தோம். ராஜ்குமார் சற்று உள்ளே தள்ளி நின்று கொண்டிருந்தார். எங்களைப் பார்த்து தலையசைத்தார். பச்சையப்பன் அவரை அருகே வருமாறு கூப்பிட்டார். அவரிடம், “என்ன தோழர், ஏதாச்சும் சாப்பிட்டிங்களா?” எனக் கேட்டார்.

“இல்ல தோழர். வேண்டான்னு சொல்லிட்டோம்…”

“பிரச்சினையெல்லாம் தோழர்கள் சொன்னாங்க…”

“ஆமாம் தோழர். சட்டையக் கழட்டிட்டு உக்காருன்னாரு. அதெல்லாம் முடியாதுன்னேன். ஒடனே மிரட்டுனாரு… நானும் பதிலுக்கு எதுத்து பேசினேன். ஒடனே கை நீட்டிட்டாரு… ஆனா கடைசி வரைக்கும் நான் சட்டையக் கழட்டவேயில்ல…”

“ம்ம்…சரி தோழர். பேசிக்கலாம்… அவுங்க ரெண்டு பேரும் எங்க?”

“உள்ள பேச்சுவார்த்த நடக்குது தோழர். எல்லாத்துக்கும் ஏற்பாடு ரங்கசாமிதான்… இவுங்க ரெண்டு பேரயும் இப்பதான் கூப்பிட்டாங்க…”

“ஓ… சரி. என்ன நடக்குதுன்னு பாக்கலாம். வெயிட் பண்ணி பாப்போம்..”

நான் இன்பெஸ்க்டர் அறையினுள்ளே பார்த்தேன். சிறு ஜன்னல் போல திறந்து மூடக் கூடிய தடுப்புகளைக் கொண்ட அந்த அறைக்குள் இன்ஸ்பெக்டர் பேசுவது மாத்திரம் கேட்டது. யாரையும் பார்க்க முடியவில்லை. காய்ச்சல் பீடித்த உணர்வு போல ஒரு வித கலக்கம் ஏற்பட்டது. பிரேமும் அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து முதலில் ஜானகியும், பின்னர் ரங்கசாமி முதலான பிறரும் வெளியே வந்தனர். ஜானகி எங்களை கவனிக்காமலேயே கடந்து சென்றார். வெளியே சென்று சோர்வாக படிக்கட்டில் அமர்ந்தார். அவர் பின்னாலேயே சென்று ரங்கசாமி ஏதோ விளக்க முயல்வது தெரிந்தது. கடைசியாக சேகர் வெளியே வந்தார். எங்களருகே வந்து நின்றார்.

ஒரு கான்ஸ்டபிள் ஜன்னலை பாதி திறந்து, உள்ளிருந்தவாறே எங்களை நோக்கி “சார், ஒங்கள அய்யா கூப்பிடறாங்க…” என்றார். நாங்கள் எழுந்து உள்ளே சென்றோம். இன்ஸ்பெக்டர் ஏதோ எழுதியவாறு ‘உக்காருங்க’ என்பது போல ஒரு கையை நீட்டி இருக்கைகளை சுட்டிக் காட்டினார். நாங்களும் அமர்ந்தோம்.

சில நொடிகளில், பேனாவை மூடி வைத்து நிமிர்ந்தார். பச்சையப்பனை நோக்கி, “இந்தப் பையன், உங்க அமைப்புத் தோழர்ன்னு சொன்னாரு. எனக்கு ஒங்க அமைப்பு பத்தில்லாம் நல்லா தெரியும். என்னா சார் இவரு, கொஞ்சம் கூட மரியாதை தெரியாத பையனா இருக்காரே…” என ராஜ்குமாரை ஏறிட்டவாறு புன்னகைத்தார்.

“அப்படியா? எப்படி சொல்றீங்க?” என்றார் பச்சையப்பன்.

“அவரே சொல்லிருப்பாரே, எங்க ஏட்டு… அவருக்கு என்ன வயசு இருக்கும். அவருகிட்டயே எதுத்து எதுத்து பேசுறாப்ல… கேட்டா என்னமோ இதுதான் எங்க கொள்கை அப்புடி இப்புடின்னு ஒளறிகிட்டு…”

“ஆமா, சொன்னாரு. அவர சட்டைய கழட்டிட்டு உக்கார சொன்னிங்களாமே..? அவரு என்ன கொலயா பண்ணிருக்காரு? அது மட்டுமில்லாம அதென்ன கை நீட்டுறது… எங்க அமைப்பை பத்தி நீங்களே கேள்விப்பட்டுருப்பிங்க… நாங்க ஓட்டுப் பொறுக்கிக் கட்சிங்க மாதிரி கிடையாது… எல்லாத்துக்கும் வளைஞ்சு குடுக்குற பழக்கமெல்லாம் எங்களுக்கு இல்ல… எங்களுக்குன்னு சுயமரியாத உண்டு. அதுனால, தப்பு எங்க நடந்தாலும் சரி, போலிஸ் ஸ்டேஷனுக்கு உள்ளயா இருக்கட்டும்  வெளிலயா இருக்கட்டும்… நாங்க எதுத்து நிப்போம்.”

“நீங்களே இப்புடி பேசுனா அப்றம் நான் என்ன பேசுறது… சரி விடுங்க சார்.. அவர கூட்டிட்டு போங்க…” ஒரு வித எரிச்சலோடு எங்களைப் பார்த்தார்.

“அது இருக்கட்டும். ஜானகியோட பிரச்சினை என்னாச்சு?”

“அதுல என்ன சார் பிரச்சினை? ரெண்டு பேருக்கும் வேலன்னு ஒண்ணும் இல்ல.. கல்யாணம் பண்ணி என்ன பண்றது? அதான், ரங்கசாமி சார் தானே பொறுப்பெடுத்துகிட்டாரு… ஒரு வருசம் போகட்டும், ரெண்டு பேருக்கு வேல கிடச்சவுடன நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு பேசி முடிச்சாரு… ரெண்டு பேரும் கையெழுத்து கூட போட்டுட்டாங்க…” என்றவாறு சேகரைப் பார்த்தார். சேகர் அமைதியாக இருந்தார்.

“இது ஒரு சரியான தீர்வாத் தெரியலியே.. வேல இருந்தாத்தான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு எந்த சட்டத்துல இருக்கு..?” பச்சையப்பன் குரலில் கோபம் இருந்தது.

“சார், எதுக்கு ஆர்க்யூ பண்ணிகிட்டு? சம்பந்தட்டவங்க கையெழுத்துப் போட்டுட்டாங்க… நாம பேசி என்ன சார் ஆகப் போகுது… நீங்க கெளம்புங்க…”

பச்சையப்பன் ஒரு கணம் அமைதியாகப் பார்த்தார். “சரி… நாங்க கிளம்புறோம். ஆனா, இந்தப் பிரச்சினைய இதோட விட்டுற மாட்டோம்..” என்று கூறி விட்டு எழுந்தார். நாங்களும் எழுந்தோம். அந்த இன்ஸ்பெக்டர் எதுவும் பேசவில்லை. கோப்புகளைப் பார்ப்பது போல பாவனை செய்து கொண்டிருந்தார்.

நாங்கள் வெளியே வந்த பொழுது அம்பாசிடர் காரை காணவில்லை. ஜானகியை கூட்டிச் சென்று விட்டார்கள். திட்டமிட்டு, ஜானகி வெளியே வந்தவுடன் எங்களை உள்ளே அழைத்து, நாங்கள் வெளியே வருவதற்குள் அவரை அழைத்துச் சென்று விட்டார்கள் என்பது புரிந்தது. நானும், பிரேமும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். களைப்பும், தோல்வியுற்ற கசப்பும் இருவர் முகத்திலும் அப்பியிருந்தது. பச்சையப்பன், சேகரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தோம்.

அடுத்த சில நாட்கள், ஜானகியைத் தொடர்பு கொள்ள தோழர் வி.எம் முயற்சிகள் எடுத்தார். ஆனால், ஜானகி வேறு யாரோ உறவினர் ஒருவரின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டதாக தகவல் கிடைத்தது. அந்த இடத்தைக் கண்டறிய இயலவில்லை. சேகருடைய தயக்கத்தை போக்க அவருடன் வி.எம் தொடர்ந்து பேசிப் பார்த்தார். எனினும் அவரது தயக்கம் கலையவில்லை. அவரது கனத்த தயக்கத்தின் பின்னே நூற்றாண்டுகளின் துயரக் கதைகள் நின்றிருந்ததாக எனக்குப் பட்டது.

நாட்கள் நகரத் துவங்கின. எனக்கு செமஸ்டர் பரிட்சைகள் துவங்கின. இரண்டொரு நாள் இடைவெளிகளில் பரிட்சைகள் எழுதி வந்தேன்.

சில வாரங்கள் கழித்து, மீண்டும் ஒரு மதியப் பொழுதில் பிரேமிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நான் அப்பொழுதுதான் கல்லூரியிலிருந்து பரிட்சை எழுதி விட்டு திரும்பியிருந்தேன்.

“ஹலோ.. சொல்லுங்க தோழர்!”

“தோழர், பஸ் ஸ்டாண்டுல சேகரப் பாத்தேன்…”

“என்ன சொன்னார்…?”

“…ரெண்டு நாளைக்கு முன்னாடி ஜானகி தூக்கு மாட்டி செத்துட்டாங்களாம்…”

ஒரு கணம் எனக்கு வார்த்தைகள் வரவில்லை.

“என்ன தோழர் சொல்றிங்க…?”

“ஆமா தோழர், அவசர அவசரமா மாப்புள பார்த்து கல்யாணத் தேதியெல்லாம் குறிச்சுட்டானுங்க போலருக்கு.. என்ன பண்றதுன்னு புரியாம இந்த முடிவ எடுத்துட்டாங்க…”

போனை வைத்து விட்டு, எனது அறைக்குத் திரும்பினேன். உடைகள் மாற்றாமலே பாயில் படுத்துக் கொண்டேன். வெளியே அனல் கக்கியது. சுழன்று கொண்டிருந்த காற்றாடியை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஜானகியின் நெருப்பாகக் கனன்ற விழிகள் நினைவில் எழும்பின.

ஒரு கணம் உடல் நடுங்கியது.

[உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. ஊர்ப் பெயரும், பலரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது]

குறிப்பு: 2000-ம் ஆண்டு வாக்கில் நடந்த சம்பவத்தின் நினைவுகளை, மேற்காணும் சிறுகதையாக கடந்த ஜூலை மாதம் எழுதினேன். சில நாட்கள் முன்பு தருமராஜின் கட்டுரையைப் படித்த பொழுது, ஜானகியும், சேகரும் பலமுறை நினைவில் எழும்பினர். அப்பொழுது இக்கதையை வெளியிடுவது அவசியம் எனக் கருதினேன்.

Advertisements

One thought on “ஒரு ‘கம்யூனிஸ்ட்’ கிராமத்தில் நிகழ்ந்த காதல் கதை!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s