பார்த்தீனியம்: குருதி பீறிடும் காயங்கள்

“துண்டு கொடுத்தாப் போலை இயக்கத்திலை இருந்து வெளியேறியிடலாமெண்டு நினைக்கிறீரா? எழுதி வைத்துக் கொள்ளும். நீரொரு அரசியல் விலங்கு. ஒருக்கா துவக்கு துவக்கினா சாகும் வரைக்கும் ஒருத்தராலை இயக்கத்தை விட்டு மனதளவிலை விலகேலாது. அது விடுதலைப் புலிக்கு மட்டுமெண்டில்லை. எல்லா இயக்கத்துக்கும் பொருந்தும்”

(பக்-307)

ஒரு கணம் நிமிர்ந்து உட்கார்ந்தேன். என்ன இது? இப்படி சர்வசாதாரணமாக எழுதி விட்டார் என வியப்படைந்தேன். ஒரு கணம் தீபன் திரைப்படம் நினைவுக்கு வந்தது. துவக்கு தூக்காமால் போனாலும், மனதளவில் விலகேலாத நானறிந்த எத்தனையோ அரசியல் விலங்குகளை (நான் உட்பட) நினைத்துக் கொண்டேன். அந்தப் பாராவுக்குப் பின், அவ்வப்பொழுது விட்டு விட்டு படித்துக் கொண்டிருந்த தமிழ்நதியின் “பார்த்தீனியம்” நாவல் காய்ச்சல் போல பற்றிக் கொண்டது.

பார்த்தீனியம் நூல் முகப்புஈழத்தின் இரத்தம் தோய்ந்த போராட்ட வரலாற்றின் பல்வேறு பக்கங்களை, பரிமாணங்களை கதையாக்கியதன் மூலம், இதற்கு முன்னர் வெளிவந்த புனைவு மற்றும் அபுனைவு எழுத்துக்களில் பார்த்தீனியம் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. மேலும், தமிழகச் சூழலில் உலகளந்த ஆசான் மேற்கொண்ட அமைதிப் படை குறித்த மோசடிப் பிரச்சாரத்தையும், பெண் எழுத்தாளர்களின் படைப்புத் திறன் குறித்த அன்னாரது அரிய பொன்மொழிகளையும் சுக்கு நூறாக கிழித்தெறியும் ஸ்தூலமான, காத்திரமான எதிர்வினையாகவும் பார்த்தீனியம் மிளிர்கிறது.

குறிப்பாக, அத்தியாயம் 35-ன் முதல் நான்கு பாராக்கள் யாழ்ப்பாணத்தில் அமைதிப்படை நிகழ்த்திய போர்க் குற்றங்களை எவ்வித மிகைப்படுத்தலும் இன்றி, செய்தி அறிக்கையின் தொனியில் விவரித்துச் செல்கின்றன. எத்தனையோ தடவை இத்தகைய கொடூரங்களை படித்திருந்தாலும், இந்த விவரணை நம்மை உலுக்கிப் போடத்தான் செய்கின்றது. ஒவ்வொரு வரிக்குள்ளும் எத்தனை கதைகள் இருக்கக் கூடும் என மனம் விக்கித்துப் போகிறது. இது போல நாவலின் பல பக்கங்களிலும், ஒட்டுமொத்தத்திலும் ஒரு எழுத்தாளராக எழுத்தின் உச்சம் தொடும் தருணங்களை, தமிழ்நதி, பெரிய வித்தைகளோ, வலிந்த சிடுக்குகளோ இன்றி இயல்பாக வந்தடைகிறார்.

சில இடங்களில் தமிழ்நதி உருவாக்கும் படிமங்கள் ஆழமானவை. கடும் போருக்கு நடுவில், வானதி பரணியைத் தேடி யாழ்ப்பாணத்தில் அலையும் வாதை மிகுந்த படலத்தில், ஆளரவமில்லாத ஒரு பேருந்து நிலையத்தில் அவளும், தெரு நாயொன்றும் மட்டும் தனித்து நிற்கின்றனர். அவள் காலடியில் ஒடுங்கும் அதன் நிராதரவான கண்களையும், அவளது பாதங்களில் படியும் அதன் நாசியின் ஈரத்தையும் விவரிப்பதோடு அக்காட்சி முடிகிறது. போரின் வாதைகளிலிருந்து விடுதலை பெறும் தவிப்புடன் தீர்வைத் தேடும் மக்கள் வானதியாகவும், அவர்களது இயலாமையும், பரிதவிப்பும் கூடிய வாழ்வு காலடியில் தஞ்சம் புகும் தெருநாயாகவும் மனக்கண்ணில் உருக்கொள்கின்றன.

ஜெனிபர், சுபத்திரை, சஞ்சீவன் என இந்திய அமைதிப் படை நிகழ்த்திய எண்ணற்ற, எண்ணிப் பார்க்க இயலாத பயங்கரங்களையும், இயக்கங்களுக்குள் நிகழ்ந்த கணக்கில்லாத பழிவாங்கல் கொலைகளையும் வாசிக்கையில் “காயங்களின் பொருக்கு இளகி குருதி பீறிடுகிறது”. குறிப்பாக, 176-ஆம் பக்கத்தில் தனஞ்செயனின் தலைக்குள் நட்டுவாக்கிளிகளாக சுற்றி இறுக்கும் கேள்விகளைப் படிக்கையில், பெரும் அயர்ச்சியும், கனமும் கூடுகிறது.

வரலாற்றின் கருந்துளைக்குள் உழன்று கொண்டிருக்கும் தனஞ்செயனின் கேள்விகளுக்கு இனி யார் பதிலளிப்பார்கள்? அதற்கெல்லாம் என்றேனும் நியாயம் என்ற ஒன்று கிட்டுமா? உண்மையில் நியாயம் என ஒன்று இருக்கிறதா? அல்லது அது வெறுமனே நாம் நம்ப விரும்பும் கற்பிதமா?

வானதி, அவரது அறை நண்பர்கள், தனபாக்கியம் ஆகியோரது சித்திரங்களில், பெண்கள் குறித்து பெண்களே எழுதும் பொழுது படரும் புதிய காற்றை உணர முடிகிறது. எல்லைக்குட்பட்ட, தட்டையான புரிதலோடு அப்பெண்கள் உருவாக்கப்படாமல் நம்மோடு இயல்பாக பேசுகிறார்கள். அதே வேளையில், தனஞ்செயன், கீதபொன்கலன், சிவசேகரம், அருமைநாயகம், தணிகாசலம் என ஆண்களும் இருமைக்குள் (நல்லவர்/கெட்டவர்) வகைப்படுத்தப்படாமல் இயல்பாக இருக்கிறார்கள்.

ஆனால், மாத்தையா, அண்ணை குறித்த சித்தரிப்பில் இருமை செயல்படுவதை தெளிவாகக் காண முடிகிறது. தமிழினி ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூலில் வெளிப்படுத்தும் மாத்தையா குறித்த கருத்துக்கள் மாறுபட்டிருந்தன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதே வேளையில் தமிழினியின் ஏற்றுக் கொள்ளவே முடியாத பல கருத்துக்கள், அவரது அப்பட்டமான சாய்வுகள் குறித்த விசாரணை இந்த விமர்சனத்திற்கு தேவையற்றது என்பதால் அதனைக் கடந்து செல்கிறேன். மேலும், அரசியல் சரி, தவறுகளின் அடிப்படையிலும், மிகச் சரியான தரவுகளை அடிப்படையாக (அதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாக உள்ள சூழலில்) கொண்டிருக்கிறதா எனும் அடிப்படையிலும் ஒரு புனைவின் மீது கறாரான ஒரு பரிசீலனையை நிகழ்த்துவது எல்லைக்குட்பட்டதாகவே இருக்க முடியும்.

வானதியின் இறுதி முடிவு இயல்பாகவும், தர்க்கபூர்வமாகவும் இருக்கும் அதே வேளையில், வானதி, சக தோழர்கள், மாத்தையா என பல சிக்கல்களை, அலைக்கழிவுகளுடன் எதிர்கொண்டு நீச்சல் போடும் பரணி தீடீரென துண்டு கொடுப்பது சற்று ஆச்சர்யம் அளிப்பதாகவும், பொருத்தமற்றும் இருப்பதாக தோன்றியது. அவனது உலைவுகளை கொதி நிலைக்குத் தள்ளி வெடிப்பை நிகழ்த்தும் சம்பவம்/சம்பவங்கள் ஏதுமின்றி நிகழும் முடிவு சட்டென சில காட்சிகள் தாவியது போலிருந்தது. அதே போன்று ஜீவானந்தம் இயல்பாகவே “ஆறாவடு” நேரு ஐயாவை நினைவூட்டினார். ஆசிரியரின் குரல் என்பதைத் தாண்டி அப்படியான ஒரு வலுவான நபர் உண்மையில் வாழ்ந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

இறுதியாக, “யாவற்றிலும் கொடிய துயரம் யாதெனில், உன்னத இலட்சியத்தின் பாதையில் செல்லுமொருவனின் நம்பிக்கையும், உறுதியும் சகபயணிகளால் சோதிக்கப்படுவதே.”(பக்-222) எனும் வரியை அத்தனை எளிதாக கடக்க முடியவில்லை. வாசிப்பில் வெகு நேர இடைவெளியை உண்டாக்கியது அவ்வரி.”சத்தியத்தின் பாதையில் பயணிப்பவன் பல சமயங்களில் இருட்டில்தான் செல்ல வேண்டியிருக்கிறது” எனும் காந்தியின் சொற்கள் மனதில் எழும்பின.

பரணி எதிர்கொள்ளும் போராட்டம், பரணியுடையது மாத்திரமா? ஜனநாயக மத்தியத்துவம் குறித்த மாபெரும் பிரகடனங்கள் இல்லாத விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மாத்திரமே நிகழ்ந்த விதிவிலக்கான அதிகாரச் சிக்கலா? உண்மையில், துவக்கு அதிகாரத்தின் வன்முறையை விரைவுபடுத்தவும், வெளிப்படையாக்கவும் பயன்படுகிறது. துவக்குகள் இல்லாத பொழுது அதிகாரத்தின் வன்முறை நுட்பமானதாகவும், நீண்டதாகவும் மாறிப் போகிறது. சற்று வரலாற்றின் பக்கங்களை புரட்டினால், உலகின் எந்த மூலையாக இருந்தாலும் சரி, அது இடது, வலது என எந்த அரசியல் வகைப்பட்ட அமைப்பாக இருந்தாலும் சரி, இலட்சியவாதம் உருவாக்கும் அதிகாரத்தின் வன்முறையில் கரைந்து போன எத்தனையோ பரணிகளையும், விதுரன்களையும் நம்மால் காண முடியும்.

அதனால், அமைப்புகளே மோசமானவை, அமைப்பு என்பதே தனிமனிதனுக்கு விரோதமானது, அதிகாரமே அதன் சாரம் என எளிதாக முடித்துக் கொள்ளலாம்தான். ஆனால் அது பகுதியளவு கூட விடையில்லை. ஏனெனில், ஒன்று சேரவும், போராடவும் அமைப்புகளை கோரும் வாதை மிகுந்த வாழ்வும், அதனூடாக மேற்காணும் அதிகாரம் குறித்த சிக்கலுக்கு விடை தேடும் பயணமும் எளிமையானதில்லை.

Advertisements

One thought on “பார்த்தீனியம்: குருதி பீறிடும் காயங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s