சூஃபிக்களுடன் ஒரு மாலைப் பொழுது!

கடந்த சனிக்கிழமை காலை, நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்த பொழுது கீழ்க்காணும் விளம்பரம் கண்ணில் பட்டது. ‘அடடா, அவசரப்பட்டு ஜூங்கா எனும் திரைப்படத்திற்கு டிக்கெட்டுகள் புக் செய்து விட்டோமே” என வருத்தப்பட்டேன். எங்கள் வீட்டு முதலமைச்சரும், விஜய் சேதுபதி நற்பணி மன்ற தேசிய பொதுச் செயலாளருமான அம்மையாரிடம் திரைப்படத்திற்கு பதிலாக இந்த நிகழ்ச்சிக்கு போகலாம் என விண்ணப்பம் வைத்தேன். அம்மா ஆட்சியில் நிகழ்வதைப் போலவே மறுநொடியே அனுமதி மறுக்கப்பட்டது. அம்மா ஆட்சியில் மட்டும் ஜனநாயக உரிமைகளைப் பற்றி வாயே திறக்க மறுக்கும் பல தமிழ் தேசியவாதிகளைப் போல நானும் பணிந்தேன்.

IMG_4896

ஆனால், மாலையில் ஜூங்கா எனும் திரைக்காவியம் படுத்திய பாட்டில், படம் துவங்கி அரை மணி நேரத்தில், அம்மையாரே சகிக்க முடியவில்லை என புலம்பத் துவங்க, சட்டென ஸ்டாலினைப் போல யோசித்து, கடகடவென அரங்கை விட்டு வெளிநடப்பு செய்தோம். ஆறு வயதே நிரம்பிய எங்கள் வீட்டு Thug life துரைமுருகன் மாத்திரம் “படம் நல்லாத்தான இருக்கு..” என வீம்புக்கு எங்களை வம்பிழுத்த வண்ணம் பின்தொடர்ந்தார். கார்ட்டூன் படம் கூட்டிச் செல்லாததற்கு பழி வாங்குகிறாராம்!

மழை தூறிக் கொண்டிருந்த அந்த மாலையில், ரசிய கலாச்சார மையத்தை அடைந்த பொழுது, ஒரு ஜீப்பிலிருந்து சிறப்பு விருந்தினர் டி.எம்.கிருஷ்ணா துள்ளிக் குதித்து இறங்கி அரங்கினுள் சென்றார். வசீகரன் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். சரி, தாமதமாகவில்லை என எண்ணிக் கொண்டு விரைந்து உள்ளே சென்று இருக்கைகளில் அமர்ந்தோம். கலைஞர்கள் அறிமுகம், சால்வை அணிவித்தல் போன்ற சடங்குகளுக்குப் பிறகு கிருஷ்ணாவைப் பேச அழைத்தார்கள். பாட்டைக் கேட்போம், பேச்சு வேண்டாம் என மேடையிலேயே கிருஷ்ணா மறுத்தார். மகிழ்ச்சியாக இருந்தது.

முதலில் சூஃபி இசை குறித்த சிறு அறிமுகத்தை வழங்கிய சமீர் பின்சி, “யார் கோ ஹம்னே ஜா பஜா தேகா” (நான் காணும் எல்லாவற்றிலும் உன்னையே காண்கிறேன் காதலே!) எனும் புகழ்பெற்ற ஆபிதா பர்வீனின் பாடலுடன் நிகழ்ச்சியை துவங்கினார்கள். மெல்லிய தாள லயத்துடன் துவங்கிய அந்தப் பாடல், வரவிருக்கும் பாடல்களுக்கு கட்டியம் கூறுவது போல, வருடித் தருவதாக இருந்தது.

பாடலின் கடைசி சரணத்துக்கு முன்பு, அந்தப் பாடலின் மையப் பொருளை நாராயண குருவின் வரிகளில் மலையாளத்திலும், திருக்குறள் வரிகளில் தமிழிலும் சமீர் பாடிக் காட்டிய பொழுது, அரங்கம் அதிர்ந்தது. அதன் பின்னர் ஒவ்வொரு பாடலிலும் இதே பாணியை அவர் செய்து காட்டினார். மதங்களை கடந்து மக்களை இணைக்கும் சூஃபி இசையை, மொழிகளையும் தொட்டு கடப்பதன் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க முயலும் சமீரின் முயற்சி பாராட்டுக்குரியது.

abidaஅடுத்து வந்த ஆபீதா பர்வீனின் “ஹம் கோ யான் தர் தர் ஃபிராயா யார் நே” (எல்லா இடங்களிலும் எனைத் தேடி அலைய வைத்தாயே அன்பே, ஆனால் இல்லாத ஓரிடத்தில் உனது வீட்டைக் கட்டிக் கொண்டாயே அன்பே) எனும் பாடல், காதலரின் முன்பும், கடவுளின் முன்பும் மாத்திரமே அடங்கி அழியும் கர்வத்தின் உணர்வை ஒருங்கே உண்டாக்கி திளைக்க வைத்தது. அதிலும், குறிப்பாக “நீ உன்னை பார்ப்பதற்பான கண்ணாடியாக என்னை வைத்திருக்கிறாய்” எனும் வரியெல்லாம்… இசையின் மூலமாகவே அத்வைதக் கருத்தை கூட கவித்துவமாக சொல்ல முடிகிற சாத்தியம் குறித்து ஆச்சரியப்படுத்தியது.

இவ்வாறு பாகிஸ்தானியப் பாடகரான ஆபிதா பர்வீனின் பாடல்களை தொடர்ந்து பாடும் ‘தேச விரோதச் செயலில்’ ஈடுபட்ட சமீரும், இமாமும், அடுத்ததாக, இந்தியாவின் புகழ்பெற்ற மதநல்லிணக்க அடையாளமாக கருதப்படும் கபீர் தாஸின் “ஹமாரே ராம் ரஹிம்” (நமது ராமனும், ரஹீமும், கரீமும், கேசவனும், அல்லாவோடும், ராமனோடும் ஒன்றாகவே படுத்துறங்கினர்) பாடலை பாடத் துவங்கினர். இந்தப் பாடல் துவங்கும் பொழுதே, அதன் உச்சத்தன்மையை அடைந்து விடுகிறது. பின்னர், சரணத்தில் மென்மையடைந்து மதங்களுக்கிடையிலான ஒற்றுமையை மெல்லத் தொட்டு, வேறுபாடுகளைக் களைய விழைகிறது. அதன் ஓங்கிய துவக்கம் மனதில் நின்று விடுகிறது. இதனை சுபா முட்கலின் குரலில் கேட்பதும் ஒரு இனிமையான அனுபவமே.

nusratஇன்று உலகமெங்கும் சூஃபி பாடல்களின் அடையாளமாக கொண்டாடப்படும், காலஞ்சென்ற நுஸ்ரத் ஃப்தே அலிகானின் “சாசோன் கீ மாலா பே சிம்ரூ மேன் பி கா நாம்” (எனது மூச்சின் மாலையில் எனது காதலியின் பெயரை நான் முத்துக்களாக கோர்ப்பேன்) பாடல் மீண்டும் உண்மையான காதலும், உண்மையான ஆன்மீகமும் இணையும் புள்ளிக்கு இழுத்துச் சென்றது. குறிப்பாக “காதலின் நிறத்தில் ஒரு நிறமாகும் வண்ணம் நான் எவ்வாறு மூழ்கினேன்” எனும் வரிகளை மீண்டும் மீண்டும் சமீரும், இமாமும் வெவ்வேறு விதமாக பாடி, அந்த சரணத்தின் உச்சத்தை தொட்டார்கள் பாருங்கள், ஒரு கணம் பிரமிப்பில் கைதட்டக் கூட மறந்து போய் விட்டோம்.

தொடர்ந்து வந்த நுஸ்ரத்தின் “அல்லாஹூ அல்லாஹூ” பாடலில், அல்லாஹூ பல்லவியில் அவர்கள் விதவிதமாக நிகழ்த்திய ஸ்வர வேடிக்கைகள் பார்வையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. அவரது “தூ குஜா மன் குஜா” (நானோ பாதாளத்தில் இருக்கிறேன். நீயோ கற்பனைக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறாய்) மற்றும் “மேரே ரஷ்கே கமர்” (நிலவே பொறாமை கொள்ளும் அழகே – இப்பாடல் பாத்ஷாஹோ எனும் இந்தி திரைப்படத்திலும் சமீபத்தில் வெளிவந்தது) போன்ற குதூகலத்தின் உச்சத்தை தொடும் பாடல்களை பாடிய பொழுது, அரங்கம் கொண்டாடித் தீர்த்தது. கல்லூரி இளைஞர்கள் மகிழ்ச்சியில் ஆடிக் களிப்பதை பார்க்கும் பொழுது ஏக்கம் உண்டானதை மறுப்பதற்கில்லை.

இடையில், “தமிழகத்தில் வந்து பாடி விட்டு, குணங்குடி மஸ்தானின் பாடலைப் பாடாமல் போகலாமா?” எனக் கேட்டு துவங்கிய சமீர், குணங்குடி மஸ்தானின் “முகில் கவியும் நாயினார் முஹம்மது ரசூல் என்ற என்ற முத்தொளி இது என்பர் கோடி” எனும் பாடலை ஒரு அழகிய பரத அசைவு போன்ற மெட்டில் லயித்துப் பாடப் பாட, ஆசுவாசமும், புத்துணர்ச்சியும் அரங்கில் பரவியது.

“தாலோலம் பாடுன்ன தங்கச்சி பெண்ணினே”, “பட்டாப்பகலுச் சூட்டும் மின்னிச்” மற்றும் “மான ப்ரேமத்திலே மண் கூடானதிலே மேயு லைலா மாயா மாயா லோகத்தல்லோ லீலா” ஆகிய மூன்று மலையாளப் பாடல்கள் நிகழ்ச்சியில் பாடப்பட்டன. இவற்றை முதல்முறையாக அங்குதான் கேட்டேன். உருது, இந்திப் பாடல்களில் விளங்கியதை விடவும், மிகக் குறைவாகவே இப்பாடல்களின் பொருள் விளங்கியது. ஆனால், ஒவ்வொரு பாட்டும் மனதில் நிரந்தரமாக ஊடுருவிக் கொண்டன. அதிலும், குறிப்பாக “மான ப்ரேமத்திலே” பாடலை, இக்கட்டுரையை எழுதும் சாக்கிலேயே இதுவரை நான்கைந்து முறை கேட்டு விட்டேன். இந்தப் பாடல்கள் நெடுந்தூரம் நம்மோடு பயணிக்கும் வல்லமை உடையவை எனத் தோன்றுகிறது.

இடையில் பாடப்பட்ட ரஹ்மானின் “க்வாஜா மேரே க்வாஜா” (கடவுளே என் கடவுளே) நுஸ்ரத்தின் ‘ஆதிக்கத்திலிருந்து’ சற்று விடுதலையளித்து மனதை இயல்புக்கு கொண்டு வந்தது என்றால், மீண்டும் நிகழ்ச்சியின் இறுதிப்பாடலாக அவரது “தம் மஸ்த் கலந்தர்” (எனது மூச்சிலும், மயக்கத்திலும் நிறைந்த கலந்தரே – கலந்தர் என்பது சூஃபிக்களை குறிக்கும்) வந்தது. அந்தப் பாடலைக் கொண்டு மொத்த இசைக் குழுவினரும் அதகளம் பண்ணினார்கள். “ஆலி, ஆலி, ஆலி” என சரணத்தில் வரும் இடங்களிலும், ஒவ்வொரு வாத்தியக் கருவியைக் கொண்டும் தனி ஆவர்த்தனங்களை இடையில் நிகழ்த்திக் காட்டியதன் மூலமும் பார்வையாளர்களை ஆரவாரிக்க வைத்தார்கள்.

ஏறத்தாழ மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இசை மழையில் திளைத்து, ஒருவாறு களைத்து, அரங்கை விட்டு வெளியேறும் நேரம், வாழ்வில் முதல் முறையாக சமீருடனும், இமாமுடனும் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசை வந்தது. வெகு தூரம் திரும்பி செல்ல வேண்டுமென்பதால் தாமதமாகி விடும் என்றெண்ணி கிளம்பி விட்டோம். அல்லது இன்னும் சிறிது தூரம் நான் சூஃபிக்களை நோக்கி செல்ல வேண்டியிருக்கிறது போலும்.

பி.கு: வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த பொழுது, நந்திதா தாஸின் முதல் படமான ஃபிராக் (Firaaq) நினைவுக்கு வந்தது. குஜராத் 2002 படுகொலைகளுக்குப் பிறகு, சமூகத்தின் பல்வேறு பிரிவினரும், மதத்தினரும் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் சிக்கல்களை, ஒரு கோட்டுச் சித்திரமாக அப்படம் வழங்கும். இறுதிக் காட்சியில், ஒரு முதிய முசுலீம் பாடகரின் வீட்டில் கதாபாத்திரங்கள் அனைவரும் ஒன்று கூடுவார்கள். கலை, குறிப்பாக இசை, மாத்திரமே வெறுப்பின் திரைகளை அகற்றி ஒன்றுபடுத்தும் வல்லமையுடையது என்பதை காட்சிபூர்வமாக வெளிப்படுத்துவார். இசை என்றும் பொழிந்து கொண்டுதானிருக்கிறது. நாம்தான் காதுகளைத் திறக்க வேண்டும்.

(இக்கட்டுரையின் சற்றே திருத்தப்பட்ட வடிவம் 16/08/2018 தி இந்து இணைப்பிதழில் வெளிவந்தது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s