அப்பா வந்திருந்தார்!

baluchamy.png

வெகு காலம் கழித்து அப்பா வந்திருந்தார். அந்தக் காலத்தில் அவர் என்னையும், எனது தங்கையையும் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்று எங்களோடு ஓடி விளையாடினார். அன்று நாங்கள் அவரது லூனாவில் அமர்ந்து சென்ற அந்தப் பயணம், எனது இனிமையான நினைவுகளில் ஒன்று. பலூன்கள் கையில் இருந்ததாக நினைவு.

நாங்கள் உறங்கியதன் பிறகான இரவுகளில், அவர் வாங்கி வரும் சீனிச் சேவையும், மிக்சரையும், சில சமயங்களில், மறு நாள் காலையிலேயே கூட சாப்பிடுவேன். அவர்தான் எல்லா அப்பாக்களையும் போல எனக்கு கேரமும், பிசினஸ் விளையாட்டும் விளையாட சொல்லித் தந்தார்.

அவர் ஒரு பின்தங்கிய கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்ந்த செல்வந்தருடைய மகனாக பிறந்தவர். இளமையின் பெரும்பான்மையை பள்ளி விடுதிகளில் கழித்தவர். அதன் விளைவாகவோ என்னவோ, அவர் வந்திருந்த காலங்களில், குடும்பத்தில் ஜனநாயகமும், அன்பும் நிலவ வேண்டுமென பலமுறை வலியுறுத்தினார். அவருக்குப் புரிந்த, தெரிந்த அளவில் அதனை அமல்படுத்தவும் செய்தார். என்னுடையதும், என் தங்கையுடையதுமான விருப்பங்களை மதித்தார். குடும்ப விவகாரங்கள் குறித்து எங்களிடமும் கருத்துக்களை கேட்டறிவார்.

வழக்கறிஞராக பணியாற்றிய போதும், அவர் பெரிய படிப்பாளியில்லை. அதிகபட்சம் செய்தித்தாள்களைத் தாண்டி, தொலைக்காட்சியிலோ, புத்தகங்களிலோ அவர் மனம் ஈடுபட்டதில்லை. தன்னை பராமரித்துக் கொள்வதிலும், வீட்டை துப்புரவாக வைத்திருப்பதிலும் எப்பொழுதும் சலியாமல் ஈடுபட்டார். அன்றாடம் அவரே முழு வீட்டையும் பெருக்கி சுத்தப்படுத்துவார். தனது வாகனத்தை தானே துடைத்து வைப்பார். ஒரு வகையில் இவற்றையெல்லாம் அவருக்கான உடற்பயிற்சியாக கருதினார். இந்த விசயத்திற்காக காந்தியை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடல் உழைப்பும், எளிமையும் ஒரு மனிதனுக்கு தேவையான குணங்கள் எனக் கருதினார்.

அவரிடம் எப்பொழுதும் துலக்கமாக வெளிப்பட்ட சுய சாதி எதிர்ப்புணர்வும், மத நல்லிணக்க உணர்வும் சமூக விடுதலைக் கருத்தியல்களின் அடிப்படையில் ஏற்பட்ட ஆழமான புரிதலல்ல. ஆனாலும், அவர் எப்பொழுதும் அவற்றில் உறுதியாக நின்றார். என்னால் பிற்காலங்களில் சமூக விடுதலை அரசியலை எளிதாக உள்வாங்கிக் கொள்ள அதுவே துணை புரிந்தது என நான் கருதுவதுண்டு.

பின்னாட்களில் அவர் எங்களோடு (ஒருவேளை எங்களுக்காக) தொலைக்காட்சி பார்க்க துவங்கிய பொழுது, அவருக்கு நடிகை ரோஜாவை பிடித்திருந்தது. பாண்டவர் பூமியும், நாட்டாமையும் அவருக்கு மிகவும் பிடித்த படங்களாயின. அவருடைய இந்தத் தேர்வுகள் குறித்த எங்களது கேலிகளை அவர் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. ஒரு வேளை பல சமயங்களில் எங்களை சிரிக்க வைப்பதற்காக அவர் செய்யும் சேஷ்டைகளைப் போல இதுவும் அறிந்தே செய்த சேஷ்டைகளாக இருக்கலாம்.

ஆனால், நிச்சயமாக அவருக்கு மணிரத்தினம் படங்களை பிடிக்கவில்லை. ஒவ்வொரு படத்தின் பிறகும், ஆட்டோவிலேறி வீடு வந்து சேரும் வரை, மணிரத்தினத்தை காரசாரமாகத் திட்டிய வண்ணம் வருவார். ஆட்டோ ஓட்டுனரின் ஆமோதிப்பு அவரை மென்மேலும் உற்சாகம் கொண்டு திட்ட வைக்கும்.

அவரால் மனிதர்களோடு எளிதில் பழக முடிந்தது. முக்கியமாக பணம், அந்தஸ்து, வயது என வித்தியாசம் பாராமல் எல்லோருக்கும் சம மரியாதை அளித்து பழக முடிந்தது. அரசியல் கட்சி பிரமுகர்களும் அவருக்கு நண்பர்களாக இருந்தார்கள். ஆட்டோ ஓட்டுனர்கள், சிகை திருத்துபவர்கள், காலணி தைப்பவர்களும் நண்பர்களாக இருந்தார்கள். அதனால் தான், அவருக்கு கம்யூனிஸ்டுகள் மீது எப்பொழுதும் மரியாதை இருந்தது.

ஆனால், அவர் திமுக-விலிருந்து விலகிய மதிமுக-காரர். அன்று வைகோவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக அவர் கொண்ட கோபம், அரசியல் நியாயம் சார்ந்தது மாத்திரமல்ல. பின்னாட்களில், அவர் கோவில்களுக்கு சென்று வழிபடத் துவங்கினாலும், பெரும்பான்மைத் தமிழர்களைப் போல, அடிப்படையில் திராவிட இயக்க மனநிலை நீடித்த வண்ணம்தானிருந்தது.

பின்னர் ஒரு நாள் அப்பா சென்று விட்டார். இப்பொழுதும், வெகு காலம் கழித்து தான், அவர் சென்று விட்டதை நான் உணர்ந்தேன்.

நீங்கள் விரும்பிய, கொண்டாடிய கால்பந்து விளையாட்டை என் மகனோடு பார்த்து கொண்டிருக்கிறேன் அப்பா. உங்களோடு ஒரு முறை நேரில் ஒரு கால்பந்து போட்டியை கண்டு மகிழ்ந்ததைப் போல… அப்பொழுது நீங்கள் துள்ளிக் குதித்து ஆரவாரித்ததை எண்ணிய வண்ணம்…

17 ஜூன் 2018
4:30 PM

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s