காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை…

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே தேசமாக வேண்டும் என காந்தி காலத்திலிருந்தே வெற்றிகரமான முயற்சிகள் நடக்கின்றன. அக்காலகட்டத்திலேயே பல்வேறு தேசிய இன முதலாளிகளும் காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ், ஸ்வராஜ்யக் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் தத்தமது நலன்களை முன்னகர்த்தினர். ஆனால், காங்கிரஸ் முன்வைத்த தேசியக் கனவில், வெளிப்படையாகத் தெரியா விட்டாலும், அன்றைய பிர்லா-டாடா முதலானோரின் நலன்களே தேசத்தின், தேச முன்னேற்றத்தின் நலன்களாயின. அதன் தொடர்ச்சியாக, அம்பானி, மிட்டல், அதானி என பிராந்திய வேறுபாடுகளைக் கடந்ததாக சொல்லப்படும் ‘தேசிய’ முதலாளிகள் அக்கனவை நிறைவேற்றுவதற்கான உத்வேகத்தை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.

காங்கிரஸ், பா.ஜ.க முதலான இரு கட்சிகளையும் பொதுவில் ஆதரிப்பதும், தத்தமது முரண்பாடுகள்-தேவைகளையொட்டி இவ்விரு கட்சிகளில் ஏதோ ஒன்றுக்கு தமது குறிப்பான ஆதரவை மாற்றுவதும்தான், கடந்த கால, நிகழ் கால அரசியல் போக்குகளை தீர்மானிக்கிறது. காந்தி முன்வைத்த அக்கனவில் ஆர்.எஸ்.எஸ்-க்கும், அதன் அரசியல் அமைப்புகளான ஜனசங்கத்திற்கும், பா.ஜ.கவிற்கும் அடிப்படையில் எவ்வித வேறுபாடுகளும் கிடையாது. பூ-வுக்கும், புய்ப்பத்திற்கும் வேறுபாடுதான். எனவே தான், ஒவ்வொரு ஆட்சியிலும் அடக்குமுறைகளை ஏவும் அமைச்சரின் பெயரும், சூழல், தேவையையொட்டி போர் முனைகளும் மாற்றப்படுகின்றனவேயொழிய, தேசக் கட்டுமானப் பணியும், அதற்கு அடிப்படையான பொருளாதாரக் கொள்கை உருவாக்கங்களும் இடைவிடாமல் தொடர்கின்றன.

காங்கிரசு காலத்தில் எந்த வேதாந்தாவுக்காக சத்தீஸ்கரிலும், ஜார்கண்டிலும், மக்கள் வேட்டையாடப்பட்டார்களோ, அதே வேதாந்தாவுக்காக, இன்று தூத்துக்குடியில், மோடி அரசின் அருள் பெற்ற அதிமுக அரசு வேட்டையாடுகிறது. அன்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எந்த ‘வளர்ச்சிக்காக’ அடக்குமுறைகளை ஏவினாரோ, அதே ‘வளர்ச்சிக்கு’ எதிராக நிற்பதாகத்தான் அழுது புரளும் ‘உள்ளூர்’ சேலத்து மக்கள் மிரட்டப்படுகிறார்கள். எத்தனையோ ஒப்புமைகள்… சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்று காஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலுக்கு வந்து விட்டதை நாளிதழ்கள் மூலம் அறிய முடிகிறது. அமைதியை நிலைநாட்டும் பொருட்டு ஆளுநர் தீவிர ஆலோசனைகள் நடத்தி வருகிறார். ஹூரியத் மாநாட்டுத் தலைவர்கள் மொத்தமாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் அந்நிலை அமலுக்கு வந்து ஒரு மாதமாகிறது. அன்றாடம் பல்வேறு அமைப்பினரும், தனிநபர்களும் கைது செய்யப்படும் செய்திகளையும், கடுமையான சட்டப் பிரிவுகள் ஏவப்படுவதையும் பார்க்கிறோம்.

கருத்துரிமையே கேள்விக்குள்ளாக்கப்படும் காலத்தில், ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகள் கூட சவால் விடப்படும் நேரத்தில் குடிமை உரிமை அமைப்புகள் (civil rights organizations), வழக்கறிஞர்கள், மனச்சாட்சியுள்ள நீதிபதிகளின் பங்களிப்பு வழக்கத்தை விட பன்மடங்கு தேவைப்படுகிறது. ஆனால், உண்மை அறியும் குழுக்கள், வழக்கறிஞர்களைக் கூட கைது செய்வது, அதற்கான சாத்தியப்பாடுகளை முடக்குகிறது.

இப்படியும் சொல்லலாம். ஒரு ஜனநாயக நாட்டில், நெருக்கடி நிலை இல்லாமல் ‘வளர்ச்சி’ சாத்தியமில்லை. ‘அமைதி’ சாத்தியமில்லை. இதையேதான் இந்திரா காந்தியும் கருதினார். அவர் செய்த தவறு நெருக்கடி நிலையை அறிவித்தது மாத்திரம்தானோ? அல்லது நாம் செய்யும் தவறு அறிவிக்கப்படுவதற்கான காலம் வரை காத்திருப்பது தானோ?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s