அழுகை நல்லது, ஆண்களுக்கும்!

இரண்டு நாட்கள் முன்பு மாலைப் பொழுதில், எனது மகன் வழக்கம் போல, எங்கள் அடுக்ககத்தில் உள்ள மற்ற குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது, ஒரு சிறுமி தெரியாமல் அவனது காலில் சைக்கிளில் இடித்து விட்டாள். சிறிய காயம்தான். ஆனால், எல்லாச் சிறுவர்களையும் போல எனது மகன் அழத் துவங்கி விட்டான். நாங்கள் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கையில், அச்சிறுமியின் அப்பாவும் வந்து சமாதானப்படுத்த முயன்றார். பின்னர், அச்சிறுமியை அழைத்துக் கொண்டு கிளம்பியவர், “சரி, சரி, விடுப்பா, பொண்ணு மாதிரி ஏன் அழுதுகிட்டிருக்க?” என அறிவுரை பகர்ந்து சென்றார்!!

நேற்று, கலைஞரின் இறுதி நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, தோழி ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். கலைஞர் மரணம் குறித்த கவலைகளை டிவியைப் பார்த்த வண்ணம் பகிர்ந்து கொண்டவர், “பாருங்க, கனிமொழி கூட ஸ்ட்ராங்கா இருக்காங்க, ஸ்டாலின் ஏன் இப்பிடி தேம்பித் தேம்பி அழறாரு” என்றார். ஒரு கணம் நான் அதிர்ச்சியடைந்தேன். ஏனென்றால், அந்தத் தோழி பெண்ணியம் குறித்த புரிதல்கள் உடையவர்.

crying

அழுகை பலவீனம், பெண்கள் தான் அழுவார்கள், ஆண்கள் அழுவது அசிங்கம், அப்படி அழுதால் அது பாலினச் சிக்கல் என விரியும் இந்த கருத்தாக்கம்தான் எத்தனை வலிமையாக நமது சமூகத்தில் வேரூன்றியிருக்கிறது? வடக்கிலும் கூட, “ஆண்களுக்கு வலிக்காது” (மர்த் கோ தர்த் நகி ஹோத்தா) எனும் சொலவடை, பிரசித்தி பெற்றது. ஆனாலும், சிறுவர்கள் முதல் வயதான ஆண்கள் வரை நமது சமூகத்தில் தொடர்ந்து அழுது கொண்டுதானிருக்கிறார்கள். நான் பார்த்தவரை, அதனை மறைக்க முயல்பவர்களும், அடக்க முயல்பவர்களும், பொதுவில் இறுக்கமடைந்தவர்களாகவும், நுட்பமான அல்லது வெளிப்படையான வன்முறைக் கூறுகளை கொண்டவர்களாகவுமே இருக்கிறார்கள்.

நமது சமூக அமைப்பில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆணாதிக்கக் கருத்தியல்களிலிருந்து பெண்கள் விடுதலையடையும் போக்கு பல்வேறு வடிவங்களில் குறிப்பிடத்தக்க கட்டங்களைத் தாண்டியிருக்கிறது. ஆனால், தந்தை வழிச் சமூக அமைப்பு உருவாக்கிய ஆணாதிக்க கருத்தியல்களிலிருந்து ஆண்கள் விடுதலை பெறுவதற்கான போராட்டம் பெரிய முன்னேற்றம் கண்டிருக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அது குறித்து நாம் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் தோன்றுகிறது.

images-3

ஒரு ஆண் எப்பொழுதும் வலிமையானவனாக இருக்க வேண்டும், புஜபல பராக்கிரமசாலியாக இருக்க்க வேண்டும், சண்டை என வந்தால் அடித்து நொறுக்குபவன் தான் ஆம்பள சிங்கம், அடி வாங்கினால் கூட பரவாயில்லை, அடி வாங்கி அழுதால் அவன் பொட்டை, ஒதுங்கிச் செல்பவன் நிச்சயம் வளையல் போட்டுக் கொள்ள வேண்டியவன்… என ஏராளமான பொதுமைப்படுத்தப்பட்ட வரையறைகள் எதிர்கொள்ளப்படாமலேயே இருக்கின்றன. நவீன சமூகத்தில், இன்னும் கொஞ்சம் வளர்ந்து, நிறைய சம்பாதிப்பவன் தான் ஆம்பள, பொண்டாட்டி ஆசைப்பட்டு கேட்டத வாங்கிக் கொடுக்க முடியாதவன் துப்புக் கெட்டவன் என ஆண்களுக்கு எத்தனையோ நெருக்கடிகள் முளைத்த வண்ணமிருக்கின்றன.

ஆண்கள் அழுதால் முதலில் கண்டிப்பவர்கள் அம்மாக்கள் தான். இதற்கான அடிப்படை, பரிணாம வளர்ச்சியோடு எப்படி வளர்ந்தது என தனது ‘உயிர்மொழி’ நூலில் உளவியல் மருத்துவர் ஷாலினி துலக்கமாக விளக்கியிருப்பார். கண்ணீரின் அறிகுறி தென்பட்டால் கூட, உடனடியாக “நீ ஆம்பளடா, நீ ஏன் அழுகுற?” என சாதாரணமாக கேட்பார்கள். பலவீனம், இயலாமை என்பதான உணர்வுகளை எல்லாம் ஒரு ஆண் வெளிப்படுத்தவே கூடாது. அம்மாதிரி சமயங்களில் எதுவும் நடக்காதது போல நடிக்கக் கூட செய்யலாம். ஆனால், அத்தகைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது, பரம்பரைக்கே அவமானம்.

சில நாட்கள் முன்பு ஒரு நூல் அறிமுகக் கூட்டத்தில், ஆணாதிக்கம் ஆண்களிடம் உருவாக்கும் இறுக்கம் குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது, ஒரு பெண் மருத்துவர் (பெயர் தெரியவில்லை) நறுக்கென சொன்னார். “அழுகை பலவீனம் எனும் கருத்தெல்லாம் மேற்கில்தான் உண்டு. கிழக்கில் கிடையாது.” நானும் யோசித்துப் பார்க்கிறேன். ம.க.இ.க-வின் “வெட்டுப்பட்டு செத்தோமடா மேலவளவுல, வெந்து மடிஞ்சோமடா வெண்மணியில..” பாடலில், தலித் படுகொலைகளின் உள்ளடக்கத்தில், நெஞ்சை உலுக்கும் குரலில், தோழர் கோவன் ஒரு கேள்வி கேட்பார்.

“அரிச்சந்திர மயான காண்டத்திற்கு கண்ணீர் விட்டு கதறாதவர்கள் யார்?”

ஆம். கண்ணீரின் மூலமே, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக எத்தனையோ கொடுமைகளை, ஒடுக்குமுறைகளை கடந்து வந்த சமூகம் நாம். விடிய விடிய தெருக்கூத்துக்களுக்கும், பின்னர் நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கும் நேரம் போவது தெரியாமல் அழுது வடிந்தவர்கள் நாம். சிவாஜி கணேசனின் விதவிதமான அழுகைகளை கண்ணீர் மல்க கொண்டாடியவர்கள் தானே நாம்? இந்தியிலும் கூட ராஜ் கபூர் முதல் ராஜேஷ் கன்னா வரை, மக்கள் வண்டி கட்டிக் கொண்டு போய் அழுது தீர்த்ததுதானே நமது வரலாறு.

பிரச்சினை என்னவென்றால், எல்லா சமூகங்களையும் போல, நம்மிடமும் பல பாசாங்குகள் உண்டு.

“நாடகத்தில் காவியத்தில் காத லென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்;
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்;”

என காதலை முன்வத்து பாரதி சொன்னதைப் போல, நாம் பல விசயங்களில் கலையில் ரசிப்பதொன்றாகவும், யதார்த்தில் நேர் எதிராகவும் நடந்து கொள்கிறோம். கோவிலிலில் பக்திப் பெருக்கெடுத்து அழலாம். விளையாட்டில் நமது அணி தோற்றுப் போனதற்காக அழலாம். பால் தினகரனின் கூட்டத்திலோ, ஜக்கி வாசுதேவ் கூட்டத்திலோ கூட அழலாம். ஆனால், ஒரு ஆண் தனது சொந்தப் பிரச்சினைக்கு மாத்திரம் அழவே கூடாது. இந்தப் பாசாங்கை, முரண்பாட்டை நாம் களைந்தெறிவது எப்படி? குறைந்தபட்சமாக, ஆண்களுக்கு அழுவதற்கான உரிமையை வழங்குவது எப்படி?

”வன்புணர்வு குறித்த பெண் குழந்தைகளுக்கு வகுப்பெடுக்க வேண்டாம், ஆண் குழந்தைகளை சரியாக வளருங்கள்” எனும் கருத்து சமீப காலமாக அழுத்தமாக முன்வைக்கப்படுகிறது. நல்ல தொடுகை, கெட்ட தொடுகை, பாலுணர்வு என்றால் என்ன, அதனை சரியான முறையில் கையாள்வது எப்படி என ஆண் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் பொறுப்பை, அரசாங்கம் பெற்றோர்களின் தலையில் கட்டி விட்டிருக்கிறது. பாலியல் கல்வியை முறையாக பள்ளிகள் வழியே வழங்காமல், பெற்றோர் எனும் பாத்திரத்தில் எல்லோரும் முற்போக்காளர்களாகவே இருப்பார்கள் என அரசாங்கம் கருதுவது, அதன் அறிவு விசாலத்தை காட்டுகிறது.

ஆணாதிக்க சட்டகத்திலிருந்து ஆண்கள் வெளியேறும் போக்குதான், பாலின சமத்துவத்திற்கும், பெண் விடுதலைக்குமான உறுதியான மைல்கற்களை நிலைநாட்டும். அது சமையல் வேலைகளில் பங்கேற்பது, பிங்க் கலர் சட்டை அணிவது, நாப்கின்களை மறைக்காமல் கடையிலிருந்து வாங்கி வருவது, அழுகையை மறைக்காமலிருப்பது என பல்வேறு அம்சங்களை தொட்டு விரிய வேண்டிய பயணம்.

men-feminism-e1372102217532

எனவே தற்போதைக்கு நாம்தான் நமது குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும். “அழுவது இயல்பானது. மனதின் அழுத்தங்களை நீக்கும் வல்லமை உடையது. பொட்டைத்தனமாக இருப்பதில் அவமானமில்லை. பொறுக்கியாக இருப்பதே அவமானம்.” அந்தச் சிறுமியின் அப்பாவிற்கும் இதையே சொல்கிறேன்.

பி.கு: சமூகம் கட்டமைக்கும் உணர்ச்சி வெளிப்பாட்டிற்கான பாலின வரையறைகளில், அதிகம் அல்லல்படுபவர்கள் திருநங்கைகள்தான். பதிவின் வரம்பு கருதி, அவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் குறித்து விவரிக்கப்படவில்லை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s