பரியேறும் பெருமாளும், ஸ்தானோவிசமும்!

Pariyerum-Perumal-poster

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் குறித்த வினவு விமர்சனத்தைக் காண நேர்ந்தது. தேவைக்கு அதிகமாகவே நீண்டிருந்த அக்கட்டுரை முன்வைக்கும் கருத்துக்களின் சாரம், கீழ்க்காணும் பத்தியில் வெளிப்படுகின்றன.

அரசியல், சமூக, பொருளாதார கட்டுமானங்களால் மக்களின் மனங்களில் ஆழப் பதிந்துள்ள சாதியை வெறுமனே மனித மூளைகளில் பதிந்துள்ள தவறான கருத்தாகவே மேற்கண்ட பார்வை கருதுகிறது. ஆகவே கருத்து மாற்றமும், அதற்கான பிரச்சாரமும், இணைந்த செயல்பாடுகளுமே பொருத்தமான வடிவங்கள் என்பதால், ‘திருப்பித்தாக்கு’ என்பதை சமூக யதார்த்தத்தை மீறிய கற்பனை எதிர்பார்ப்பாக விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமல்ல… ரஞ்சித் போன்றவர்களும் கருதுகிறார்கள். இது சாதி ஆதிக்க சமூக யதார்த்தத்தின் விளைவா இல்லை அந்த யதார்த்தத்தை தவறாக புரிந்து கொண்ட அரசியலின் விளைவா?

இரண்டு கேள்விகள்.

1. சாதி ஆதிக்க சமூக யதார்த்தத்தையும், ‘திருப்பித் தாக்கு’ எனும் சரியான வர்க்க அரசியலையும், மிகச் சரியாக புரிந்து வைத்துள்ள வினவு கட்டுரையாளர் உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அமைப்புகள், கடந்த 40 ஆண்டுகளில், “கருத்து மாற்றமும், அதற்கான பிரச்சாரமும், இணைந்த செயல்பாடுகளும்” அல்லாமல், வேறு என்ன வடிவங்களில் சாதி எதிர்ப்பு போராட்டத்தை மக்களிடம் கொண்டு சென்றார்கள்?

2. சாதி குறித்த புரிதல் அடிப்படையில், நத்தம் காலனி வன்முறை, இளவரசன் படுகொலை, சங்கர், கோகுல்ராஜ் படுகொலை, ஏன் இப்பொழுது நிகழ்ந்திருக்கும் ஆணவப் படுகொலை ஆகியனவற்றில், “ஆழப் பதிந்துள்ள சாதியை” அசைத்துப் பார்ப்பதற்கு, தமிழகத்தில் வேறு யாரும் செய்யாத, என்ன வித்தியாசமான நடைமுறையை இவ்வமைப்பினர் மேற்கொண்டார்கள்?

இக்கேள்விகளுக்கான பதில் நாமறிந்ததே.

மார்க்சியக் கண்ணோட்டத்திலான சினிமா விமர்சனம் என்பது, ஒரு கலைப் படைப்பை நிலைப்பாடுகளின் கசாப்புக் கத்தியால் அறுத்துப் போட்டு அரசியல் தராசில் நிறுப்பதல்ல. அதன் பெயர் ஸ்தானோவிசம்.

ஸ்தானோவிசம் குறித்த எஸ்.வி.ஆரின் கருத்துக்களில் சிலவற்றை கீழே தந்திருக்கிறேன். பரிசீலிக்க விரும்புவோர் பரிசீலிக்க.

“…. இந்த இறுகிப் போன பார்வையை சோவியத் யூனியனில் நாற்பதுகளில் ஸ்தானோவ் தோற்றுவித்தார். ஒரு தத்துவத்தை, அது ‘பூர்சுவா தத்துவம்’ ‘கருத்துமுதல்வாதம்’, ‘பிற்போக்கு’ என்று வருணிப்பதுடன் விசயங்கள் முடிவடைந்து விட்டதாகக் கருதுகிறது இப்போக்கு. இது எப்போதேனும் அக்குறிப்பிட்ட தத்துவத்தின் உள்ளடக்கத்தை ஆழமாகப் பரிசீலிக்க முயற்சி செய்கிறதென்றால், அது அத்தத்துவத்தைப் பற்றி ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு விட்ட பொதுவான மதிப்பீட்டை விவரிக்க ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகளை ‘தோண்டி’ எடுப்பதுதான்.

குறிப்பிட்ட தத்துவத்திலுள்ள உடன்பாட்டுவகைக் கூறுகள், எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு அதுதரும் ஓரளவுக்கு உண்மையான தீர்வுகள், ஆகியவற்றை இப்போக்கு முற்றாகப் புறக்கணிக்கிறது. ஏனெனில், இவை முன்கூட்டியே வகுத்துக் கொள்ளப்பட்ட பொதுவான மதிப்பீட்டில் பொருத்தப்பட முடியாதவையாக உள்ளன.

…. அடையாளச் சீட்டுகளை எதிராளியின் மீது ஒட்டி விடுவதே ஸ்தானோவியத் திறனாய்வுக்குப் போதுமானதாக இருந்தது. தான் ஒரு மார்க்சியன் அல்லது கம்யூனிஸ்ட் கட்சிக்காரன் என்னும் நினைப்பே ஒருவனை மற்றவர்களைக் காட்டிலும் புனிதமானவனாகவும், உயர்ந்தவனாகவும் ஆக்கி விடும் என இப்போக்கு கருதியது.

வெறும் எதிர்மறைத் திறனாய்வு அல்லது வெறும் மறுப்பு (அவதூறு) ஏற்கெனவே நமது கூடாரத்தில் இருப்பவர்களின் கைத்தட்டலைப் பெற்றுத் தரலாம். ஆனால் திறனாய்வு செய்யப்பட்டக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்களை, அவற்றின் தாக்கத்துக்கு உட்பட்டவர்களை வென்றெடுக்காது (விவாதத்தின் குறியிலக்கு இவர்களேயன்றி நமது ஆதரவாளர்களல்லர்.)

மார்க்சியத்துக்கு வெளியே உண்மையான பிரச்சினை ஏதும் இல்லை என்றும் எந்த ஒரு பிரச்சினைக்கும் ஆக்கப்பூர்வமான தீர்வு முன்கூட்டியே மார்க்சியத்துக்குள் வகுக்கப்பட்ட்டு விட்டது என்றும் (நடைமுறை உண்மைகளுக்கு மாறாக) இத்திறனாய்வு கருதுகிறது. இந்த நிலைப்பாடு மார்க்சியத்தை ஆக்கப்பூர்வமாக புரிந்து கொள்வதிலிருந்து தோன்றுவதல்ல. மாறாக அதனை வறட்டுத்தனமாக திரிப்பதிலிருந்தும், வாய்ப்பாடுகள் மூலமாக மார்க்சியத்தை ‘கற்றுக் கொள்ள’ முயற்சிப்பதிலிருந்தும் தோன்றுவதாகும்.”

(சொல்லில் நனையும் காலம், எஸ்.வி.ராஜதுரை, பக் 91-92)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s