இது ஹீலர் பாஸ்கரோடு முடியும் விசயமில்லை!

images-2

ஹீலர் பாஸ்கரை கைது செய்தது வரவேற்கத்தக்க விசயமல்ல. மக்களிடையே எழுந்துள்ள எதிர்ப்பு அலையையொட்டி, அதிமுக அரசு தனது மக்கள் நலனை வெளிக்காட்டி கொள்வதற்கான வாய்ப்பாக இதனை பயன்படுத்தியுள்ளது. இதன் மூலம் நேர் எதிரான விளைவுகளே ஏற்படும். மென்மேலும் புகழடைந்த நித்தியானந்தாவைப் போல, அவரது ஆதரவாளர்களால் ‘இலுமினாட்டிகளின் சதியால் சிறை சென்று மீண்ட மாவீரனாக’ அவரது புகழ் பரப்பப்படும்.

ஹீலர் என்று அழைக்கப்படும் இந்த பாஸ்கர் மீது எனக்கு எந்த மரியாதையும் இல்லை. அவரது இலுமினாட்டி குறித்த புகழ்பெற்ற பிதற்றல்கள், அலோபதி மருத்துவத்திற்கு எதிரான கண்மூடித்தனமான எதிர்ப்பு ஆகியவற்றை, சமூக பொருளாதாரக் கட்டமைப்பு, அரசியல், அறிவியல் அடிப்படைகள் குறித்த ஓரளவு புரிதல் உடைய எவரும் சிறிதும் ஆதரிப்பதற்கு வழியில்லை. சில ஆண்டுகள் முன்பு, அவரது ஓரிரு யூடியுப் வீடியோக்களைக் காண முயற்சித்து, சகிக்க முடியாமல் அதனோடு விட்டு விட்டேன்.

வடக்கில் வலதுசாரி கருத்துக்களை கக்கும் யூடியுப் புகழ் அபிஷேக் மிஷ்ராவின் உடல்மொழியோடு கூடிய பாரி சாலன் பேசுவதைக் கேட்கும் பொழுது சிரிப்பு தான் வருகிறது. அவராலும் சிலர் ஈர்க்கப்படுகிறார்கள் என்பது ஆச்சர்யத்தை மட்டுமே அளிக்கிறது. செந்தமிழன் பேசும் தமிழர் மருத்துவம் அதிகமான மிகைப்படுத்தல்களையும் (தடுப்பூசிகள்), அதிகமான எளிமைப்படுத்தல்களையும் (உடல் என்பது மனம் மட்டுமா?) ஒருங்கே கொண்டதாக எனக்கு தோற்றமளிக்கிறது. நான் அதனை விரிவாக ஆராய முயன்றதில்லை.

ஆனால், இதற்காக இவர்களை கைது செய்வது என்ன நியாயம்?

அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் பிரசவத்திற்கு செல்லும் ஒரு பெண் இறந்து விட்டால், அலோபதி டாக்டரை கைது செய்வீர்களா? கோரக்பூரில் நிகழ்ந்த குழந்தைகள் படுகொலையில் எத்தனை தகிடுதத்தங்கள் நிகழ்த்தப்பட்டன? அலோபதி மருத்துவம் முழுமுற்றாக சரியான மருத்துவ முறையா? அம்மருத்துவ முறை அனைத்து உயிரிழப்புகளையும் தடுத்து விடுகிறதா? ‘ரமணா’ திரைப்படத்தின் புகழ்பெற்ற மருத்துவமனைக் காட்சி ஏன் மக்களிடம் அத்தனை வரவேற்பை பெற்றது?

எத்தனை பழங்குடிப் பெண்கள் ஆஸ்பத்திரிகளுக்கு வரும் வழியிலேயே பிரசவத்தில் செத்துப் போயிருக்கிறார்கள்? உடனடியாக அந்த மாவட்ட கலெக்டரை கைது செய்தீர்களா? மனச்சிதைவு நோய்க்கு (schizophrenia) மருந்துகள் எடுபடவில்லை, சிகிச்சையை மறுக்கும் மனச்சிதைவு (treatment-resistant schizophrenia),  சிகிச்சையை மறுக்கும் மனச்சோர்வு (treatment-resistant depression) எனப் புதிய வகைகளை சமீப காலமாக மனநல மருத்துவ உலகம் பேசி வருகிறதே, இத்தனை காலம் அம்மருந்துகளை நம்பி உண்ட மக்களுக்கு ஏற்பட்ட பக்க விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது? அவர்களுக்கும் பரிசோதனை சாலை எலிகளுக்கும் என்ன வேறுபாடு? இந்த அறம் சார்ந்த கேள்விக்காக பொது மன்னிப்பு கேட்கப் போகும் ஃப்ராய்டு யார்?

காந்தி இயற்கை மருத்துவத்தை நம்பினார். மாத்திரைகளை எடுத்துக் கொள்ள மறுத்தார். மண் சிகிச்சையில் இறுதி வரை நம்பிக்கை கொண்டிருந்தார். கஸ்தூரிபாவும் அவரது கருத்துக்களை ஏற்று பின்பற்றி, உடல்நலம் குன்றிய பொழுது, அலோபதிக்கு பதிலாக ஆயர்வேத மருந்துகளை மாத்திரம் உட்கொண்டு மரித்துப் போனார்.

ஒரு மனிதர் தனது உடலுக்கு என்ன மருத்துவம் வேண்டும் என்று சொல்வதற்கும், ஏன் மருத்துவமே வேண்டாம் என்று சொல்வதற்கும் அவருக்கு உரிமை இருக்கிறதா இல்லையா? தற்கொலையை குற்றமாக பார்க்கிற சட்டப் பிரிவே நீக்கப்படும் பொழுது, ஒரு மனிதர், ஆணோ, பெண்ணோ, தனக்கான மருத்துவ முறையை தேர்ந்தெடுக்கும் உரிமையை எப்படி நாம் குற்றமாக்க முடியும்?

கிருத்திகாவின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய, மனதை கனக்கச் செய்யும் துயர சம்பவம் என்பதில் துளியும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதனைக் கொண்டு நாம் என்ன செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர் முதலானோருக்கு எதிராக கடுமையான பிரச்சாரம் செய்ய வேண்டும். அல்லல்படுத்தும் பல அலோபதி மருத்துவர்கள், மிரட்டும் மருத்துவக் கட்டணங்கள், தீர்க்க முடியாத நோய்கள் ஆகியவற்றோடு பரிதவிக்கும் நோயாளிகள் மீது நேரடியாக ஆய்வு நடத்துவது அறமல்ல என மாற்று மருத்துவ முறைகளை பிரச்சாரம் செய்பவர்களை எதிர்கொள்ள வேண்டும். கருத்தியல்ரீதியாக அவர்களை முறியடிப்பதற்கான முயற்சிகளில் அறம் சார் கடப்பாடுடைய மருத்துவர்கள் ஈடுபட வேண்டும். அதே வேளையில், மாற்று மருத்துவத்தை பிரச்சாரம் செய்வதற்கும், அதனை ஏற்பதற்கும் மக்களுக்கு உரிமை உண்டு என்பதை அங்கீகரிக்க வேண்டும்.

1896-ல் சூரத்தில் பிளேக் நோய் பரவிய பொழுது, அதனை தடுக்க எலிகளை ஆங்கில அரசு கொல்ல முனைந்த பொழுது, மூஞ்சிறு பிள்ளையாரின் வாகனம் என அதனை எதிர்த்த திலகரின் வழிவந்தவர்களும், ஹீலர் பாஸ்கர், பாரி சாலன், செந்தமிழன் ஆகியோரையும் ஒரே தட்டில் வைப்பது நிச்சயமாக தவறானதே. அவர்களுக்குள் சில ஒன்றுபடும் புள்ளிகள் இருந்தாலும், அவர்களுக்குள் துலக்கமாக வேறுபடும் புள்ளிகளும் உண்டு என்பதை காண மறுப்பது, அவர்கள் வளர்வதற்கே வழிவகுக்கும்.

ஏனென்றால், என்ன தான் பெரும்பான்மை உலகம் ஒரு வித கருத்தொற்றுமையில் ஒரு விசயத்தை அணுகினாலும், ஏதோ ஒரு மூலையில் அத்தகைய அணுகுமுறையிலிருந்து விலகி நிற்கும் சக்திகள், ஒரு சிறிய அளவிலேனும், எப்பொழுதும் இருக்கவே செய்வார்கள் என்பதை நாம் ஏற்றுத்தானாக வேண்டும். அவர்களைக் கைது செய்வதன் மூலம் அப்போக்கை ஒழித்து விட முடியாது.

இத்தகைய சக்திகளை கையாள ஒரே வழிதான் உண்டு. காந்தியின் உடலுக்கு ஆபத்தில்லாத காலத்தில் அவரது கவைக்குதவாத வாதங்களை நேரு உதாசீனப்படுத்தியதைப் போல. அதே வேளை உடல்நிலை ஆபத்தான கட்டத்தை அடைந்த பொழுது, அவரை எப்படியேனும் வழிக்கு கொண்டு வந்ததைப் போல.

வழிக்கு கொண்டு வருவது என்பது ஊசி போட ஒப்புக் கொள்ள வைப்பது. வலுக்கட்டாயமாக சஞ்சய் காந்தியைப் போல கருத்தடை செய்வதல்ல.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s