நீ எங்கள் மூதாதை!

சில தாத்தாக்கள் அன்பால் சீராட்டுவார்கள். சில தாத்தாக்கள் ஏதேதோ காரணங்களால் அன்னியமாக உணர வைப்பார்கள். பேரக் குழந்தைகள் என்னவோ எல்லா தாத்தாக்களையும் நேசிக்கவே முற்படுகின்றன. ஆனால், அக்குழந்தைகளின் நேசம் தொடர்வதும், நிலைப்பதும், தாத்தாக்கள் தமது பேரக் குழந்தைகள் மீது காட்டும் நேசத்தினால் மட்டுமல்ல, தாத்தாக்களின் வாழ்வும் அதனை தீர்மானிக்கிறது.

அதனால்தான், எனக்கு நேசம் காட்ட மறுத்த எனது தந்தை வழித் தாத்தா, எனக்கு இரத்த உறவாகவே இருந்த போதிலும், அவர் மரித்த பொழுது எனக்கு சுத்தமாக அழுகை வரவில்லை. ஆனால், கலைஞர் மரித்த செய்தியை கேட்ட பொழுது, ஒரு கணம் கண் கலங்கினேன். அழுதேன் என்று பொய் சொல்ல மாட்டேன். ஏனென்றால், அவர் மரிக்கப் போகிறார் என்பது சில ஆண்டுகளாகவே எதிர்பார்த்த ஒன்று என்பதால் மட்டுமல்ல, அவர் மீதான தீராத விமர்சனங்கள் ஒரு வகையில் நேசத்தை குறைத்து விட்டன என்பதாலும்தான்.

karunanidhi-759

மதுரையில், எனது இளம் பிராயம் தொடங்கி பல காலம் வரை, ‘ஓடி வருகிறான் உதயசூரியன்’ எனும் பாடலுடன்தான் காலைப் பொழுதுகள் விடிந்தன. ‘பாளையங்கோட்டை’ பாடலை அதன் தாள லயத்தினால் ஈர்க்கப்பட்டு, முழுவதுமாக மனப்பாடம் செய்து பாடித் திரிந்த காலங்கள் உண்டு.

அப்பா திமுகவில் ஈர்ப்பு கொண்டிருந்த காலமது. பள்ளியில் ஃபேன்சி டிரஸ் போட்டிக்கு கலைஞராக வேடமிட்டுச் சென்று, அப்பா சொல்லி கொடுத்த வசனத்தை பேசினேன். என்னை பேச விட்டு ரசிக்கும் டீச்சர்களுக்காக, 7-8 வயது கூட நிரம்பாத நான், கலைஞரை ஆதரித்து வாய்க்கு வந்ததைப பேசுவேன்.

பின்னர், 93-ல் வைகோவை கலைஞர் வெளியேற்றிய போது, அப்பா மதிமுக நிலையெடுத்தார். ஓரளவு சிந்திக்கத் தெரிந்திருந்த எனக்கும் அதுவே சரியெனப்பட்டது. அதற்கெல்லாம் பிறகு, கல்லூரியில் நுழைவதற்கு முந்தைய ஓரிரு ஆண்டுகளில் மார்க்சிய அறிமுகம் ஏற்பட்ட பொழுது, திராவிட அரசியல் பேசுவதெல்லாம் கொஞ்சம் cheap politics எனும் மிதப்பு தோன்றி செயல்படத் துவங்கியது.

அதனைத் தொடர்ந்து, போக்குவரத்து கழகங்களுக்கு பெயர் வைத்தது, அதனையொட்டி நிகழ்ந்த கலவரங்கள், தாமிரபரணிப் படுகொலை, ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், அழகிரி குறித்து மதுரையில் நிலவிய பிம்பங்கள் எனப் பல விசயங்களும் கலைஞர் குறித்த எதிர்மறை மனப்பதிவை உண்டாக்கும் வண்ணத்திலேயே நடந்தேறின. அவையனைத்தும் பொய்யல்ல. மேலும், நான் இணைந்த தேர்தல் பாதையை மறுக்கும் கம்யூனிஸ்டு அமைப்பு, “தேர்தல் பாதை திருடர் பாதை” என அழுத்தம் திருத்தமாக முன்வைத்தது.

அவ்வமைப்பின் திமுக குறித்த பழைய கட்டுரைகள், போனப்பார்ட்டிஸ்டுகள் குறித்த வரையறை, பின்னாளில் திமுக ஆட்சியில் இருந்த பொழுது எங்கும் பரவிய குட்டி நிலப்பிரபுக்கள் கலாச்சாரம் ஆகியன கலைஞர் மீதான இனம் புரியாத ஈர்ப்பையெல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையச் செய்தன. ஆனால், அதே வேளையில், அவ்வமைப்பினர் தாங்களே அறியாமலும், அறிந்தும் முன்வைத்த பல கருத்துக்கள், தமிழக அரசியல் வரலாற்றில், சமூக மறுகட்டமைப்பில், கலைஞரின் நேர்மறை பங்களிப்பை ஓரளவிற்கு புரிய வைத்தன.

karuna

ஒரு கட்டத்தில், இயல்பாகவே, தேர்தல் வரம்புக்குள் செயல்படும் அமைப்புகளில், திமுக ஒப்பீட்டளவில் முன்னேறிய கட்சி எனும் கருத்து, உட்கட்சித் தேர்தல், சமூக நீதிக்கும், பல்வேறு ஒடுக்கப்படும் பிரிவினருக்குமான நலத்திட்டங்கள், அருந்ததியர் இடஒதுக்கீடு, அவற்றில் கலைஞர் கொண்டிருந்த தனிக்கவனம் முதலான பல அம்சங்களை கணக்கில் கொண்டு, உறுதி பெற்றது. ஆனால், அவர்கள் தமது போர்க்குணத்தை வேகமாக இழந்து நிறுவனமயப்படுகிறார்கள் எனும் பார்வையும் உறுதி பெற்றது. அது இன்றுவரை மாறவில்லை.

திமுக முழுக்க சீரழிந்து விட்டது எனும் எண்ணம் தோன்றத் துவங்கிய காலத்தில், தீடீரென சேது சமுத்திரக் கால்வாய் பிரச்சினையையொட்டி, “ராமன் என்ன இஞ்சினியரா?” எனக் கேட்டார் கலைஞர். ஒரு கணம் எல்லோருமே அதிர்ச்சியடைந்து விட்டோம். ஏனெனில், மஞ்சள் துண்டு கதையை நம்புகிற அளவிற்கு யார் யாரோ திமுகவில் முக்கியஸ்தர்களான காலமது. அடுத்த நாள் வடக்கே ஒரு சாமியார் கலைஞரின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு பரிசு என அறிவிக்க, மொத்த தமிழகமும் கொந்தளித்தது. பாஜக அலுவலகத்திற்குள்ளிருந்து வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டார்கள் இல.கணேசனும், வானதி சீனிவாசனும்.

இன்று மெரினாவில் இடம் கிடையாது எனச் சொன்னவுடன் என்ன நடந்ததோ, அதை விட வீரியமாக அன்று நடந்தது. அது எனக்கு ஒன்றைத்தான் புரிய வைத்தது, கலைஞர் எங்களுடையவர். எங்களுக்குள் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கும். ஆனால், அவரை நோக்கி உங்கள் சுட்டு விரலை அசைத்தாலும், எங்களுக்குத் தானாக தசையாடும்.

சில ஆண்டுகள் கழித்து, ஈழப் போர் உச்சத்திலிருந்த பொழுது, கலைஞர் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது வரலாற்றில் ஆதாரங்களோடு இருக்கிறது. அவர் போரை தடுத்திருக்க முடியும் எனும் தம்பிகளின் அதீத எதிர்பார்ப்பு ஒரு வித குழந்தை மனநிலையின் வெளிப்பாடு. அந்த மிட்டாய் கிடைக்கவில்லையென இன்று வரை அவரோடு டூ போடுவதும் அதே மனநிலையின் வெளிப்பாடுதான். ஆனால், அவர் தன்னால் என்ன செய்ய முடிந்திருக்குமோ, அதனையே செய்யவில்லை என்பதும், செய்யக் கூடாத விசயங்களையும் செய்தார் என்பதும் தான் வேதனை தரும் விசயங்கள். அவர் ஏற்படுத்திய காயங்களில், அக்காயம் அனேகமாக ஆறாத ஒன்றாகவே இருக்கும்.

நான் இணைந்திருந்த கம்யூனிஸ்டுக் கட்சியை விட்டு வெளியேறிய பின்னால், நிகழ்ந்த வாசிப்பு, பலருடனான உரையாடல்கள் ஆகியவை, கலைஞர் அல்லது திமுக குறித்த கறுப்பு வெள்ளைப் பார்வையை முற்றிலுமாக தகர்த்தது. இப்பொழுது யோசிக்கையில், ஒரு மாபெரும் சமூக மாற்றத்தை பெரும்பாலும் hindsight-ல்தான் புரிந்து கொள்ள முடியும் என்பதும், பல சமயங்களில் ‘சமரசவாதிகள்’ வரலாற்றில் குறிப்பிடத்தக்க நேர்மறைப் பங்காற்றுகிறார்கள் என்பதும் மெல்லப் புரிகிறது.

கலைஞரின் கடைசி ஆட்சியில் நிகழ்ந்த பல கோலாகலமான விசயங்களைப் பற்றி பேச மனமில்லை. ஆனால், அவர் அந்த தள்ளாத வயதிலும், ஆசை ஆசையாக அன்றாடம் வந்து பார்த்து, உலகத்தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கட்டினாரே, அதை என்ன சொல்வது? அல்லது தீட்சிதர்களுக்கு எதிராகப் போராடிய ஆறுமுகசாமியை அழைத்துப் பாராட்டி, வலிய வெறுப்பை சம்பாதித்துக் கொண்டாரே, அதையெல்லாம் என்ன சொல்வது?

எனக்குத் தோன்றுகிறது, அவர் போராடிக் கொண்டேயிருந்தார், தனக்கு வெளியிலும், தனக்கு உள்ளேயும். அதனால்தான் கருணாநிதியை எதிரிகள் இறுதி நொடி வரை வெறுத்தார்கள். ஈழத்து ‘கருணா’வாக அரவணைத்துக் கொள்ளவில்லை. அதே வேளையில், தனக்குள்ளே நிகழ்ந்த போராட்டத்தில் அவர் சில சமயங்களில் வென்றார். சில சமயங்களில் தோற்றார். நினைத்துப் பார்க்கவே கடினமான, ஒரு எளிய மனிதன் இடைவிடாமல் நிகழ்த்திய மிக நீண்ட போராட்டமிது.

eb1f6b2062782e850ac0020a0849acbb

தலை வணங்குகிறேன் தாத்தா! என்றும் அன்போடும், சில சமயங்களில் கசப்போடும் உன்னை நினைத்து கொள்வோம். நீ எங்கள் மூதாதை.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s