நக்‌சல்பரி கி ராஸ்தா!

சமீபத்தில் சிக்கிமுக்கு குடும்ப சுற்றுலா செல்வதற்காக திட்டமிட்டோம். சிக்கிமை வான்வழியாக அடைய ஒரே வழி, வடக்கு வங்காளத்தில் உள்ள இராணுவ விமான நிலையமான பாக்டோக்ரா மட்டுமே. அங்கிருந்து நான்கு மணி நேரம் வாகனத்தில் மலை ஏற வேண்டும். விமானத்திற்கான பயணச்சீட்டுகளை  முன்பதிவு செய்து, ஐந்து நாட்களுக்கான சிக்கிம் பயணத் திட்டத்தை முடிவு செய்தோம். சில நாட்கள் கழிந்த பின்னால், எதேச்சையாக குறிப்பிட்ட பாக்விடோக்ரா விமான நிலையத்திலிருந்து வெறுமனே 15 கிமீ தொலைவில்தான் நக்சல்பரி இருக்கிறது என்பதை இணையத் தேடலில் கண்டறிந்தேன். உடனடியாக ஆர்வம் தொற்றிக் கொண்டது.

இந்தியக் கம்யூனிஸ்டுகளில் ‘நக்சலைட்டுகள்’ என்றழைக்கப்படும், சி.பி.எம்.எல் வழி வந்த கம்யூனிஸ்டுகளின் புகழ் பெற்ற முழக்கங்களில் ஒன்று, “ஏக் ஹி ராஸ்தா, நக்சல்பரி (நக்சல்பரியே ஒரே பாதை)!” என்பதாகும். இந்திய கம்யூனிச அரசியல் வரலாற்றில் மறுக்கவொண்ணாத  முக்கியத்துவம் பெற்ற அத்தகைய நக்சல்பரிக்கு செல்லும் பாதை (நக்‌சல்பரி கி ராஸ்தா) அருகிலிருக்கும் பொழுது செல்லாமல் விடலாமா? என்ன இருந்தாலும் once a communist is always a communist தானே?

விளைவாக, சிக்கிம் பயணத்தை ஒரு நாள் முன்னதாகவே முடித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்தோம். இதனிடையே மலையாள மனோரமா நடத்தும் வீக் இதழில் நக்சல்பரியின் 50-வது ஆண்டு சிறப்பிதழ் வேறு வெளிவந்து சிந்தனைகளைக் கிளறி விட்டது. நக்சல்பரி, சிலிகுரி குறித்த சில விவரங்களும் கிடைத்தன. அவ்விதழில் வெளிவந்த சாரு மஜூம்தாரின் குடும்பத்தினர் பற்றிய குறிப்பும் கவனத்தை ஈர்த்தது.

சிக்கிமில் நாங்கள் தங்கியிருந்த home stay-ன் உரிமையாளர் ஒரு இளம்பெண். அவரது வீட்டிற்கு சென்றடைந்த நாளன்று, எனது துணைவர் ஹா-விடம் ஏன் பயணத்திட்டத்தை ஒரு நாள் முன்னதாகவே முடித்துக் கொண்டீர்கள் எனக் கேட்டிருக்கிறார். நாங்கள் நக்சல்பரிக்கு செல்லவிருக்கிறோம் என ஹா பதிலளிக்க, உரிமையாளர் பதறி விட்டாராம். அது ஆபத்தானதில்லையா எனக் கேட்டாராம். வேடிக்கைதான். நக்சல்பரியின் வரலாறு குறித்த எந்த அறிமுகமும் இல்லாத நபர்களுக்கு கூட, 49 ஆண்டுகளுக்கு பின்னர் அரசியல் அரங்கில் நக்சல்பரி இயக்கம் வழிவந்த சக்திகள் பின்தங்கி விட்ட நிலையிலும் கூட, நக்சல்பரி எனும் பெயர் திகிலை உண்டாக்குகிறது… இது நக்சல்பரியின் வெற்றியா, தோல்வியா என உரையாடிக் கொண்டிருந்தோம்.

இறுதியாக, நான்கு நாட்களில் சிக்கிம் சுற்றுலாவை முடித்துக் கொண்டு, பாக்டோக்ரா விமான நிலையம் அருகே ஒரு சுமாரான ஓட்டலுக்கு கசகசக்கும் மதிய வேளையொன்றில் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள சிலிகுரியில்தான் சாரு மஜூம்தாரின் வீடு உள்ளது. இன்றளவும் அதே வீட்டில்தான் அவரது மகன் அபிஜித் மஜூம்தார் (இவர் சி.பி.எம்.எல் லிபரேசன் கட்சியில் செயல்பட்டு வருகிறார்) மற்றும் இரு மகள்கள் வசிக்கின்றனர். வாய்ப்பிருந்தால் சாருவின் வீட்டை பார்க்கலாம், ஆனால் அவரது குடும்பத்தாரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றெண்ணியவாறு அன்று மாலை சிலிகுரிக்கு சென்றோம்.

சிலிகுரியில் உள்ள ஹில் கார்ட் சாலைக்கு அருகில்தான் சாருவின் வீடு உள்ளது. சில கடைக்காரர்கள் வழிகாட்டியதன் பலனாக, அரை மணி நேரத் தேடலுக்குப் பிறகு அவரது வீட்டைக் கண்டடைந்தோம். பழமையும், பல்லாண்டுகளாக வர்ணம் பூசப்படாத அழுக்கும் அப்பிய வீடாகக் சாருவின் வீடு காட்சியளித்தது.

IMG_2599
சாரு மஜூம்தாரின் வீடு

அவரது வீட்டின் முன்பகுதியில் சாருவின் உறவினர் ஒருவர் காப்பீட்டு அலுவலகம் நடத்துவதாகவும், பின்புறத்தில் சாரு குடும்பத்தினர் வசிப்பதாகவும் வீக் இதழில் படித்திருந்தேன். தயக்கத்துடன் வீட்டின் எதிரிலேயே சிறிது நேரம் நின்றிருந்தோம். அவர்கள் வீட்டுக்கு பின்புறம் ஒன்று இருப்பது போலவே தெரியவில்லை. எனவே அதனை உறுதிப்படுத்திக் கொள்ளும் முகமாக வாசலைத் தாண்டிச் சென்றோம்.

அலுவலகத்திலிருந்த சாருவின் உறவினர் நீங்கள் யார் என வினவினார். சாருவின் வீட்டைக் காண வந்திருப்பதாகக் கூறியவுடன் மகிழ்ச்சியடைந்தார். எதிர்பாராதவிதமாக அபிஜித்தும் அதே நேரத்தில் வீடு திரும்ப, கைகுலுக்கி அறிமுகப்படுத்திக் கொண்டோம். சில மணித்துளிகள் அவருடன் உரையாடினோம். வீக் இதழ் அவரது குடும்பத்தினர் குறித்தும், ஒட்டுமொத்தமாக நக்சல்பரி இயக்கம் குறித்தும் உருவாக்கும் மோசமான பிம்பம், அவர்களது பொய்கள் மற்றும் புரட்சியாளர்களை இழிவுபடுத்தும் ஆளும் வர்க்க மொழி குறித்த தனது கண்டனங்களை தெரிவித்தார். அவரது கருத்துக்களை ஆமோதித்தேன்.

நிதானமாக பிசிறின்றி கருத்துக்களை எடுத்துரைக்கும் விதமும், தமது கருத்தில் ஆழ்ந்து தமக்குள்ளாகப் பயணித்து பேசும் விதமும், உடல் மொழியும் ஒரு பண்பட்ட பேராசிரியராக அவரை அடையாளம் காட்டியது. அவரது தந்தையும் அவரைப் போன்றே ஒரு வசீகரமான மனிதராகத்தான் இருந்திருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.

மறுநாள் காலையில் விரைவாக எழுந்து நக்சல்பரிக்கு புறப்பட்டோம். நக்சல்பரி. இமயத்தின் அடிவாரத்தில் நேபாள எல்லைக்கு வெகு அருகில் இருக்க கூடிய, ஐந்தாறு சிறு கிராமங்களை உள்ளடக்கிய பஞ்சாயத்து. முந்தைய நாள் இரவு அபிஜித் பேசும் பொழுது வீக் இதழின் சிறப்பிதழை ‘அரசின் ப்ராஜக்ட்’ எனக் குறிப்பிட்டார். ப்ராஜக்ட் செய்ய வந்த பத்திரிக்கையாளர்கள் இதே நக்சல்பரி குறித்து அளித்த விவரணையில் எத்தனை உள்நோக்கம் இருந்தது என்பதை கண்முன்னே காண முடிந்தது. நக்சல்பரி பேருந்து நிலையத்தையொட்டிய கடைத்தெருவில் பல கடைகள் இருந்தாலும், பொதுவில் அப்பகுதியில் போதுமான நகரமயமாதல் இல்லை. மாறாக, பீகார், வங்காளம், நேபாளம் என மூன்று மாநிலங்கள் சந்திக்கும் எல்லைப்புறத்துக்கே உரிய வறிய மக்களையும், அவர்களது எளிய குடியிருப்புகள், வாழ்க்கை முறைகளையும் காண முடிந்தது.

நக்சல்பரி பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிமீ தொலைவிலுள்ள பெங்காய் ஜோட்டே கிராமத்தில்தான் 1967 மே 25ஆம் தேதியன்று விளைவித்த பயிர்களுக்கு உரிமை கோரி போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டது. ஏழு பெண்கள், இரு ஆண்கள் மற்றும் இரு குழந்தைகள் குண்டடிபட்டு மடிந்தனர். இந்தியாவையே உலுக்கிய அச்சம்பவம் நிகழ்ந்த இடம், இன்று பெங்காய் ஜோட்டே ஆரம்பப் பள்ளிக்கு அருகே, வயல்வெளிகளுக்கு இடையே அமைதியாக இருக்கிறது. உயிர் நீத்த தியாகிகளின் பெயர் தாங்கிய நினைவுத் தூண் ஒன்றை, சி.பி.எம்.எல் மகாதேவ் முகர்ஜி பிரிவினர் அங்கே அமைத்துள்ளனர்.

IMG_2604
‘ஷஹீத் வேடி’ என அழைக்கப்படும் பெங்காய் ஜோட்டே தியாகிகள் நினைவிடம்.

அதன் கூடவே, லெனின், ஸ்டாலின் (ஏனோ சிலை மூடப்பட்டுள்ளது), மாவோ, லின்பியாவோ, சாரு, சரோஜ் தத்தா, மகாதேவ் முகர்ஜி ஆகியோரது மார்பளவு சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. லின்பியாவோ.. ஒரு காலத்தில் மா-லெ கட்சிகள் மணிக்கணக்கில் விவாதித்த பெயர்.. எத்தனையோ விமர்சனங்களையும், விவாதங்களையும், கருத்து வேறுபாடுகளையும், பிரிவுகளையும் உண்டாக்கிய பெயர்… லின்பியாவோவின் சிலை சீனாவில் கூட இருக்குமா எனத் தெரியவில்லை. அருகில் மகாதேவ் முகர்ஜி சிலைக்கு கீழே ‘சாரு மஜூம்தாரின் ஒரே வாரிசு’ என எழுதப்பட்டிருந்ததை வாசித்த பொழுது கசப்போடு சிரித்துக் கொண்டேன்.

IMG_4922
(இடமிருந்து) லெனின், ஸ்டாலின், மாவோ, லின்பியாவோ, சாரு மஜூம்தார், சரோஜ் தத்தா, மகாதேவ் முகர்ஜி ஆகியோரது சிலைகள்

அதன் பின்னர் அருகிலிருந்த ஹாத்திகிஷா-வில் உள்ள கனுசன்யாலின் அலுவலகத்தை தேடி சென்றோம். பள்ளமும், குழியும் நிறைந்த சாலையில், நேபாளம் செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து விலகி சில கிலோமீட்டர்கள் உட்சென்றதும், அவரது அலுவலகத்தை காண முடிந்தது. சுற்றிலும் வறிய சந்தால் மக்களின் குடியிருப்புகள்.. அதன் நடுவே செங்கொடி பறக்க, தகரக் கூரையும், மூங்கில்களால் வேயப்பட்டதுமான கனு சன்யாலின் வீடு மற்றும் அலுவலகம் ஒரு கிராமப்புறப் பள்ளிக்கூடம் போல காட்சியளித்தது.

IMG_2615
கனு சன்யாலின் வீடு மற்றும் அலுவலகம்,  ஹாத்தி கிஷா
IMG_2617
கனு சன்யாலின் வீட்டின் உட்புறம்
IMG_2619
கனு சன்யாலின் உடைமைகள்

அவரது வீட்டின் அருகில்தான் ஜங்கல் சந்தாலின் வீடும் உள்ளது. ஜங்கலுக்கு இரு மனைவியர். வறுமையில் வாடிய 90 வயதைத் தாண்டிய அவரது மூத்த மனைவி சமீபத்தில்தான் இறந்ததாக அவரது பேத்தி தெரிவித்தார். சிறிது நேரம் ஜங்கல் சந்தாலின் முகத்தை நினைவு கூர முயன்றேன். சன்யால்கள், மஜூம்தார்கள், முகர்ஜிக்களது முகங்கள் போல அத்துணை எளிதாக சந்தால்கள், முண்டாக்களின் முகங்கள் நினைவில் வருவதில்லை எனத் தோன்றியது.

IMG_2611
ஜங்கல் சந்தாலின் வீடு (படத்தில் இருப்பவர் அவரது பேத்தி)

நக்சல்பரியிலிருந்து திரும்பும் பொழுது, ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, மக்கள் யுத்தக் குழுவின் மாணவர் அமைப்பு வெளியிட்ட சிறு நூலொன்று நினைவுக்கு வந்தது. அப்பொழுது அவர்கள் மாவோயிஸ்ட் கட்சியாக உருவாகியிருக்கவில்லை. அந்நூலின் தலைப்பு ஏனோ நினைவில் தங்கி விட்டது. அந்நூலின் தலைப்பு இதுதான்.

‘நக்சல்பரி: அது ஒரு கிராமத்தின் பெயரல்ல.’

உண்மைதானா? அது ஒரு கிராமத்தின் பெயரில்லையா? அப்பெயரின் கடந்த காலத்தை அறிவோம். அதற்கு நிகழ்காலமும், எதிர்காலமும் இருக்கிறதா? கேள்விகள்தான் மிச்சமிருக்கின்றன எனத் தோன்றியது.

Advertisements

3 thoughts on “நக்‌சல்பரி கி ராஸ்தா!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s