ஒரே குண்டு

மகாராஷ்டிரத்தின் பீமா கோரேகான் முதல் கோவை வரை ‘ஒரே பண்பாடு’ பரவிக் கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருக்கிறோம். அங்கே கலவரத்திற்கு வித்திட்ட சாம்பாஜி பிடே, மிலிந்த் எக்போட்டே முதலான இந்துத்துவ நபர்களுக்கு பதிலாக, வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங் உள்ளிட்ட ஐந்து நாடறிந்த சமூக செயல்பாட்டாளர்களை ‘மாவோயிஸ்டுகள்’ என அரசு கைது செய்கிறது. இங்கே, கோவையில் அரங்க ஒழுங்கை குலைத்த காவிப் படைகளுக்கு பதிலாக, புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் மீதும், இயக்குனர் அமீர் மீதும் அரசு வழக்கு தொடுக்கிறது. வெளிப்படையாக வீடியோ ஆதாரங்கள் இருந்தும், கொஞ்சமும் கூச்சமின்றி அமீரும், பு.த-வும் ’இரு சமூகங்களுக்கு இடையே வன்முறையைத் தூண்டியதாக’ வழக்குப் போடுவதை விட அப்பட்டமான மிரட்டல் வேறு எதுவும் இருக்க முடியாது.

தூத்துக்குடியில், துப்பாக்கி சூடு நடந்த அன்று தாங்கள் அப்பகுதியிலேயே இல்லை என வாய் பேச முயன்ற துணை வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். சம்பவ இடத்தில் அல்லாமல் தத்தமது வீடுகளில் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்படுகின்றனர். தமிழக அரசியல் அலை என்னவோ அடுத்தடுத்து தூத்துக்குடி, ரஜினிகாந்த், காலா என நகர்ந்தாலும், சற்றும் கவனம் திசை திரும்பாமல் காவிரிப் பிரச்சினையை எவ்வாறு மத்திய அரசு நீர்த்துப் போகச் செய்கிறது என தொடர்ந்து பேசி வந்த மணியரசன் அடையாளம் தெரியாத நபர்களால் குறிவைத்து தாக்கப்படுகிறார். அவர்கள் எஸ்.வி.சேகரைப் போல அடையாளம் தெரியாத நபர்களாகவே என்றும் தொடர்வார்கள் என்பதில் நமக்கு ஐயமில்லை.

போலியாக தயாரிக்கப்பட்ட கடிதமே என பச்சையாக தெரிந்தாலும் அதன் மூலம் மோடியின் உயிருக்கே ஆபத்திருப்பதாக செய்திகள் பரப்பப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து, ‘அரை மாவோயிஸ்டுகள்’ எனும் புதிய கண்டுபிடிப்பை உலகுக்கு வழங்கும் அருண் ஜெட்லி, அதனை மேலும் விளக்குகிறார். “அவர்கள் செயல்பாட்டாளர்களை போல வேடமணிந்தவர்கள். அவர்கள் ஜனநாயகத்தின் மொழியைப் பேசுவார்கள். அவர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் மனித உரிமை அமைப்புகளை கைப்பற்றியிருக்கிறார்கள். ஆனால், எப்பொழுதும் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவளிப்பார்கள்” என ஒரே அடியில், அரசை விமர்சிக்கும், எதிர்த்துப் பேசும் அனைத்து செயல்பாட்டாளர்களையும் ‘மாவோயிஸ்டுகள்’ என ஒரு மத்திய அமைச்சர் அறுதியிடுவதை அத்துணை எளிதாக கடந்து செல்ல முடியாது.

இடையில், கல்புர்கியையும், கவுரி லங்கேஷையும் ஒரே வகை துப்பாக்கிக் குண்டால்தான் சுட்டுக் கொலை செய்தனர் என போலிசு அறிக்கையொன்று தெரிவிக்கிறது. அனேகமாக ஸ்னோலினைத் துளைத்த குண்டும் அதுவாகவே இருக்கலாம்.

ஒரே குண்டு.
ஒரே பண்பாடு.
ஒரே தேசம்.
ஒரே வார்த்தையில்,
பாசிசம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s