நேற்று மாலை, 2-ஆம் வகுப்பு படிக்கும் எனது மகனை பள்ளியிலிருந்து அழைப்பதற்காக சென்றிருந்தேன். அப்பொழுது, பைகளை எடுத்துக் கொண்டிருந்த பொழுது, “ஹலோ அங்கிள்!” எனக் குரல் கேட்டது. எனது அலுவலகத்தில் உடன்பணியாற்றுபவரது மகள்தான் அவ்வாறு அழைத்தாள். என்னைப் பார்த்து சிரித்தவாறு அவளது பைகளை எடுத்துக் கொண்டிருந்தாள். அவளது பெயர் நினைவில் இல்லை. அவள் எனது மகனின் சக மாணவியும் கூட.

“ஹலோ” என பதிலுக்கு சொன்னேன். பள்ளி வாயிலைக் கடக்கும் பொழுதுதான் பார்த்தேன், அவள் தனியாக பள்ளி வாயிலைக் கடப்பதை.

“நீ தனியா எங்க போற..?” எனக் கேட்டேன்.

“டே கேருக்கு..”

டே கேர் எனப்படும் குழந்தைகள் சில மணி நேரங்களை கழிக்க உதவும் அன்றாடக் காப்பகம் பள்ளியிலிருந்து 200 மீட்டரில்தான் இருந்தது.

“நீ தனியா போய்டுவியா?”

அவள் சிரித்தபடி தலையாட்டியவாறு நடந்து சென்றாள். நானும், எனது மகனும் வேறு திசையில் நடக்கத் துவங்கினோம். அவளுடைய அப்பாவிடம் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன். அவருடைய அனுமதி பெற்றுத்தான் செல்கிறாளா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். டே கேருக்கான பாதையில்தான் செல்கிறாளா என ஓரிரு முறை திரும்பிப் பார்த்தேன். ஒரு மாதிரி பதட்டமாக இருந்தது. நான் ஓவர் ரியாக்ட் செய்கிறேனோ என்றும் சந்தேகமாக இருந்தது.

இப்பொழுதெல்லாம் இப்படித்தானிருக்கிறது.

எனக்கு ஏழு வயது இருக்கும் பொழுது, நான் எனது தங்கையையும் அழைத்துக் கொண்டு ஏறத்தாழ மூன்று கிமீ தொலைவில் உள்ள பள்ளிக்கு அன்றாடம் நடந்தே செல்வேன். எனது தோழிகள் அவர்களது சிறுவயதுகளில் தனியே கடைகளுக்கு சென்று மளிகைப் பொருட்கள் வாங்கியதையும், தத்தமது சகோதரர்களையும், சகோதரிகளையும் பள்ளிக்கு பொறுப்பாக அழைத்துச் சென்று வந்ததையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். கிராமப்புறங்களில் பால்யம் கழிந்த நமது அப்பாக்களின், தாத்தாக்களின் தலைமுறையிலோ, அன்றாடம் சர்வசாதாரணமாக பல பத்து கிலோமீட்டர்களை சின்னஞ்சிறு சிறுவர்களும், சிறுமிகளும் தனியாக பயணித்து வருவார்கள்.

ஆனால், இப்பொழுதெல்லாம் இப்படித்தான் ஒரு சிறுமியையோ, சிறுவனையோ தனித்து காண நேர்ந்தால் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. உண்மையில், இது வழக்கமான பெருமூச்சு விடும் பழமைவாத மனநிலையின் மிகை வெளிப்பாடா அல்லது மாறிய சூழல் உருவாக்கியிருக்கும் நியாயமான கவலைதானா? தெரியவில்லை. தெரிந்து கொள்ள முயலும் பயணம் வலியை உண்டாக்கும் என நிச்சயமாகத் தோன்றுகிறது. வலிக்கு எதிரான பயம், தெரிந்து கொள்ள வேண்டியதைக் கூட தடுத்து விடும் தானே?

எனவே, அறியாமையின் இனிமை கொன்று, கண்டதைச் சொல்கிறேன். ஒரு கதையாக சொல்கிறேன். இதனைக் காணவும், கண்டு நாணவும், காரணம் நமக்கு உண்டு என உறுதிபட நம்புவதால் மாத்திரமே சொல்கிறேன்.

1098 என்றால் உங்களுக்கு என்னவென்று தெரியுமா? ஒரு கணம் அடுத்த வரிகளைப் படிக்காமல் கண்ணை மூடி யோசித்துப் பாருங்கள். ஏனெனில், வருங்காலங்களில் நீங்கள் இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். ஒரு க்ளூ தருகிறேன். அது ஒரு தொலைபேசி எண். எதற்கான எண் என்று உங்களால் சொல்ல முடியுமா? நம்மில் பெரும்பாலோனோரின் பதில் ‘தெரியவில்லை’ என்பதாகத்தான் இருந்திருக்கும்.

1098 என்பது சைல்ட்லைன் (குழந்தைகள் தொடர்பு) எனும் அரசு சாரா நிறுவனம், குழந்தைகள் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தியிருக்கும் 24 மணி நேர தொலைபேசி வசதியாகும். இவ்வசதி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் ஒத்துழைப்போடு உருவாக்கப்பட்டது.

The_Infant_Samuel_at_Prayer_-_Sir_Joshua_Reynolds

கடந்த ஜூலை மாதம் கடைசி வாரத்தில், 1098 கால் செண்டரில் அமர்ந்திருந்த ஒரு கடவுளுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவரின் குரலில் வெளிப்பட்ட பீதியும், மன்றாடலும் கடவுளை அசைத்துப் போட்டது. உடனடியாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட, ஐதராபாத்திலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள யதகிரிகுட்டாவுக்கு அதிகாரிகள் குழு விரைந்தது.

யதாத்ரி என பெயர் மாற்றம் செய்யப்பட்ட யதகிரிகுட்டா நாடு தழுவிய அளவில் பிரசித்தி பெற்றது. ஏனெனில், அங்கே புகழ்பெற்ற லஷ்மி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. மலைமேல் அமைந்துள்ள அக்கோவிலுக்கு எங்கெங்கிருந்தோ மக்கள் வந்து, நரசிம்மரின் மூன்று வடிவ தரிசனங்கள் கொண்ட மூன்று கோவில்களையும் தரிசித்து வேண்டிச் செல்வது வழக்கம்.

அந்த யதாத்ரியில் உள்ள பிசி காலனிக்கு அதிகாரிகள் குழு சென்றடைந்தது. தொலைபேசி அழைப்பில் குறிப்பிடப்பட்ட வீட்டிற்கு சென்ற பொழுது, வீட்டு வாசலில் ஒரு ஒன்பது வயதுக் குழந்தை, கைகளில் காயங்களுடன் அழுது கொண்டிருப்பதைக் கண்டனர். அவர்களது கேள்விகளால் மிரட்சியடைந்த குழந்தை ‘சேட்டை செய்ததால் அம்மா அடித்து விட்டதாக’ பதில் கூறினாள். இதனை நம்ப முடியாத அதிகாரிகள், அக்குழந்தையின் அம்மாவை கேள்விகளால் துளைத்தனர். அம்மாகாரி கோபமுற்று வெடித்து சீறத் துவங்கினாள். ஆனால், விரைவிலேயே அந்த ‘அம்மா’ அக்குழந்தையை தான் 1 லட்சம் ரூபாய் வாங்கிய உண்மையை ஒப்புக் கொண்டாள்.

அது போல அங்கே நிறைய ‘அம்மாக்கள்’ இருக்கிறார்கள் என்பதும் அவள் மூலம் தெரிய வந்தது. அவளது ஒப்புதல் வாக்குமூலம், யதாத்ரியில் நிகழ்ந்து வந்த மாபெரும் குழந்தை விபச்சாரத் தொழிலை (!?) உலகின் கவனத்திற்கு கொண்டு வந்தது. கம்சானி கல்யாணி எனும் மங்களகரமான பெயரைக் கொண்ட அந்த ‘அம்மா’ எனும் விபச்சாரத் தரகரின் வாக்குமூலத்தின் விளைவாக, மேலும் பல வீடுகள் சோதனையிடப்பட்டு, 14 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

இத்தனைக்கும் வழிகோலிய, 1098-க்கு அழைத்த கடவுள், இரவுகளில் குழந்தைகளின் அலறல்கள் தன்னைக் கடுமையாக தொந்தரவு செய்ததாக அதிகாரிகளிடம் குறிப்பிட்டார். “பெரும்பாலும், அன்னியர்கள் இப்பகுதிக்கு இரவுகளில் மாத்திரம் வந்து செல்வதை பார்த்திருக்கிறேன்…” என்றார்.

இதனை ஒப்புக் கொண்ட கம்சானி, சற்றே பெரிய குழந்தைகளோடு வாடிக்கையாளர்கள் உடலுறவு கொள்வதை, தான் சமீபத்தில் வாங்கிய குழந்தையைக் காணச் செய்து ‘பழக்குவாராம்’. ஏதேனும் ஒரு குழந்தை இதற்கு மறுத்தால், அடியும், உதையும் விழும். குழந்தைகள் விரைவில் பணம் சம்பாதிப்பதை முடுக்கி விடுவதற்காக, விபச்சார விடுதி உரிமையாளர்கள் அக்குழந்தைகளுக்கு ஹார்மோன் ஊசிகளையும் செலுத்தி வந்துள்ளனர்.

அக்காலனியிலிருந்து சிறிது தொலைவிலிருந்த நர்சிங் ஹோமில் சோதனை நடத்திய காவல்துறை அதிகாரிகள், ஆக்ஸிடாசின் எனப்படும் 40 ஹார்மோன் ஊசி மருந்துகளைக் கைப்பற்றினர். மேலும், 11 குழந்தை கடத்தல்காரர்களையும் கைது செய்தனர். இவர்கள் குழந்தைகளைக் கடத்தி வருவதும், விபச்சாரத் தரகர்களிடம் விற்பதும், அக்குழந்தைகள் நிர்க்கதியற்று விபச்சாரத்தில் தள்ளப்படுவதும், நீண்ட காலமாக நடைபெற்று வருகிறதென காவல்துறை தெரிவித்தது.

அதிகாரிகள் குழு 14 குழந்தைகளை மீட்டெடுத்த அடுத்த சில மணி நேரங்களுக்குள், அக்காலனியில் உள்ள 20 வீடுகள் காலி செய்யப்பட்டு மூடிக் கிடந்தன. வாட்ஸ் அப் மூலமாக சிலர் அவர்களுக்கு தகவல் தெரிவித்திருந்தனர். யதாத்ரியில் சிறை வைக்கப்பட்டிருந்த குழந்தைகளோடு ஏறத்தாழ 25 நபர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் தப்பி விட்டதாக காவல்துறை தெரிவித்தது. “தெலுங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்காளம், ஒடிசா, பீகார் என பல மாநிலங்களிலும் கடத்தல்காரர்களுக்கு விரிந்த வலைப்பின்னல் தொடர்பு உள்ளது.” என விசாரணை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்த சோதனைகளின் தகவலைக் கேள்விப்பட்டு, ஆந்திராவின் பல பகுதிகளிலிருந்தும், குழந்தைளைத் தொலைத்த பெற்றோர்கள் குழந்தைகளின் புகைப்படங்களோடு விரைந்தோடி வந்தனர். அக்குழந்தைகள் சில வருடங்களுக்கு முன்பாக காணாமல் போய், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

தெலுங்கானா காவல்துறைக்கு, மீட்டெடுக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களை தேடிக் கண்டடைவது பெரும் சவாலாக முன்னிற்கிறது. உதாரணமாக, முதலில் குறிப்பிட்ட அந்த ஒன்பது வயது குழந்தையை, சங்கர் என்பவரிடமிருந்து விலைக்கு வாங்கியதாக கம்சானி தெரிவித்ததையொட்டி, அவரைத் தேடிப் பிடிக்க முயன்றனர். ஆனால், குற்றப் பிண்ணனி உடைய சங்கர் சில மாதங்களுக்கு முன்பே இறந்து விட்டதை கண்டறிகின்றனர். அவரது கூட்டாளி ராஜூவோ சிறையில் இருக்கிறார்.

ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும், தனித்த இடங்களிலும் செயல்படும் ஒருங்கிணைந்த குற்றக் கும்பல்கள், சாக்லேட்டுகளையும், ஐஸ்க்ரீம்களையும் காட்டி குழந்தைகளை கடத்திச் செல்வதாகக் கூறுகிறார் நல்கொண்டாவின் மாவட்ட குழந்தைகள் நல்வாழ்வுக் கமிட்டியின் தலைவர் நிம்மைய்யா. “சமீப காலங்களாக, இரண்டு, மூன்று பெண் குழந்தைகளைப் பெற்ற சில வறிய பெற்றோர்கள் சிறிய குழந்தைகளை விற்று விடுகின்றனர்.” என்றும் குறிப்பிடுகிறார்.

ஐந்து வயதுக் குழந்தைகள் கூட கடத்தப்பட்டு கொண்டு வரப்படுவதாக சோதனைகளில் ஈடுபட்ட அதிகாரிகளிலொருவர் தெரிவிக்கிறார். அக்குழந்தைகளை அங்கன்வாடிகளில் சேர்த்து, அவர்களுக்கு பத்து வயது நிரம்புவதற்குள் அவர்களை ‘குடும்ப’ ரேஷன் கார்டிலும் சேர்த்து, ‘குடும்ப’ உறுப்பினர்கள் போல காட்டி விடுகிறார்கள். பொய்யான பெற்றோர்களின் பெயர்களில் அவர்கள் பள்ளியில் படித்ததற்கான சான்றுகளும் உருவாக்கப்பட்ட பின், அவர்கள் பள்ளியிலிருந்து நிறுத்தப்படுவார்கள்.

ஒரு சிறுமிக்கு எய்ட்ஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவளும், ஐந்து சிறுமிகளும் அவர்களது உண்மையான பெற்றோருடன் சேர்க்கப்பட்டு விட்டனர். பெற்றோர் கண்டறியப்படாத, 12 வயதாகும் ஒரு குழந்தை நல்கொண்டாவில் உள்ள ஹெச்.ஐ.வி குழந்தைகளுக்கான காப்பகத்தில் இருக்கிறாள். “அச்சிறுமிக்கு ஹெச்.ஐ.வி தொற்று இல்லை. ஆனால், அவள் அந்தக் காப்பகத்திலேயே விடப்பட்டிருக்கிறாள். இந்த விசயங்களை கையாள்வதில் அரசாங்கம் எத்தனை தயார்நிலையில் இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது” என்கிறார் நிம்மைய்யா.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2016-ல் மட்டும் இந்தியாவில் 63,407 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அதாவது, அன்றாடம் 174 குழந்தைகள் காணாமல் போகின்றனர். அவர்களில் 50 சதவிகித குழந்தைகள் திரும்பக் கிடைக்கவேயில்லை.

“குழந்தை உரிமைகள் மற்றும் நீங்கள்” அமைப்பின் தலைவர் சோஹா மொய்த்ரா,“ஒரு குழந்தையைத் தேடுவதில் காவல்துறை எவ்வளவு கால தாமதம் செய்கிறதோ, அக்குழந்தை மீண்டும் கிடைப்பது அத்தனை கடினமானதாகி விடுகிறது.” எனக் கூறுகிறார்.

ஒரு குழந்தை காணாமல் போய் விட்டதாக புகார் வந்த மறுகணமே, காவல்துறை, ஆட்கடத்தலுக்கான முதல் தகவல் அறிக்கையை (FIR) தாக்கல் செய்ய வேண்டும் என 2013-ல் வெளிவந்த உச்ச நீதிமன்ற உத்தரவு வலியுறுத்துகிறது. “ஆனால், காவல்துறை தரப்பில் இந்த அம்சத்தில் பெரும் தயக்கம் வெளிப்படுகிறது. குழந்தைகள் காணாமல் போகும் புகார்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்படுகின்றன. அவர்கள் ஓடிப் போயிருப்பார்கள், திரும்ப வந்து விடுவார்கள் என குடும்பங்களிடம் சொல்லப்படுகின்றன. இதன் மூலம், முக்கியமான நேரம் விரயமாக்கப்படுகிறது. விசாரணை துவங்குவதற்குள், அக்குழந்தை அம்மாநிலத்தை விட்டே காணாமல் போய் விடுகிறது.”

cornered

சற்றே வளர்ந்த சிறார்களைப் பொருத்தவரை (10-12 வயது), “ஒவ்வொரு ஐந்து நிமிடமும், நாட்டின் ரயில்வே பிளாட்பாரங்களில் ஏதோ ஒரு குழந்தை யார் துணையுமின்றி வந்து சேர்கிறது” என “ரயில்வே குழந்தைகள்” எனும் வீதியோரச் சிறாருக்காக வேலை செய்யும் சர்வதேச அமைப்பு கூறுகிறது. ‘காணாமல் போகும் குழந்தைகளில்’ நிறைய பேர், வீட்டில் கிடைக்கும் அடி, உதைக்கு பயந்தோ, பள்ளிகளில் தண்டனைக்கு பயந்தோ, சினிமா நடிகராகும் கனவுடனோ இவ்வாறு வந்திறங்குகிறார்கள் என அவ்வமைப்பின் ஜூலை மாத அறிக்கை குறிப்பிடுகிறது.

இப்போது, மீண்டும் யதாத்ரிக்கு வருவோம்.

“இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்..” என அப்பகுதியினர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தனர். “உண்மையான பக்தர்கள் லஷ்மி நரசிம்மரை தரிசிக்க மலையேறிச் செல்கின்றனர். ஆனால், மற்றவர்கள் பல்வேறு இடங்களில் உள்ள லாட்ஜுகளுக்கும், வீடுகளுக்கும் செல்கின்றனர்..” என ஒரு மெஸ் தொழிலாளி குறிப்பிட்டார். நமக்குள் எழும் கேள்வி ஒன்றுதான். ‘மற்றவர்களில்’ ஒருவரேனும் ஒரு தடவையேனும் மலையேறி நரசிம்மரை தரிசித்திருக்க மாட்டார்களா என்ன?

அப்படியானால், அவர்களால் எப்படி இப்படி இருக்க முடிகிறது? குழந்தைகளுடன் உடலுறவு அல்லது வன்புணர்வு கொள்ளும் மனநோயை, ஆங்கிலத்தில் pedophilia என அழைக்கிறார்கள். இந்நோயை முழுமையாக குணப்படுத்துவது தற்போதைக்கு சாத்தியமில்லை என மனநல வல்லுனர்கள் கருதுகின்றனர். ஏனெனில், இவர்கள் தாமாக முன்வந்து தமது நோயை ஒப்புக் கொள்வதில்லை. பிடிபட்டாலும், மருத்துவர்களிடம் செல்வதில்லை. எனவே, வாழ்நாள் முழுவதும் இயல்பான மனிதர்கள் போல வேடமிட்டவாறு, தங்களது இரகசிய உலகத்தில் எவ்விதக் குற்ற உணர்ச்சியோ, மனித இயல்பான அற உணர்ச்சியோ இல்லாமல், அனைத்துக் கீழ்மைகளையும் சர்வசாதாரணமாக செய்து கொண்டிருப்பார்கள்.

2001-ல் போப் இரண்டாம் ஜான் பாலும், 2018-ல் போப் ஃபிரான்சிசும், கிறிஸ்தவ கத்தோலிக்க மத நிறுவனங்களில் நிகழ்ந்த குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டார்கள். எனவே, யதாத்ரி லஷ்மி நரசிம்மரின் பக்தர்கள் போர்வையில் உலா வருபவர்களும், பல்வேறு நாடுகளில் பாதிரிமார்கள், கன்யாஸ்திரீகள் போர்வையில் உலா வருபவர்களும் அடிப்படையில் ஒரு புள்ளியில் ஒன்றுபடுகிறார்கள். அவர்களது ரகசிய மனநோயின் உலகத்தை உங்களது ஊனக் கண்களால் அத்தனை எளிதாக கண்டறிய முடியாது.

கடந்த வாரம், நானும், எனது நண்பர்களும் உதவி செய்யும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் ஒன்றிற்கு சென்றிருந்தேன். சில தெரிந்த குழந்தைகளும், நிறைய புதிய குழந்தைகளும் இருந்தார்கள். வழக்கம் போல எல்லாக் குழந்தைகளும் என்னைச் சுற்றிக் கொண்டார்கள். சாக்லேட்டுகளை வினியோகித்த வண்ணம், அவர்கள் வரைந்த படங்களை பார்த்த வண்ணம் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது தான் கவனித்தேன், 4-5 வயதுள்ள ஒரு சிறு பெண் குழந்தை, எனது கைகளை வருடிக் கொண்டேயிருந்தாள். அதனை அவளது இறந்து போன அப்பாவின் கையாக எண்ணி இருப்பாளோ? அந்தத் தீண்டல் என்னைத் தொந்தரவு செய்தது. ஆனால், அவளை புண்படுத்த வேண்டாமென சற்று நேரம் பொறுமையாக இருந்தேன்.

பெரும்பாலும், அவளைப் போன்ற அரசு மற்றும் அரசு ஆதரவு பெற்ற தனியார் காப்பகங்களில் வளரும் குழந்தைகளையும், சிறுவர்களையும், சிறுமிகளையும், இளம்பெண்களையும்தான், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகிறார்கள் என்பதை உ.பியின் தியோரியா காப்பகம், பீகாரின் முஜார்பூர் காப்பகம், மற்றும் அயனாவரம் காப்பகம் என நாளேடுகளில் வரும் செய்திகள் சொல்லும் பொழுது…

சமீபத்தில், சைல்ட்லைன் ஃபவுண்டேஷன் நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில், நமது நாட்டில் மொத்தம் 9,589 குழந்தை காப்பக நிறுவனங்கள் உள்ளதெனவும், அவற்றில் உள்ள குழந்தைகளில் 1575 குழந்தைகள் பாலியல் கொடுமைகளை அனுபவித்தள்ளனர் என்றும், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தான் அளித்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்தது என்பதைப் படிக்கும் பொழுது…

அவ்வழக்கின் நீதிபதி மதன் பி.லோகுர், “அந்தக் குழந்தைகளுக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? 1575 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?” என மத்திய அரசை நோக்கி எழுப்பிய கேள்விகளை எண்ணும் பொழுது…

அந்தக் கேள்வி மத்திய அரசுக்கு மட்டும்தானா என யோசிக்கும் பொழுது…

எனக்கு அந்தச் சிறுமியின் தீண்டல் நினைவுக்கு வந்து குமட்டிக் கொண்டு வருகிறது. நான் அவளுக்காக பிரார்த்திக்க விரும்புகிறேன். எனது பிரார்த்தனை, நம் எல்லோரின் பிரார்த்தனையாக மாறும் பொழுது, 1098-ல் இருக்கும் கடவுளுக்கு வேலைகள் அதிகமாகும். காவல்துறை கடவுளர்கள் உச்சநீதிமன்ற கடவுளின் சொற்படி உடனடியாக எப்ஃஐஆர் போட்டு குற்றவாளிகளை தேட வேண்டியிருக்கும். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும் ஒரு சிறிய கடவுளை, ஏதோ ஒரு பெரிய கடவுள் நிச்சயம் காப்பாற்றுவாராயிருக்கும்.

(12/08/2018 அன்று தி இந்துவில்(ஆங்கிலம்) வந்த மர்ரி ராமு, பிரதீப் ஆகியோர் எழுதிய செய்திக் குறிப்பு (https://bit.ly/2p0KMOd) மற்றும் திவ்யா காந்தி, ஜூலி மெரின் வர்கீஸ் ஆகியோர் எழுதிய கட்டுரை (https://bit.ly/2OdbLkB) ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டது.)

பி.கு:

    1. உதாரணத்திற்காக மட்டுமே கத்தோலிக்க திருச்சபை உலகத்தில் நடந்ததும், யதாத்ரியில் நடந்ததும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, ஒட்டுமொத்தமாக இம்மதங்களையும், மதத்தினரையும் கொச்சைப்படுத்துவதாக பொருள் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
    2. இக்கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம், தி இந்து தமிழ் நாளேட்டில் 13/09/18 அன்று வெளிவந்தது (https://bit.ly/2Qr3ESP).

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s