ஐஸ்க்ரீம் சாப்பிடுதல் பாவமில்லை!

சில ஆண்டுகள் முன்பு வெளிவந்த ஒரு ஆங்கிலக் கட்டுரையில் ஒரு இளம்பெண் அளித்த வாக்குமூலம் (confession) இது.

“கல்லூரிக்கு வரும் வரை, சுயஇன்பம், புணர்ச்சி உச்சம் (orgasm) என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. அதற்குப் பிறகும் கூட வெகு காலம் கழித்துதான் நான் முதன்முறையாக சுயஇன்பத்தில் ஈடுபட்டேன். அந்த முதல் பரவச உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.”

இப்படி ஒரு வாக்குமூலத்தை, தெள்ளு தமிழில் இங்கே ஒரு பெண், ஒரு பத்திரிக்கையிலோ, சமூக வலை தளத்திலோ எழுதி விட முடியாது. உடனடியாக பின்னூட்டங்களில் டார்ச்சர் செய்வதில் துவங்கி, தமிழ்க் கலாச்சாரத்தை உடனடியாகக் காப்பாற்றியே தீர்வதற்கான உச்சகட்ட போராட்டங்கள் வெடிக்கும். பெரியார் சிலை அருகிலேயே கூட கண்டனப் போராட்டம் கனகச்சிதமாக நடந்தேறும். இவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் தைரியத்தோடு சிலர் எழுதினாலும், அவர்கள் ஏற்கெனவே பொதுப் புத்தியால் ‘தண்ணி தெளிக்கப்பட்டவர்களாக’ கண்டு கொள்ளப்பட மாட்டார்கள்.

பொதுவில் நாம் வட இந்தியர்களை விடவும் பண்பாட்டுரீதியாக முன்னேறியவர்கள் என்ற மமதை நமக்கு உண்டு. அது பகுதியளவில் உண்மையாகவே இருந்தாலும், கலை சார்ந்த துணிச்சலான வெளிப்பாடுகளில், நாம் அவர்களை விட மிகவும் பின்தங்கியே இருக்கிறோம் என்பதை பல திரைப்படங்களின் மூலம் உணர முடியும். அத்தகையதொரு அருமையான படைப்பான லஸ்ட் ஸ்டோரீஸ் (காமக் கதைகள்) எனும், ஒரு திரைப்படமாக வெளியிடப்பட்டிருக்கும் நான்கு குறும்படங்களின் தொகுப்பை, சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் காண வாய்ப்பு கிடைத்தது.

lust-stories-review

இன்றைய பெண்கள் காமத்தின் தேவையை, உடலுறவை, பாலுணர்வு சார்ந்த சிக்கல்களை எப்படி அணுகுகிறார்கள், கையாளுகிறார்கள் என்பதே நான்கு கதைகளையும் இணைக்கும் மையச் சரடு. அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி மற்றும் கரன் ஜோஹர் ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள். இதே நால்வர் அணி, ஏற்கெனவே ‘பாம்பே டாக்கீஸ்’ எனும் குறும்படத் தொகுப்பை சில ஆண்டுகள் முன்பு வெளியிட்டதை திரைப்பட ஆர்வலர்கள் அறிந்திருக்கக் கூடும்.

லஸ்ட் ஸ்டோரீஸ் தொகுப்பில், கரன் ஜோஹரது பாகமான இறுதிக் குறும்படம், ஏனையவற்றின் உருவாக்கத்திலிருந்து (making) துலக்கமாக வேறுபட்டிருந்தது. ஜஸ்க்ரீம், தேநீர் என உணவுப் பொருட்களை காமக் குறியீடுகளாக, வெளிப்பாடுகளாக மாற்றுவதாக இருக்கட்டும், உடலுறவில் மனைவி இன்பமடைகிறாளா என்பதைக் குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்ளாத பெரும்பான்மை இந்திய ஆண்களின் மனோபாவத்தை நகைச்சுவையாக சித்திரித்த விதமாகட்டும், மேகா தனது யோனியில் செருகிய வைப்ரேட்டர், எதிர்பாராமல் குடும்பத்தார் முன்பே செயல்படத் துவங்கும் அட்டகாசமான காட்சியில், புகழ்பெற்ற ‘கபி குஷி கபி கம்’ பாடல் அதன் ஹம்மிங்கோடு, புணர்ச்சி உச்சத்தின் (orgasm) தாள லயத்திற்கேற்ப பிண்ணணியில் ஓடுவதாக இருக்கட்டும்… அதகளம் பண்ணியிருக்கிறார் கரண்.

அவரது பாலிவுட் பாணியிலான ஒப்பனைகளும், கோணங்களும், கதை சொல்லல் முறையும், ஒரு இளைப்பாறுதல் (relief) மனநிலைக்கு பார்வையாளர்களை கொண்டு செல்கிறது, ஏறத்தாழ பாம்பே டாக்கிஸில் இறுதிக் குறும்படமாக வந்த அனுராக்கின் ‘முரப்பா’ அளிக்கும் இளைப்பாறுதலைப் போல.

அனுராக் காஷ்யப்பின் காலிந்தி, வழக்கமான இந்திய ஆண் மனதுக்கு கொடுக்கும் அதிர்ச்சி எளிதானதல்ல. தான் கற்பிக்கும் கல்லூரியில் உள்ள ஒரு மாணவனோடு தனக்கிருக்கும் உறவு குறித்து, தனது கைகளை விரித்து விரித்து, பல்வேறு உணர்ச்சி பாவங்களோடு ராதிகா வெளிப்படுத்தும், முன்னுக்குப் பின் முரணான தர்க்கங்கள் வேடிக்கை போலத் தோன்றலாம். ஆனால், பல்லாண்டுகளாக இப்படி ஒரு சுயவிசாரணை கூட இல்லாமல்தான் இறுக்கமாகவும், கெளரவம் குலையாமலும், ஆண்கள் தமது அதிகாரத்தின் கீழுள்ள பெண்களை ஆட்டிப் படைக்கிறார்கள். அது வன்முறையாகத் தான் வெளிப்பட வேண்டுமென்றில்லை. காலிந்தி மேடம் செய்வதைப் போல ‘ஸ்வீட் டார்ச்சராகவும்’ இருக்கலாம்.

சாய்ரத் படத்தின் நாயகன் ஆகாஷ் தோஷர், காலிந்தி மேடமால் பாடாய் படுத்தப்படும் கல்லூரி மாணவனாக நேர்த்தியாக, அளவாக நடித்திருந்தார். அதிலும், இறுதிக் காட்சியில் காலிந்தி சொல்லும் வசனமும், சொல்லும் முறையும் இருக்கிறதே… “பைத்தியமா நீ? நான் கல்யாணமானவள்…” விழுந்து விழுந்து சிரித்தேன். காலிந்தியின் ‘விசித்திரமான’ குணச்சித்திரத்தை அறுத்துப் பார்க்கும், பாலின நடுநிலை வகிக்கும் நீதிபதிகளுக்கு நாம் கவிஞர் கனிமொழி கருணாநிதியின் சொற்களைத்தான் பதிலாகக் கூற வேண்டும். “பெண்களுக்கு தவறு செய்யும் உரிமை கூட கிடையாதா?”

திபாகரின் ரீனா, ‘வழக்கமான’ கணவரின் நண்பனுடனான ‘கள்ள உறவை’ எப்படி வழக்கமற்ற பாணியில் கையாள்கிறாள் எனும் கதையை ஆரவாரமின்றி விவரிக்கிறது. கணவனின் நண்பனோ பதறுகிறான். கணவனோ ரீனாவே சொன்னாலும் அதனை அறிந்தே ஏற்க மறுப்பதன் (denial) மூலம் அவ்விசயத்தை கடக்க முயல்கிறான். முதலில் பதறும் ரீனா உண்மையை உடைத்த பின் கூலாக இருக்கிறாள். அவளிடம் அழுது தேம்பும் கணவனிடம் அவள் சொல்லும் ஒரு வசனம் ஆழமானது. “உனக்கு ஒரு மனைவி தேவைப்படவில்லை. ஒரு அம்மாதான் தேவைப்படுகிறாள்.” பெரும்பாலான இந்திய ஆண்கள் அம்மா பிள்ளைகளாகவே பிறந்து, அம்மா பிள்ளைகளாகவே வளர்ந்து, அம்மா பிள்ளைகளாகவே வாழ்ந்து, அம்மா பிள்ளைகளாகவே செத்தும் போய் விடுவதில்லையா?

ஆனால், திபாகரின் பலம் குறும்படங்களில் வெளிப்படுவதில்லை எனத் தோன்றுகிறது. கோஸ்லா கா கோஸ்லா, ஓய் லக்கி ஓய், எல்.எஸ்.டி, ஷாங்காய் போன்ற அற்புதமான திரைப்படங்களை அவர் உருவாக்கினார். ஆனால் அவரது குறும்படங்களில் ஏதோ ஒன்று குறைகிறது. அது உருவாக்கம் சார்ந்த பிரச்சினையல்ல. ஏறத்தாழ சிறுகதைக்கும், நாவல் எழுதுவதற்குமான வேறுபாட்டில் உள்ள பிரச்சினை. தவிப்பு, குழப்பம், தீர்க்கம் என பலவாறாக பயணிக்கும் ரீனாவின் அகவுலகச் சிக்கல்களை வெளிப்படுத்தும் முறை, இறுதிக் காட்சியின் திருப்பத்தில் ரீனா உருவாக்கும் முடிச்சு ஆகியவை ஈர்த்தாலும், அதன் முழுமையில் அவரது குறும்படம் ஏதோ நிறைவின்மை உணர்வை ஏற்படுத்திய வண்ணமிருக்கிறது.

ஜோயா அக்தரின் சுதா குறித்த படம்தான், இத்தொகுப்பில் நேர்த்தியான, செவ்வியல் கூறுகளையுடைய குறும்படமாக வெளிவந்திருந்தது. பணிப்பெண்ணாகிய தன்னை உடலுறவுக்கு மட்டும் பயன்படுத்திய தனது எஜமானன்… எதிர்பாராத ஒரு நாளில் அவனுக்கு பெண் பார்க்கும் படலம் நிகழ்வதை  எதிர்கொள்ள நேரும் படபடப்பான தருணங்கள்… பூமி பட்நேகர் அற்புதமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருந்தார். குறைவான ஆனால் அழுத்தமான வசனங்களும், அதன் வழியே நடுத்தர வர்க்கம் குறித்த கோட்டுச் சித்திரமும், காட்சிரீதியாக இறுதி வரை நமக்குள் உருவாகும் பதட்டமும், ஒரு இனிப்பை விண்டு எடுத்து வாயில் போட்டு, ஒட்டுமொத்த கசப்பையும் சுதா விழுங்கும் அந்த இறுதி காட்சியும்… அபாரம்! ஜோயாவின் நுட்பமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முறை, அவரது ஜிந்தகி நா மிலேகி தோபாரா, தில் தடக்னே தோ போன்ற வணிகப் படங்களில் கூட வெளிப்படுவதைக் காணலாம்.

இக்கதைகளில் வரும் நான்கு பெண்களும் தங்களது பாலியல் வாழ்வின் விதிக்கப்பட்ட எல்லைகளை, கட்டமைக்கப்பட்ட வரையறைகளை சற்றே நெகிழ்த்தி இன்பத்தை தேட முயல்கிறார்கள். அந்த இன்பம் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதையொத்த சிற்றின்பம்தான். ஆனால், ஐஸ்க்ரீம் சாப்பிட யாருக்குதான் ஆசை இல்லை?

ஒட்டுமொத்தத்தில், பாம்பே டாக்கீஸை விட லஸ்ட் ஸ்டோரீஸ் சிறப்பாக வெளிவந்திருக்கிறது. குறிப்பாக, நெட்ஃபிளிக்ஸ் போன்ற இணைய ஓளிபரப்புத் தளங்களின் வருகை, இது போன்ற வித்தியாசமான கதைக்களங்களை, மாறுபட்ட கோணங்களை உயர் நடுத்தர வர்க்கத்திடம் தைரியமாக எடுத்துச் செல்ல உதவுகிறது. நெட்ஃபிளிக்ஸ் பரவலாகும் பொழுதில், இத்தகைய கதைகளுக்கு பல்வேறு வர்க்கங்களும் எத்தகைய எதிர்வினையை புரிவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.

தமிழில் கார்த்திக் சுப்புராஜ் எடுத்த இதே போன்ற குறும்படத் தொகுப்பு முயற்சிகளான ‘அவியல்’, ‘பெஞ்ச் டாக்கீஸ்’ போன்றவற்றுக்கும், பா.ரஞ்சித், வெற்றிமாறன், ‘கிடாரி’ பிரசாத் போன்ற அரசியல் பிரக்ஞையுள்ள இயக்குனர்கள், எவ்விதத் தடைகளுமற்று உரையாடல்களை நிகழ்த்தவும், நெட்ஃபிளிக்ஸ் போன்ற தளங்கள் வரும் காலங்களில் பயன்படக் கூடும்.

மேலும் படிக்க:
தோழர் கொற்றவையின் பதிவு

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s